புதியவை

இறைவாநீ அருளிவிடுஎம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்த்திரேலியா

 இறைவாநீ அருளிவிடு
 
     ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்த்திரேலியா ) 
   நிலத்துக்கும் சண்டையடா நீருக்கும் சண்டையடா
   நிலமுனக்குச் சொந்தமல்ல நீருனக்குச் சொந்தமல்ல
   இயற்கையினை பங்குபோட்டு இணக்கமின்றி இருந்துவிடின்
   நிலத்தினிலே நிம்மதியை எப்படித்தான் காணுவதோ ? 

   

    ஓடிவரும் நீரென்றும் ஒருபக்கம் பார்பதில்லை
   வீசிவரும் காற்றென்றும் வீண்வாதம் செய்வதில்லை
   பரந்துநிற்கும் கடல்கூட பாரபட்சம் பார்பதில்லை
   பார்மீது உள்ளவரோ பகைகொண்டே வாழுவதேன் ?

   பூமிதனைக் குடைந்து புதையல் பலஎடுக்கின்றார்
   காடுதனை அழித்துக் காசுபல தேடுகிறார்
   நாடுதனை அழித்து நாகரிகம் என்கின்றார்
   கேடெல்லாம் செய்துவிட்டுக் கீதைபற்றிப் பேசுகிறார் !

   ஓடிவரும் நீரதனை உருப்படியாய் ஆக்கிவிடின்
   நாடெல்லாம் நலன்விளையும் நன்றாகப் புரிந்திடுங்கள்
   நீரதனைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை
   பாருக்குப் பரிசாகக் கிடைத்தநீரை பறிக்கலாமா ?

   படித்திருந்தும் பண்பறியார் பறிப்பதையே எண்ணுகிறார்
   குடிகின்ற நீரையுமே பறித்துவிட எண்ணுகிறார்
   நடிக்கின்ற நாடகத்தை விட்டெறெறிந்து விட்டுவிட்டு
   நாடுபற்றி எண்ணிவிட்டால் நலம்வந்து சேர்ந்துவிடும் !

   கோபம்வந்தால் கொழுத்துவதும் கொலைசெய்து நிற்பதுவும்
   வாழ்நாளில் நடப்பதற்கு வழிவகுத்தல் நல்லதல்ல 
    பாவம்செய்து வாழ்ந்துவிடில் பலனேதும் வருவதில்லை 
    ஆதலால் யாவருமே அமைதிபற்றி நினைத்திடுவோம் !

    பலமொழிகள் பேசிடினும் பசியாவர்க்கும் ஒன்றேயாம்
    பலவினமாய் இருந்தாலும் பசித்தவுடன் உண்டிடுவார்
    இவையாவும் சமமாயின்  ஏன்னீரைத் தடுக்கின்றார் 
    இவர்களது மனம்திருந்த இறைவாநீ அருளிவிடு !
     

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.