புதியவை

ரதிமோகன் - பனிவிழும் மலர் வனம்


அத்தியாயம்-26
அனசனுக்கும் மதுமதிக்கும் இடையிலான தொடர்பு 
மதுமதியின் மாமிக்கு அறவே பிடித்திருக்கவில்லை. தனது மகனுக்கு பொருத்தமான ஜோடி மதுமதிதான் என்ற ஓர் எண்ணம் அவர் மனதில் ஆழமாக பதிந்து இருந்தது . அவளின் துடுக்குத்தனமான பேச்சும் குழந்தைத்தனமான கள்ளங்கபடமற்ற மனமும் அவருக்கு மிகவும் பிடித்துப்போயிருந்தது. தனது மகனோடு அவள் அடிக்கடி போடும் செல்லச்சண்டைகளை பார்த்து மாமியும் மாமாவும் வாய்விட்டுச் சிரித்திருப்பார்கள். மதுமதி மேல் தனது சொந்தமகளை விட அன்பு அதிகம் வைத்திருந்தார்.
மதுமதியின் மாமாக்கு மதுமதிமேல் அளவற்றபாசம் இருந்தாலும் மதுமதி விரும்பியவனுடன்தான் வாழ வேண்டும் என்று விரும்பினார்., கட்டாயப்படுத்தி மதுமதியை சங்கருக்கு திருமணம் செய்து வைப்பதில் அவருக்கு உடன்பாடு எள்ளளவும் இருந்தது இல்லை. மாமாவுக்கு மாமியின் சில நடவடிக்கைகள் பிடித்திருக்கவில்லைதான். மதுமதிக்குத் தெரியாமல் அனசனிடம் வந்த ரெலிபோனை துண்டித்தது அவருக்கு பிடிக்கவில்லையென்றாலும் மாமியை கேட்கும் தைரியம் அவரிடம் இருந்தது இல்லை. அப்படித்தான் கேட்டாலும் தான் சொல்வதே சரி என்ற பிடிவாதக்குணம் அவளுடன் கூடப்பிறந்தது. தப்பித்தவறி கேட்டு விட்டால் அங்கு பெரும் சண்டையே வந்துவிடும் என்ற பயத்திலேயே அங்கு அவர் மௌனமாக இருந்தார்.
இப்போது கார் சங்கீதாவின் வீட்டை வந்து அடைந்தது. எல்லோரும் காரை விட்டு இறங்கி வீட்டுவாசலில் அழைப்புமணியை அழுத்தவே சங்கீதாவின் மாமா மாமி உட்பட அனைவரும் வருக வருகஎன அன்போடு முகம் மலர்ந்து வரவேற்றார்கள். சங்கீதாவின் முகம் சந்தோசத்தால் அன்றலர்ந்த செந்தாமரையாய் காட்சியளித்தது. புகுந்த வீட்டினர் நிறைவான அன்பாக இருந்தபோதும் பிறந்த வீட்டார்களின் வருகை பெண்களை பொறுத்தவரை பன்மடங்கு மகிழ்ச்சியைத்தரும். இதில் சங்கீதா விதிவிலக்கா என்ன?
அங்கு அறுசுவைகறிகளுடன் விருந்து பரிமாறப்பட்டது. விருந்தை ரசித்து உண்ட களைப்பில் மதுவின் மாமாவும் சங்கீதாவின் மாமாவும் சாய்வு நாற்காலியில் சிறுது நேரம் ஓய்வெடுக்க சென்றனர், சங்கீதா மதுமதியை அழைத்து தன் புகுந்த வீட்டை சுற்றி பெருமையுடன் காட்டினாள். தனது கணவன் தம் எதிர்கால வாழ்விற்காக வாங்கிய வீடு என்றாள். அழகான பெரிய வீடு நான்கு விசாலமான அறைகளுடன் அழகாய் இருந்தது. வரவேற்பறை கூடம் அளவான பொருட்களுடன் அழகாக எளிமையாக காட்சியளித்தது. மதுமதிக்கு அவர்கள் வீடு அமைந்திருந்த சூழலும் நன்கு பிடித்துபோயிற்று. பாடசாலை, கடைகள், நீச்சல்குளம் என எல்லாம் அருகில் வந்தமைந்தது சிறப்பே என எண்ணிக்கொண்டாள். அனசனுடனான தன் திருமணத்திற்கு பின்பு இப்படியான ஒரு சூழலில் சிறியதோர் இல்லம் வாங்க வேண்டும் என்ற சிந்தனையோடு அங்கிருந்து அவர்களுடன் வீடு நோக்கி அவளும் பயணித்தாள்.
வழிநெடுகலும் எவருமே எவரோடும் எதுவும் பேசவில்லை. காரின் கண்ணாடி வழியை மதுமதியை பார்த்த சங்கர் அவளின் முகம் வாடியிருப்பதை பார்த்தான். " என்ன அம்மா எல்லோரும் அமைதியாக இருக்கிறீங்க.., சங்கீதாவை பிரிந்த சோகமா?.." என்றான். " இல்லை சங்கர் சரஸ்வதி பூசையும் , கந்தசஷ்டியும் வரப்போகிறது விரத ஆயத்தங்களைப் பற்றி யோசிக்கிறன்.. என்னோடு உதவிக்கு மதுவை கூப்பிட்டு எம் வீட்டில் வைத்திருப்பம் என்றுதான்...." என்று மெல்ல இழுத்தபடி மதுமதியை உற்றுநோக்க மதுமதி ஒருகணம் அதிர்ச்சியுற்றாலும் தனக்கேயுரிய பாணியில் சிறுபுன்முறுவலுடன் "" யோசிப்பம்" என்றாள். சங்கரின் முகம் நூற்றுக்கணக்கான மின்சாரவிளக்குகளின் பிரகாசத்தை அள்ளி வீசியது...சங்கருக்கு அவனையறியாமல் மதுமதியின் மீது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அன்பு அதிகரிப்பதை உணர்ந்தான் .. இதற்கு பெயர் காதலா அல்லது மாமன் மகள் மீதான பாசமா என தன்னைத்தானே கேள்விகேட்டு விடை தெரியாது புலம்பினான். மதுமதி டென்மார்க் வந்த காலத்தில் இருவருக்கும் இடையே பெரிய விரிசல் இருந்தது. அவளை ஒன்றும் தெரியாத ஒரு அப்பாவிப்பெண் என எள்ளிநகையாடிய விதம்தான் அதை சவாலாக அவள் ஏற்று இந்தநிலைக்கு முன்னேற முடிந்தது. நடை உடை பாவனையில் கூட நாகரிகமானவளாக தன்னை மாற்றிக்கொண்டாள
இவற்றையெல்லாம் பார்த்திருந்த மதுமதியின் மாமா உள்ளூர சிரித்துக்கொண்டார்."" அடிப்பாவி மதுமதியின் காதலை பிரிக்க போடுகிறாயா சதி... அவளை இங்கு வைத்திருந்து அனசனை பார்க்க விடாமல் போடும் மாஸ்ரர் பிளான் எனக்குத்தெரியாதா? உன்ரை மகனை லவ் பண்ண வைக்க நீ போடும் இந்த பிளான் ஜெயிக்குமோ என்னவோ... காதலுக்கு சாவு மணி உன்னாலா அடிக்கப்படணும்?? உடையார்வீட்டு பொண்ணு நீ என்றதை நிரூபிக்கிறாய்?
ஆனால் போடி பைத்தியக்காரி அனசனும் அவளோடுதானே வேலைபார்க்கிறான்... இது உனக்குத்தெரியாதே....,""இந்தளவு வார்த்தைகளும் அவர் மனதிற்குள் பேசிக்கொண்டதே தவிர மௌனமாயிருந்தார். அதற்கேற்றாற்போல Ibc வானொலியில் "பூக்களைத்தான் பறிக்காதீங்க காதலைத்தான் பிரிக்காதீங்க" என்ற பாடல் நேயர் விருப்பமாக ஒலிப்பரப்பாகி கொண்டிருந்தது.

( தொடரும்)

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.