புதியவை

ரதிமோகன் - பனிவிழும் மலர் வனம்

அத்தியாயம்-28

மதுமதியின் கதறல் கேட்டு சங்கரின் உயிர் ஒரு கணம் நின்றுபோனதான உணர்வோடு சங்கர் சிலையாகிப்போனான். அடுத்த கணம் மின்னல் வேகத்தில் செயற்பட்டு தன் உடை மாற்றி விரைந்தான். மதுமதியின் வாசற்கதவு மணி அழுத்தியும் அது திறக்கபடவேவயில்லை. சாளரம் வழியே கண்ணை புகுத்திய போதும் எதுவும் அவனுக்கு தென்படவில்லை. கதவை பலமாக தட்டினான். அப்போதுதான் துவண்டுபோன பூங்கொடியாய் நடக்கவே திராணியற்று மதுமதி வந்து கதவைத் திறந்தாள். சங்கரைக் கண்டதும் "ஓ" எனக் குளறி அழுதாள். மதுமதி நடந்த சம்பவத்தை விபரித்தபடியே மயக்கமுற்று சாயவும் அவளைத்தாங்கி கட்டிலில் படுக்க வைத்தான் . அவளின் இதயம் ஏற்கெனவே பலவீனமானது என்பதையும் சங்கர் அறிந்திருந்தான். அவளுக்கான முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு ஒரு கப் தேநீர் கலந்து கொடுத்துவிட்டு "மது நான் ஹாஸ்பிட்டலுக்கு போகிறேன்.. நீ படுத்து ஓய்வுஎடு... இந்தநிலையில் நீ வருவது நல்லதல்ல" என்றதும் அவள் பாயும் புலியாக மாறினாள். அவனின் சேட் கொலரை பிடித்து இழுத்து "" நீ காதலித்து இருக்கிறாயா?? சொல்லடா....அந்த வலி வேதனை உனக்குத்தெரியாது.. இரத்தவெள்ளத்தில் இருப்பவன் என் காதலன்டா... என் உயிரடா...அவனோடே நான் செத்து தொலைந்தே போறேன்.. விடு.. இப்ப என் காரை தா... நானே போகிறேன்... " சங்கர் ஒருகணம் திகைத்து திண்டாடிப்போனான் மதுமதி இப்படி ஆவேசமாக நடப்பாள் என அவன் எதிர்பார்க்கவில்லைதான். " மது பிளீஸ் கத்தாதே... உன் நன்மைக்குத்தானே சொன்னேன்..சரி வா நானே கூட்டிப்போகிறேன்.. " என உடனே அவளோடு காரில் ஏறினான். அவளின் கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் பாய்ந்தோடியது. அவள் முகத்தை பார்க்கவே பாவமாக இருந்தது. காரின் வேகத்தை துரிதபடுத்தி அவர்கள் வைத்தியசாலையை வந்தடைந்தபோது நேரம் அதிகாலை 3.00 மணியைக் காட்டியது.
மதுமதி காரை விட்டு இறங்க முடியாமல் இருந்தாள். அவளை தாங்கலாக பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து கூட்டிச்சென்றான். அங்கு அனசனின் குடும்பத்தினர் கண்ணீரோடு நோயாளர் காத்திருக்கும் அறையில் இருந்தனர். அவளைக்கண்டதும் அனசனின் தாய் கட்டியணைத்து தன் சோகத்தை எல்லாம் கண்ணீராக கொட்டினார்.

அனசனுக்கு சத்திரசிகிச்சை இடம்பெற்றுக்கொண்டு இருந்தது. அவனின் உயிர் வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் போராடிக்கொண்டிருந்தது. இங்கு மதுமதியின் உயிர் சித்திரவதைபட்டுக்கொண்டிருந்தது. இரத்த வெள்ளத்தில் கிடக்கும்போதுகூட கடைசியாக அவளை நினைத்து அவன் பேசிய வார்த்தையின் அந்த ஈனக்குரல் அவளுள்ளே ஒலித்துக்கொண்டிருந்தது. கண்களை மூடியபடி தான் வணங்கும் எல்லாத்தெய்வங்களையும் தொழுதாள். அனசனோடு ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயம் போவாள் . அதேபோல் வெள்ளிக்கிழமைகளில் அனசன் கோயில் வருவது வாடிக்கையாக பழக்கப்படுத்தியிருந்தான். இருவர் காதலுக்கும் மதம் ,இனம் தடையாக இருக்கக்கூடாது என்பதில் மிக்க உறுதியாக இருந்தவர்களை விதி விபத்தின் வடிவில் புகுந்து தன் அசுரத்தனமான விளையாட்டைத்தொடங்கி இருந்தது. 
மெல்ல கண்களைத்திறந்து சங்கரைத்தேடினாள். சுற்றும் முற்றும் பார்த்தாள் அவனைக்காணவில்லை. அவனும் டாக்டர்தானே ..சக டாக்டர்களுடன் அனசனைப்பற்றி அறிய சென்றிருப்பான் என நினைத்தாள். அப்போது ஒரு கரம் ஆதரவாக மதுமதியின் தோள் மீது பதிந்தது. சற்றுதலையை நிமிர்த்தி பார்த்தாள் . அனசனின் அன்புத்தங்கை அனெற்றாவின் கரம் அது. இருவர் கண்களும் கண்ணீரோடு மௌனமாக பேசிக்கொண்டன. இருவரும் ஒருவர் கையை ஒருவர் கோர்த்தபடி அமர்ந்திருந்தனர். அவசரமாக ஒரு டாக்டர் வெளியேறி வர எல்லோர்முகமும் அவரையே உற்று நோக்கின

 அந்த டாக்டரோடு சங்கரும் வந்து கொண்டிருந்தான் . அந்த டாக்டர்தான் பேசினார் " அனசனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டு விட்டது. ஒப்பிரேசன் வெற்றிகரமாக நிறைவேறியது ஆனால் இன்னும் மயக்கநிலையில் இருந்து அனசன் கண்விழிக்கவில்லை..அதிக இரத்த இழப்பு... சிலசமயம் ஹோமா நிலைக்கு செல்லக்கூடிய வாய்ப்பும் அதிகம் இருக்கிறது..இப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. போய் தொந்தரவு பண்ணாமல் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டும் போய் பாருங்க.. உங்க வேதனை நன்கு எனக்கு புரிகிறது.. " என சொல்லி டாக்டர் நகரவும், அனசனின் தாயார் மதுவின் கையை பிடித்தபடி" மது நீ என்னோடு வா.. அவன் உன்மேல்தான் உயிரையே வைத்திருக்கிறான்.... " என அவசர சிகிச்சைப்பிரிவுக்குள் நுழைந்தார். 

அங்கு செயற்கை சுவாசமளிக்கும் கருவியின் உதவியோடு , குருதியமுக்கத்தின் அளவு நேரடி கண்காணிப்பின் கீழ் அனசன் கட்டிலில் கிடந்தான். அவனைச்சுற்றி பல மெசின்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவனருகே மெல்ல அமர்ந்த மதுமதி" அனஸ். பாருடா.. உனக்கொன்றும் இல்லைடா.. நான் உனை தாய்போல் பார்ப்பேன்.. உன் உயிராய் இருப்பேன்டா..கண்ணை திறவடா பிளீஸ் ... என அவன் கைகளை பிடித்தபடி அவன். காதுகளில் கிசுகிசுத்தாள் . அவள் கண்களில் இருந்து வழிந்த நீர்த்திவலைகள் அவன் கைகளில் விழுந்தன .. அனசனின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.. அனசனுக்கு பேசுவதெல்லாம் புரிகிறதே என்ற சின்ன அந்த சந்தோசம் அவளுக்கு பெரியதொரு நம்பிக்கையை வரவழைத்தது. அனசன் விரைவில் கண்திறக்க வேண்டும் என யேசுவை, அம்மனை , சிவனை எல்லாம் தொழுதாள். பிரான்சில் அமைந்துள்ள லூர்த்மாதா தேவாலயத்தில் அவனளவு உயரத்தில் மெழுகுதிரி கொளுத்துவதாகவும் மனதிற்குள் தொழுது கொண்டாள்..
கவலைகளும் துன்பங்களும் மனதை வாட்டும் போது மனது ஆண்டவனைத்தானே நாடிச்செல்லும்.. இதில் மதுமதி விதிவிலக்கா என்ன....

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.