புதியவை

மெஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் அல்லது வீழ்ச்சி - எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEASஇலக்கியம் என்பதற்குப் பலவிதமான விளக்கங்கள் பலராலும் கூறப்படுகிறது.
இலக்கு + இயம் இலக்கியம். அதாவது ஒரு இலக்கை நோக்கமாகக் கொண்டது
தான் இலக்கியம் என்பதாகும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்றும்
சொல்லப்படுகிறது.உணச்சியுடன் கூடியதுதான் இலக்கியம் என்றும் சொல்லப்
படுகிறது.அறம் , பொருள், இன்பம், என்பவற்றைப் புலப்படுத்துவதுதான் இலக்கியம்
என்றும் சொல்லப்பட்டது. அப்படியல்ல - அறம், பொருள், இன்பம், வீடு நான்கையும்
கொண்டதே இலக்கியம் என்னும் கருத்தும் முன்வைக்கப்பட்டது.
     இலக்கண வழுவின்றி எழுதப்படுவனயாவும் இலக்கியம் என்றும் கொள்ளப் படுகின்றது.இலக்கண நூல்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கும் விளக்கங்களும்,
இலக்கிய விமர்சகர்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கும் விளக்கங்களும் வித்தியாச
மானவையாகும்.
      உரைநடையில் எழுதப்படுவன இலக்கியங்களா அல்லது செய்யுளில் எழுதப்படு
வன இலக்கியங்களா என்றெல்லாம் அலசப்படுகிறது.அல்லது இரண்டையுமே இலக்
கியங்களாக எடுக்கலாமா என்னும் எண்ணங்களும் இருக்கின்றன.
   அறத்தை, நீதியை, தத்துவத்தை, சமயத்தை, ஆன்மீகத்தை, எல்லாம்பற்றிக் கூறும்
வகையில் அமைந்தவற்றை இலக்கியங்கியங்களாகக் கொள்ளலாமா ? அல்லது
உணர்ச்சிகளை ஊட்டக்கூடியவற்றை, இன்பத்தை அள்ளித்தருவனவற்றை, பொழுது
போக்கும் வகையில் எழுதப்பட்டவற்றை, இலக்கியமாகக் கொள்ளலாமா? என்றெல் லாம் எண்ணும்  வகையிலெல்லாம் இலக்கியத்தைப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக் கின்றது.
     இலக்கியம் என்பது அவ்வக்கால நிலைகளை வெளிப்படுத்திக் காட்டுவதாகவே
அமையப் பெற்றிருப்பதைக் காண்கின்றோம்.கிரேக்க, உரோம, மேல்நாட்டு இலக்கி
யங்களுக்கும் - தமிழ் இலக்கியக்கியங்களுக்கும் வேற்றுமைகளைக் காண்கின்றோம்.
மேல்நாட்டாரின் நாகரிகம், பண்பாடு இவற்றின் வெளிப்பாடுகளைத்தான் அவர்களது
இலக்கியங்களில் காணமுடியும். எமது பண்பாடு , நாகரிகத்தைத்தான் எங்களின் இலக்கியங்களில் காணமுடியும்.எனவே இலக்கியம் என்பது பண்பாடுகளையும் அதன்
ஊடாக வருகின்ற நாகரிகத்தினையும் புலப்படுத்தவேண்டும் என்பதும் ஒரு கருத்தாகப்
பேசப்படுகிறது.
    இந்த வகையில் பார்க்கின்ற பொழுது எந்த இலக்கியவகை உயர்ந்தது எந்த இலக்கியவகை குறைவானது என மதிப்பிடுவதும் பொருத்தமற்றது என்பதும் ஒரு
கருத்தாக முன் வைக்கப்படுகிறது.ஆனால் இலக்கியம் கொண்டுள்ள நோக்கமே
அதனை உயர்நிலையிலும், வாழுமிலக்கியமாக்கும் நிலையிலும் இருக்கும்,  இருந்தும்
வருகிறது என்பதுமட்டும் உண்மையான கருதுகோளாக அமைகிறது எனலாம்.
    இலக்கியத்தின் நோக்கம் அல்லது குறிக்கோள் எப்படி இருக்க வேண்டும் என்னும்
நிலையிலே - " கற்றார்க்கு இன்பஞ் செய்வதுடன் அவர்கள் வாழ்வைத் திருத்திச் செம்மை செய்வதும் இலக்கியத்தின் பயன் " என்றும் , " படிக்கும் பொழுதே இன்பஞ்
செய்வது தவிர வேறு பயனை விளைக்கக் கூடாது " என்றும் இருவேறுபட்ட பதில்
களை இலக்கியத் திறனாய்வாளர்கள் முன்வைப்பதையும் பார்க்க முடிகிறது. இதில்
முதலாவது நிலையினைக் கைக்கொண்டனவாகத் தமிழிலக்கியங்கள் அமைந்திருப்
பதனை அவதானிக்கலாம்.
      சங்க இலக்கியங்களில் காணப்பட்ட பண்பாடுகள் தொடர்ந்து தமிழ் இலக்கியங்க
ளில் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.சங்க இலக்கியங்களை யாவரும்
பெரிதும் மதிக்கின்றனர்.போற்றுகின்றனர். சங்க இலக்கியகாலத்தைப் பொற்காலம்
என்றும் விதந்தும் கூறுவதுண்டு.அந்தளவுக்கு அக்கால இலக்கியம் விளங்கியிருக்
கிறது என்பது கற்றறிந்தோர் கருத்தாகும்.
     சங்ககால மக்களின் வாழ்க்கையை இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பர்
இலக்கிய ஆய்வாளர்கள்.வீரமும் , காதலும் , அக்கால மக்களின் வாழ்க்கையின் அடித்
தளமாக விளங்கியிருந்தன என்பதை சங்க இலக்கியங்கியங்கள் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.வீரமும், காதலும்.  பெருமளவில் போற்றப்பட்டாலும் கூட - 
அறக்கருத்துக் கருத்துக்களும், நிலையாமை பற்றிய கருத்துக்களும் சங்க இலக்கிய
க்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றன.
    இதற்குப்பல எடுத்துக்காட்டுகளைச் சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப் பாடல்
களில் கண்டுகொள்ளலாம்.கணியன் பூங்குன்றனாரின் " யாதும் ஊரே யாவரும்
கேளிர் " பாடலை நோக்கினால் நிலையாமை பற்றிய சிந்தனையைக் கண்டு கொள்ள
லாம்.வறுமை ஒழித்தல், பசிப்பிணி போக்குதல், பகுத்துண்டு வாழ்தல்,பழியினை
ஒழித்தல், மறுபிறவி பற்றிய சிந்தனை, அறம்செய்யும் சிந்தனை, என்று பல விடயங் களை , சங்க இலக்கியம் வெளிப்படுத்தி நிற்கிறது.இந்த விடயங்கள் யாவும் மெஞ்ஞானம் சம்பந்தப்பட்டனவாகும்.எனவே மெஞ்ஞான இலக்கியம் என்று பார்க்கும்
பொழுது அந்தக் கருவானது சங்ககாலத்திலேயே கருக்கொண்டு விட்டதாகக் கருதப்
கூடயதாக இருக்கிறதல்லவா ?
      அறம் பற்றியும் , நிலையாமை பற்றியும், பேரின்பம் என்றால் என்ன என்பது பற்றி
யும், நல்லொழுக்கம், வாழ்வாங்கு வாழுதற்கான ஒழுங்கு முறைகள் பற்றியும் சிந்திக்
கும் நிலையினை மெஞ்ஞானம் என்கின்றோம்.இந்தக் கருத்துக்களையெல்லாம் 
தன்னகத்தே கொண்ட இலக்கியங்கள் பெருமளவில் சங்கமருவிய காலப் பகுதியில்
தோன்றுவதைக் கண்கின்றோம்."அறவொழுக்கங்களைப் பொருளாகக் கொண்டுள்ள
நூல்களை சிறந்த இலக்கிய வரிசையில் வைத்துப் பாராட்டப்படுவது தமிழ் மொழிக்கு
உள்ள ஒரு தனிச்சிறப்பாகும்.ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் அறநூல்கள் இலக்கிய நூல்களாகக் கொள்ளப்படுவதில்லை."  என பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் தம்முடைய " தமிழ் இலக்கிய வரலாறு " நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
     சங்ககால இலக்கியங்கள் அகம், புறம், என்று என்று அமைந்திருந்தாலும் அவற்றில்
ஆங்காங்கு மெஞ்ஞானச் சிந்தனைகளும் இடம்பெற்றிருந்திருக்கின்றன.அரசர்களை
திசைதிருப்பும் முகமாக அவர்களிடம் பரிசில்கள் பெறவருகின்ற புலவர்கள் நிலையா
மைக் கருத்துகளை எடுத்துக்காட்டி நல்லன செய்யும்வண்ணம் தூண்டமுயல்வதை
சங்க இலக்கியங்களில் காண்கின்றோம்.மெஞ்ஞானத்தில் நிலையாமைக் கருத்து
மிகவும் முக்கியமானதாகும்.
    உலகமும் அதில்காணப்படுகின்ற பொருள்களும்தான் உண்மையானவை என்ற
சிந்தனையுடன் உள்ள இலக்கியங்கள் இன்பத்தை ஊட்டும் வகையில் வந்துவிடு
கின்றன. இந்த உலகினுக்கும் அப்பால் பல உயர்ந்த விஷயங்களும் இருக்கின்றன,
அவைதான் நிரந்தரமானவை, அதுதான் வாழ்வினைச் செம்மைப் படுத்தும் என்னும்
நோக்கினை வெளிப்படுத்தும் வகையிலும் இலக்கியங்கள் தமிழில் அமைந்திருக்கின்
றன. அதைத்தான் மெஞ்ஞான இலக்கியம் என அழைக்கின்றனர் எனலாம்.
     இந்த மெஞ்ஞான இலக்கியத்துள் பக்தியும், அறமும், நீதிக்கருத்துகளும், இணை
ந்துவிடுகின்றன.சங்கமருவிய காலத்தில் மெஞ்ஞான இலக்கிய நூல்கள் பெருமளவில்
தமிழிலக்கியமாக வந்திருக்கின்றன.பதினெண் கீழ்கணக்கு நூல்களில் பதினொரு
நூல்கள் மெஞ்ஞானம் சம்பந்தமான இலக்கியக்கியம் எனக்கொள்ளக் கூடியதாக
அமைந்திருக்கிறது.
     பெரும்பாலும் இவற்றில் அறக்கருத்துக்களே வலியுறுத்தப்படுகின்றன.இதில் திருக்குறள் சற்று வித்தியாசமானதாகும்.இதில் அறமும், பொருளும், இன்பமும்
கூறப்பட்டாலும் இதில் மேலோங்கி நிற்பதாக மெஞ்ஞானக்கருத்துக்கள் இடம்
பெறுகின்றன.
     சிலப்பதிகாரம் சமயம் தழுவாத இலக்கியமாக இருக்கின்ற போதிலும் இதுவும்
மெஞ்ஞானச் சிந்தனைகளை வெளிக்கொணரும் நிலையில் இருப்பதையும் அவ
தானிக்க முடிகிறது. மணிமேகலை சமயம் தழுவியதாக இருந்தும் மெஞ்ஞான இலக்கியத்தினுள் வந்துவிடுகின்றது.
    காரைக்கால் அம்மையார் தொடக்கிவைத்த பக்தி இலக்கியமானது நாயன்மார்க
ளாலும், ஆழ்வார்களாலும் , வளர்த்தெடுக்கப்படுகின்றது.பக்தி இலக்கியம் மெஞ்ஞான
வழியில் சிந்திக்க வைக்கின்ற காரணத்தால் அவற்றை மெஞ்ஞான இலக்கியம் என
ஏற்றுக்கொள்ளலாம் என இலக்கிய ஆராய்வாளர்கள் கருதுகிறார்கள்.
      பல்லவர்காலமும், சோழர்காலமும், பக்தியை வளர்க்கின்ற சூழலைப் பெற்றிருந்த
காரணத்தால் இக்கால இலக்கியங்கள் பெரும்பாலும் மெஞ்ஞானச் சிந்தனையினை
வெளிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன என்பது பொதுவான அவிப்பிராயமாகும்.
      சோழர்காலத்தில் வந்த கம்பராமாயணம் பல்வேறு சுவைகளைக் கொண்டதாக
விளங்கிய போதிலும் அன்றும்,இன்றும், மெஞ்ஞான இலக்கியமாகவே யாவரலும் 
பார்க்கப்படுகிறது.பக்திச்சுவை நனி சொட்ட சொட்டபாடிய கவிவலவ எனப்போற்
றப்பட்ட சேக்கிழாரினால் அளிக்கப்பட்ட பெரியபுராணம் மெஞ்ஞானத்தை ஒவ்வொரு
நிலையிலும் உணர்த்துவதாக விளங்கும் இலக்கியமாகிப் பலராலும் ஆராயப் 
படத்தக்கதாயும் இருக்கிறது.வில்லிபுத்தூராரின் மகாபாரதமும் இந்தவகையில்
இணைந்து கொள்கின்றது.சீவகசிந்தாமணி இன்பத்தை சொன்னபோதிலும் அதிலும்
மெஞ்ஞானமே முக்கிய நோக்கமாக அமைவதையும் காணமுடிகிறது.
       சைவசித்தாந்தம் பற்றிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் பல இலக்கியங்கள்
புறப்பட்டு வந்தன.இவைகள்யாவும் மெஞ்ஞான இலக்கியமாகவே யாவராலும்
பர்க்கப்படுகிறது.
       நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட அரசியல்சூழலினால் சமூகமே மாறியது.இதனால்
சமயம் சார்ந்த மடங்கள் பல தோற்றம் பெற்று சமயத்தையும் , அதன் பாரம்பரியத்தை
யும் காப்பாற்றும் அவசியமும் தேவையும் உருவானது.இதனால் பல தலபுராணங்கள்
இக்காலத்தில் மிகுதியாக வந்தன.கலம்பகம் , பள்ளு, உலா, தூது, என்றவகையில்
மெஞ்ஞானம் சார்ந்த இலக்கியங்கள் பெருமளவில் இடம்பிடித்துக் கொண்டன.
      சித்தர்களது இலக்கியங்கள் தமிழிலில் மிகுந்து காணப்படுகின்றன.இந்தவகையில் திருமூலரின் இடம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும்.மூவாயிரம் பாடல்கள் கொண்ட அவரது திருமந்திரம் மெஞ்ஞான இலக்கியத்தில் மணிமகுடமாக விளங்கிறது என்று பலரும் எண்ணுகின்றார்கள்.
திருமூலரின் சிந்தனையானது நாத்திகமாகவும் தெரியும் அதேவேளை ஆத்திகமாயும் கருத்துக்களை அள்ளிவழங்கியும் நிற்பதை நாம்கண்டு கொள்ளலாம்.திருமூலர் வழியிலே வந்து வெட்டொன்று துண்டிரண்டாய் மெஞ்ஞானக் கருத்துக்களைத் தந்துநிற்கின்றார் பட்டினத்து அடிகள்.மெஞ்ஞான இலக்கியம் என்றவுடன் முதலில்வந்து நிற்பவர் சித்தருள் உயர்ந்தவரான திருமூலர் அவர்களே. இந்த வகையில் வந்தன உயர்வான மெஞ்ஞான இலக்கியங்கள் அல்லவா!
     அருணகிரிநாதர் தமிழ் இலக்கியவரலாற்றில் மிகவும் முக்கியமானவர்.ஏனென்றால்
அவர்கையாண்ட யாப்புவகை மிகவும் கடினமானதும் சிறப்பானதுமாகும்.அவரின் 
கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, யாப்பைவிட திருப்புகழ் யாப்பே வியப்பினை
நல்கிநிற்கும் யாப்பு என யாவருமே வியந்துபோற்றுகிறார்கள்.சந்தத்தால் தமிழை
வளம்படுத்தியதோடு மெஞ்ஞான இலக்கியத்தில் தனது ஆற்றலை வெளிப்படுத்திய
தமிழ் பாவலராகவும் விளங்குகின்றார் எனலாம்.தாயுமான சுவாமிகளின் அத்தனை
படைப்புகளும் மெஞ்ஞான இலக்கியமாகவே இருக்கின்றன.குமரகுருபரர்
படைப்புகளும் மெஞ்ஞான இலக்கியத்தினுக்கு வலு சேர்ப்பனவாகவே அமைந்து
இருக்கின்றன.
     இஸ்லாமியர்களும் மெஞ்ஞான இலக்கியங்களை வழங்கி தமது பங்களிப்பினால்
அந்த இலக்கியத்தை செழிப்பாக்கி இருக்கின்றார்கள்.உமறுப் புலவரால் இயற்றப்
பட்ட சீறாப்புராணம் , முதுமொழிமாலை, மெஞ்ஞான இலக்கியமாய் மிளிர்வதைப்
பார்க்கின்றோம்.வண்ணக்களஞ்சியப்புலவர், அலியார் புலவர், குணங்குடி மஸ்தான்,
ஆகியவர்கள் மிகவும் சிறந்த இஸ்லாமிய மெஞ்ஞான இலக்கியங்களை வழங்கி
இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
     ஈழத்தவர்கள் பலர் மெஞ்ஞான இலக்கியங்களை அவ்வப்போது வழங்கி அந்த
இலக்கியத்தை மெருகூட்டியிருக்கிறார்கள் என்பதை எவருமே மறந்துவிடக்கூடாது.
சின்னத்தம்பி புலவர், கனகசபைப்புலவர்,சேனாதிராய முதலியார், மயில்வாகனப்
புலவர், உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், இவர்கள் அனைவரும் செய்யுளாலான மெஞ்ஞான இலக்கியங்களை வழங்கி அதற்கு வலுவூட்டி இருக்கின்றார்கள். 
  வசனநடையாலும், பிரசங்கம் என்னும் வகையாலும், தன்வாழ்நாள் முழுவதையும்
மெஞ்ஞான இலக்கிய வழிக்கே அர்ப்பணித்த மிகச்சிறந்த சிந்தனையாளரும்,
செயல்வீரரும்தான் நல்லைநகர் ஈந்தளிந்த ஆறுமுகநாவலர் பெருமான் அவர்கள்.
தமிழிலே பல சீர்திருத்தங்களைச் செய்தாலும், தமிழ் இலக்கணத்தில் நுண்மாண்
அறிவினைப் பெற்றிருந்தாலும்,அவரைப் பொறுத்தவரை இவ்வுலக வாழ்க்கையில்
இறைவனை நினைந்து வழிபட்டு முத்தியின்பம் பெறுவதை வலியுறத்தும் வகையில்
தான் அவரின் தமிழும் அவரின் இலக்கியச் சிந்தனையும் உருவாகி இருந்தது என்பது
தெளிவான உண்மையெனலாம்.எனவே நாவலர் பெருமானின் இலக்கியப் படைப்புக்
களின் அடிநாதமாக மெஞ்ஞானமே இருந்திருக்கிறது.
  " நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல் 
    சொல்லுதமிழெங்கே சுருதியெங்கே
    எல்லரிய வேதமோடு ஏத்துஆகமங்கள் எங்கே "

என்று நாவலர் பெருமானின் வரவினைப் போற்றிப்பாடும் அளவுக்கு அவரின் மெஞ்ஞான இலக்கியப்பணிகள் அமைந்திருந்தன என்பது எமக்கெல்லாம் மிகப்
பெருமையை அளிக்கிறது அல்லவா !
    கிழக்கிலங்கையில் உதயமான மெஞ்ஞான ஞாயிறான சுவாமிவிபுலாநந்தர் அவர்க
ளால் உயர்மெஞ்ஞான இலக்கியங்கள் உதயமாகிருப்பதையும் மறக்கமுடியுமா?
நாவலர் பெருமானுக்கு வாய்த்த சூழல் வேறு. சுவாமி அவர்களுக்கு வாய்த்த சூழல்
வேறாகும். இருவருமே தமிழில் மிகச்சிறந்த பாண்டித்தியம் பெற்றவர்களாக மிளிர்ந்த
போதிலும் - அவர்களிடம் மெஞ்ஞான நோக்கே நிறைந்து காணப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
    ஆறுமுகநாவலர் காலத்தவரான கிறீஸ்தவ மதகுருவானசுவாமி ஞானப்பிரகாசரும் மிகச்சிறந்தபுலமையாளராவர்.அவராலும்மெஞ்ஞானவழியில்பயணிக்கமுடிந்ததையும்காண்கின்றோம்.நாவலரும் ஞானப்பிரகாசரும் இரண்டு கோணங்களில் நின்றாலும் அவர்களூடாக மெஞ்ஞான இலக்கியம் செழுமை பெற்றது என்பது மனங்கொள்ளத் தக்கதே.
     ஐரோப்பியர் வருகையினால் அரசியல் மாற்றமும்,சமயசமூக மாற்றங்களும்
ஏற்பட்டன.அன்னிய மதங்களைப் பரப்பவந்த மதபோதகர்கள் பலர் தமிழைக் கற்றார்
கள்.கற்றதுடன் நின்றுவிடாது தத்தம் சமயங்களைப் பரப்பும் முகமாக மெஞ்ஞான
இலக்கியங்களைத் தமிழிலே தந்து தமிழிலக்கியத்துக்கு மேலும் வலுவூட்டி நின்றமை
மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும்.
  இந்தப் புதிய வரவு ஒரு எழுச்சியென்று கூடச்சொல்லலாம்.தேம்பாவணி என்னும்
இலக்கியம் கம்பராமாயணம் , சீவசிந்தாமணி அளவுக்குச் சுவைமிகுந்த இலக்கியமாகி நிற்கிறது.இதனை ஆக்கியவர் பெஸ்கி என்னும் தனது பெயரினையே
வீரமாமுனிவர் என ஆக்கிக்கொண்டார் என்பது இவரின் தமிழ்க் காதலைக் காட்டி
நிற்கிறது எனலாம்.தத்துவ போதக சுவாமிகள், ரேனியுஸ் ஐயர், ஜி.யூ.போப்,
டாக்டர் கால்டுவெல், ஆகியோர் மெஞ்ஞான இலக்கியங்களைத் தந்த தமிழர்
அல்லாதவர்கள் என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும்.
     பாரதியார் தேசியக்கவிஞனாக விளங்கிய பொழுதிலும் அவரின் படைப்புகளிலும்
மெஞ்ஞானச் சிந்தனைகள் நிறையவே காணப்படுகின்றன.திருவாவடுதுறை ஆதீனம்,
தருமபுர ஆதீனம், மெய்கண்டார் ஆதீனம், அளவிறந்த மெஞ்ஞான இலக்கியங்களை
உரைநடையிலும், செய்யுளிலும், வழங்கியிருக்கின்றன. இன்றுவரை அப்பணிகள்
தொடர்ந்தபடியே இருக்கின்றன.
       பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் பலர் மெஞ்ஞான
இலக்கிய கர்த்தாக்களாக மிளிர்ந்தமையையும் காணமுடிகிறது.இந்த வகையில்
மு.தளையசிங்கத்தை நோக்கலாம்.மிகக்குறுகிய காலம் அதாவது பாரதியார் 
போலவாழ்ந்தாலும் வாழ்ந்தகாலத்தில் மெஞ்ஞானம் பற்றிய நிலையினுக்கு
ஆட்பட்டு பகவான் ஶ்ரீநந்த கோபாலகிரியிடம் தீட்சையும் பெற்றுக்கொண்டார்.
    "சர்வமதங்களும் சமமானவையல்ல.எல்லாம் ஒன்றே " என்ற ஞானம் சகல
மக்களினதும் இன,மத,மொழி,கலாசார ஆணவத்தடைகளை அறுப்பதோடு
அதன் இடத்தில் எழுகின்ற புது யுகத்தின் எல்லாப் பொதுமைகளையும் நிலை
நாட்டவும், சகலமக்களையும் மெய்யை நோக்கி ஆற்றுப்படுத்தவும் சர்வமத ஐக்கியத்
துவம் தூண்டுகிறது.
    இத்தூண்டுதலின் கலை ஒலிப்பே பாரதிகண்ட கிருதயுகம்.பாரதி விவேகானந்தரின்
சிஷ்யையான நிவேதிகாவின் சீடனாவர்.அரவிந்த்ரோடும் உறவாடியவர்.இந்த அனுப
வச் சூழலின் தரிசன வார்ப்பாகவே மு.தளையசிங்கம் அவர்கள் விளங்குகின்றார்.
அவரின் மெஞ்ஞான நிலை இதுவேயாகும்.இந்த அடிப்படையில்த்தான் அவரின்
மெஞ்ஞானத் தத்துவவப் படையலாக "போர்ப்பறையும் " மெய்யுளும் " அமைந்து 
இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.சர்வோதய சிந்தனைகளை தனது
மனத்தில் நிறைத்தவராக தளையசிங்கம் இருந்தததால் அவரின் மெஞ்ஞான
இலக்கியச்சிந்தனையும் அதன்வழியிலேயே சென்றிருக்கின்றது.பாரதியை 
மிகவும் நேசித்த சிந்தனை வாதியாக மு. தளையசிங்கம் இருந்தமையால்
அவரின் மெஞ்ஞான இலக்கியமும் அதனையொட்டியே நகர்வதனையும் காண்கின்
றோம்.
       மெஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் என்பது தமிலிலக்கிய வரலாற்றில் சங்கமருவிய காலத்தின் பின்னர் ஆராம்பித்து சோழர்காலத்தில் உச்சம்பெற்று 
நாயக்கர் காலத்தில் புதுவடிவம்தாங்கி வந்திருக்கிறது என்றுதான் சொல்லலாம்.
      மெஞ்ஞான இலக்கியம் என்று நோக்கும்பொழுது - இன்றும் அதன்நிலை உச்சம்
என்று கொள்ள முடியாவிட்டாலும் வீழ்ச்சி என எடுத்துக் கொள்ளமுடியாமலே இருக்
கின்றது. ஏனென்றால் இன்றும் மெஞ்ஞான இலக்கியமானது எப்படியோ வந்துகொண்
டேயிருப்பத்கைக் காண்கின்றோம்.
   வடிவம் மாறியிருக்கலாம்.ஆனால் வண்ணம் மாறவில்லை எனலாம்.உரைநடையில்
பல மெஞ்ஞான இலக்கியங்கள் இன்றும் வந்தபடிதான் இருக்கின்றன.சினிமாக்கவி
யாக வளர்ச்சிபெற்றாலும் நல்ல சிந்தனைக் கவியாயும் விளங்கியவர்தான் கவியரசு
கண்ணதாசன்.அவர் செய்யுளினால் யேசுகாவியத்தையும், உரைநடையால் அர்த்த
முள்ள இந்துமதத்தையும் மெஞ்ஞான இலக்கியமாக்கித் தந்துள்ளதை  மறுக்கமுடி
யுமா ! 
      புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பேச்சுமுறை இலக்கியத்தாலும்,
சமயதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு உரைநடை இலக்கியங்களாலும்
வையத்துள் வாழ்வாங்குவாழும் வழிவகைகளை கற்றாரும் மற்றாரும் மனங்கொள்ளும்
வகையில் மெஞ்ஞான இலக்கியங்களை வழங்கிநின்ற வாரியார் சுவாமிகளை
மறக்கமுடியுமா!
    பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களினால் வழங்கப்பட்ட அரிய பெரிய
மெஞ்ஞான இலக்கியங்களைத்தான் மறக்க முடியுமா !
      கணனியுக காலத்திலும்கூட மெஞ்ஞான இலக்கியமாக வெளிரும் பக்திவிகடன்
ஞானபூமி, பக்திக் குமுதம் , தமிழ்நாட்டில் அரசினால் வெளியிடப்பட்ட திருக்கோயில்
சஞ்சிகை இவையெல்லாம் மெஞ்ஞான இலக்கியம் பற்றிய சிந்தனை இப்பொழுதும்
இருக்கிறது என்பதைக் காட்டுகிறதல்லவா !
     நாத்திகமும் ,ஆத்திகமும், உலகம் உருவான காலந்தொடக்கமே இருந்து வருகிறது.அதற்கேற்பவே அவ்வக்காலத்து எழுந்த இலக்கியங்களும் அமைந்தும்
வந்திருக்கின்றன. இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்பதை ஏற்றுக் 
கொள்வோமேயானல் மெஞ்ஞான இலக்கியம் ஒருகுறிப்பிட்ட காலத்தில் அக்கால
சூழலினைவைத்து உச்சநிலை எய்தியிருக்கலாம் என எண்ணமுடிகிறது.அதேவேளை
தற்கால சூழலில் மெஞ்ஞான இலக்கியம் பற்றிய சிந்தனைக்கு ஏற்பவே அந்தவகை
இலக்கியங்களும் வருகின்றன.
    இன்று நிலவும் சூழலானது நூறுசதவீதம் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண் டதேயாகும்.இங்கு விஞ்ஞானமே எல்லாவற்றிலும் முன்னிற்பதை எவராலும் தவிர்த்து
விடவோ அன்றித் தடுத்துவிடவோ முடியாது.விஞ்ஞானம் அரியாசனத்தில் வீற்றிருக்
கின்ற நிலையில் மெஞ்ஞானம் சற்று அடக்கி வாசிக்கவேண்டிய சூழலே ஏற்பட்
டிருக்கின்றது.அதனால் மெஞ்ஞானம் பற்றிய சிந்தனை இல்லாமற்போய்விட்டது
என்பது அர்த்தமல்ல.
    இலக்கியம் காலத்தைப் புலப்படுத்தும் பாங்கில் இருப்பதால் இக்கால நிலைமை
யினை அனுசரித்துப் பலவகைஇலக்கியக்கியங்கள் பல்கிப்பெருகி வந்துகொண்டே
இருக்கின்றன.அதற்கிடையில் மெஞ்ஞானபடைப்புகளும் வந்துகொண்டுதான் இருக்
கின்றன.இதனால் மெஞ்ஞான இலக்கியம் என்று பெரியளவில் அதாவது உச்சம்
என்று சொல்லும் அளவுக்குக் காணப்படவில்லை என்பது நோக்கத்தக்கதே.
ஆனாலும் மெஞ்ஞானம் என்னும் சிந்தனை மனங்களில் ஓடிக்கொண்டுதான்இருக்கிறது.


    

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.