புதியவை

உயிரணையும்வரை பிரியாதிருப்பவள் - வித்யாசாகர்

                         

மூன்றோ நான்கோ இட்டிலி தின்று
எனை மூன்றுபொழுது ஓடவிட்டவள்;
ஒரு சின்னப்பார்வையுள் சிரிப்பைப் பூட்டி
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொன்றுப்போட்டவள்..

நினைத்ததும் கடவுள்போல் வந்து
நிந்திக்கச் செவ்விதழைக் கொண்டவள்;
உள்ள சிரிப்பழகை உதட்டோரங் கொண்டு
எனை உயிரோடு கனவில் தின்பவள்...

குறுகுறுக்கும் பார்வையாலே
இதயத்துள் கேட்காமல் புகுந்தவள்;
இனி காலம் அது கனக்காது கண்ணுள்
கனவாக நினைவாக நிற்பவள்..

சில்லரையெழுத்துப் பெயரைக்கொண்டு
எனைச் சீனிப்பேச்சில் சொக்கவைத்தவள்;
இனி உயிரணையும் காலம் மட்டும்
உயிராக வாழவே வேள்வி ஏற்றவள்..

இரவோ இது பகலோ எனப் புரியாதெனை
திகைக்கவைத்தவள்;
என் நிமிடமதை யுகமாய் யுகமாய் மாற்றி
காலத்திற்கே யழகு வண்ணம் செய்தவள்..

மனதில் ஒரு துளி
மருந்தைப் போட்டவள்;
மழைபோல் மழைபோல் அவளே
விடாது பெய்பவள்..

அழகே அழகே மொத்தம்
அவளேயானவள்;
உயிரோ ஒரு வரமோ


அவள் கடவுள் தந்தவள்! !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.