புதியவை

சும்மா இரு - எம் . ஜெயராமசர்மா

                          

                   

          சும்மாஇரு என்று சொல்லுவது எழிதாகும்
          சும்மா இருப்பதுதான் சுகமான நிலையாகும்
          சும்மா இருந்துவிட நினைக்கின்றார் யாவருமே
          இம்மா நிலத்தினிலே என்றுமே உயர்ந்துநிற்பார் !

          சும்மா இருப்பது சுமையான காரியமே
          சுகம்கண்ட யாவருமே சும்மாஇருக்க மாட்டார்
          சுழன்றோடும் மனத்தாலே சும்மா இருப்பதற்கு
          சுதந்திரத்தைப் பெற்றுவிடல் சுகமான விஷயமல்ல !

          சும்மா இருந்ததனால் சுமைவிட்டார் ஞானியர்கள்
          இம்மா நிலத்தினிலே இவர்வணங்கும் பேறுபெற்றார் 
          சும்மா இருந்தபடி சுவாசத்தால் பலபெற்றார்
          சுகமனைத்தும் துறந்ததனால் சும்மாவே இருந்தார்கள் !

         சும்மா இருந்துவிட்டால் சோறுதான் கிடைத்திடுமா
         சும்மா இருப்பதுதான் சோம்பலின் நிலையாகும்
         சும்மா இருந்துவிட்டால் சுதந்திரம் கிடைத்திடுமா
         சும்மாவை தூக்கியெறி துள்ளலுடன் வாழ்ந்திடலாம் !

          சும்மா இருந்துவிடின் அம்மாவும் வெறுத்திடுவாள்
          சும்மா இருந்துவிடின் துணையுமே துரத்திடுவாள்
          சும்மா இருந்துவிடின் தோழமையும் கிட்டவரான்
          சும்மா இருந்துவிடின் சுகத்துக்கே கேடாகும் !

           சும்மா இருப்பாரை சொறிநாயும் நோக்காது
           சும்மா இருப்பாரைச் சொந்தமுமே பார்க்காது
           சும்மா இருப்பார்க்கு சொர்கமுமே நரகமாகும்
           சும்மா இருப்பதற்கு சொல்லுகின்றார் பலகருத்தை !

           சும்மா இருஎன்று சொல்லுகின்ற நிலையினிலே
           சும்மா எடுத்துவிடின் சோறுபற்றி நினைத்திடலாம்
           சும்மா இருஎன்னும் பொருள்பொதிந்து பார்த்துவிடில்
           இம்மா நிலத்திற்கது எட்டாத தத்துவமே !

            தத்துவமாய் இருக்கின்ற தகைமையுடை சொல்லதனை
            சாதாரண நிலையில் நாமெடுத்தால் வேறு அர்த்தம் 
            உள்விழுந்து நோக்கிவிடின் உயர்கருத்தை       கொள்ளுவதால்
            சும்மா நாமெண்ணிவிடும் சொல்லல்ல சும்மாயிரு !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.