புதியவை

வல்லமைமிகு கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள்

KALAIMAHEL HIDAYA RISVI-

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள். தனது கவித்திறமையால் வல்லமை வாசகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள் சென்ற வாரம் பாரிலே பிறப்பான்….!“, “யாஅல்லாஹ்!” என்ற இரு கவிதைகளை வல்லமையில் வெளியிட்டிருந்தார். கருத்தோட்டம், சொல்லோட்டம் இரண்டுமே அருமையாக அமைந்திருந்த கவிதை என்றப் பாராட்டினை “பாரிலே பிறப்பான்…” கவிதை பெற்றது. கவிஞரது அருமையான கவிதைக்காக இவ்வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் கலைமகள் ஹிதாயா அவர்களைப் பாராட்டுகிறோம்.
இலங்கை கல்முனையைச் சார்ந்த கவிஞர் கலைமகள் ஹிதாயா; கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, ஹிதாயா மஜீத், மருதூர்நிஸா என்ற பெயர்களில் தனது இலக்கியப்படைப்புகளை அளித்து வருகிறார். இளமையிலேயே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட கலைமகள் ஹிதாயா அவரது பதினாறாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் துவங்கியவர். முதல் முயற்சியிலேயே இவரது “மீண்டும்” என்ற புதுக்கவிதையும், “அன்னை” என்ற மரபுக் கவிதையும் வெவ்வேறு பத்திரிக்கையில் ஒரே நாளில் பிரசுரிக்கப்பட்டது என்ற சிறப்பினைப் பெற்றவர்
பதின்ம வயதில் தொடங்கி தொடர்ந்து மூன்று பத்தாண்டுகளாக இவர் எழுத்தின் வீச்சு மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை, நெடுங்கதை, மெல்லிசைப்பாடல், விமர்சனம் என, பற்பல பரிமாணங்களில் மிளிர்கிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளையும், மரபுக்கவிதைகளையும் எழுதியுள்ளார்.
நாளையும் வரும்தேன் மலர்கள்இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற புதுக்கவிதை மற்றும் மரபுக்கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். முப்பது சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், பற்பல நூல் மதிப்புரைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலங்கையின் பல பத்திரிக்கைகளிலும், இந்தியா, ஆஸ்திரேலியா பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளில் குரல்கொடுத்துள்ள இவர் ரூபவாகினிக் கவியரங்குகளிலும் பங்குகொண்டுள்ளார். அத்துடன் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
இவரது இலக்கிய ஆர்வம் காரணமாக “தடாகம் கலை இலக்கிய வட்டம்” என்ற அமைப்பைத் துவக்கி, அதன் அமைப்பாளராகத் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பில் பல எழுத்தாளர்களை கௌரவித்துள்ளார், நூல்களின் வெளியீட்டு விழாக்களையும் நடத்தியுள்ளார். தடாகம் கலை இலக்கியச் சிற்றிதழ் ஒன்றினையும் வெளியிட்டு வருகிறார்.
கவிதை இலக்கிய ஆர்வத்தின் காரணமாக பல கவிதைப்போட்டிகளில் பங்கு பெற்று தனது கவித்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அகில இலங்கை மற்றும் மாவட்ட அளவில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது, ரத்ன தீப சிறப்பு விருது பெற்ற முதலாவது பெண் கவிஞர், இளம் படைப்பாளிக்கான விருது, கலை அரசி விருது, கவித்தாரகை விருது, கலைமுத்து விருது, கவிதைச் சிற்பி விருது, சாம ஸ்ரீ, தேசகீர்த்தி, கலாசூரி, சமூக ஜோதி, பாவரசு, காவியத் தங்கம், இலங்கையின் சிறந்த பெண் கவிஞர் பட்டங்களும் என இவரது பட்டங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல் விரிகிறது.
KALAIMAHEL HIDAYA RISVI4
இவரது கவிதைத்திறனை படித்து மகிழ கவிஞரின் இவ்வார வல்லமைக் கவிதையான “பாரிலே பிறப்பான்….!” கவிதையுடன் மேலும் இரு கவிதைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாரிலே பிறப்பான்….!
______________________________________________________
மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி
அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து
அன்னை வயிற்றினுள் அடக்கமாய் வளர்ந்து
பத்துத் திங்களில் பாரிலே பிறப்பான்….!
இருண்ட சூழலை மாற்றிய பின்னே
ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க
விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால்
ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்…..!
தத்தித் திரிந்து தளர்நடை பயின்று
பள்ளிப் பருவ வாசல் ஏறி
இளைஞனாகி என்றும் வனப்புடன்
உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்….!
குருடனாய்,செவிடனாய் குடிக்கு அடிமையாய்
அறிஞனாய்க் கலைஞனாய் ஆயிரம் வேஷம்
ஏதோ ஒன்றை இட்டுக் கொள்வான்
எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்….!
முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே,
பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான்
போகப் போக நடை தளர்ந்திடுவான்
பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான்…..!
***

கல்வி ஒழுக்கம்
______________________________________________________
கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல் வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
(கல்வி ஒழுக்கம்)
வாருங்கள் உயர்வோம் வாழ்க்கையிலே
வலம் புல பெறுவோம் நம்பிக்கையிலே
யாருக்கும் ஒழுக்கம் புகழ் கொடுக்கும்
நாட்டுக்கும் அமைதி நலம் படைக்கும்
(கல்வி ஒழுக்கம் )
பூத்திடும் மலர்கள் சோலையிலே
புலர்ந்திடும் விடியில் காலையிலே
ஆரத் தொழுவோம் நலம் செர்த்திடுமே
அன்பினை உலகெங்கும் ஊட்டிடவே
(கல்வி ஒழுக்கம் )
ஊடக மென்பது உலகாளும்
உன்னத மான செயலாகும்
நாடக உலகம் நமதாகும்
நன்மைகள் உழைப்பில் விளைவாகும்
(கல்வி ஒழுக்கம் )
கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல் வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
***

கிள்ளி விளையாடாதீர்கள் ….!
______________________________________________________
வாழ்க்கையை குழி தோண்டி புதைத்துக்
கொண்டுதான் வாழுகின்றீர்கள்
மனித ஆத்மாவுக்கு
பகையை புகையாய் மாற்றுகின்றீர்கள்
நம்பிக்கையான உள்ளங்களை
துரோகிகளாக மாற்றுகின்றீர்கள்
நாய்க்கு கொடுக்கும் மதிப்பைகூட,
மனிதர்களுக்கு காட்டாமல் இருக்கின்றீர்கள்
உடமைகளைக் கூட
தீயிட்டு எரிக்கிண்றீர்கள்
மான மரியாதைகளை காற்றில் பறக்க விடுகின்றீர்கள்
உங்களை நினைத்து நீங்களே
தலைக்கனம் பிடித்து புளகாங்கிதமடைகின்றீர்கள்
ஏழை எளியோரைக் கண்டால்
கண்டும் காணாமல் போகின்றீர்கள்
அடுத்தவனின் முன்னேற்றத்தை தடுத்து
தான் உயர நினைக்கின்றீர்கள்
துரோகத்தை அன்பாய் காட்டி
அடுத்தவன் சோற்றில்
ஏன்
சேற்றைப் பூசுகிண்றீர்கள் …?
கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள் தொடர்ந்து இலக்கியப்பணியாற்றி மேலும் பல புகழ் உச்சங்களை அடைய வல்லமைக் குழுவிரின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

கவிஞர் கலைமகள் ஹிதாயாவின் தொடர்பிற்கு:
மின்னஞ்சல்: s.k.risvi@gmail.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/hidaya.risvi
கூகுள் ப்ளஸ்: https://plus.google.com/104217741513778703421/
யூ டியூப்: https://www.youtube.com/user/kalaimahelhidaya123
வலைப்பூ: http://www.kalaimahelhidayarisvi.blogspot.com/

கவிஞர் கலைமகள் ஹிதாயாவின் பல்வேறு வலைப்பூக்கள்:
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி – http://www.kalaimahelhidayarisvi.blogspot.com/
கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் கவிதைகள் – http://www.kalaimahelhidayapoem.blogspot.com/
கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் சிறுகதைகள் – http://kalaimahelhidayarisvishortstories.blogspot.com/
கலைமகள் ஹிதாயாவின் பாடல்கள் – (http://kalaimahelhithayavinpaadalgal.blogspot.com/
கலைமகளின் தாய்வாக்கு – http://kalaimahelinthaaivaakku.blogspot.com/
வசந்தகாலம் – http://wwwvasanthakaalam.blogspot.com/
விரியும் பூக்கள் (நூலாய்வு) – http://www.kalaimahelhidayapublication.blogspot.com/
தடாகம் கலை இலக்கிய வட்டம் – http://www.thadagamkalaiilakkiyavattam.blogspot.com/
இஸ்லாமியப் பூங்கா – http://wwwislamiyapoonga.blogspot.com/
ஹிதயாவின் தரும் மருத்துவத் தகவல்கள் – http://hidayavummaruththuvamum.blogspot.com/

தகவல் தந்துதவிய விக்கிபீடியாவிற்கு (https://ta.wikipedia.org/s/19jr) நன்றி
படங்கள் உதவி: இணையதள வெளியீடுகள்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.