புதியவை

ரதி மோகன் - பனிவிழும் மலர் வனம்

 அத்தியாயம்-29 

 மதிமதியால் இதற்குமேல் எதுவும் சிந்திக்கமுடியவில்லை . தலைக்குள் ஏதோ  ஒரு பூகம்பம் நிகழ்வதாக உணர்ந்தாள்.. வைத்தியசாலையே சுற்றுவது போன்று இருந்தது. மெல்ல அனசனின் தாயாரின் கைகளைப்பற்றி" என்னாலை முடியலை .. தலை சுற்றுகிறது.. எனைப்பிடியுங்கள் . வெளியே போகணும் "" மெல்ல டெனிஷ் மொழியில் கிசுகிசுத்தாள் . பதறிய அனசனின் தாயார் மெல்ல அவளை தாங்கியபடி வெளியே வந்து டொக்டரை கூப்பிடுங்க என கத்தவும் விரைந்து செயற்பட்ட சங்கர் அவள் நிலத்தில் வீழ்வதற்கிடையில் தாங்கி படுக்க வைத்தான் . கட்டிலோடு விரைந்து வந்த தாதியர்கள் மதுமதியை தூக்கி இதயசிகிச்சைப்பிரிவுக்குள் கொண்டுசென்றனர்

காதலிலே கட்டுண்ட இரு ஜீவன்களும் நினைவிழந்து கட்டிலில் கிடக்கும் காட்சியைப் பார்க்க கல்லான மனங்களும் இரத்தக்கண்ணீர் வடிக்கும். இப்போது எல்லோர் முகங்களிலும் கவலை இருமடங்காகியது. மதுமதிக்காகவும் எல்லோரும் காத்திருப்பு கூடத்தில் இருந்து பிரார்த்தித்த வண்ணம் இருந்தனர். மதுமதி கண்கள் திறக்கவில்லை. அவளின் இதயத்துடிப்பு சீரற்று இயங்குவதாகவும், குருதியமுக்கம் அளவுக்கு அதிகமாக உள்ளதாகவும் டாக்டர்கள் சொன்னார்கள். சங்கர் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் திரண்டு முத்துக்களாக வீழ்ந்தன.

அங்கே மூன்று மணித்தியாலங்கள் தாண்டியும் அவள் கண்விழிக்காமல் இருந்தது பெரும் சங்கடத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தியது. அப்போதுதான் தாதி ஒருத்தி கொண்டுவந்து தந்த அவளது கைப்பையை திறந்தபோது சங்கர் கண்களில் மதுமதியின் கவிதைகள் அடங்கிய குறிப்பேடு ஒன்று தென்பட்டது. மயிலிறகு ஒட்டப்பட்ட முதல் பக்கத்தில் "என் இதயத்தில் வாழும் அனசுக்காக மனதினை மயிலிறகாய் வருடிச்செல்லும் என் கிறுக்கல்கள்..." 💞..என எழுதப்பட்டிருந்தது. மதுமதி அனசனை அனஸ் என அழைப்பது வழக்கம். மதிமதியை கவிதாயினி ஆக்கியதே அனசன் மேல் கொண்ட காதல்தான். பனி படர்ந்த டென்மார்க் தேசத்தில் மலர் வனமாய் அவள் வாழ்க்கை பூத்துக்குலுங்க காரணமானதும் இந்தக்காதலே.. காதல் தந்த மயக்கத்தில் அந்த வேகத்தில் அவள் புனைந்த அத்தனை கவிதைகளையும் அனசனுக்காக டெனிஷ் மொழியில் மொழிபெயர்த்து நூல் ஒன்றை அவனுக்கு தன் காதலின் பரிசாக கொடுக்க வேண்டும் என்பதே அவளின் கனவு இலட்சியம் என அவள் அந்த குறிப்பேட்டில் எழுதியிருந்தாள்.

பக்கம் பக்கமாய் அவள் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றும் வாசித்துக்கொண்டு போன சங்கர் ஒரு இடத்தில் அவன்  பார்வை குத்திட்டு அப்படியே நின்றது. அந்தக் கவிதையில் தன் ஆசைகளை அப்படியே கொட்டியிருந்தாள்.
" கண்ணுக்குள் நீ வேண்டும்
கனவிலும் பேச வேண்டும்
காதல் நிறை உன் பார்வையில்
தொலைந்தே நான் போகவேண்டும்..

உன் வார்த்தையில் நான்
வசப்படல் வேண்டும்
உந்தன் நிழலாய் நான்
தொடர வேண்டும்

காற்றும் புகாத நெருக்கம்
வேண்டும்.
கண்டவர் வியக்கும்
ஜோடியாதல் வேண்டும்..

#மதுமதி அனசன்
 ஒரு பெண்ணின் நியாயமான ஆசைகளை வரிகளாக தந்த விதம் சங்கரை கவர்ந்தது. அவளின் கவிதைகள் ஒவ்வொன்றும் அனசன் மேல் கொண்ட காதலின்  சாட்சிகளாக இருந்தன. சங்கருக்கு கவிதைகள் மேல் நாட்டம் எப்போதுமே இருந்ததில்லை. மதிமதி டென்மார்க் வந்த ஆரம்பக்காலங்களில் டெனிஷ் படிக்காமல் தமிழ் கதைப்புத்தகங்களிலும், கவிதைகளிலும் தன் நேரத்தை செலவிடுகிறாள் என சங்கர் மதுவை பலதடவை திட்டியிருக்கிறான். இப்போது இந்தக் கவிதைகளை படித்தபின் அவளின் தமிழ்ஆர்வத்தை கண்டுகொள்ளாமல் திட்டியது எவ்வளவு முட்டாள்த்தனம் என தன்னைத்தானே கடிந்து கொண்டான்.

சங்கரை நோக்கி வந்த டாக்டர் மதுமதி கண்விழித்த சேதியை சொல்லவும் அங்கு விரைந்த சங்கர் அவளருகே வந்து அவள் தலையை சற்று வருடி" உனக்கு ஒன்றும் இல்லையம்மா.. நானிருக்கேன்.. " என்றான்.  ஆனால் மதுமதி எதுவுமே புரியாத பதுமையாய் முகட்டை பார்த்து வெறித்தபடியிருந்தாள். அவளின் தோளைத்தொட்டு குலுக்கிய சங்கர் " மது என்னைப்பாரு .. என்னைத்தெரிகிறதா.. பாரு நான் சங்கர்.. பிளீஸ். பேசடி.. " அழகிய அந்த பூங்கொடி மொழியிழந்து ஏதோ தனக்குள் சிரித்தபடி தன்னுலகத்தில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தாள்...அதிர்ச்சியில் அவள் ஊமையானாளா... மனநிலை பாதிக்கப்பட்டாளா டாக்டரான சங்கருக்குள் வைத்திய உலகிற்கே புலப்படாத வினாவொன்று தோன்ற அவளை குழந்தையைப்போல் தன் மடியில் சாய்த்தான். ஒரு ஆண்மகன் அழக்கூடாது என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தபோதும் கண்ணீரை கட்டுப்படுத்த அவனால் முடியவில்லை. இதயத்தில் ஒரு பேரிடி விழுந்ததாக உணர்ந்த சங்கருடன் டென்மார்க் காலநிலையும் ஒன்று சேர்ந்து இருளான பகலவன் காணாத அன்றைய பொழுதில் சோ சோ என மாமழை பொழிந்தது.
(தொடரும்)


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.