புதியவை

நிம்மதி நெஞ்சில் நிற்கும் - எம். ஜெயராம சர்மா

                
       
                                           
    அடிக்கடி அழுவாய் நீயும்
    அனைவரும்  விழிக்கச் செய்வாய்
    துடித்து நாம் ஓடிவந்தால்
     தூக்கமாய் இருப்பாய் அப்போ
    அடிக்கவா முடியும் உன்னை
    அரவணைத் திடுவோம் நாங்கள்
     சிருப்புடன் விழித்துப் பார்ப்பாய்
     சிலிர்த்துமே நிற்போம் அங்கே

     பல் இல்லா வாயினாலெ
     பலகதை சொல்வாய் நீயும்
     சொல்லிடும் கதைகள் கேட்டு
      சொக்கியே நிற்போம் நாங்கள்
     மெல்லிய விரல்கள் கொண்டு
     மேனியைத் தீண்டும் போது
     எல்லையில் இன்பம் வந்து
     எங்களை அணைத்தே நிற்கும்

     கவலையில் மூழ்கி நாங்கள்
     கட்டிலில் இருக்கும் போது
      கழுக்கென்று சிரித்து நிற்பாய்
     கவலைகள் பறந்தே போகும்
      பதட்டமாய் இருக்கும் போது
     பால்முகம் பார்த்தோ மாயின்
     நெருக்கடி மறைந்தே போகும்
      நிம்மதி நெஞ்சில் நிற்கும்

    பிரசவத்தில் தாய் அழுவாள்
    பிறந்தவுடன் நீ அழுவாய்
    பெண்ணாகப் பிறந்து விட்டால்
     பெற்றவரும் அழுதிடுவார்
    அழுதழுது பிள்ளை பெற்று
    ஆருக்கு என்ன பயன்
     அப்படி நினைப்பதனை
    அடியோடு மறவுங்கள்

    ஆண்பிள்ளை பெண்பிள்ளை
     அத்தனையும் எம்பிள்ளை
    ஆதலால் பிள்ளைதனில்
     அன்னியத்தைக் காட்டாதீர்
    பிள்ளையின் சிரிப்பினிலே
     கொள்ளையின்பம் இருக்குதப்பா
     குழந்தைகளைத் தெய்வமாய்
     கொண்டாடி மகிழ்ந்திடுவோம்

      மலடு என்று பேசாமல்
      மனங் குளிரச் செய்வதற்கு
      வரமாக வந்ததுவே
      மடிதவழும் எம் குழந்தை
      குழந்தை என்று சொன்னாலே
      குதூகலமே வந்து நிற்கும்
      குழந்தைகளைப் பெற்றிடுவோம்
       குறைவின்றி வாழ்ந்திடுவோம்.
     

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.