புதியவை

'தடாகத்தின் தாமரைகள்'.பாராட்டுப்பெறும் சிறந்த கவிதைகளை எழுதிய கவியாத்மாக்களுக்கு தடாகத்தின் பாராட்டுக்கள்


'தடாகத்தின் தாமரைகள்'.பாராட்டுப்பெறும்  சிறந்த கவிதைக ளை   எழுதிய கவியாத்மாக்களுக்கு தடாகத்தின் பாராட்டுக்கள் 

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி செப்டெம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் -82
தலைப்பு -சும்மாயிரு.
அம்மாவை அப்பாவை அக்கா தம்பி
அனைவருள்ளம் கோணாமல் பேணும் நல்லாள்
வெம்மையான சூழ்நிலைதான் குடும்பத் துள்ளே
வெடித்தபோதும் அதைக்குளிரச் செய்யும் வல்லாள்
செம்மையாக வரவுசெலவு பார்த்தே இல்லம்
செழுமையுறச் செய்கின்ற மனைவி தன்னைச்
சும்மாயிரு உனக்கொன்றும் தெரியா தென்றே
சுடுசொல்லால் ஏசிமூலை முடக்கி வைப்போம் !

விடிகாலை எழுந்திடுவாள் கோலம் போட்டு
வீடுதனைத் தூய்மையாக்கி அழகு செய்வாள்
படிக்கின்ற பிள்ளைகட்குப் பாடம் சொல்லிப்
பக்குவமாய் உணவுவகை ஆக்கி வைப்பாள்
துடிப்புடனே கணவனுக்கும் நாத்தி மார்க்கும்
துணைநின்று பணியாற்றும் மனைவி தன்னைக்
குடித்தனந்தான் சிறப்பாக செய்த போதும்
குறைகூறிக் கருத்தேதும் கேட்க மாட்டோம் !

கல்விகற்றுப் பட்டந்தான் பெற்றி ருப்பாள்
கருத்தாக அரசாங்க அலுவல் செய்வாள்
நல்லபடி திட்டமிட்டுக் குடும்பந் தன்னை
நலிவின்றி மகிழ்ச்சிபொங்க நடத்திச் செல்வாள்
வல்லவளாய் இருந்தபோதும் ஆணா திக்க
வன்நெஞ்ச அதிகார ஆண வத்தால்
சொல்கின்ற கருத்தெதுவும் கேட்க மாட்டோம்
சோளகொல்லை பொம்மையென நிற்கச் சொல்வோம் !

பாவலர் கருமலைத்தமிழாழன்


உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி செப்டெம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் -82
தலைப்பு -சும்மாயிரு.
நீரொழுகிச் செல்லுகின்ற நிலத்தின் மேலே
=நினைத்தபடி வீடுகட்டி நீயும் வாழ
பேரெழுதி பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு
=பிரியமுடன் குடியிருக்கும் போதில் ஓர்நாள்
ஆறெனவே பெருகிவரும் அடைமழை வெள்ளம்
=அதுதானும் கடக்கின்ற வேளை தன்னில்
பேரிடரே என்றாங்கு புலம்பி டாமல்
=பேசாமல் வாய்பொத்தி சும்மா இருநீ

கொடும்வறட்சிக் கொல்லுதென்று கோபம் கொண்டு
=கூரைக்குக் கீழிருந்து கடவுள் தன்னை
கடுமையாகத் திட்டுகின்றக் காலம் தன்னில்
=காடழித்து சீரழித்த காரணத் தாலே
படுத்துகிறான் பகலவனும் பாலை வனத்தில்
=பரவிநிற்கும் அனல்தன்னை பரப்பி வைத்து
விடுகின்றான் என்கின்ற விந்தைத தன்னை
=விரைந்துணர்ந்து விட்டுவிட்டு சும்மா இருநீ


செய்வதற்கு ஏதுமின்றிச் செத்தப் பிணம்போல்
=சீர்குன்றிக் கிடந்தாலும் செய்வோர் செய்யும்
செய்கைக்கு எப்போதும் சீற்றம் கொள்ளும்
=சீர்கெட்டச் செயல்தன்னை செய்யா வண்ணம்
பெய்வதற்கு இடம்தேடி பெயர்ந்து செல்லும்
=பெருமழையின் மேகமெனப் பிரிந்து சென்று
நெய்தெடுத்த புடவைமேல் நீண்ட சரிகை
=நிற்பதுபோல் ஓரம்போய் நில்நீ சும்மா
*மெய்யன் நடராஜ்
உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி செப்டெம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் -82
தலைப்பு -சும்மாயிரு
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
பெற்றது நிறைய என்று துள்ளாது சும்மாயிரு
அறிந்தவை எல்லாம் இதுவரை அறியாமை தான்
அறிந்தவை ஏராளம் என்று சொல்லாது சும்மாயிரு
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றுமிருக்காது
தரித்திருக்கும் உடலும் நிரந்தரமல்ல சும்மாயிரு
செல்வம் குவித்தும் இறந்த பிறகு அது கூட வராது
நல்ல செயல்களே பேர் சொல்லும் சும்மாயிரு
திறமைகள் நிறைந்தோர் சிலர் வெற்றி பெறுவதில்லை
திறமையானவன் என்ற தலைக்கனமின்றி சும்மாயிரு
விருதுகள் பெற்றோரெல்லாமே திறன் மிக்கவர்களல்ல
விருதுகளுக்காக வீண் சண்டையிடாது சும்மாயிரு
உழைப்பு முயற்சிதான் வெற்றியின் அடித்தளம்
பிழைப்பின் அடிப்படையும் அதுவே என்பதால்
அழைப்பு இல்லையென்றாலும் செய்திடு அதை
உழைப்பின் பலன் தானே வரும் அதுவரை சும்மாயிரு
போட்டி பொறாமைகள் நிறைந்தது இன்றைய உலகு
ஏட்டிக்குப் போட்டியாய் அதில் இறங்காமல் சும்மாயிரு
சண்டை சச்சரவுகள் வீட்டிலும் நாட்டிலும் உண்டு
அண்டை அயலாரை அனுசரித்து நீ சும்மாயிரு
கற்பனை உலகில் மிதந்து நிஜ உலகை சிலர் மறப்பர்
பொற்பனை நீ கற்பனை உலகில் மிதக்காது சும்மாயிரு
மாமியார் மருமகள் சண்டைகளில் தலையிடாமல்
பூமித்தாய் போல் பொறுமை காத்து சும்மாயிரு
சும்மாயிருப்பதே சுகமொன்று சோம்பேறியாகாதே
சும்மாயிருக்க வேண்டுமென்பதற்கு மட்டுமே சும்மாயிரு
ராம்க்ருஷ்


உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி செப்டெம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் -82
தலைப்பு -சும்மாயிரு


அநீதி நடக்கையில்
நீதிக்கு போராடாமல் சும்மாயிரு .
சுதந்திரம் அடைந்த நாட்டில்
விடுதலைக்காக போராடாதிரு!
சுவாதிக்கு -ராம்குமார்
மரணம் சேர்த்த வழக்கு .
காவிரிக்கு -அரசியல்
வன்முறையில் தீர்ப்பு.
சும்மாயிரு
சும்மாயிரு ,
பாரத மாதாவை
நாடுகடத்தும் வரை .
அப்பொழுது அந்நியன்
நாட்டுக்காக போர் புரிந்தான் .
இப்பொழுது அரசியல் வாதி
ஆட்சிக்காக ஊனமாகிறான்.
சும்மாயிரு
கருப்பு பணம்
வரும் வரை
சும்மாயிரு!
சும்மாயிரு
காவிரி நீர்
வரும் வரை
சும்மாயிரு.
சும்மாயிரு
விவசாயம் உயிர்
பெரும் வரை
சும்மாயிரு.
சும்மாயிரு
தமிழன் மட்டும்
இந்தியாவில்
சும்மாயிரு.
சும்மாயிரு
தமிழகமே
வந்தாரை வாழவைக்கவே
சும்மாயிரு.
சும்மாயிரு
இளைஞனே
நம்ம தலைவன் படம்
வருது சும்மாயிரு.
சும்மாயிரு
நாடு எப்படி போனா
நமக்கென்ன
வாழ்ந்துவிட்டுப்போ .
சும்மாயிரு...
சுகமாயிரு-ஆனால்
உயிர்போகும் வரை
தமிழனாயிரு !
தமிழன் போராடினால்
நாடு தாங்காது..
தமிழகம் சும்மாயிருந்தா
தமிழ் இனம் தூங்காது.

"கவித்தீபம்"மு.யாகூப் அலி

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி செப்டெம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் -82
தலைப்பு -சும்மாயிரு.-12
விதைத்திட்ட விதையதுவும் முளைக்கும் முன்பே
விளைச்சலதன் ஆதாயக் கணக்குப் போடும்!
புதைத்திட்ட மனத்துன்பம் தன்னைத் தோண்டிப்
புதிதாக ஒப்பாரி வைத்துப் பாடும்!
அதையிதையும் சொல்லித்தான் ஆட்டம் போடும்!
அடங்காமல் வானத்தின் உச்சி தாவும்!
எதைச்சொல்லி மனமென்னும் குரங்கைக் கட்டி
எழுந்தாட்டம் போடாமல் செய்வேன் யானே?
மனம்தன்னை அதன்போக்கில் விட்டு விட்டால்
மனச்சிக்கல் நாடோறும் அதிக மாகும்.
மனம்சித்தம் முதலியவை அமைதி யானால்
வகையறியா உள்ளுணர்வு விளங்கித் தோன்றும்!
மனைதுறந்து வேறெங்கோ செல்ல வேண்டாம்!
மனைவியுடன் மக்களுடன் இருந்து கொண்டே,
மனமென்னும் குரங்கதனைக் கட்டிப் போடும்
மந்திரமே 'சும்மாயி ருப்பாய்' தானே!
சுமையான கடமைகளை வைததுக் கொண்டு
'சும்மாயி யிருப்பாய்நீ' என்றால் நன்றோ?
இமைப்பொழுதும் உன்கடமை மறக்க வேண்டாம்,
என்றாலும் தேவையில்லாக் கவலை தீதாம்!
அமைதியுடன் சிந்திக்கும் போது தானே
அகந்தன்னில் முறையான திட்டம் தோன்றும்!
குமைகின்ற மனக்கவலை குழப்பம் நல்கும்!
குறிப்பான திட்டத்தால் வெற்றி தானே!
சும்மாயி ருத்தலதன் பொருளும் யாது?
சோம்பிப்போய் முடங்கிடுதல் யில்லை யில்லை!
உம்மென்னா முகத்துடனே இருத்த லில்லை!
உடலாற்றல் சற்றேனும் வீணா காமல்
தம்முழைப்பைத் தம்செயலைத் திட்ட மிட்டுத்
தன்முனைப்பால் பிறர்துன்பம் அடைந்தி டாமல்
தம்செயலின் தாக்கத்தை எடையும் போட்டுத்
தவறிருந்தால் அதைத்திருத்தி வாழ்தல் தானே!
எத்தனையோ பெரியோரின் வெற்றிக் கோப்பை
எடுத்துரைக்கும் அறிவுரையை உற்றுக் கேட்டால்
சித்தத்தை ஒருமுகமாய் செலுத்தச் சொல்லும்!
செயல்குறைத்துச் சிந்தனையும் செய்யும் போதில்
எத்தனையோ வெற்றிவழி மனதில் தோன்றும்!
இறையுணர்வோ உலகியலோ எதுவா னாலும்
மொத்தத்தில் சும்மாயி ருப்ப தென்றால்,
முனைப்போடு காத்திருந்து வெல்தல் தானே!
இராச. கிருட்டினன்,
9 புது சேசாத்திரிபுரம், திருவரங்கம்,
திருச்சிராப்பள்ளி 620 006. இந்தியா.No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.