புதியவை

அருள் வேட்டல்பி - . எம் . கமால்

                 

உப்புதண் ணீரில்தன் உருவம் இழப்பதுபோல்
                   உன்னில்நான் கரைய வேண்டும் !
ஒப்புமை இல்லாத உன்திருப் பெயரையே
                     உச்சரித் தழிய வேண்டும் !
எப்புற மும்சூளும் ஏகனே! உன்னருள்
                     எனைச்சூழ அருள வேண்டும் !
குப்புற விழுந்துஎன் நெற்றியில் உன்திரு
                       முத்திரை பெறவேண்டும் !
அப்புறம் என்னிரு கண்ணிலும் உன்னொளி
                        அழுந்தப் பதிய வேண்டும் !
இப்புவி தூசென எண்ணிடும் உளத்தினை
                        எனக்கு நீ தர வேண்டும் !
தப்பிதம் அமல்களில் தழைத்திடா மல்தலை
                       தாழ்ந்திட அருள் வேண்டும் !
அப்பிடும் பவங்களை அழித்தெறிந் திடமனத்
                        திடத்தினை அருளவேண்டும் !
செப்பிடும் மொழிகளில் சிந்தையில் உன்திருத்
                        தூதரின் வழிவேண்டும் !
உப்பிலாப் பண்டமாய் உலகினில் ஆகாமல்
                       உபயோகப் பட வேண்டும் !
மூச்செலாம் ஹூவென முடங்கிடா மல்வர
                       முற்றும்நீ அருள வேண்டும் !
பேச்செலாம் அடங்கிடும் வேளையில் சிந்தையில்
                       பெரிதும் நீ வரவேண்டும் !
ஈரொளிப் பாதையில் நேர்வழி பெற்றிட
                         நீ வழி காட்ட வேண்டும் !
பேரொளிப் பிழம்பு உன் பிரிய நபி நாதரின்
                           பெரிய ஸஃபா அத்து வேண்டும் !
நுரையெனப் பொங்கிடும் கறைகளைத் துடைத்து நீ
                          குறை களைந் திடவேண்டும் !
விரை தரும் சந்தன மரமென வாழ்வினை
                            விளங்கிடச் செய வேண்டும் !
உனைஎமக் கறிமுகம் செய்த நன்நபியினைக்
                                           கனவினில் காண வேண்டும் !
கனவினில் கண்டவர் கைகளை முத்திஎன்
                                            கல்பு குளிர வேண்டும் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.