புதியவை

விதியை இகழ்தலோ - ரமணி
நீர்த்துளி நோக்கியோர் எறும்பு - அதன்
. நிர்மல மூடக் குறும்பு - நான்
வேர்த்துளம் கையால் விசிற - விதிர்
. விதிர்த்தே விழும்துளிச் சிறையில்! ... 

விட்டிலை நல்வழிப் படுத்த - அதன்
. விரிசிற கைநான் பிடிக்க - கை
விட்டதும் சிறகுகள் முறிந்தே - நிலம்
. வீழ்ந்தது ஊர்ந்ததில் எறும்பே! ... 

தும்பியை அப்புறப் படுத்த - அதன்
. துவளும் சிறகுவால் எடுத்தேன் - அது
வெம்பி வளைந்துடல் ஒட்ட - பயம்
. விரலைச் சுற்றிய வட்டம்! ... 

வெய்யிலிற் பட்டதோர் புழுவே - அதன்
. மேனியை எறும்புகள் உழவே - என்
கையாற் குழல்நீர் பீச்சினேன் - புழு
. கட்டுயிர் விட்டது வீச்சிலே! ... 

இறைவன் விதித்த விதியை - நான்
. என்வசம் கொண்டது சதியோ? - நெறி
முறைபிற ழாதெலாம் நிகழ்தலில் - நான்
. முயல்வது விதியை இகழ்தலோ? ... 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.