புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் தொடர் கதை ❤️பனிவிழும் மலர் வனம்❤️ அத்தியாயம்-31

மின்னல் வேகத்தில் வந்த தொலைபேசி செய்தியால் மதுமதியின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. இப்படியொரு நிலை மதுமதிக்கு ஏற்படும் என எவருமே நினைத்திருக்கவில்லைதான் . சோபாவில் சாய்ந்த தாயாரை தன்னோடு அணைத்தபடி மதுமதியின் தங்கை சுடச்சுட தயாரித்த கோப்பியை பருகக் கொடுத்தாள். அந்தத்தாயின் கண்களில் இருந்து கங்கையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது." அம்மா பிளீஸ் அழாதீங்க.. அக்காவுக்கு ஒன்னுமே இல்லை. இது அதிர்ச்சிம்மா.., போகப் போக சரியாகிடும்..  பிறகு எதற்கு யோசிக்கணும் அம்மா?அனசன் தான் பாவம்.. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான் .. " என்றபடி தாயாரின் கண்ணீரை துடைத்தாள். " நான் என்ரை பிள்ளையை இப்ப பார்க்கணும் ...எப்படி எல்லாம் சிரிச்சு சிரிச்சு பேசுவாளே... இன்று ஊமையாகிப்போனாளே.. என்ன செய்வேன் ??? இறைவா ..யார் மீது குற்றம் சொல்வேன்? இரவு பகல் உன்னைக் கும்பிட்டு என்ன பலன் கண்டேன்.." ஆற்றாமையில் தாயார் புலம்பியதைக்கேட்டு கல் கூட கசியும். கவலை தீரும் வரை
தாயார் அழட்டும் என மனதிற்குள் தீர்மானித்தபடி அவ்விடத்தை விட்டு அகன்ற மதுமதியின் தங்கை மனதில் இனம்புரியாத பயம் ஒன்று தொற்றிக்கொண்டது. அக்காள் சொந்தங்களோடு டென்மார்க்கில் சேர்ந்து வாழ்ந்தபோதும் துன்பம், வேதனை ஏற்படும் சமயங்களில் எந்த உறவுமே கூட வருவதும் இல்லை, கை கொடுப்பதுமில்லை. இது நியதிதானே. இது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் விடயமே. இந்த நிலைதான் இன்று மதுமதிக்கும் ஏற்படுமோ என்ற ஆதங்கம் தங்கையிடம் தொற்றிக்கொண்டது . பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் உறவுகளால் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளமுடியுமேத்தவிர என்னதான் செய்யமுடியும் ? யார் அவளைப் பார்த்துக்கொள்வார்கள்?

இதற்கெல்லாம் பதில் தருவது போல் டென்மார்க் மாமியின் தொலைபேசி அழைப்பு வந்தது. " எப்படியம்மா இதை எல்லாம் தாங்குவீர்கள்? அம்மா எப்படி இருக்கிறா? ஒருக்கா போனை(phone)ஐ அம்மாவிடம் கொடு பிள்ளை.." என்றதும் தாயிடம் ஓடிச்சென்ற அவள் தொலைபேசியை கொடுத்தாள். " என்ன மச்சாள்.. நீங்க எதற்கும் யோசிக்காதைங்க.. மதுவை என் மருமகளாக நான் நினைக்கலை.. என்ரை மகளாகத்தான் நினைக்கேன்.. அவளை நாங்க பூப்போல வைத்து பார்ப்பம். இஞ்சை நல்ல டொக்ரர்ஸ் ... எல்லாம் சுகமாகும்.. " என்றதும் தாயார் தழுதழுத்த குரலில் " நான் உங்களைத்தான் நம்பி இருக்கேன் மச்சாள் .. அவளை கைவிட்டுவிடாதைங்கோ.. " என இறைஞ்சிக்கேட்டுக்கொண்டார். ஒரு கூட்டிலே வாழ்ந்த பறவைகள் இறகுகள் முளைத்தபின் கூட்டை விட்டு பறப்பதுபோல, ஒரு வீட்டில் கூத்தும் கும்மாளமுமாக வாழ்ந்த உறவுகள் போர் என்ற கொடிய அரக்கனின் கொடிய கரங்களுக்கு பயந்து தேசம் விட்டு தேசம்  கடந்து சென்று வாழுகின்ற கொடுமை எவருக்குமே ஏற்படக்கூடாது. எந்த இனத்திற்கும் வரக்கூடாது என தன் மனதிற்குள் பேசிக்கொண்டாள் அந்த பேதைத்தாய். மழைவிட்ட பின்பும் தூறல்களாய் அந்தத் தாயின் உள்ளத்தை தினம் தினம் வதைக்கும் அந்த போர்க்கால  நினைவுகளை ஒருபோதும் ஒதுக்கிவிட முடியவில்லை.


ஒரு ஏக்க பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்த தாய்  தன் மகளை அழைத்து " பிள்ளை கவனம் தையல் வகுப்புக்கு போட்டு கெதியா வந்து விடு ... இருட்டிறதுக்கு முன் வந்திடு.. இப்ப குமர்பிள்ளைகளை வெளியிலை விட்டால் வயித்திலை நெருப்பைக் கட்டினமாதிரியல்லோ கிடக்க வேண்டி இருக்கு..றோட்டு றோட்டாக காவலிகள் தான் இப்ப .., அவயின்றை கதையும் பேச்சு வழக்கும் .. குடிகாரங்கள் போதையிலை உளறுதுகள்...கவனம் பிள்ளை..,சீ என்ன மாதிரிகிடந்த யாழ்ப்பாணம்  நாசமாய்  போச்சு.. " அதற்கு பதிலாக " ஓமோம் எனக்குத் தெரியும் தானே அம்மா.. கெதியாய் வந்திடுவன் என சயிக்கிளில் சின்ன மகள் பறந்தாள்.

டென்மார்க்கில் நேரம் மதியத்தைத் தாண்டி விட்டது.. மெல்லிய பனித்தூறல்களும், வெப்பநிலை மைனஸ் 5 பாகையாகவும் , புகாராகவும் ,வீதிகளில் கால் வைக்க ஒரே சறுக்கலாக இருந்தது. தொலைக்காட்சி, வானொலியில் மிக அவதானமாக வாகனங்களை ஓட்டும்படி செய்தி ஒளி/ ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தனர். சங்கர் ஆமை வேகத்தில் தன்காரை செலுத்தி வைத்தியசாலையை வந்து அடைந்தான். உடனே மதுமதியை முதல் சென்று பார்த்தான் . அவள் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தாள். மெல்ல அவள் படுத்திருக்கும் இடத்தை கடந்து அனசனிடம் செல்ல போகத்தயாரான போது அங்கு ஒரே பரபரப்பாக இருப்பதை அவதானித்தான். டாக்டர்கள், தாதிமார்கள் அனசனின் வார்ட்டை நோக்கி குறுக்குமறுக்காக போவதை பார்த்த போது ஏதோ அங்கு நடந்திருக்கிறது என ஊகிக்க கூடியதாக இருந்தது.

 
( தொடரும்)
❤️ரதி மோகன் ❤


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.