புதியவை

டென்மார்க் ரதிமோகன் எழுதும் -❤️பனிவிழும் மலர் வனம்❤️ அத்தியாயம்-32🌺🌺🌺


சங்கர் விரைவாக தன் சக டாக்டரான லாஸ்(Lars) உடன் வார்ட்டுற்குள் சென்றபோது தீடீரென்று அனசன் கண்களை விழித்து, வலி ஏற்பட்டதுபோன்ற உணர்வோடு, துடிதுடித்த பெரும் அசைவுற்றான். அங்கு இரத்த அழுத்தம் உயர்ந்து கொண்டிருக்க, வேகமான மூச்சுத்திணறல்.. முனகல் ஒலி அவனிடமிருந்து வெளிப்பட அங்கு ஒரே பரபரப்பு.. இத்தனையும் ஐந்தே நிமிடங்கள்தான். மீண்டும் அவன் சுயநினைவிழந்து ஹோமா நிலைக்குள்ளாகினான். எல்லோர் முகங்களிலும் கேள்விக்குறி தென்படுவதைக்கண்டதும் அதைக்கலைத்த டாக்டர் லாஸ்(Lars) "இத்தகையவர்கள் தீடீரென்று கண்விழித்து சாதாரணநிலைக்கு வந்து விடுவார்கள் . அனசன் ஒரு ஐந்து நிமிடங்கள்தான் கண்விழித்தான். ஏதோ ஒரு நல்ல மாற்றம் தெரிகிறது.. விரைவில் பழையநிலைக்கு திரும்புவான்.. உங்க மகன் உங்களுக்கு கிடைப்பான்" என்ற நம்பிக்கை நிறைந்த வரிகளை கூறியபடி அனசனின் தாயாரை நோக்கி சென்றார்.

அந்த வெள்ளைக்காரப்பெண்மணியின் கண்கள் சிவந்து வீங்கி இருந்தன. தன் அன்பு மகன் விபத்தான நாளில் இருந்து அனசனின் தாயார் இரவு பகல் என பாராது அடிக்கடி வைத்தியசாலைக்கு வருவதும் போவதுமாக இருந்தார். தன் மகன் கண்களை திறந்து பார்ப்பானா என்ற ஆதங்கத்தோடு்அந்தத்தாய் அங்கு தவம் கிடந்தார். தாயாரிடம் வந்த டாக்டர் மகன் சம்பந்தமான பரிசோதனை பற்றிய அனைத்து எக்ஸ்ரே படங்களையும் காண்பித்து இப்போதுள்ள அனசனின் நிலை பற்றி எடுத்துரைத்தார்.
அவனின் மூளையில் ஒரு பகுதி பாதிப்படைந்துள்ளதாகவும் அங்கு இரத்தக்கசிவு இருப்பதாகவும் கூறியபோது ஒருகணம் இதைக்கேட்ட தாயாரின் இதயம் நின்றதுபோன்ற உணர்வோடு தொப்பென்று அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தார். அவரின் இந்த செய்கை எல்லோரையும் ஒருகணம் திரும்பிப்பார்க்க வைத்தது.இந்த வேதனை வலி பத்துமாதம் அனசனை சுமந்து பெற்றவளுக்குத்தான் தெரியும். அனசனின் உடல்நிலை பற்றிய தகவல்கள் நாளுக்குநாள் ஒவ்வொன்றாய் அந்தத்தாயின் உள்ளத்தை ஈட்டியால் குத்துவதுபோல போல இருந்தது


ஹோமாநிலையில் இருப்பவர்கள் நித்திரையில் இருப்பது போன்று இருந்தாலும் நாம் பேசுவது அவர்களுக்கு நன்கு புரியும் . அனசனின் தலையை மெல்ல தடவியபடி சங்கர்" அனசன் நான் பேசுறது உங்களுக்கு கேட்குதா? நான் சங்கர். மதுவின் மச்சான் வந்திருக்கேன்..நீங்க விரைவிலை சுகமாயிடுவீங்க.. மதுக்கு காச்சல் அதுதான் உங்களை பார்க்க வரலை..உங்க நினைவாகவே அவள் இருக்காள்..யோசிக்காதைங்க.." என்றதும் அனசன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதைப்பார்த்த அனசனின் தாயாரும் அழுதார். கழுத்திலே தொங்கிய சிலுவையை கையில் ஏந்திய தாயார் செபம் சொல்லி அவ்விடத்தைவிட்டு அகன்றார்.

நாட்களும் வாரங்களாகி மாதங்களாகி காலச்சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. பனிப்பொழிவும் இருளும் டென்மார்க்கை சூழ்ந்து கொண்டிருந்தது. தடல்புடலாக வீட்டை ஒழுங்குபடுத்தி மதுமதிக்கு ஒரு அறையை ஒழுங்குபடுத்தினான் சங்கர். ஆம் மதுமதி சிகிச்சைக்குப்பின் மனநோயாளர்க்கான பிரிவில் இருந்து இன்றுதான் வீடு வரும் சந்தர்ப்பம் கிடைத்து இருந்தது. அவளால் கதைக்க கூடியதாக இருந்தது. ஆனால் சரளமாக முன்புபோல் பேச முடியவில்லை. பழைய நினைவுகள் பறிபோயிருந்தது. ஆனால் டாக்டர்கள் படிப்படியாக நினைவு திரும்பும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்திருந்தனர். முன்பு போல தனக்குத்தானே பேசி சிரிப்பதில்லை. உரத்து கத்தி அர்த்தராத்திரியில் அழுது குளறுவதில்லை. சாந்தம் ஒன்று அவள் முகத்தில் குடிகொண்டிருந்தது. ஆனால் அவள் நன்கு பருத்து இருந்தாள். அவள் பாவிக்கும் குளிகைகளின் பக்கவிளைவுதான் அவள் உடற்பருமனுக்கு காரணமாயிருந்தது. சற்று நிறமும் குறைந்து போய் இருந்தது. மஞ்சள் கலந்த வெள்ளையாயிருந்தவள் பொதுநிறமாகியிருந்தாள். ஆனாலும் அவள் அழகு மட்டும் மாறவில்லை. 

"தம்பி ஒருக்கா இஞ்சை வாய்யா.. இஞ்சிக்கிழங்கை எங்கேயோ வைச்சிட்டன்.. ஏதோ மாறாட்டம் மேலை அந்த அலுமாரிக்கை பாரய்யா.. மளிகை சாமானோடை தவறி வைச்சிட்டன் போலக்கிடக்கு... மதுவுக்கு தயிர்சாதம் என்றால் கொள்ளைவிருப்பம்.., வாறதுக்கு இடையிலை அதை செய்வம் என்று தம்பி..." என்று சங்கரின் தாயார் அழைத்த குரலுக்கு "ஒரு நிமிஷம் வாறனம்மா" என்றவன், வெளியில் கார்ச்சத்தம் கேட்க கதவைத்திறந்து எட்டுப்பார்த்தான். 

அங்கு சங்கீதா(சங்கரின் சகோதரி) தன் கணவனோடு வந்து இறங்கினாள். அடுத்தகாரில் மதுமதியின் சினேகிதி மதனிகா தன் கணவன் பிள்ளைகளோடு வந்திறங்கினர். " வாங்கோ வாங்கோ எல்லாரையும் பார்க்க சந்தோசமாயிருக்கு.. கவலையோடை வெறிச்சோடி போயிருந்த இந்ந வீடு இன்றைக்குத்தான் சந்தோசமாயிருக்கு"" என்றபடி மதுவின் மாமி நிறைந்த புன்னகையுடன் அவர்களை வரவேற்க ,எங்கோ ஒரு மூலையில் ஓர் பாட்டு சங்கரின் காதுகளில் கனவின் ஒலியாக இசைத்தது.." ஏன் எனக்குள் ஒரு இன்ப கிளர்ச்சி.,. நான் மதுவை காதலிக்கிறேனா??? இல்லை இல்லை கூடவே கூடாது.. இன்னொருவனை உயிராக காதலிப்பவள் மேல் எதற்காக என் பார்வை விழுந்தது? வேண்டாம் அவள் பாவம் ... அவள் அனசனோடுதான் வாழ வேண்டும் ... " மனதோடு சங்கர் பேசிக்கொண்டான்.
❤️ரதி மோகன்❤️

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.