புதியவை

ஜெர்மனிமீரா எழுதும் தொடர் கதை -வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 6


மயூரியின் மௌன மொழி மொழிபெயர்க்கபடாமல் காணாமல் போனது . ஆனாலும் உறக்கத்தை உதறி தள்ளி எண்ணங்களும் தீர்மானங்களும் போர் கொடி தூக்கின . „உறவானவள் உறங்காது தவித்தாள் . உரிமை கொண்டவனோ உணர்வுகளை உணராது உறங்கினான்“ .
அதிகாலையில் அலாரம் அடிக்காமலேயே அலறி அடித்து எழுந்தாள் மயூரி. அருகாமையில் அவனை காணாது அச்சம் கொண்டவள் , அரவம் கேட்டு நிம்மதி கொண்டாள் . அவனோ அலுவலகம் செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தான் . அவள் விழிகள் அவன் முகத்தை துழாவியது . அவன் முகமும், அகமும் இரவின் நிகழ்வை நினைவூட்ட இருண்ட முகத்துடன் சமையலறை சென்றாள் . ரமேஷின் கோபம் இன்னமும் அடங்கவில்லை போலும் . அமைதியான பெண் ஆனால் அநியாயம் என்று தெரிந்தால் அடக்கிக்கொள்ள முடியாத குணம் கொண்டவள் மயூரி .
நேற்றைய நாள் உதயம் தந்த உற்சாகம் , ஆனந்தம் எல்லாமே நாளின் முடிவில் அடங்கிவிட்டது . புத்தம் புதுநாள் புதுமையை புகுத்தும் . புதுவிடியல் புத்துணர்ச்சியை தரும் . ஆனால் புதுமையும், மாலை மங்க மண்டியிட்டு சோர்வடைவது போல் மயூரியின் நாளும் சோகத்தில் துவண்டு போனது .
காயப்பட்ட உள்ளத்துடன் காலை உணவை தயாரித்தாள். ரமேஷ் கொண்டு செல்லவும் மதிய சிற்றுண்டியும் தயார் . ஆனால் அதை அவனிடம் வழமை போன்று கையில் கொடுத்து விட மட்டும் அவளால் முடியவில்லை . „என் மனதை துன்புறுத்தியவர் அதை உணர்ந்து முதல் என்னிடம் வரட்டும் . வந்தால் என் கோபத்தை அவரே உணர்ந்துகொள்ளுவார். அவர் பொருளை தவறுதாலாக உடைத்து விட்டமைக்கு மன்னிப்பும் கேட்டுவிடலாம் . அவர் தந்த நேற்றைய ஏமாற்றத்தை இன்று ஈடு செய்யவும் சந்தர்ப்பம் இருக்கு“. மயூரி மனதில் கற்பனை காட்சிகள் திரை ஓடியது .
அலுவலகம் செல்ல தயாராக வந்த ரமேஷ் தான் கொண்டு செல்லவேண்டிய மதிய உணவை மேஜை மேல் தேடினான்.
உணவு பெட்டியுடன் புன்னகை பூத்து நிற்கும் பூவிழியாள் இன்று தன் முன்னே இல்லை என்பதை உணர்ந்தான் பூவிழிக்கு சொந்தக்காரன் . ஏதோ உறைத்தது போன்று இருந்தது அவனுக்கு . „ஒருவேளை நேற்றிரவு நான் கடுமையாக நடந்து விட்டேனோ . அவளுக்கு எங்கே அதன் பெறுமதி தெரிய போகிறது . மயூரியை பொறுத்த மட்டில் அது ஒரு அலங்கார பொருள் . ரமேஷ்க்கு அல்லவா விலை மதிப்பில்லா பொக்கிஷம் அது . தன் கண் போன்று காத்து வந்த அவனுக்கேயான சொந்த அடையாளம்“ .
„அவள் செய்ததும் தவறு தானே. எதற்காக என்னை தூக்கத்திலிருந்து எழுப்ப வரவேண்டும் . நான்தானே அம்மா வீட்டில் இரவு உணவை முடித்துவிட்டு வந்து விட்டேன் . அவளும் தன்னை அழகாக அலங்காரம் செய்து கொண்டு வெளியே சென்று வந்துள்ளாள் . இருந்தும் தேவையில்லாமல் எழுப்ப வந்து அதை உடைத்து விட்டாள்“ . மனதுக்குள் வைது கொண்டான் கணவன் .
ஆனாலும் வழமையாக மயூரியின் வதனத்தை கண்டும் காணாமல் சென்ற ரமேஷ்க்கு இன்று சொல்லிக்கொள்ளாமல் கிளம்புவது கஷ்டமாக இருந்தது. மெல்ல சமையலறையை எட்டிப்பார்த்தான் .
„சிவப்பு நிற ஆடையில், சிவந்த முகத்துடன், சிந்தனைகளில் சிக்குண்டு, சிரம் தாழ்த்தி நின்றாள் மயூரி“ . உறுதியும் உணர்ச்சியும் முகத்தில் அலைமோத நின்றவள் உருவம் ரமேஷ்யின் நெஞ்சை கிள்ளியது . அவள் தவறுதலாக செய்த பிழைக்கு தான் கடுமையாக நடந்து கொண்டது தப்பு என்பதை உணர்ந்து கொண்டு அவளை சமாதானம் செய்யும் நோக்குடன் ஓரடி எடுத்து வைத்தான் ரமேஷ் .
குறுஞ்செய்தி ஒன்று அலைபேசியை அதட்டி விடும் சத்தம் கேட்டு தலையை நிமிர்த்தி பார்த்தவள் ரமேஷ் விரைவாக வெளியேறுவதை கண்டு திடுக்கிட்டாள் . „ரமேஷ்“ என்று அழைத்தவாறே பின்னால் ஓடியவளின் சத்தம் அவன் வாகனத்தை இயக்கி சென்ற சத்தத்தில் காணாமல் போனது 

தொடரும் ....

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.