புதியவை

❤️ஜெர்மனி மீரா ❤️எழுதும் தொடர் கதைவர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 7


 ஏமாற்றத்தில் உருகி நெஞ்சில் உருண்டோடியது கன்னத்தில்
கண்ணீர் திவலைகள். கைவிரல்கள் தன் கடமையை மறக்க விழிகள் மட்டும் சென்று மறைந்த சுவடுகள் நோக்கி தூரப்பார்வை வீசியது .
„என் உயிர் பாதியானவனுக்கு என் மேல் கரிசனை என்பதே கிடையாதா , என் அன்பு அவனை இன்னமும் ஆளவில்லையா , அவன் உள்ளம் வென்றெடுக்க செய்யும் பணிகள் யாவும் அவனை கவரவில்லையா ?“, இவள் இன்னமும் „இல்லையா“ என்ற ஒரேயொரு கேள்வியில் மட்டும் தொக்கி நின்றாள் .
தொங்க போட்ட தலையுடன் மீண்டும் சமையலறை வந்தவள் ரமேஷ்க்கு தயார் செய்த மதிய உணவு அப்படியே மேஜை மீது இருப்பதை கண்டதும் குற்ற உணர்வு அவளை லேசாக ஆட்கொண்டது . கணவனுக்காக தயாரித்த உணவை அவன் கொடுத்த ஏமாற்றத்தினால் கொடுக்காமல் விட்டுவிட்டாள் . வழமையாக கொண்டு சென்று அத்தனையும் உண்டு விட்டு வெறுமையாக கொண்டு வருபவன் . அந்த வெறுமையான டப்பா ஒன்றே அவள் சமையல் திறனை வார்த்தைகளின்றி மெச்சி , பாராட்டி உற்சாகமும் கொடுத்து வந்தது என்னவோ உண்மையே . .
மயூரியால் பொறுக்க முடியவில்லை . ஓடினாள், தேடினாள் ,பரபரத்தாள், அலைபேசியை அவசரமாக எடுத்தாள், கணவனை தொடர்பு கொள்ள முயன்றாள். தொலைபேசி தொடர்பின்றி இருக்க துடி துடித்தாள் .ஐந்து நிமிட இடைவெளியில் அவள் மீண்டும் மீண்டும் முயற்சித்தாலும் தோல்வி சோதித்து பார்க்க தாங்க முடியாதவள் அப்படியே சோபாவில் விழுந்தாள்.
சோர்ந்தவள் மீண்டும் நிமிர்ந்தாள், ஒரு நிமிடமும் தாமதிக்காமல் உணவு டப்பாவை எடுத்து கொண்டு கிளம்பினாள் . ஏதோ ஒரு வேகம் மயூரியை ரமேஷ்யின் அலுவலகம் கொண்டு வந்து சேர்த்தது . வரவேற்பு பெண்ணிடம் தயக்கத்துடன் ரமேஷ்யின் இருப்பிடம் கேட்டறிந்து தேடிச்சென்றாள் . குறிப்பிட்ட அறை வெறுமையாக இருக்க கண்டு செய்வதறியாது திகைத்தாள் பேதை .
„எங்கே என் கணவன், என்ன செய்வேன் இக்கணத்தில்?“ அவள் கருவிழிகள் நாலா பக்கமும் தேடின . எதிரே வந்த ஒரு அலுவகர் ஒருவர் „என்னம்மா எதுவும் உதவி தேவையா?“ என்ற வினாவில் ரமேஷை தேடி வந்திருப்பதை அறிந்து மயூரியை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார் . அதே தருணம் அறையிலிருந்து வெளிப்பட்ட ரமேஷ் மயூரியின் விழிகளுடன் மோதுண்டதது , .
கலங்கிய கண்களுடன் ரமேஷ்யிடம் மெல்ல உணவு டப்பாவை நீட்டியபடியே „நீங்கள் மறந்து விட்டீங்கள் . உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன் , முடியவில்லை . வந்தேன்“ என்று ஆவலுடன் முகத்தை நோக்கினாள் .
ரமேஷ்யின் முகத்தில் பலவித உணர்ச்சிகள் . „இந்த உணவுக்காகவா இங்கு வந்தாய் . ஏன் மயூரி?“ என்றவன் பக்கத்தில் எல்லாவற்றையும் அவதானித்து கொண்டு நின்ற அலுவலகரை அவதானித்து விட்டு மயூரி என் அறையில் பேசலாம் என்று அகன்றான் . ஒன்றும் புரியாமல் தொடர்ந்த மயூரி ரமேஷ் ich bin schon unterwegs அதாவது நான் கிளம்பிவிட்டேன் என்ற ஜேர்மன் மொழியில் மிக உரிமையுடன் கூறிய பெண் குரல் கேட்டு திரும்பிப்பார்த்தாள்.

மிக நாகரீக உடையில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தாள் . அவளின் பின் அழகே தெரிந்தது . கணவனுடன் வேலை செய்பவள் போலும் என்ற எண்ணத்தை ரமேஷ்யின் கடுமையான அதட்டல் தடுத்து நிறுத்தியது . „இந்த பெரிய அலுவலகத்தில் கன்டீன் என்பதே இடையாது என்று எண்ணிவிட்டீர்களா மயூரி? இப்படி கொண்டு வந்து என்னை அவமதிக்க தான் வேண்டுமா ? இப்படி தான் ஒன்றையும் யோசிக்காது செயல்படுவீர்களா ?. நான் மிக அவசரமாக கிளம்ப வேண்டும் . இப்படிப்பட்ட நாடகங்களுக்கு என்னிடம் நேரமில்லை என்றவாறு வெளியேறினான் அவள் மன்னவன்.
செய்வதறியாது திகைத்தவள் , அவமானத்தில் முகம் சிவக்க கூசி குறுகி உடனே அகன்று விட வேண்டும் என்று நடையை விரைவு படுததினாள் மயூரி .“ மீண்டும் மீண்டும் தவறிழைக்கின்றேனா, கணவனின் குணம் அறியாது நடக்கின்றேனா, அவன் அன்பை பெற வேண்டும் என்று நான் என்னையே இழக்கின்றேனா „.
ஏதேதோ அவள் நினைத்து வந்தது அப்படியே அமிழுத்தி விட்ட பண்பில்லா பழுப்பு வண்ணமாக மாறியது அவள் முன்னே விரிந்த அந்த நிமிடத்துக்கான காட்சி . உணர்வுகளை உணர்த்தாதது பழுப்பு அல்லவா, நற்குணத்தை மழுங்கடித்த வண்ணம் . உற்சாகத்தை உருக்குலைத்த வண்ணம் .
எண்ணளவற்ற எண்ணங்கள் எக்காளம் போட , எதற்கான சினம் என்பது கூட புரியாது, எதிரில் எதிர்படுபவர் யார் என்ற எந்த எச்சரிக்கையுமில்லாமல் மோதுண்டாள் ஏந்திழையாள். நான் மோதிக்கொண்டது மலையா. என்னவென்று தெரியாத ஏதோ ஒன்றை உணர்ந்தவள் , மோதுண்ட வேகத்தில் காலடியில் விழுந்த அவள் கைபையை எடுத்தவாறே நிமிர்ந்தவள் அன்று மீண்டும் அதிர்ச்சி அடைந்தாள் . அவள் முன்னே ..........

தொடரும் ....
❤️ஜெர்மனி மீரா ❤️
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.