புதியவை

உள்ளமும் உடையும் - எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Ed,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசக மெல்பேண் அவுஸ்திரேலியா     
தலையங்கத்தைப் பார்த்ததும் சிறுகதையா அல்லது நாவலா என்றுதான் 

எண்ணத்தோன்றும்.இது சிறுகதையோ நாவலோ அல்ல.மனித வாழ்விலே

உடைகள் இடம்பெற்ற வரலாற்றை ஒரு பார்வையாய்ப் பார்ப்பதாகவே 
இக்கட்டுரை அமையப்போகிறது.உடையைப் பற்றிய சிந்தனை ஏன் , எதற்கு
இப்பொழுது வந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.அதற்குக் காரணம்
உடையருமை உணராமல் இருகின்ற நிலைமையேயாகும்.உடையில்லா
வாழ்ந்த மனிதன் ஒன்றையும் பற்றிச் சிந்திக்காமல் கிடைத்ததை எல்லாம்
உண்டு - கிடைத்த இடத்திலே உறங்கி - இருந்தான்.ஆனால் காலகதியில்
அவனது வாழ்க்கை முறையே மாறுபட்டது.வேறுபட்டது.
    உடையில்லா வாழ்ந்தவனிடத்து ஏற்பட்ட உளமாற்றம் அவனை மரவுரி 
தரிக்கச் செய்தது.விலங்குகளின் தோலினை அணியச் செய்தது.இந்த வளர்ச்சி படிப்படியாக மாறி பலவித உடைகளை அணிந்து நாகரிக வாழ்விலே
வாழுவதற்கு இட்டுச் சென்றது எனலாம்.
      "ஆடையில்லா மனிதன் அரை மனிதன் " என்னும் பழமொழி தோன்று
வதற்கும் உடையானது மனித வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
    விலங்குகளுடன் காட்டில் தானுமொருவகை விலங்காகவே மனித வாழ்வு
அமைந்திருந்தது.பரிணாம வளர்ச்சியில்-  சிந்தனை என்பது மனிதனிடம்
ஊன்றத்தொடங்கியதால் வெட்கம் பற்றியும், மானமென்னும் உணர்வு பற்றி
யும் உணரத்தொடங்கினான்.அப்பொழுதுதான் மானத்தைக் காக்க உடையை
தேர்ந்தெடுக்கும் நிலைக்கு ஆளாகினான் என்பது வரலாறு.
      காலகதியில் இந்த உடையானது மனிதனது நாகரிகத்தின் உச்ச வெளிப்
பாடாக ஓங்கி நிற்கிறது.
   உணவு, உடை , உறையுள் என்பன மனிதனது அடிப்படைத் தேவைகள்
என்பது யாவருக்கும் தெரியும் விபரமாகும்.இதில் உணவுக்கு அடுத்து உடை
வருவதை நாம் கவனித்தல் வேண்டும்.இதிலேயே பரிணாமவளர்ச்சி காட்டப்
படுகிறது.ஆதி மனிதனுக்கு ஆரம்பத்தில் உணவுதான் முக்கியமாகப் பட்டது.
உயிர்வாழ உணவுதானே அவசியம். அதனால் உணவு கிடைத்தால் போதும்
என்னும் நிலை அப்பொழுது காணப்பட்டது.அதன் பின்தான் உடைக்கே
மனிதன் வருகிறான்.இந்த உடையைப் பற்றிய சிந்தனை வந்தபின்னர்தான்
மனிதனது வளர்ச்சி சிறப்பான பாதையை நோக்கிச் செல்லத்தொடங்குகிறது
எனலாம்.
  " இரக்கப் போனாலும் சிறக்கப்போ "  - " கந்தையானாலும் கசக்கிக் கட்டு "
" உண்பது நாழி உடுப்பது இரண்டு முளம் " - " உடுக்கை இழந்தவன்   கைபோலாங்கே "  என்றெல்லாம் எடுத்துக்காட்டுகள் வருவதுவே - உடையின்
வருகையும் அதன் முக்கியத்துவத்தினாலுமே என்பது தெரிகிறதல்லவா ?
     பண்பாடு , கலை, கலாசாரம், யாவற்றையும் பிரதிபலிக்கும் வகையிலே
உடையின் பங்களிப்பு இன்றியமையாததாக  இருக்கிறதல்லவா ?
     உடுத்தும் உடைகளைக் கொண்டே மக்களை இனம்கண்டு கொள்ள
லாம்.பல்லின கலாசாரத் தொட்டிலாக இன்று உலகம் விளங்குகிறது.அதில்
உள்ள மக்களும் பலவித உடைகளில் பவனிவருவதனையும் இன்று காண்
கிறோம் அல்லவா ?
      அவரவர் கலாசாரத்துக்கு ஏற்ப வருகின்ற கொண்டாட்டங்கள் , விழாக்கள்
பண்டிகைகள், இவைகளுக்கெல்லாம் விதம்விதமான உடைகளைத் தேர்ந்
தெடுத்து அணிவதனை எங்குமே காணலாம்.
   இன்பநிகழ்வுகளுக்கு உடுத்தும் உடைகளும் நிறங்களும் வேறுபட்டவை.
அதேவேளை துன்பத்தைத் தரும்நிகவுகளுக்கான உடைகளும் அவற்றின்
வண்ணங்களும் வேறுவிதமானவை.
     வண்ணவண்ண உடைகளும் அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தே
அமைகின்றன.மங்கலத்திற்கு மஞ்சள் உடையைத் தெரிவுசெய்கிறார்கள்.
அதேவேளை வெள்ளையைத் தேர்வுசெய்வாரும் இருக்கிறார்கள்.கறுப்பு
வண்ண உடையைத் துக்கமாக நினைப்பாருமுண்டு.அதேநேரம் எதற்குமே
கறுப்புடையைச் சாதாரணமாக அணிவாரும் காணப்படுகிறார்கள்.
     உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் உடையிலும் பிரதிபலிப்பதைப்
பெரும்பாலும் காணக்கூடியதாகவே இருக்கிறது.
      உலகிலே பலவிதமான ஆட்சிமுறைகள் இருக்கின்றன.அங்கெல்லாம்
அரசாட்சியில் உள்ளவர்களுக்கு என்று - வண்ணமும் உடையும் வடிவமைக்கப்
பட்டிருக்கும்.அந்த உடைகளும், வண்ணமுமே அவர்களது நாட்டின் அந்தஸ்த்
தையும் காட்டுவதாகவும் கூட அமைந்துவிடும்.
      அரசாட்சியில் நம்பிக்கை வைத்து நடக்கும் நாடுகளில் அரச பட்டமளிப்பு
விழாக்களிலும், ஆட்சியாளர்களின் உடைகளிலும் பலவண்ணங்களும் பல
வடிவங்களும் இடம்பெறுவதை இன்றும் காண்கின்றோம்.
        புதுவருடப் பிறப்பு, பொங்கல் பண்டிகை, தீபத்திருநாள், நத்தார்விழா,
இஸ்லாமிய விழாக்கள், என்று இன்னோரன்ன நிகழ்வுகளுக்கெல்லாம் 
பலவித உடைகளை மக்கள் தேர்ந்தெடுத்து அணிந்து மகிழ்ச்சியடைவார்கள்.
     எல்லா நாட்டிலும் எல்லா மக்களும் தங்களின் திருமண விழாக்களில்
அணியும் உடைகள் மிகவும் நேர்த்தியானதாகவும் உயர்ரகமாகவும் கண்ணை
யும்,கருத்தையும் கவருவதாய் அமைந்திருக்கும்.
       உள்ளத்துக்கும் உடைகளுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றால் 
நிச்சயம் உண்டு என்றுதான் சொல்லவேண்டும்.இதனைக் கருத்தில் கொண்
டேதான் " சீருடை " என்பதை நாடுகள்தோறும் கொண்டுவந்திருக்கிறார்கள்
என்று எண்ணத்தோன்றுகின்றது.
      நாடுகள் தோறும் இருக்கும் முப்படைகளுக்கும் தனித்தனியாகச் சீருடைகள்
இருக்கின்றன.அந்தச் சீருடைகளை அவர்கள் அணிந்ததுமே அவர்களது உள்ள
மதில் உற்சாகம் ஊற்றெடுக்கும்.முப்படைகளில் உள்ளவர்களின் தரத்தினுக்கு 
ஏற்பவும் அவர்களின் உடைகளின் வடிவமைப்பும் அமைந்திருக்கும்.
        விமான ஓட்டிகள், கப்பல் மாலுமிகள் அவர்களுக்கான சீருடையினை
அணியும்பொழுது அவர்கள் தங்கள் வேலைகளை உற்சாகமாகச் செய்யும் நிலை
ஏற்படுகிறது.
      சத்திர சிகிச்சைக் கூடத்துக்குள் கடமையாற்றுவோர்க்கு என்று தனிச்சீருடை
கள் இருக்கின்றன.அவற்றை அணிந்தததும் அவர்களை அறியாமலேயே தங்கள்
பணிகளைச் சிரத்தையுடன் ஆற்றவிளைந்துவிடுகிறார்கள்.
       எல்லா நாடுகளிலும் உள்ள பாடசாலைகள் தங்களின் மாணவர்களுக்கு எனத்
தனியான சீருடைகளைத் தெரிவு செய்து வைத்திருக்கின்றன.மாணவர்கள் சீருடை
களை அணிந்தவுடன் அவர்களது உள்ளத்தில் நல்ல சிந்தனைகள் அதாவது கற்றல்
பற்றியும் அதன்வழி நிற்றல் பற்றியுமான எண்ணங்கள் உருவாவதற்கு வழிவகுப்பதை
அனுபவித்தால் உணர்ந்து கொள்ளமுடியும்.
      மதங்களை அடையாளப்படுத்தவும் உடைகள் உதவுகின்றன.பலவித சீருடைகளை
பல மதத்தைச் சேர்ந்த மதகுருமாரும் அணிகிறார்கள்.ஒவ்வொரு மதகுருமாரும்
தமக்கென உடைகளையும் வண்ணங்களையும் தேர்ந்தெடுத்து அதனையே 
அணிகின்றார்கள்.இந்துமதத்தில் துறவிகளும் பெளத்தமதத்துறவிகளும் காவி வண்ண
த்தை உடையாக்கி இருக்கிறார்கள்.ஏனைய மதகுருமார் கறுப்பு , வெள்ளை வண்
ணங்கொண்ட உடைகளையும் தமதாக்கிக் கொண்டுள்ளார்கள்.
      சீருடைகள் என்பது சிறப்பானது.சீர்மையினை உடையது.சீருடைக்கு உலகு
எங்கும் கெளரவமும் மரியாதையும் எக்காலத்தும் வழங்கப்பட்டே வருகிறது.
சீருடை அணிந்தால் சிந்தனை வளரவேண்டும். நல்ல சிந்தனையை விதைப்பதற்கே
சீருடை என்று பெயரிட்டு தனியான உடையினைத் தெரிவு செய்திருக்கிறது உலக
சமுதாயம்.ஆனால் இன்று சீருடை உடுத்திய பலர் சீரழிவு செய்யும் செயல்களை
மேற்கொள்வதால் சீருடை என்பதற்கே அர்த்தமற்ற நிலையே ஏற்படுவதை காண
 முடிகின்றது.
       மாணவர் சீருடையில் செய்யக்கூடாதவற்றைச் செய்கிறார்கள்.மதகுருமார்
மதத்தின் உச்சத்தில் ஏறி வெறிகொண்டு நெறி அழித்து விலங்கெனவே ஆகி
நிற்கிறார்கள்.காவல் துறையினர் சீருடையுடனேயே காட்டுமிராண்டிகளாகி நிற்
கின்றார்கள்.இராணுவச் சீருடையை அணிந்து இழிவான பலவற்றை ஆற்றி
இரணியர்களாக மாறிநிற்பதையும் காண்கின்றோம்.
       மதகுருமார் சீருடையை அணிந்துவிட்டால் மனத்தில் சாந்தம் வரவேண்டும்.
அமைதியின் இருப்பிடமாக மாறவேண்டும். அன்பு, கருணை,பாசம் ,நேசம் நட்பு,
அனைத்தும் அவர்களின் உள்ளத்தில் அமர்ந்துவிடவேண்டும்.ஆண்டவனின் பிரதி
நிதியாக அனைவரும் மதகுருமாரை மதிக்கின்றார்கள்.அப்படியானவர்கள்
அஹிம்சைதனை ஒழித்து அரக்கத்தனமும் ஆவேசமும் கொண்டவராய் அராஜகத்
தினைத் தூண்டிவிடும் பாங்கில் செயல்பட்டால் சீருடைக்கே அர்த்தம் இல்லாமல்
தானே போய்விடும் !இப்படியானவர்க்குச் சீருடை என்பது எப்படிப் பொருந்தி வரும் ?
       சீருடையினைச் சீரழிக்கும் கீழ்மைக்குணமுடையோரால் சீருடையின் சிந்தனையே சிதறடிக்கப்படுகிறது.
     உடையும்உள்ளம்  - உடைகளால் வரக்கூடாது.உடை உள்ளத்தை மாற்ற வேண்டும்.வண்ணங்கள் யாவுமே மனித எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன என்று
உளவியலாளர்கள் சொல்லுகிறார்கள்.அதனால்த்தான் யாவரும் வெளிச்சத்தை
விரும்புகின்றார்கள்.இருட்டை எவரும் இணைத்துக் கொள்ளவிரும்புவதில்லை.
    மனம்கூட வெள்ளையாகவே இருக்க வேண்டும்.மனமிருண்டால் அங்கு வாழ்வே
சூனியமாகிவிடும்.
   கோவிலுக்குச் செல்லுவதற்கும், குதிரைப்பந்தயத்துக்குச் செல்வதற்கும்
கடற்கரைக்குச் செல்வதற்கும்,படக்காட்சிக்குச் செல்வதற்கும், விழாக்களுக்குச்
செல்வதற்கும் , ஒரேவகையான உடைகளை நாம் அணிவதில்லை.எங்கே போகி
றுமோ அதற்குத் தகுந்தமாதிரி உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதனை
அவசியமாக்கி இருக்கிறோம்.
    " ஆள்பாதி ஆடைபாதி " என்னும் மொழிகள் வருவதற்கும் உடையின் வருகை
தான் காரணமாகியிருக்கிறது
   உடுத்தும் உடையைக் கொண்டு ஒருவரை மதிப்பிடுகிறோம்.சில உடைகளில்
வரும்பொழுது எம்மை அறியாமலேயே வணங்குகிறோம்.சில உடைகளில் வரும்
பொழுது மகிழ்சியுடன் கைகொடுத்து வரவேற்கின்றோம்.சில உடைகளை 
அணிந்து வரும்வேளை சிரித்துக் கிண்டல் செய்கிறோம்.சில உடைகள் அணிவதால்
சினம்கொண்டு பார்க்கிறோம்.
   இங்கே வருபவர் ஒருவராக இருந்தாலும் - அவரின் உடையின் தன்மையினால்
அவருக்கு ஏற்படும் மரியாதை, வரவேற்பு , அனைத்தும் மாறுபடுவதை சாதாரண
மாக நடைமுறையில் காணமுடிகிறது.
    பாடசாலையில் மாணவர்களுக்குச் சீருடை இருப்பதுபோல ஆசிரியர்களுக்கு
என தனியான சீருடைகள் இல்லாவிடினும் - அநேகமான ஆசிரியர்கள் வெள்ளை
நிற உடையில் நேர்த்தியாகப் பாடம் நடத்தவரும் பொழுது - மாணவர்கள் மத்தியில்
அவருக்கென்று தனியான ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தே வந்திருக்கிறது.
    ஆனால் இன்றைய நடைமுறையில் அதிலும் மாற்றங்கள் வந்தபடியால் ஆசிரியர்
நிலையும் சற்று சிந்திக்கும்படி ஆகியிருக்கிறது என்பதையும் கவலையுடன் சொல்லி
ஆகவே வேண்டி இருக்கிறது.
      உடையைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை ? மானத்தை மறைக்க வந்ததுதானே
உடை ! அதை மனம் விரும்பும்படி அணிவதில் என்ன தவறு இருக்கிறது . எல்லா
வண்ணங்களும் அழகுதானே ! இதில் என்ன வேற்றுமையைக் காண்பது .கிடைக்கும்
உடைகளை உடுத்து கிடைக்கும் வாழ்வை வாழ்வதை விட்டுவிட்டு இதில் போய்
தத்துவம் எல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமேதும் இருக்கிறதா ? என்றெல்லாம் நெஞ்சினிலே பல வினாக்கள் எளக்கூடும் ! 
     மனிதன் ஒவ்வொருநாளும் வளர்கிறான்.அவன் உடம்பு மட்டுமல்ல - உள்ளத்தாலும் என்பதை யாவரும் அறிவோம்.அந்த வளர்ச்சியில் உடைமட்டும்
என்ன விதிவிலக்கா ? 
   ஆதிமனிதன் அல்ல இப்போது வாழ்கின்றவன் ! அந்தமனிதன் அறிவின் உச்சியைத்
தொடும் மனிதனாக இப்பொழுது வளர்ந்து விட்டான். எனவே அவனது வாழ்வில்
மிகவும் இன்றியமையாத ஒன்றாகி இணைந்து நிற்கும் உடையிலே கவனம் செலுத்து
வதும் முக்கியமான தொன்று என்பதை மறந்துவிடுதல் கூடாது.
    உடையென்பதைச் சாதாரணமாக எடுத்துவிடக்கூடாது.இன்று உடை தயாரிப்பு
பற்றி பல உயர் பட்டப்படிப்புகளும், உடைதயாரிப்பு நிலையங்களும், உடை
விற்கும் பலவித வியாபார நிலையங்களும் - உலகம் முழுவதும் நாளும் பொழுது
பல்கிப் பெருகியே வருகின்றன.ஏனென்றால் மனிதவாழ்விலிருந்து உடையப்
பிரிக்கவே முடியாது,உடை மனித வாழ்வுடன் ஒட்டிக்கொண்டுவிட்டது.
    உடைபற்றிய சிந்தனை வந்ததற்கே காரணம் உடையால் பல உள்ளங்கள்
உடைக்கப்படுகின்றன.உடையால் பல உயிர்களே பறிக்கப்படுகின்றன.உடையால்
பல அசிங்கங்கள் அரங்கேற்றப்படுகின்றன.அந்த உடைகளின் மதிப்பு அதை
உடுத்திநிற்பார் கெடுக்கின்றார்.இதனால் உடைகளே உடைந்து நொருங்கி
அர்த்தமில்லாது போய்விடும் அவலத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியாத மன
 நிலையில்த்தான் இக்கருத்துகள் இங்கே கட்டுரையாகி உங்கள் முன்வந்திருக்கிறது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.