புதியவை

நீ நட்ட ஒற்றை ரோஜாப்பூ -ருத்ரா இ.பரமசிவன்.


மனிதருள் மாணிக்கமே
ஆசிய ஜோதியே
அன்று உன் கோட்டில்
நீ நட்ட ஒற்றை ரோஜாப்பூ
உன் இதயம் அருகில் தான்
பூத்துச்சிரித்தது.
அது இந்தியாவின்
மழலைப்புன்முறுவல் என்று
குழந்தைகள் தினம் என்று
ஒரு உருவகமாய்
ஒளிகாட்டி நின்றாய்.
உலக வல்லரசுகள்
யுத்தத்தில்
கை முறுக்கி நின்றபோது
அணிசேரா நாடுகள் என்று
நட்பூச்செண்டு நீட்டினாய்
மனிதம் மலர!
விஞ்ஞான அமைப்புகளும்
சமாதானம் பேசும்
எலக்ட்ரான்களும் ப்ரோட்டான்களும்
உள்ளடக்கிய‌
அணுவியல் சோதனைக்கூடங்களும்
நிறுவி
உலகையே வியக்க வைத்தாய்.
உன் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம்
இந்த நாடு வெறும்
காவிக்காரர்க்களின்
சாதி மதக்கூச்சல்கள் நிரம்பியது அல்ல‌
நிரூபணம் செய்தாய்.
சோசலிஸம் என்ற‌
மானுடக்கனவை
இந்த மண்ணில் நீ விதைத்தாய்.
என் வாரிசு வேண்டாம் என்று
இந்திய நாட்டு தவப்புதல்வன்
லால் பகதூர் சாஸ்திரி அவர்களை
நீ தானே
ஒரு உயர்ந்த இந்தியப்பேரொளியின்
நம்பிக்கையாய் நட்டுச்சென்றாய்.
அப்புறமும்
வரலாறு சில கைகளின்
குறுகிய தளத்துள் மாட்டிக்கொண்டதை
நீ அறிய மாட்டாய்.
இந்த நதிகளின் நீர்
இந்த தேசத்தின் ரத்தம் என்று
அதன் "ரத்த வங்கி"களை
அணைக்கட்டுகள் என்ற பெயரில்
உருவாக்கினாயே!
எவ்வளவு பெரிய தீர்க்க தரிசி நீ.
அந்தோ!
இவர்கள் இந்த அமிர்தம் போன்ற‌
ரத்த வங்கிகளை
சுய‌நலம் பிடித்த‌
ஓட்டுவங்கி வங்கிகளாய்
மாற்றிய கொடுமையை என்னென்பது?
பிரம்மாண்ட இரும்பு எஃகு தொழிற்சாலைகளில்
இந்தியாவின் பொருளாதார இதயத்தை
நீ பத்திரப்படுத்திச்சென்றாய்.
இவர்களோ அதை
தனியார்களுக்கு கூறு போட்டார்கள்.
ஜவஹர்லால் நேரு எனும்
உறுதியான நங்கூரமாய் இருந்து
எங்கள் செல்வாதாரங்களை
வேர் பிடிக்க வைத்தாய்.
இப்போது கோடரிகள் தான
கோட்பாடுகள் வகுத்துக்கொண்டிருக்கிறன.
தேசிய தீபமே
உன் தீபத்தை அணையாமல் காப்பதே
எங்கள் அன்றாடத் தீபாவளி!

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.