புதியவை

வேண்டிநிற்போம் - ( எம் .ஜெயராமசர்மா.மெல்பேண் அவுஸ்திரேலியா )


          
            காசநோய் ஒருகாலாம் காலனாய் நின்றது
           கணக்கின்றிப் பலபேர்கள் காலனிடம் போனார்கள்
           மருந்துபல வந்ததனை மாற்றிவிட்ட காரணத்தால்
           காசநோய் கதையிப்போ காணாமல் நிற்கிறது !

           அப்போது தொடக்கமே ஆருக்கு வந்தாலும்
           அவராடி அடங்கிவிடும் அவலத்தை தருகின்ற
            முற்றிநிற்கும் நோயாக முழுவுலகும் பரந்துநிற்கும்
            புற்றுநோயை தடுப்பதற்கு புறப்படுங்கள் மருத்துவமே !

            குழந்தைமுதல் பெரியவரை புற்றுநோய் வதைக்கிறது
            குணமடைய பலமருந்தும் கொடுத்துமே வருகின்றார்
            என்றாலும் இந்தநோய் எதைப்பார்த்தும் அசையாமல்
            எமனாக வந்துநின்று இம்சையே கொடுக்கிறது !

           புற்றுநோய் வந்துவிட்டால் புறவுலகே இருண்டுவிடும்
           வெற்றிடமாய் எல்லாமே விரக்தியாய் ஆகிவிடும்
           சுற்றமெலாம் சூழ்ந்திருந்து துக்கத்தில் ஆழ்ந்திடுவார்
           வற்றிவிடும் வாழ்வுநோக்கி மனமழுது நின்றுவிடும் !

            எப்படி வருமென்று எவர்க்குமே தெரியாது
            அப்படி வந்துவிட்டால் அதுஅவர்க்கு பெருந்துன்பம்
            தப்பிவிட மாட்டோமா எனவெண்ணும் ஏக்கத்தால்
            தவியாய்த் தவிப்பதுவே பெருந்தவிப்பாய் ஆகிவிடும் !

             பலவிதப் புற்றுநோய்கள் பலருக்கும் வருகிறது
             சிலருக்கு சுகம்வந்து சிறிதுகாலம் வாழ்ந்திடுவர்
             புற்றுநோய் பற்றிக்கொண்டோர் புலம்பிநின்று அழுதிடுவர்
             அழுதிடுவார் கவலைபற்றி அதுவலட்டிக் கொள்வதில்லை !

             புகைபிடித்தால் புற்றுநோய் வருமென்று சொன்னாலும்
             புகைத்தபடி புற்றுநோய் விளம்பரத்தில் புகைவிடுவார் 
             அவர்க்குப்பகை புகையென்று அறிந்து அவரிருந்தாலும்
              அவர்புகையை ரசித்தபடி ஆனந்தம் கொண்டிடுவார் !

             விழிப்புணர்ச்சிக் கூட்டங்கள் பலசென்று வந்தாலும்
             விழுப்புணர்ச்சி அவரிடத்தில் விழித்தபடி தானிருக்கும்
             விழுந்தெழும்பி விவரீதம் அவருக்கு வந்தபின்னர்
             விழுபிதுங்கி வேதனையில் வெந்துஅவர் துடித்துநிற்பார் !

             புற்றுநோய் கோரமதை புரிந்துணர்ந்து கொள்ளவேண்டும்
             புற்றுநோய் விழிப்புணர்வை பூரணமாய் பெறவேண்டும்
             அற்பமெனப் புற்றுநோயை அலட்சியமாய் பார்க்காது
             ஆரோக்கியம் நல்வாழ்வு அமைந்துவிட வேண்டிநிற்போம் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.