புதியவை

எங்க ஊர் போகனும் --காவலூர் அகிலன். கிளிநொச்சி.அன்றய அதிகாலைப் பொழுது மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது
கந்தப்பு நேரகாலத்தோடு எழுந்து பட்டியில் நின்ற மாடுகளை அவிழ்த்து வயல்காணியில் கொண்டு மேய்ச்சலுக்காய் கட்டிவிட்டு வீடுவந்து கால் கைகளைக் கழுவிக்கொண்டு பெட்டியில் இருந்த வெள்ளை வேட்டியையும் வெள்ளைச் சேட்டையும் அணிந்துகொண்டு தனது ஊரை நோக்கி பயணிக்கலானார்.
கந்தப்பு பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தோடும் வாயில் வெற்றிலையை மெண்டவாறும் காட்சியளிப்பார்.
நீண்ட காலத்தின் பின் இரானுவக் கட்டுப்பாட்டிற்குள் இருந்த காணிகளை விடுவித்ததன் காரணமாக காணியைப் பார்வையிடும் நோக்கத்தோடுதான் கந்தப்பு தன் ஊரைநோக்கிப் பயணமாகியிருந்தார்.
கந்தப்புக்கு இரண்டுபிள்ளைகள் ஒன்று போராட்டத்தின்போது வீர மரணம் அடைந்து விட்டது மற்றய பிள்ளை திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகின்றது.
கந்தப்புவின் மனைவி இரானுவச் செல்லடியில் இறந்துபோயிருந்தார்.
இப்போ கந்தப்பு தணிமையில்தான் வசித்து வருகின்றார் மாடு கோழி மேய்ப்பதன் பொருட்டே அவரது பொழுதுகள் கழிந்து போகின்றது.
பேருந்தில் ஏறி அமர்ந்த கந்தப்பு ரிக்கேற் போடுபவரிடம் தம்பி ஒரு வலிகாமம் .தாங்கோ என மெதுவாக கேட்டு ரிக்கேற்றைப் பெற்றுக்கொண்டார்
வேகமாக பேருந்து பயணமாக கந்தப்புவின் கண்கள் மூடிக்கொண்டது 
ஒன்டரை மணி நேரம் கழித்து ஐயா நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துட்டு இறங்குங்கோ என நடந்துனர் மெதுவாய்த் தட்டி எழுப்பினார்.
கந்தப்புவின் மனதில் பெரும் சந்தோசம் தான் பிறந்து வளர்ந்த ஊரைப் பார்வையிடப்போகின்றேனே எனும் சந்தோசத்தில் பேருந்தை விட்டு வேகமாய் இறங்கினார் .பற்றைகள் பாதைநெடுகிலும் தழைத்தோங்கி வளர்ந்து நிண்டது கந்தப்பு கால் எடுத்து வைப்பதற்கு பயந்தவாறே மெதுவாய் கால்த்தடங்களை எடுத்து வைக்கின்றார்.
காரணம் ஆபாயத் தகடுகளின் குறியீடுகள் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருந்தன
நீண்ட நேரம் நடந்தும் தனது காணியை அடையாளம் கண்டு கொள்ளாதவராய் கழைப்படைந்தார் ஒருவாறாக தன் நட்டுவைத்த அந்த வேப்பமரத்தின் அடையாளத்துடன் காணியைக் கண்டுகொண்டார் கந்தப்பு .
பெருமூச்சை இழுத்து விட்டபடி...
எத்தனவருசமாச்சு என்ர முத்தத்தில குந்தியிருந்து எனக் கூறியவாறு முற்றத்தில் கால்களை மடக்கி அமர்ந்து கொண்டார்.
ஏக்கம் தவிப்பு எல்லாவற்றிற்கும் ஒரே நாளில் தீர்வு கிடைத்தது போல் கந்தப்புவின் மனதுக்குள் ஓர் சந்தோசம்.
ஆயினும் தன்னால் தன் சொந்தக் காணியில் வந்து குடியமர்ந்து வாழ முடியவில்லையே என நினைத்துக் கண்கலங்கி நின்றார்.
திடீரென அழைபேசி அலறியடித்திட மெதுவாய் அந்த அழைபேசியை எடுத்து தடவிக் காதுக்குள் வைத்துக் கொண்டார் அப்பா எங்க நிக்கிறிங்கள் எங்கட காணி பாக்கப் போகலயா ஆமிக்காரங்கள் விட்டுற்றானுகளாமே என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் கந்தப்புவின் மகன்.

மகனின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதாய் 
தம்பி நான் ஊரிலதாண்டா நிக்கிறன் எங்கட காணியெல்லாம் பத்தை வளர்ந்துபோய்க் காடுவத்தியதாய்த் தெரியுதடா பாக்கவே மனசு பட படவெனக் கொதிக்குது என மகனிடம் கூறி முடித்தார் கந்தப்பு.

அப்பா எங்க ஊரைப் பாக்கவேணும் போல் உள்ளது அந்த முற்றத்து மண்ணை அள்ளி உடம்பு முழுதும் தடவிக்கொள்ளவேண்டும் போல் உள்ளது எனக்காய் உன் மகனிற்காய் அந்த முற்றத்தில் இருந்து ஒருபிடி மண்ணை அள்ளி என்னிடம் அனுப்பி விடுங்கள் என தந்தையிடம் கேட்டுக்கொண்டான்.

இந்த மண்ணை அள்ளித்தின்று அதன்மேல் உருண்டு புரண்டு வளர்ந்த நான் எப்படி இந்த மண்ணை அயல் நாட்டுக்கு அனுப்பி வைப்பேன் என கந்தப்புவின் மனதுக்குள் பதட்டம் தோன்றலாயிற்று.
இன்று நேற்றல்ல 23 வருடங்களின் பின் அந்தக் காணிக்குள் வந்தமையால் மகனின் ஆசையைக் கூட நிராகரித்திட முடியாதவனாய் கந்தப்பு ஒரு பிடி மண்ணை அந்த முற்றத்தில் இருந்து அள்ளிக் கொள்ள அவனது உடல் மெல்லச் சரிகின்றது மண்ணை அள்ளிய விரல்கள் விரிந்து கொள்ள கந்தப்புவின் உடலில் இருந்த உயிர் பிரிதலாயிற்று.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.