புதியவை

ரதி மோகன் டென்மார்க் - பனிவிழும் மலர் வனம்
                                 


அத்தியாயம்- 30

சங்கர் வழிந்த தன் கண்ணீரை துடைத்தபடி பூரண நிலாவாக ஜொலிக்கும் அவளின் வதனத்தைப் பார்த்தான்..  களங்கமற்ற அந்த முகத்திலே கலவரமின்றிய ஓர் அமைதி நிலவியது. அவளின் குழந்தைத்தனமான குறும்பு பேச்சை, செல்லக்கோபத்தை ரசித்து மகிழ்வதற்காகவே  சங்கர் மதுமதியை சீண்டி சண்டைக்கு இழுப்பதுண்டு.  இன்று அந்த சண்டைக்காரிக்கு, குறும்புக்காரிக்கு இந்நிலை வரவேண்டுமா? கடவுளை மனதிற்குள் சபித்தான். மெல்ல அவளை கட்டிலில் சாய்த்து படுக்கவைத்து விட்டு வெளியே வந்து தன் தாயாருக்கு தொலைபேசி எடுத்தான் . தாயார்தான் மறுமுனையில்" சங்கர் இன்று தீபாவளி என்று கூட உனக்குத் தெரியலையா?நல்லநாள் பெருநாள்  என்றில்லை இன்றும் உனக்கு வேலையா? காலையிலை படுக்கையிலை பார்த்தன் ஆளைக்காணலை... கோயிலுக்கு போட்டு இப்பத்தான் வந்தன்.. சமைத்து போட்டு காத்துக்கிடக்கேன் என்ன பண்றாய்? வரேக்கை மதுவையும் ஏத்திவாயேன்.. அவளும் ரெலிபோன் எடுக்கிறாள் இல்லையே...நாளைக்கு கௌரிக்காப்பு எடுக்கணும் என்று சொல்லு"" படபடவென தாயின் இடைவிடாத பேச்சுக்கிடையில் அவனால் "ம் "என்ற வார்த்தையை தவிர வேறு ஏதும் சொல்ல முடியவில்லை.

எப்படி சங்கரால் சொல்லமுடியும்? மதுமதி மொழியிழந்து ஊமையானதை சொல்வதா?  அவள் மனம் பேதலித்து போய்க் கிடப்பதை சொல்வதா? உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அனசனின் நிலையை சொல்வதா? இப்போது எதுவும் தாயாருக்கு சொல்ல வேண்டாம்.. எதற்கும் வீடு போனபின் சொல்லிக்கலாம் என மனதோடு பேசியபடி வைத்தியசாலையை விட்டு அவன் புறப்பட்ட போது மாலை 3.00 மணியாகி இருந்தது.

வீட்டை அடைந்த சங்கரை கண்டவுடன் தாயார் கேட்ட  முதல் கேள்வி அவனை திக்குமுக்காட வைத்தது. " எங்கை தம்பி மது அவளையும் கூட்டிவரவல்லவா சொன்னன் .. அதுசரி ஆசுபத்திரியிலை ஏதாவது அவசர கேஷோ.." என்றபடி தீபாவளி ஸ்பெஷலாக அறுசுவை கறியுடன் வடை ,பாயாசம் பரிமாறிய தாயின் முகத்தை பார்க்க திராணியற்று தலையை ஆட்டினான் சங்கர். சாப்பிட்ட களைப்போடு ஆறுதலாக சோபாவில் அமர்ந்த சங்கர்  தந்தையை அழைத்து அங்கு நடந்த சம்பவத்தை விபரித்தபோதுதான் தாயார் அதைக்கேட்டு " தம்பி இப்ப வா என்ரை பிள்ளையை பார்க்கணும் ...என்ரை ராசாத்தி சின்ன நோவையும் தாங்க மாட்டாளே.. இஞ்சருங்கோ ஒருக்கா உங்கடை சகோதரிக்கு போன் போட்டு மதுவைப்பற்றி சொல்லுங்கோ... வாறன் வெளிக்கிட்டு கொண்டு..." என்றபடி உடுப்பை மாற்றிய சங்கரின் தாயாரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மதுவிற்கு உறவில் மாமியேதவிர உணர்வில் ஒரு தாய்.. அந்தளவு பாசமும்,  நேசமும்  மது மேல் கொண்டவர்.

தாயையும், தந்தையையும் அழைத்துக்கொண்டு வைத்தியசாலையை நோக்கி விரைந்தான் சங்கர். அங்கு  மதுமதியையும் அனசனையும் பார்த்து திகைத்துப்போய் ஒரு இருக்கையில் சாய்ந்தார் தாயார்.அவரால் இதை நினைத்துப்பார்க்க முடியவில்லை.. இது கனவாக இருக்கக்கூடாதா? என எண்ணினார் . மனம் நொந்தார். இன்றைய தீபாவளியில்  மனமகிழ்வோடு அக இருள் நீங்கவும . இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கவும்,காலையில் சங்கரின் தாயார் ஏற்றிய அந்தத்தீபம் அணைந்துபோனதுபோல் ஓர் உணர்வு அந்த தாயின் உள்ளத்தில் பரவியது.

மனித வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லைதான்.. நாளை என்பது நிச்சயமற்ற ஒன்றாகிறது.நேற்று என்பது அது முடிந்துபோனதொன்று. இன்று மட்டுமே ..ஏன் இந்த ஒரு நொடி மட்டுமே நிஜமாகிறது.அதற்கு இடையில் நாட்டிற்கு நாடு , வீட்டிற்கு வீடு மதம் பார்த்து இனம் பார்த்து ்எத்தனை பூசல்கள்... காதலை பிரித்து அதில் இன்பம்  காணும் ஒரு கூட்டம்.. காதல் கைசேர்ந்தபோதும் இடையிலே நலிவுற்று பிரிந்து இருதிசைகளில் போகும் ஜோடிகள் எத்தனை? அத்தனையும்  தாண்டி இதயத்திற்குள் பொத்தி பொத்தி வளர்த்த வேற்று இனத்திடையான இந்தக்காதல் ஒற்றை நொடியில்  மொட்டிலே கருகி போகும் இந்த கோலத்தை காணாது சகிக்காது தான் நிலாமகளும் வானத்தில் இன்று வராது மறைந்தாளோ..கும் என்ற இருட்டு பரவத் தொடங்கியது..
அனசன் கோமா நிலையில் இருப்பதாகவும், இன்றோ இல்லை நாளையோ?பலவருடம் கழித்தோ அவன் எழும்பலாம் . இல்லை எழும்பாமலும் போகலாம்... இனி எல்லாம் விதியின் வழியே என கூறியசங்கரைப்பார்த்து சங்கரின் தாயும் தந்தையும் ஏகோபித்த குரலில் " ஐயோ மதுவின்  நிலை? " என்றவுடன் அவளுக்கு இது மன அதிர்ச்சி .அவள் இன்னுமொரு அதிர்ச்சியை சந்திக்கும் போதோ ,இல்லையேல் சில சிகிச்சை முறைகள் மூலம் திரும்ப பழைய நிலைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது என பதிலளித்தபடி சங்கர் வீடு வந்தபோது முழு உலகமே இருண்டது போன்ற உணர்வில் தன் கட்டிலில் வீழ்ந்தான் ஆனால் கண்கள் தூக்கத்தை ஏற்க மறுத்தது. அவன் உள்ளமெல்லாம் மதுமிதாவின்  அந்த நிலாமுகம் கண்ணீரோடு நிற்கும் கோலம் பதிந்து போனது.             

தந்தையார் மதுவின் தாயாரோடு பேசுவது துல்லியமாக சங்கருக்கு கேட்டது. "பாவம் மாமி எப்படி இதை தாங்கிப்பா? எவ்வளவு கஸ்ரப்பட்டு இங்கு அனுப்பி வைத்தவா மதுவை.." என எண்ணிக்கொண்டான். ஆம் உண்மைதான் நாட்டில் எத்தனை இடம் பெயர்வுகளுக்கு மத்தியிலும், கணவனையும், மகனையும். போர் சூழ்நிலையில் இழந்தபோதும் , தனி மனிசியாக நின்று 3 பெண்குழந்தைகளை வளர்த்தெடுத்து , இன்று நல்ல நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் இது ஒரு பேரிடிதான். நல்லவர்களை கடவுள் அளவுக்கு அதிகமாக சோதிப்பான் போலும் . மதுவின் குடும்பத்தை பொறுத்தவரை சோதனைமேல் சோதனை மாறி மாறி நடந்த வண்ணமே இருப்பதை ஊழ்வினைப்பயன் என்று சொல்வதை தவிர இந்த இடத்தில் பொருத்தமான வார்த்தை இல்லை எனலாம்.
(தொடரும் )

️️


No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.