புதியவை

'பாராட்டுப்பெறும் சிறந்த கவிதைகளை எழுதியகவியாத்மாக்கள் தடாகத்தின் தாமரைகள்'.


 தடாகத்தின் தாமரைகள்'.

'பாராட்டுப்பெறும்  சிறந்த கவிதைகளை எழுதியகவியாத்மாக்கள்

இவர்கள் தடாகம் தொடர்ந்து     நடத்தி வரும்  போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட தடாகத்தின் வளர்ச்ச்சியில் இவர்கள் பங்கு உயர்வானது .

தன் திறமைகளை ஒவ்வொரு போட்டிகளிலும் காட்டி .புதிதாக போட்டியில் பங்கு  பற்றுவோருக்கு வழி காட்டியாக இருந்து வருகின்றார்கள் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் 

தொடர்ந்தது விடாது எழுதி வரும் கவிஞர்களை இலங்கையில் நடைபெறும் விழாவில்  இன்ஷா  அல்லாஹ்  கௌரவிக்கவும் நாம் ஏற்பாடு செய்கின்றோம் 


உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி அக்டோபர் மாதம் 2016
போட்டி இலக்கம் -83(வது மாதம் )
தலைப்பு -முற்றுப் புள்ளி பதிவு இலக்கம் 16
.
யாரிடந்தான் தேடுவதோ நேர்மை தன்னை
யாரைத்தான் நம்புவதோ ஞாலந் தன்னில்
பாரினிலே மக்களெல்லாம் ஓடும் ஓட்டம்
பணத்தின்பின் பாசமற்று உழல யேனோ
காரிருளால் சூழ்ந்துவாழ நளிந்த மக்கள்
கண்டதுதா னென்னென்று திரும்பிப் பார்க்க
காரியத்தில் மிஞ்சியதே துமில்லை; கையில்
கடைப்புள்ளி யென்றான நிலைதா னிங்கே
சாதிமத பேதங்கள் ஊன்றி விட்ட
சாக்கடையில் வீழுகின்ற பலரு மிங்கே
வாதிகளாய் எழுந்துநின்று கொலைகள் செய்ய
வக்கிரங்க ளில்லாது முகிழ்த்தி வைக்க
நீதிசொல்லும் நிலையுமற்றுப் போனா ரிங்கே
நியாயங்கள் சவக்கிடங்கள் பிணமாய் தூங்க
ஓதிவைக்க மதநெறிகள் மறந்த தேனோ
உத்தமமாய் வைப்பாரோ முற்றுப் புள்ளி!
நிலமழித்து நிலம்விற்று மனைகள் கட்டி
நேர்த்தியான மாளிகைகள் வானு யர்ந்தே!
கலங்களில்லை குவித்துவிட்ட மணிகள் காணா
காலத்தால் அழிந்துபோகும் உழவுந் தானே
பலனென்ன கண்டதும்நாம் உழவ னின்றி
பயிர்களற்று உணவுமற்று பசியில் வாட
தளங்களென்ன கண்டாலும் தோல்வி யன்றோ
தானியங்க ளற்றநிலை வாழ்வின் சாபம்.
வன்புணர்வு களவுகொலை கொள்ளை யென்றே
வகையற்று போகின்றார் மனித ரிங்கே
தன்மானம் விற்றமக்கள் உலகை யாள
சரித்திரத்தி லேதுமிச்சம் எழுதி வைக்க
என்னென்று கேட்பார்தான் யாரோ யிங்கே
ஏமாற்றும் பித்தருக்கே வாழ்கை யிங்கே
தன்மானம் காத்திடத்தான் முடிவு வேண்டும்
தரணியிலே வைப்பாரோ முற்றுப் புள்ளி.
வாழ்த்திவிடும் பெருமதிப்பு தமிழுக் குண்டு
வந்தமொழி யெல்லாமும் வளரு திங்கு
தாழ்த்திவிட யியலாத தமிழா மெங்கள்
தாய்மொழியாம் உயிர்வளர்க்கும் உணர்வாய் என்றும்
சூழ்வினைக ளறுப்போமே திடமாய் நின்று
தூயமொழி தமிழென்றே முழக்கி நின்று
வாழ்வுரிமை தருவதுதான் மொழியின் மாட்சி
வாழவைக்க உறுதிகொள்வோம் முற்றும் நெஞ்சில்.
- கவியருவி. கு. நா. கவின்முருகு -துபாய்உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி அக்டோபர் மாதம் 2016
போட்டி இலக்கம் -83(வது மாதம் )
தலைப்பு -முற்றுப் புள்ளி  பதிவு இலக்கம்    15
மதச்சண்டை மறைவதற்கு
வைக்கவேணும் முற்றுப்புள்ளி
இனச்சண்டை ஒழிந்தழிய
இடவேணும் முற்றுப்புள்ளி
துரைத்தனத்தால் மனமொடியச்
செய்துநிற்கும் நிலையகல
துணிவுடனே முற்றுப்புள்ளி
வைத்திடுவோம் வாருங்கள் !
மதுவரக்கன் ஒழிவதற்கும்
விபசாரம் மடிவதற்கும்
தெருச்சண்டை தீர்வதற்கும்
வைத்திடுவோம் முற்றுப்புள்ளி
நிதிநீதி தனிலெங்கும்
நீண்டுவரும் ஊழலுக்கும்
நிச்சயமாய் முற்றுப்புள்ளி
வைத்திடுவோம் வாருங்கள் !
கலப்படத்தைச் செய்வார்கும்
நிலம்சுரண்டி வாழ்வார்க்கும்
கட்டாயம் முற்றுப்புள்ளி
வைத்திடுதல் அவசியமே
உளமளவில் நாடுபற்றி
உணராத உலுத்தர்களை
உணரவைக்க முற்றுப்புள்ளி
உடனேயே இடல்வேண்டும் !
ஊழல்செய்யும் கூட்டத்தார்
உழைப்பில்லாக் கூட்டத்தார்
ஏழைகளைச் சுரண்டுவார்
இரக்கமதை நசுக்குவார்
கோளைகளாய் வாழுகின்ற
குணங்கொண்டார் யாவருக்கும்
வாழ்வினிலே முற்றுப்புள்ளி
வைத்திடுவோம் வாருங்கள் !
சினமணைத்து நின்றிடுவார்
தீவினையைத் தேர்ந்திடுவார்
குணமனைத்தும் நஞ்சுடையார்
குவலயத்தைக் கலைக்கிடுவார்
நலம்முழுக்க நசுக்கிவிட
நாளுமே நினைத்திடுவார்
இனமகன்று போவதற்காய்
இட்டிடுவோம் முற்றுப்புள்ளி !
சீதனத்தை வாங்குதற்கு
தேவையிப்போ முற்றுப்புள்ளி
காதல்தனை கொல்வார்க்கு
கட்டாயம் முற்றுப்புள்ளி
பாதகத்தை செய்வதற்கு
பாவைதனை தூண்டுவார்க்கு
நீதியெனும் முற்றுப்புள்ளி
நிச்சயமாய் தேவையிப்போ !
பெற்றவரைப் பேணாமல்
பெருந்தடையே எனவெண்ணி
சற்றுமவர் மனம்பார்க்கா
சண்டாள குணமுடையோர்
காப்பகத்தில் விட்டுவிடும்
கருணையற்ற செயலொழிய
கட்டாயம் முற்றுப்புள்ளி
வைத்திடுவோம் வாருங்கள் !
பொறுமையெனும் நகையணியும்
நிறைவுடைய பெண்ணினத்தை
குறைபடுத்தும் குணமுடையார்
நெறியுடைத்து நிற்கின்றார்
அவர்செயலை அகற்றிவிட
ஆர்வமுடன் கிளர்ந்தெழுந்து
அவர்தமக்கு முற்றுப்புள்ளி
அனைவருமே வைத்துநிற்போம் !
காந்திக்கு முற்றுப்புள்ளி
கோட்சேயால் வந்தது
சாந்திக்கு முற்றுப்புள்ளி
சண்டையால் வருகிறது
திக்கெட்டும் முற்றுப்புள்ளி
தேவையாய் இருக்கிறதே
திசைமாற்றம் தடுப்பதற்கு
தேவையன்றோ முற்றுப்புள்ளி !
எம் . ஜெயராமசர்மா மெல்பேண் .அவுஸ்திரேலியா )


உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி அக்டோபர் மாதம் 2016
போட்டி இலக்கம் -83(வது மாதம் )
தலைப்பு -முற்றுப் புள்ளி பதிவு இலக்கம் 11.
கனவுக்கு உரு கொடுத்து
புது உலகையே நாம் காண்போம்
சுகங்களை சேகரித்து
சோக மலையை செதுக்கிடுவோம்
அன்பெனும் ஊற்றெடுத்து
பாசநதியினை பகிர்ந்திருப்போம்
நன்மைகள் அளந்தெடுத்து
சொர்க்கத்தில் பட்டா
போட்டுக்கொள்வோம்
மோகங்கள் களையறுத்து
மோட்சங்கள் அடைந்திடுவோம்
இறைநீதியில் எட்டுவைத்து
வாழ்க்கை வழியினை கடந்திடுவோம்
பொறுமையினை அபகரித்து
பல உள்ளங்களில் வாழ்ந்திடுவோம்
முடிந்ததை நாம் கொடுத்து
இல்லாதோர் இல்லத்தினில் ஜொலித்திடுவோம்
நேரங்களை காலத்திற்கு
ஏற்ப செலவு செய்து
வருங்காலத்தில்
லாபமடைந்துடுவோம்
வாழ்க்கை சிறிது வாழ்வதே பெரிது
நற்சிந்தனையில் சிறகடித்து
சுதந்திரமாக பலனடைய
உலா வருவோம்
வாழ்வின் ஆரம்பப்புள்ளி எவ்வினிமையோ
அவ்வினிமையின் தரம் குறையாது முற்றுப்புள்ளி இறைவனிடம்
பெரும் புள்ளி பெற்றுத்தந்திட வழிவகுப்போம்
சந்ததிக்கும் கற்றுத்தந்திடுவோம்
மனிதனெனும் தடம் பூமியில்
நிலையாய் இடம் பிடித்தால்
கல்லறையும் புகழுரைத்திடும்
மனிதனாய் வெற்றிப்புள்ளியில்லையெனில் கல்லறையிலும் முற்றுப்புள்ளியே..!!!
அப்துல் ஹை முகமது நொளசத்-அட்டாளைச்சேனை 

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி அக்டோபர் மாதம் 2016
போட்டி இலக்கம் -83(வது மாதம் )
தலைப்பு -முற்றுப் புள்ளிபதிவு இலக்கம்    09
நேற்றை
இன்றில் துணித்து
இறுக்கி பிடித்து
கழுத்தை அறுக்க
எதற்கு உனக்கு
கடந்த காலம்?!
இன்றை
இன்று சுமந்து,
இன்றில் வாழ்ந்து....
இறுக்கி பிடித்து,
இனிது சுவைக்க...
இதற்கு தான்
இந்த 'பொற்காலம்'!
நாளை..
இன்றில் நினைத்து,
இறுக்கி பிடித்து...
தூக்கில் தொங்க?!
எதற்கு உனக்கு...
இக்காலம்?!
நேற்றைக்கும்
நாளைக்கும்
'முற்றுப்புள்ளி'
விழித்துக் கொள்ளட்டும்....
'உன்னுள்'
இன்னைக்கு..!
ஆரம்பம்.....
-சித்ராதேவிவேலுசாமிஉலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி அக்டோபர் மாதம் 2016
போட்டி இலக்கம் -83(வது மாதம் )
தலைப்பு -முற்றுப் புள்ளிபதிவு இலக்கம் 03
கற்பதற்கு என்றுமில்லை முற்றுப் புள்ளி!
கருணைமனந் தனக்கில்லை முற்றுப் புள்ளி!
பொற்புவியில் மழைவெறுத்துப் போமோ சொல்வீர்
பீறிவரும் கவியுடைக்கத் தடையு முண்டோ?
அற்புதத்தி னிறைவருக்கும் ஆகுங் காவல்
அருட்குவைக்குத் தானுமில்லை முற்றுப் புள்ளி!
நிற்பதற்கும் நடப்பதற்கும் நிகழும் ஈர்ப்பு
நிலமடைந்தைக் கேதுமில்லை முற்றுப் புள்ளி!
சோறில்லை என்பவர்க்கு முற்றுப் புள்ளி
சேயிழையார் வற்கொடுமை முற்றுப் புள்ளி!
ஆறில்நீர் மறிப்போர்க்கும் முற்றுப் புள்ளி
ஆக்கிடுவாய் விலைமாதர் முற்றுப் புள்ளி!
கூறிடும்பேய் மாந்தருக்கும் முற்றுப் புள்ளி
கொலைகளவு பொய்யருக்கும் முற்றுப் புள்ளி!
மீறிவரும் இனப்போர்க்கு முற்றுப் புள்ளி
மேவிவரும் நாடெதுவோ மிதக்கும் பள்ளி
!
-தேசபாரதி-கனடா


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.