புதியவை

சோலைக்கிளியின் “பொன்னாலே புழுதி பறந்த பூமி” - இரசனைக் குறிப்பு முஹம்மட் நௌபர்

எனது புத்தக அறையில் தேங்கிக் கிடந்த நூல்களை மீளக்குலைத்து அடுக்கிய போது “பொன்னாலே புழுதி பறந்த பூமி” என்னும் நூல் கண்ணில் பட்டது. நீண்ட நாளைக்குப் பிறகு சிறந்த ஒரு பத்தி எழுத்துக்களை வாசிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இந்நூலின் ஆசிரியர் 'சோலைக்கிளி' அவர்கள் சிறந்த ஒரு கவிஞர் மாத்திரமல்ல சிறந்த பத்தி எழுத்தாளர் என்பதை இந்நூல் நிரூபித்துக்காட்டி நிற்கிறது.
இவர் “நானும் ஒரு பூனை” (1985) “எட்டாவது நரகம்” (1988) “காகம் கலைத்த கனவு” (1991) “ஆணிவேர் அறுத்த நான்” (1993) “பாம்பு நரம்பு மனிதன்” (1995) “பனியில் மொழி எழுதி” (1996) “என்ன செப்பங்கா நீ....” (2005) “வாத்து” (2009) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார். அத்துடன் “பொன்னாலே புழுதி பறந்த பூமி” என்னும் நூலை தான் எழுதிய பத்தி எழுத்துக்களையெல்லாம் தொகுத்து 2011 ம் ஆண்டு வெளியிட்டிருக்கின்றார்.
“ஒரு குறிப்பு” என்ற ஒன்றை ஈழத்து புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் உமா வரதராஜனோடு தொடங்கி சோலைக்கிளியின் 'என்னுரை' மற்றும் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவினதும் முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது.
பேராசிரியரின் முன்னுரையில் பத்தி எழுத்துக்கள் பற்றி ஆரம்பித்து சோலைக்கிளி தன் பருவத்தோடு ஒட்டிய அனுபவங்களை வெளிப்படுத்திய பாங்கு கவனத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். இன்னுமொரு பத்தியில் சோலைக்கிளியின் சமூக உறவு மிக அபாரமானது என்றும் அவர் சமூகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவதானமாக உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போல இயற்கையையும் கூர்ந்து நோக்குகின்றார். பறவைகள், மிருகங்களின் நடத்தைகளிலும் மிகக்கூர்மையான அவதானிப்பைக் கொண்டுள்ளார் என்றும் குறிப்பிடுகின்றார்.
உமா வரதராஜன் தனது குறிப்பில் அவனுடைய பால்ய கால ஞாபகங்கள் இந்நூலில் பொங்கி வழிகின்றன என்று பிரஸ்தாபிக்கின்றார். 190 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் முப்பது பத்;தி எழுத்துக்கள் அவரது அனுபவங்களாக விரிந்து கிடக்கின்றது. ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு அனுபவத்தையும் அதன் விபரிப்புக்களையும் சொல்லி நிற்கின்றது.
உலக கவிஞர் “சோலைக்கிளி” அவர்கள் உலகத்தரத்திலான எழுத்துக்களை இங்கு உதிர்த்திருக்கின்றார். அவர் வாழ்ந்த கிராமப்பகுதியின் மண்வாசனையையும் அவரின் நினைவுகளையும் எழுத்துக்களில் வடித்திருக்கின்றார். அவரின் பால்ய கால ஞாபகங்களை இந்நூலில் வளைத்துப் போட்டிருக்கின்றார். எவ்வளவு தான் வயது ஏறிச்சென்றாலும் ஒவ்வொரு மனிதனதும் உட்பச்சை வாடாது என்பதற்கு இந்நூல் சாட்சி. ஏனெனில் அவரது பிரதேசத்து மண்வாசனையை நதிகள் வழிந்தோடுவது போன்று சொற்களால் நதியாக்கியிருக்கின்றார்.
இவருடைய முதலாவது “பொன்னாலே புழுதி பறந்த பூமி” எனும் பத்தியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பிரதேசங்களில் 'பொல்லடி' என்னும் கிராமிய கூட்டாட்டத்தினை அழகாக விபரிக்கின்றார்.
“வெறுவாய்க் கேடு வாசலிலே படுக்கிறது” என்னும் பத்தியை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார். “அவல் ஒரு கொத்து என்ன விலை மச்சி” என்பதில் நிறைய கதைகளை விளக்கியிருக்கிறார். அப்பத்தியில் கமலஹாசனின் “குரு” திரைப்படத்தையும் தொடர்புபடுத்தி சொல்லியிருக்கிறார்.
“வண்டப்பம் தான் ஊருக்கு அழகு” என்பதில் பலவகையான அப்பங்கள் பற்றி சொல்லி வயல் என்றால் “புளிச்சப்பணியாரம்” இதுவுமொரு அப்பம் தான் என்று காரணகாரியத்தோடு பத்தியை நிரப்பியிருக்கின்றார்.
“மீன்களுக்கு சிலை வைத்தால் நாறவா போகிறது” என்னும் பத்தியில் தனது சிறிய வயது வயல் காட்டு அனுபவங்களை விபரித்துச் சொல்கிறார். அப்பத்தியின் ஒரு இடத்தில் 'ஒரு கவிஞனுக்கு கூடுவிட்டுக் கூடுபாய்கின்ற வித்தைகள் தெரிந்தால் மட்டும் போதாது. முட்டை இடும் போதே அதை பொரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த குஞ்சுகளை உடன் வளர்த்து ஆளாக்கவும் தெரிந்திருக் வேண்டும்' என்று புதிய மற்றும் பழைய கவிஞர்களுக்குரிய படிப்பினையாக சொல்லியிருக்கின்றார்.
“எனது ஊர் என்ற கொய்யா மரம்” என்னும் பத்தியில் குடும்பம் பற்றி சொல்லியிருக்கிறார். மேலும் “புல்வெளி உண்டாக்கப் போன பொன்னி வண்டு” என்னும் பத்தியில் பின்வருமாறு கூறியிருக்கின்றார். உலகம் கிட்டத்தட்ட ஒரு நடிகையைப் போன்றது. அது கவர்ச்சியும் காட்டும் கலையும் நிகழ்த்தும் இதில் கவிஞன் தேர்ந்த ரசிகன். அவன் அதன் கவர்ச்சியை புறக்கணித்துக் கலையை விரும்புவான். என்று கவிஞன் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார்.
மிகுதியாய் இருக்கின்ற எல்லா பத்தி எழுத்துக்களும் அழகாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றில் “தொட்டுக்க கொஞ்சம் சுண்ணாம்பும் மடித்து வைக்க ஒரு வெற்றிலையும்” என்ற பத்தியும் “என் வாலிப ஆமை” என்பதும் மிகவும் அருமையாக இருக்கிறன. அத்துடன் “இதற்குதானடியம்மா உன்னை மனைவியென்பது” என்னும் பத்தியில் மனிதனுக்கு பிற அங்கங்களை விட கண்கள்தான் அழகாக குளிராக அமைய வேண்டும். காதல் பூக்கின்ற இடமல்லவா கண்கள் என்று தொடர்கிறது அப்பத்தி.
“கண் இருப்பது மூடத்தானே” என்று இறுதியான பத்தியில் “வைரக்கிளவர்” என்ற அவரது பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரின் நடத்தையையும் அவருடன் இருந்த நூலாசிரியரின் தொடர்பினையும் விரித்து வைத்திருக்கின்றார்.
பத்தி எழுத்துக்கள் பற்றிய மதிப்பை கூட்டியிருக்கிறது இந்நூல்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.