புதியவை

கொலைக் களமாக மாறியுள்ள கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை! - ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

சாய்ந்தமருதைச் சேர்ந்த 11 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளான். மரணம் இயற்கையானது என்றாலும் இந்த விடயத்தை அவ்வாறு நோக்க முடியாதுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சில நாட்களாக இந்தச் சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்தான். இருப்பினும் உரிய டாக்டர் இன்மை தாதி உத்தியோகத்தர்கள் கணக்கெடுக்காமை காரணமாகவே அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளான் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி வருகையின் பின்னரே உரிய சிகிச்சை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சிறுவன் பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அவனுக்கு டெங்கு ஏற்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுவனைக் காப்பாற்ற முடியாது என மட்டக்களப்பு வைத்தியர்கள் கூறியதாகத் தெரிய வருகிறது.

பிரதம வைத்திய அதிகாரி வந்த பின்னர்தான் சிகிச்சை என்றால் அங்கு பணி புரியும் ஏனைய வைத்தியர்கள் டாக்டர்கள் இல்லையா?, நோயைக் கண்டு பிடிக்கவும் சிகிச்சை வழங்கும் தகுதியற்றவர்களா அங்குள்ளனர் அல்லது அங்கு பெரிய டாக்டரைத் தவிர எவருமே இல்லையா என்ற கேள்விகளும் இங்கு எழுகின்றன. இது ஒரு வேதனையான விடயம்,

குழந்தையாகப் பெற்று 11 வருடங்கள் பாதுகாத்து ஒரு சிறுவன் என்ற அந்தஸ்தையடைந்த அவன் இன்று உயிரிழந்துள்ளான். இந்த மரணத்தின் பின்னணிக்கு மேற் கூறப்பட்டவைகளே காரணங்களாக அமைந்திருந்தால் இதனை இயற்கை அல்லது அகால மரணம் என்று எவ்வாறு கூற முடியும்? அந்தச் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளளான். அதுவும் திட்டமிட்டு அவனது உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்றுதானே கருத முடியும்?.

11 வயதான அந்தச் சிறுவனின் வாழக்கையை அஸ்தமிக்கச் செய்து அவனது அபிலாஷைகள், வாழ்வதற்கான விருப்பங்களைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் பதறப் பதற இரத்த வாந்தி எடுக்கும் வரை மனித நெகிழ்ச்சியற்ற வன்முறையைப் பயன்படுத்தி பறித்துள்ளனர். அவனது பெற்றோர் இன்று பேதலித்து நிற்கின்றனர்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தொடர்பில் இவ்வாறான குறற்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இது முதற் தடவையல்ல. நோயாளர்களை நிந்தித்தல், அவர்களுக்கான உரிய சிகிச்சையை வழங்காது அசிரத்தைப் போக்கை காட்டுதல், நோயின் பாரதூரத்தை கருத்தில் கொள்ளாமல் அனுபவம் இல்லாத வைத்தியர்கள் மூலம் சிகிச்சைகளை மேற்கொள்ளச் செய்தல் போன்றன இங்கு சாதாரணமாக நடைபெறும் விடயங்களாக மாறி விட்டதாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தவறான சிகிச்சைகள், முறையான சிகிச்சை இன்மை காரணமாக, பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பல இளம் தாய்மார்களும் சிசுக்களும் இங்கு மரணித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

பொதுமக்கள் இவ்வாறெல்லாம் குற்றஞ்சாட்டியும் உரிய தரப்பினர் இந்த விடயத்தில் நியாயமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. அதேவேளை, இந்த இந்த நிலைமை தொடர அனுமதிக்க முடியாது.

மத்திய அரசின் பிரதி சுகாதார அமைச்சரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர், கிழக்கு மாகா சுகாதார அமைச்சரும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கும் நிலையில் கூட இவ்வாறெல்லாம் நடப்பது என்றால் எவ்வாறுதான் ஏற்றுக் கொள்ள முடியும்.? இந்த விடயத்தில் அவர்கள் கவனம் செலுத்தி இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்டுவதனை நிறுத்தவும் சீரான நிர்வாகத்தை முன்கொண்டு செல்லவும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு நியாயத்தை வழங்கவும் முன்வரேண்டும்.

மனித உயிர்களோடு விளையாடும் இவ்வாறான டாக்டர்களும் தாதிமார்களும் தொடர்ந்தும் தங்களது போக்கிலேயே சென்று கொண்டிருந்தால் அங்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களின் நிலைமை என்னவாகும்? மனித உயிர்களை பந்தாடும் விளையாட்டு மைதானமாக இன்று அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை காணப்படுகிறது.

இந்த வைத்தியசாலையின் பணிப்பாளராக டாக்டர் நஸீர் கடமையாற்றிய போது காணப்பட்ட நிலைமையுடன் தற்போது அதன் பணிப்பாளராக ரஹ்மான கடமையாற்றும் காலப் பகுதியை ஒப்பிடும் போது, அங்குள்ள நிர்வாகத் திறன் தலைகீழாக மாறியுள்ளது. அரசியல் பின்னணிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த இடமாற்றம் இன்று மக்கள் உயிர்களைக் காவு கொண்டு வருகிறது. எத்தனையோ டாக்டர்கள் கடமை புரியும் இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்படாமை, அதற்கான சிகிச்சை வழங்காமை மிக வேதனையான விடயம். அத்துடன் பல்வேறு சந்தேகங்களும் எழுகின்றன.

மேலும், இங்கு இன்னும் ஒரு விடயத்தை நான் குறிப்பிட்டேயாக வேண்டும். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த திறமைமிக்க, நிபுணத்துவமிக்க சிரேஷ்ட டாக்டர்கள் பலர் இன்று கொழும்பிலேயே கடமை புரிகின்றனர். ஆனால், இவர்களில் ஒருவர் கூட தங்கள் மாவட்டத்தில் கடமையாற்ற விருப்பம் கொண்டவர்களாகத் காணப்படவில்லை. காரணம் தாங்கள் அங்கு சென்றால் அரசியல் ரீதியாக பந்தாடப்படுவோம் என்ற அச்சம் அவர்களிடையே காணப்படுகிறது

இது இவ்வாறிருக்க, கல்முனை தெற்கு மற்றும் கல்முனை வடக்கு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகளின் இரு பிரிவுகளில் 40 பேரும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேருமாக 59 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு வைத்தியசாலைகளில் தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் எத்தனை பேரின் உயிர்கள் அநியாயமாக காவு கொள்ளப்படுமோ தெரியவில்லை.

சாய்ந்தமருதில் இவ்வாறன நோய் பரவலுக்குப் பிரதான காரணிகளில் ஒன்று சுத்தப்படுத்தப்படாமல் அசுத்தமடைந்து நாற்றமடிக்கும் தோணாவே. இந்த தோணா கூட கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு ஒரு கொந்தராத்து மேடையாக அமைந்திருந்தமையும் இன்றைய நிலைமைக்குக் காரணமே!

எனவே, எதிர்காலத்தில் அஷ்ரஃப் ஞாபகார்த்த கல்முனை வைத்தியசாலைக்குச் செல்லும் எவரும் கபனையும் பிரேத பெட்டிகளையும் எடுத்துச் செல்லக் கூடியதான அசிரத்தைமிக்க மரணங்கள் ஏற்படுவதனை தவிர்த்துக் கொள்ள சகல தரப்பினரும் செயற்பட வேண்டும்.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.