புதியவை

தந்தைக்கோர் கண்ணீர் கவிதை! -நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்-(30.10.2007ஆம் ஆண்டு காலமான என்னுயிர் தந்தை உடுதெனிய அல்ஹாஜ் எம்.எம்.ரஷீத் அவர்களின் நினைவாக நான் எழுதி என் கவிதை இது: இன்று அன்னாரின் 9ஆவது வருட நினைவு தினம் ஆகையால் மீண்டும் என் தந்தைக்கான இந்த கவிதைச் சமர்ப்பணம்!
முக நூல் அன்பர்களே! என்னுயிர் தந்தைக்காகவும் பிரார்த்தியுங்களேன்.)
தந்தைக்கோர் கண்ணீர் கவிதை!
எம் உயிரிலும் உடம்பிலும்
ஏன் உதிரத்திலும் கூட
இரண்டரக்கலந்துள்ள
உம்முயிர் தந்தையே!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
இன்றுடன் மூன்று மாதங்கள்...
ஆனால் உங்கள் பிரிவுத்துயர்
இன்னும் ஆறாப்பெருந்துயராக
எம்மனங்களில்..
அன்பு வாப்பாவே!
நீஙகள் கண்டி ஆஸ்பத்திரியில்
இருக்கும் போது
'மகள் வீட்டுக்கு போகணும் '
என்று மன்றாடினீர்களாமே?
ஏன் வாப்பா?
நிரந்தரமாய் எம்மை விட்டு
'பிரிந்துப் போகிறேன்' என
எம்மிடம் விடைபெற்று செல்லவா
இங்கு வந்தீர்கள்?
எம்மில்லம் ஏகியே
இறையடி எய்தினீர்கள்
அந்த ரணமான பொழுது
எம் மனங்களையெல்லாம
துவம்சம் செய்துவிட்டன
வாப்பா! நீங்கள்
சுகயீனமுற்று கட்டிலில் இருந்தாலும் -எம்
பக்கத்தில் இருக்கிறீர்களே
என்ற பலத்துடன்
நாமிருந்தோம்
ஆனால்.. இன்று
நாம் பலமிழந்து விட்டோம்
நீங்கள் பிரிந்ததால்..
பெருநாள் வந்தால்
பெரும் பானையில
வெந்நீர் வைத்து
பிள்ளைகள் சுடுநீர் குளிக்க
நீங்கள் குதூகலிப்பீர்கள்
அதை எண்ணி ஏங்குகிறோம் வாப்பா!
எம் கண்களோ பெரும் குளமாக
இம்முறை பெருநாளில்...
வாப்பாவே!உம்மாவே!
நீங்கள் இருவரும்
எமக்காக பட்ட துயர்
ஏராளம்! தாராளம்!!
கொளுத்தும் வெயிலில்
எமக்காக நீங்கள்
சிந்திய வியர்வைத் துளிகள்
இன்று எம்மை
ஏற்றியுள்ளன வெற்றிப்படிகளில்...
நீங்கள் நட்ட இச்செடிகள்
மரமாகி ,காயாகி,
கனி தரும் வேளை
வாப்பா!
நீங்கள் நோயாகி –எமை
பிரிந்து விட்டீர்களே!
உயர ஏற்றி விடும் ஏணி போல,
கரையை கடக்க உதவும்
தோணி போல மட்டுமல்ல
பிறருக்கு ஒளி கொடுத்து
தன்னை அழித்துக்கொள்ளும்
மெழுகுவர்த்தி போல
பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த
பெற்றோர் நீங்கள்!
உங்களை பெற்றோராய் பெற்ற
நாங்கள் பாக்கியசாலிகள்!
தன்னலம் கருதாது
எம் நலம் கருதி
நீங்களிருவரும்
எமக்காக செய்த
தியாகங்கள்
அப்பப்பா...
எழுதுவதென்றால்
ஏடும் போதாது
தம் பசி கருதாது
எம் பசி பொக்கி
எமை ஆளாக்கினீர்கள்.
நீங்கள் இருவரும்
சோற்றை மட்டும்
எமக்கு ஊட்டவில்லை
நல் படிப்பையும் பண்புகளையும்
கூடவே ஊட்டினீர்கள்
அந்த ஊட்டச்சத்து தான்
எம் உள்ளங்களிலும்
உணர்வுகளிலும்...
எனவே இன்று
எமக்கு விழும்
பூமாலைகளும் பொன்னாடைகளும்
வாப்பாவே! உம்மாவே!
உங்களிருவருக்குந்தான்.
வாப்பாவே ! உம்மாவே!
இன்று எம்
அழுகுரல் கேளாமலே
மீளாத்துயில் கொண்டதேன்?
தினம் தினம் அழுகின்றோம்
திரும்ப வர மாட்டீர்களே!
கண்மூடிப்படுத்தாலும்
நினைவெல்லாம்
நீங்கள் தான்
வாப்பாவே! உம்மாவே!
உங்கள் இருவருக்கும்
'ஜென்னத்துல் பிர்தௌஸ்'
சுவனம் கிடைக்க
எந்நாளும் இறைஞ்சுகிறோம்
ஏக அல்லாஹ்வை....
(ஆமீன்)

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.