புதியவை

ஜெர்மனி மீரா ,எழுதும் தொடர் 'வர்ணங்களின் வர்ணஜாலம்'


                          
தெய்வீகத்தின் நிறம் , மங்களகரமாக வாழ்த்துப்பாடி காந்தமாய் கண்ணை கவரும் நிறம் மஞ்சள் நிறம் . சுவரில் மாட்டப்பட்டிருந்த நவீன ஓவியத்தின் மஞ்சள் நிற வண்ணங்கள் வர்ணஜாலமிட்டன.
மயூரியின் நெஞ்சு படபடத்தது . இனிமையான ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது . அவளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் மஞ்சள் நிறமே . சேலை வாங்க சென்றாலும் , சுடிதார் வாங்க கடைகளுக்கு சென்றாலும் அவள் கண்கள் மஞ்சள் நிற ஆடையை கண்டு கொண்டால் அதிலேயே லயித்து விடும் .
அவளைப் பெற்றவர்களுக்கு அவளை சந்தோஷபடுத்துவது மிகவும் எளிதாகவே இருந்தது . ஆம் மயூரி நிறங்களை தன் வாழ்வில் இணைத்துக்கொண்டு வாழப் பழகியவள் . வண்ணங்கள் அவள் உணர்வுகளை வழிநடத்திச் செல்லுவதை வழமையாக்கிக் கொண்டவள் .
மயூரியின் கண்கள் ஆவலுடன் வாசற்கதவை நோக்கியது. ஏக்கங்கள் ஏவுகணையாக கதவை துளையிட்டன.
திருமணம் இனிதே நிகழ்ந்து ஆறுமதங்களை கடந்திருந்தது . தன் பதியின் வருகைக்கான காத்திருப்பு .
காற்றில் வரும் கீதமே என் கண்ணனின் வருகையை கூறாயோ .மயூரி தூது விட்டாள் . „இவள் அழைப்பை கேட்டு இதயத்தை திருடியவன் வீடு திரும்பியதும் கனிவான கண்கள் எங்கே என் மனையாள் என்று தேடும் ?. கண்மணிக்குள் கைது செய்தவுடன் பின்னால் மறைத்து கொண்டு வந்த அந்த பூங்கொத்தை மெல்ல அவள் முன் நீட்டுவான் „.
நாணமும் தயக்கமுமாக „எனக்கா?“ என்று வளையல் கரம் ஆசையாக வாங்கிக் கொள்ளும் . பூக்களை முகர்ந்தபடி அந்த வாசனையில் அப்படியே அவள் ஒருகணம் மயங்கியப்படியே „என்னங்க களைச்சு போய் வந்திருப்பீங்க , தேத்தண்ணீர் போட்டு வாறன் , நீங்க வாஷ் பண்ணிட்டு வாங்கோ „என்று வசீகர புன்னகையை சிந்திவிட்டு சமையலறையை நாடிச்செல்வாள் .
„மணக்க மணக்க தேநீர் , சுடச்சுட சிற்றுண்டி பசித்தவன் வாய்க்கு சுவையாக கொடுத்துவிட்டு கணவன் பூசிப்பதைபார்த்து நெஞ்சு மகிழும் . இன்று வேலை தளத்தில் வேலைபளு அதிகமா என்ற அவள் கரிசனை அவன் மனதை தொடும் . அன்பை தந்து அன்பை பெற்று வாழ்வின் இன்பம் ஆரம்பிக்கும் .
மயூரியின் கண்கள் ஆனந்த கண்ணீரில் பனிக்கும். அழகான கற்பனையில் அவள் எண்ணங்கள் ஏக்கத்துடன் மயங்கின . 
தொடரும் ...

வர்ணங்களின் வர்ணஜாலம்
அத்தியாயம் 2
இளவேனிற்காலத்தின் இளம் குரும்பச்சை, இனிய வசந்தத்தின் வருகையை எதிர்வு கூறும் , வெற்றிக்கு பறை சாற்றும், பச்சை பசேல் என்று தலை நிமிரும் . பச்சை நிறத்தின் மதிப்பும் இதுவே .
மயூரியின் கண்கள் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் நிலைத்தது. வேலை சென்ற துணைவன் வீடு வரும் நேரமாகி விட்டது .இதய துடிப்பு வேகமாக சமையலறைக்கு செல்ல எத்தனித்தாள். கீச்சு என்ற குரல் அவளை தயங்க செய்தது .
பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலம் தொடங்கும் அறிகுறியாகவே இன்று குருவி கூட்டம் கும்மாளம் போடுகின்றன . குளிர்காலத்தில் வெளியே தலையை நீட்ட விரும்பாத சிட்டுக்குருவிகள் இன்று சுதந்திரமாக ஆடி பாடி மகிழ்கின்றன . மயூரியின் நெஞ்சில் ஒரு இனம்புரியாத ஏக்கம் .
குருவிகளின் கூப்பாடு மயூரியை அழைத்தது . சின்ன சின்ன குருவிகள் , வண்ண வண்ண சட்டை போட்ட வாயாடி குருவிகள் என்று செல்லமாக விரட்டினாள் மயூரி , அவைகளுடன் தானும் சேர்ந்து சுதந்திரமாக பறக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு .
சிறகுகள் இல்லையே எனக்கு , சிறகுகள் முளைத்திருந்தால் என் அன்பு அம்மா அப்பாவை இந்தக்கணமே பறந்து சென்று பார்த்து வருவேனே . கடல் தாண்டுவதும் சுலபம் . பல நாடுகள் கடப்பதும் சுலபம் . தங்கைக்கு ஒரு ஆசை முத்தம் , தம்பிக்கு செல்லமான ஒரு தட்டு , ஆசையுடன் அம்மாவுக்கு இறுக்கமாக ஆரத்தலுவல், அப்பா என்று ஒரு அன்பு அழைப்பு , இது போதுமே .
மயூரியின் நெஞ்சு விம்மி வெடித்தது . திருமணம் என்ற பந்தம் பல மைல்களை கடக்க வைத்து விட்டது . இதுதான் என் உலகம் என்று இருந்தவளை ஒரேயடியாக வேரோடு பிடுங்கி வேற்றுகிரகத்தில் விட்டு இனி உன் வாழ்வு இங்கே தான் என்ற கட்டளை என்பது போல் ஒரு கட்டாயம் . புதிய சூழல் , புது மொழி , புதிய உறவு என்று எல்லாமே புதியதானதால் தன்னை அவளும் கொஞ்ச கொஞ்சமாக முற்றாக தன்னை மாற்றிக்கொண்டாள்.
அவள் கரம் பற்றியவன் ஒரு ஆணழகன் . அவள் பேரழகுக்கு ஏற்ற மணவாளன் . என் துணை இவன் என்று பெருமையாக தன் நட்புக்களுக்கு காட்டி ஆனந்தம் கொண்டவள் . அம்மா அப்பா தேடித்தந்த உறவென்றாலும் அன்பை அள்ளித்தந்து அவள் மனம் அறிந்து என்றும் ஆறுதலாக இருப்பான் என்ற நம்பிக்கையுடன் விமானம் ஏறி இன்று அவன் நிழலில் வாழப் பழகி கொண்டவள் .
" எனக்கேற்ற துணை . என்னில் மறுபாதி, என் இன்ப துனபங்கள் யாவும் அவனிடம் . ஆனாலும் , அவன் ....ஒரு புரியாத புதிராக இருக்கிறானே " .

இருள் சூழ்ந்துவிட்டது . கருமையின் மடியில் அன்றைய நாள் எல்லோரும் உறங்கச்செல்ல ஆயத்தமாகி நெடு நேரமாகி விட்டது . காரிருளுக்கு ஏன் என்னிடம் இத்தனை கோபம் ?. கண்களை ஒரு தரம் இறுக மூடிக் கொண்டாள் .ஐயகோ ஒரே கருமையாக அல்லவா இருக்கிறது !.
வாசற்கதவில் சாவி திருப்பப்பட்டு திறந்து கொண்டது . மயூரியின் கண்கள் உள்ளே சோர்வாக வந்த கணவனின் முகத்தில் நிலைத்தது . „இன்றும் ஏன் நேரமாகிவிட்டது ரமேஷ் ?. வேலை அதிகமா ?
மயூரியின் கண்களில் கனிவு , கரிசனை . ரமேஷின் கண்கள் மட்டும் „ஏன் சினம் கொள்ள வேண்டும் ?. மனைவி வழமையாக கேட்கும் கேள்வி இது தானே , கேட்காவிட்டால் அவள் நல்ல துணைவி அல்ல .
ஒரு வேளை நாள் முழுவதும் உழைத்து, களைத்து வரும் ஒருவரிடம் கேட்க கூடாத கேள்வியை கேட்டு விட்டதனால்…..“ அன்றும் மயூரியின் மனம் பிசைந்து நொந்தது .
மெதுவாக சமையலறையை நாடி அன்று சமைக்கப்பட்ட உணவை ஆவி பறக்க சூடாக்கி அவனுக்காக பரிமாறினாள். மணிகணக்கில் சுவைபட நயமாக சமைத்த உணவு சுவை அறியப்படாமல் காலியானது . அறுசுவையும் சேர்த்துக்கொண்டு பலமுறை ருசி பார்த்து மணவாளனிடம் பாராட்டை எதிர்ப்பார்த்தாள் மயூரி .
வெளியே தெரிந்த கருமை அவன் முகத்திலும் படர்ந்து விட்டதே . மனவாட்டம் அவள் ஆர்வங்களை மட்டுப்படுத்தியது . ரமேஷின் கையில் சிணுங்கிய அலைபேசியுடன் அவன் அவசரமாக அறையுனுள் மறைய அவள் ஏக்கங்களும் மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டன .
தொடரும் ..
.
வர்ணங்களின் வர்ணஜாலம் 
அத்தியாயம் 3
பசித்தவன் புசித்துவிட்டு சென்றான் . ஆனால் அவன் புகழ்ச்சியில் மகிழ மட்டும் அவளால் முடியவில்லை . ஆயினும் ருசித்திராவிட்டால் சுவைத்திருக்காது . சுவைத்திராவிட்டால் புசித்திருக்காது . புசித்திருக்காவிட்டால் காலியாகியிருக்காது. மயூரி புன்முறுவலுடன் பாத்திரங்களை கழுவுவதற்கு சமையலறையை நாடினாள்.
சஞ்சலங்கள் சஞ்சரித்த அவள் மனதில் சாந்தி நிலை ஏற்பட்டது . வரவேற்பறையின் மந்தாரமான ஊதா நிற வெளிச்சம் மயூரியின் ஆழ்ந்த எண்ணங்களை தூண்டிவிட்டதோ . ஊதா நிறம் ஆழ்நிலை தியானத்திற்கு உதவுகிறது அல்லவா .
„தித்தித்திக்க தின்பண்டம் தந்த என் திருமதியே, தினமும் திகட்ட வைத்து திகைக்க வைப்பாய் என் தேவியே!“ என்று காதல் வசனம் பேசா விட்டாலும் பரிமாறிய அனைத்தையும் ஒரு பருக்கை கூட விடாது உண்டு முடித்த ஒரு செயல் போதுமே , ஊதா நிறம் போன்று அமைதியான மனநிலையை பெறுவதற்கு .
சுத்தமாக மீண்டும் காட்சியளித்த சமையலறையை திருப்தியுடன் பார்த்துவிட்டு சயன அறையினுள் நுழைந்தவள் அன்பு கணவன் கனாக்களை தழுவி பல நிமிடங்களாவது இருக்கும் என்பதை உணர்ந்து தானும் உறங்கச்சென்றாள். அதிகாலை அவனை துயில் எழுப்ப வேண்டும் அல்லவா .
பூபாளம் பாடி பொழுது விடிந்தது . காலை கோப்பியுடன் கை நீட்டிய மனைவியின் திருமுகம் பார்த்து விழித்தவன் கண்கள் தரையை நோக்க வாங்கிக்கொண்டான் . தயக்கத்துடன் அவன் முகம் நோக்கியவள் மெதுவாக மீண்டும் சமையலறையை நாடினாள் காலையுணவை தயார் செய்ய .
கம்பீரமாக ஊதா நிற கழுத்து பட்டியுடன் இறங்கி வந்தான் ரமேஷ் . மயூரியின் முகம் மலர்ந்தது . ஒரு கணம் அவன் உருவத்தை தன் இரு கருவிழிகளுக்குள் உள் வாங்கிக் கொண்டாள் .
அலைபேசி சிணுங்கல் சத்தம் அவளை திடுக்கிட வைத்தது . வெட்கமின்றி அவனின் அழகில் மயங்குகிறேனே, சீச்சீ .... என தன்னையே குட்டிக்கொண்டு முகம் சிவந்தாள் . அவளுக்காகவே எங்கேயோயிருந்து பழைய சினிமா பாடலான „மயங்குகிறாள் ஒரு மாது“ என்ற அந்த இனிமையான பாடல் ஒலித்தது போலும் . நிஜமோ கனவோ என்பது கூட தெரியாத ஏகாந்த நிலையில் மயூரி .
„அம்மா வேலை முடிந்து வருகிறேன் . நான் அவசரமாக இப்ப கிளம்புகிறேன் . பின்னேரம் வந்து அவளை கூட்டி போகிறேன் என்று சொல்லுங்கள் . சரி வைக்கிறேன்“ என்று அவசரமாக அலைபேசியை அணைத்தான் . „மாமி தான் அழைத்தார்களா?“ என்ற மயூரியின் வினாவுக்கு பதில் தராமலே கிளம்பியும் விட்டான் .
„இன்று மாமி வீடு செல்கிறோம் . ஊதா நிறத்தில் இருக்கும் அந்த சுடிதார் எனக்கு அழகாக இருக்கும் . அதுற்கு பொருத்தமாக காதணிகளையும் அணிந்தால் அவருக்கு பொருத்தமான அழகியாக தோன்றுவேன் „. எண்ணங்களுடன் அவன் வாகனம் சென்று மறையும் வரை விழிகளால் வழி அனுப்பிவைத்தாள் அன்பு மனைவி .
தொடரும் .
வர்ணங்களின் வர்ணஜாலம் 

அத்தியாயம் 4
விழி வழி அவள் கருத்தை கவர்ந்தவன் , வீதி வழி சென்று , அவள் விழிகளிலிருந்து மறைந்தாலும் , இதயவழியில் உள்ளே புகுந்து மீண்டும் இதமாக அமர்ந்துகொண்டான் . இமைகள் படபடத்தன, இதயம் துடிதுடித்தன, கால்கள் பரபரத்தன . விறைந்தாள் உள்ளே பாவை , வியந்தாள் தன் நிலை நினைந்து , பறந்தாள் சிறகில்லாமலேயே மனவானில் .
அன்பு மனைவியை இன்று கணவன் தன் அம்மா வீடு கூட்டிச் செல்கிறான். மாமிக்கு ஏற்ற மருமகளாக குடும்பத்துக்கே ஏற்ற குலவிளக்காக அவள் திகழ வேண்டும் என்பது மயூரியின் இளமைகால கனவு . கண்கூடாகவும், காதுவழியாகவும் கேள்விப்பட்ட அதாவது மாமியார் தனக்கு பெண் பிள்ளைகள் இருந்தாலும் இன்னொரு மகளாக வரும் மருமகளை வெளிவீட்டு பெண்ணாகவே பார்க்கிறார்கள் என்ற அந்த பொது விதியை தன் அன்பின் மூலம் மாற்றவேண்டும் என்று அவள் திடசங்கற்பம் கொண்ட எண்ணம் நிஜமாக வேண்டுமல்லவா . அதுமட்டுமா , எத்தனை எத்தனை வண்ணக்கனவுகள் தீர்மானங்களை சுமந்தபடி ரமேஷ்யுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளாள்.
மகிழ்வுடன் சிரித்துகொண்டாள் . பழ தட்டில் இருந்து பழங்களில் ஆரஞ்ச் பழத்தில் நிலைத்தது . ஒரு ஆரஞ்ச் பழத்தை எடுத்து வாயில் சுவைத்தாள். ஆர்வம் அவளை தொற்றிக் கொண்டது . ஆரஞ்சு பழத்தில் அரியதரம் சுடும் அளவிற்கு செயல்பாட்டு திறனை தூண்டியும் விட்டது . ஆரஞ்ச் நிறத்தின் உணர்வுகள் அவளை ஆட்கொண்டது .
கடிகாரத்தை சுறுசுறுப்பாக்கினாள். கடிகாரம் 5 மணி ஆவதற்குள்ளேயே அழகு பதுமையாக காட்சி தந்தாள் மயூரி . கணவன் வரவிற்காக 5 மணிக்கு பார்த்திருந்தாள் . 6 மணிக்கு காத்திருந்தாள். 7 மணிக்கு சோர்ந்திருந்தாள். 8 மணிக்கு மீண்டும் துவண்டே அவள் போனாள்.
இருப்பு கொள்ளாமை அவளை இயங்க விடாமல் தடுத்தது . வேலையில் எதிர்பாராத இடைஞ்சல் வந்து தடுத்திருக்கலாம் . தானும் இடர் தருவது சரியோ என குழம்பினாள் மயூரி. புதுமண தம்பதிகள் அல்லவா அவன் குணமறிய காலம் தேவையல்லவா . „கணவனின் கைதொலைபேசிக்கு தயங்கியபடி தொடர்புகொண்டாள். எங்கே இருக்குறீங்க ?“என்ற அவளின் கேள்விக்கு „இதோ ஒரு அரைமணித்தியாலத்தில வந்திருவன்“ என்ற அவசர பதிலுக்கு மீண்டும் உயிர்த்தாள் கண்மணி.
தொலைபேசியின் மறுமுனையில் இரைச்சலாக கேட்ட ஒரு பெண்ணின் குரல் பரீட்சயமானது போல் இருந்தாலும் மயூரி கணவன் வரப்போகிறான் என்று சொன்ன ஒரு வார்த்தையில் அப்படியே மறைந்து போனது .
ஆனாலும் ரமேஷ் வீடு வந்து சேர 9 மணிக்கும் மேல் ஆகியது . மிகவும் களைத்து போய் வந்திருந்தான் . வந்தவன் மயூரியின் அலங்காரத்தை கண்டு அவள் வதனத்தை ஒரு தரம் உற்றுநோக்கினான் . அவள் அழகு அவனை நிலைகுலைய வைத்தது என்னவோ உண்மை தான் . ஓ, இவள் இத்தனை அழகா . பிரமித்தான் . அடுத்த கணமே சமாளித்த வண்ணம் வெளியே போய் வந்தீங்களா மயூரி என்று அவன் சாதரணமாக கேட்க அப்படியே துவண்டு போனாள் அப்பாவி பாவை.
தொடரும் ...
வர்ணங்களின் வர்ணஜாலம்
அத்தியாயம் 5
புரியாது துவண்டவள், விழிகளினால் வினா தொடுத்தாள். வினாக்களை விளங்கிக்கொள்ளாதவன் விடை சொல்ல தெரியாது விழித்தான். வினாக்கள் விடைகளாயின அவனுக்கு. விடைகள் வினாக்கள் ஆயின அவளுக்கு .
அவள் கருவிழிகளை மேகத்திரை மூடியது . கண்ணீர் திரையில் அவன் உருவம் மறைந்தது . ஆனால் எண்ணங்கள் போர்க்கோலம் கொண்டது . துளிர்த்தாள் மயூரி . ரமேஷை தேடிச்சென்றாள். அவனோ அலட்டிக்கொள்ளாமல் இரவை இறுக்கிப்பிடித்துக் கொண்டு உறக்கத்தை இரவல் கேட்டுக்கொண்டு இருந்தான் .
விவாதித்தாள் தன்னுள் பெண்மணி . தூங்க தயாரானவனிடம் தன் ஆற்றாமையை முறையிடுவது சரியா என் தயங்கினாள் மனைவி . காலையிலிருந்து அவள் கொண்டிருந்த உற்சாகத்தை ஏமாற்றம் விழுங்கிக்கொண்டிருந்தது . அத்துடன் உறங்கும் கணவனை எழுப்பி நான் ஆசை ஆசையாக உங்களுடன் சேர்ந்து செல்ல மணிகணக்காக பார்த்திருந்தேனே. கடிகாரம் பார்த்து பார்த்து என் விழிகளும் பூத்து போய் விட்டனவே . வழி மேல் விழி வைத்தேன் . விழி மேல் வலி தந்தாய் என குறை படவா . பொறுமை காத்து அவனை வெல்லுவதா, குழம்பினாள் பாவை . தவித்தாள், பரிதவித்தாள் .
திண்டாட்டத்துடன் திரும்பினாள், தற்செயலாக அவள் கை தட்டி அவன் மேஜை மீதிருந்த அன்பு என்று பொறிக்கப்பட்டிருந்த அழகிய வடிவம் கீழே விழுந்து நொறுங்கியது . அதிர்ச்சியுடன் அவள் முதல் முதலாக அவள் கணவனின் தூக்கத்தை கெடுத்து விட்டேனோ என்று நோக்கிவிட்டு மெல்ல குனிந்து நொறுங்கிய துகள்களை எடுக்க முயன்றாள் மயூரி .
எதை உடைத்து விட்டாய் மயூரி என்ற ரமேஷின் கர்ஜனை அவளை கொஞ்சம் நிலைகுலைய வைத்தது . நொறுங்கிய சத்தம் அவன் தூக்கத்தை குலைத்து விட்டது . ஆனால் ஒரு கணத்தில் தன் பின்னே எப்படி வந்தான் என்பது தான் அவளுக்கு புரியவில்லை . அவனது அளவுக்குகடந்த அந்த சினம் அவளை பயம் கொள்ள வைத்தது .
எப்படி இதை உன்னால் உடைக்க முடியும் என்ற அவன் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாது முழித்தாள் மயூரி . ரமேஷ் , மன்னிக்கவும் . கை தவறி விழுந்து விட்டது . இதோ உடனே துகள்களை அப்புறபடுத்தி விடுகிறேன் . நீங்கள் மீண்டும் தூங்க போங்கள் என்று சமாதானமாக மெல்லிய குரலில் கூற முயல அவனோ வார்த்தைகள் புலனில் ஏற்றாதது போல் முகத்தில் இருள் படர ஏதோ நினைவுகளில் தன்னை தொலைத்தான் .
„உணர்வை உயிர்ப்பித்தவள் உதறிதள்ளிவிட்டாள் . உறவாக வந்தவள் உடமையை உடைத்துவிட்டாள் . உயிர் மறந்ததினால் உலகமே உலர்ந்துவிட்டதே“ என்று உரிமை கொண்டவன் உளறியதால் உள்ளம் உருகினாள் உறவு கொண்டவள் .
கார்மேகம் சூழ்ந்தது இருவர் மனதையும் . காரிகையின் கருவிழிகளில் மீண்டும் கருமை நிழல் .கணவனோ தன் பொருள் உடைந்ததினால் கடுமை கொண்டிருந்தான் . இருண்ட அந்த நேரம் வெறுமை கொண்டதாய் காணப்பட்டது .
„ஒரு சிறு பொருள் உடைந்ததுக்கு இத்தனை கோபமா ?, என் உணர்வுகள் இன்று உடைந்து போயிருக்கிறதே, அதற்கு எனக்கல்லவா கோபம் வர வேண்டும் , அவர் காட்டிகொள்கிறார். நான் காட்டிக்கொள்ள தயங்குகிறேன். மயூரி சிலிர்த்துக் கொண்டாள் .
கணவனை அகல கண் விரித்து „இன்று என்னை வெளியே கூட்டி போவதாக இருந்தீர்களே , ஒவ்வொரு நிமிடத்திற்கும் கனத்தை கொடுத்து விரைவுபடுத்தி காத்திருந்தேனே . மணித்தியாலங்கள் அநியாயமாக விரயமானதே, அதற்குரிய காரணத்தை நீங்கள் கூறவில்லை“ சினத்துடன் உரக்க கூற முனைந்தாள் . ஆனால் அவளது திருவாயிலிருந்து சத்தம் வெளிவராமல் அப்படியே அடங்கி போனது அவளது குற்றமில்லையே .
தொடரும் .........
மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.