புதியவை

ஜெர்மனிமீரா ,எழுதும் தொடர் கதை வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 10

வெண்மேகம் நாணத்துடன்
ஓரமாய் ஒதுங்கி 
 விடியலுக்கு வழி விட
 பாடித்திரிந்த பறவையின்
மெல்லிசையில்
 ஆதவன் புன்னகைத்தான்
புதிதாய் மலர்ந்த
மென் மலர்கள் கண் சிமிட்ட
குயில்களின் கூவலில்
விழி திறந்தாலும்
காதல் நினைவுகள்
சுமையாகின
அவள் இதயத்தில்
மயூரி பூபாளம் பாடினாள். மன்னவன் மோகனம் பாடினான் . அந்த அதிகாலையில் ஆனந்தம் ஆர்ப்பரித்தது. ஆனால் இரு ராகங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பாடலை தர மட்டும் முடியவில்லை . ஆனாலும் ஆனந்தம் சாதகமானது அங்கு .
மயூரி தயாரித்த உப்புமாவை ரசித்து உண்டான் ரமேஷ் . கனிவுடன் அவளை நோக்கியவன், „உங்களால் எப்படி இவ்வளவு ருசியாக சமைக்க முடியுது மயூரி ?. உங்கள் கைத்திறன் அருமையோ அருமை . ஒவ்வொரு நாளும் நீங்கள் வேலைக்கு தந்து விடும் உணவை ஒரு பருக்கையும் விடாது உண்டு முடித்து விடுவேன் .நீங்கள் வந்த பிறகு நான் எமது கண்டீன் பக்கம் மதிய உணவுக்காக சென்றது மிக குறைவு என்றால் பாருங்களேன்“ . கணவன் பாராட்டினான் .மனைவி தித்தித்தாள்.
„கன்னம் செம்மை கொள்ள , சுட்டும் விழி சுடர் பெற , பூவிதழில் சிறுநகை மலர, பாதங்கள் தரையில் கோலம் போட, மெல்லிய விரல்களோ சித்திரம் வரைய, பதுமையாய் அமர்ந்திருந்தாள் அவள் . குங்குமமாய் சிவந்த கன்னம் செந்தூர நிறம் கொண்டது . செந்தாமரை வதனமாய் மலராய் விரிந்தது .
„என்ன மயூரி போவோமா ?“ கிளம்புங்கள் என்று அவசரபடுத்தினான் ரமேஷ். என்ன கேட்கிறான் என்பது ஒரு கணம் புரியாது விழித்தாள் . பலத்த சிரிப்புடன் மயூரி உங்கள் அழகான ரசனையை மெச்சும் விதமாக நாம் இருவரும் வெளியே சென்று வர போகிறோம் . வெட்கத்துடன் தலை ஆட்டினாள் மயூரி .
நாயகனும் நாயகியும் போனார்கள் ஊர்கோலம் . மயூரிக்கு புத்தம் புது உலகம் , பொன்னிறம் கொண்டது . அவள் தினமும் கனாவில் கண்ட காட்சி கண்முன்னே . மனதின் ஆசைகள் ஆர்வங்கள் அழகாகியது. அதனாலேயே அவனின் மீதான அன்பு மேலும் பெருகியது . ஜேர்மன் நகர வீதிகள் மயூரியின் கண்களில் புதிதாய் காட்சி அளித்ததுதெருவோர கடைகளை ரசித்த வண்ணம் சென்ற மயூரி அவர்களை கடந்து செல்லும் இளம் காதலர்கள் அன்பாக கை கோர்த்தவண்ணம் செல்வதை காண தன்னுடன் வரும் கணவனின் கை பற்றி நடந்தால் எத்தனை நன்றாக இருக்கும் ? ஆவல் அவளை ஆட்கொண்டது . அடுத்த கணமே முகம் சிவக்க நானா இப்படியெல்லாம் நானா ஆசைப்படுகிறேன் . அதுவும் அன்னியர் முன்னிலையில் அன்பை காட்டுவது அநாகரிகம் என்று கடிந்து கொள்ளும் மயூரி வெட்கத்தை விட்டு கணவன் கை பற்றி நடக்க ஆசைகொள்ளும் அளவுக்கு அவன் மனதை ஆட்கொண்டுவிட்டானா என்ன . சிரித்துக் கொண்டாள் .
எதேர்ச்சையாக அவள் பார்வை ஒரு கடையில் விற்பனைக்கு அலங்காரமாக காட்சிப்படுத்தபட்டிருந்த அலங்கார பொருள்களில் ஒன்றில் நிலைகுத்தி நின்றது . மயூரியின் முகம் பிரகாசமாக ஒளிர்ந்தது .
மோகனமான நிலையில் வீடு வந்து சேர்ந்தார்கள் . மயூரியின் கண்களில் குறும்பு மிளிர்ந்தது . அறைக்கு செல்ல திரும்பியவனை நிறுத்தி „ரமேஷ் நானும் உங்களுக்கு ஆச்சரியமான பரிசு வைத்திருக்கிறேன் . இதை திறந்து பாருங்கள் . நிச்சயம் மகிழ்வீங்க“ என்று அழகாக குங்கும நிறத்தில் சுற்றப்பட்ட பரிசுபொருளை கொடுத்து விட்டு ஆவலுடன் அவன் முகத்தை பார்த்தாள். ஆர்வத்துடன் பரிசு பொருளை திறந்து பார்த்த ரமேஷின் முகம் மாறியது . அடங்கா கோபத்துடன் மாறுவதை கண்ட மயூரி காரணம் விளங்காது அதிர்ச்சிக்குள்ளானாள் 
தொடரும் .............

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.