புதியவை

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி நவம்பர் மாதம் 2016 முடிவுகள் 'தடாகத்தின் தாமரைகள்'.பாராட்டுப்பெறும் சிறந்த கவிதைகளை எழுதிய கவியாத்மாக்களுக்கு தடாகத்தின் பாராட்டுக்கள்

தவிர்க்க முடியாத காரணத்தால் போட்டி முடிவுகள் தாமதமாகிவிட்டது  அதற்காக போட்டியாளர்களிடம் சிறு மன்னிப்பு 
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி நவம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் மாதம் -84 வது
போட்டிக் கவிதை இலக்கம்12
-தலைப்பு-தொலை(தொல்லை)பேசி
தொலைபேசி சேவை உலகில்
மக்களுக்கு அவசியம் தேவை
இதை மறுப்பதற்க்கில்லை
வேண்டாம் என வெறுப்பதுமிலை
வேதனைக்கு சில நேரம்அது
வித்தாகி போவதுதான் உண்மை
விலை பேசும் மனிதருக்கும்
இது துணையாகிபோவது கொடுமை
காதலர் தம் கூட்டத்திற்க்கும்
கதை மாறி போவதற்க்கும்
துணையாகி போவதுதான்
இத்தொல்லைபேசி யின்வேலை
தொலைபேசி கைபேசியென
பேசி பேசி இங்கே பெண்டிர்
வாசமிழந்தார் தன் ரோசமிழந்தார்
வாழ்வை இழந்தார் பின் இறந்தார்
பசி மறந்தார் வாழ்வின்திசை மறந்தார்
பேசி பேசி சிலர் வாழமறந்தார்
பாருக்கு நல்லதென்று வந்தபேசி
பாழும் பாருக்குள்தள்ளியதை நீ யோசி
தொல்லைதான் இதுவென்று
தூரத்தள்ள முடியவில்லை
உடலோடு கைதனைப்போல்
ஒட்டிக்கொண்ட உறவு அது
எஸ்.டி. சுந்தர்சென்னை 600074

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி நவம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் மாதம் -84 வது
போட்டிக் கவிதை இலக்கம்12
தலைப்பு-தொலை(தொல்லை)பேசி

உலகம் வளர்ந்ததென்று...,
ஒத்தே ஒழிந்து போகும்...,
ஒழுக்கம் காண்பாரில்லை.!
சுருங்கிய துலகமென்பார்...,
சுணக்கமதி லில்லையென்பார்...,
இல்லாத தொன்றுமில்லை...,
இல்லையே நேரமெனினும்.!
தொலைபேசி வந்ததாலே..,
தொல்லைக ளகன்று போச்சாம்...,
அலைபேசி வழியே நாழும்...,
அழைப்புக ளணைகள் தாண்டி.!
நல்லதே நமக்கிதென்றும்...,
நாடிய பயன்க ளிட்டும்...,
பொட்டணங் கட்டிநிற்கும்...,
பொல்லாப் பதிலுண்டாகும்.!
அவசர செய்திசொல்ல...,
ஆபத்தி லளைத்துக்கொள்ள...,
சிறந்ததோ ரூடகந்தான்...,
சிறகொடிந் திருக்குமென்றால்.!
இன்றெலாம் நடப்பதென்ன...,
இலயல்பினில் மாற்றமாக...,
துயர்நிறை செய்திநாளும்...,
துடித்துடன் மாழச்செய்யும்.!
வீட்டினுள் வேசயாட்டம்...,
விரும்பியே நாசமூட்ட...,
நாறிடும் வாழ்க்கையெல்லாம்...,
நாடிய தொல்லைதானே.!
பெருந்திரை புகுந்ததனுள்...,
பெருமையோ டேற்கச்செய்யும்...,
வெறுத்திடு முறவுயாவும்..,
விருந்திடும் குறுந்திரைதான்.!
இதைவிடுத் தேதும்தொல்லை...,
இப்புவி தோன்றலுண்டோ...?
தொல்லைக ளகன்ற சின்னத்...,
தொலைபேசி போதுமென்போம்,,, 
.
கவிச்சுடர் -சாஜாஹான், கெக்கிராவ
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி நவம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் மாதம் -84 வது
போட்டிக் கவிதை இலக்கம்16
-தலைப்பு-தொலை(தொல்லை)பேசி
சாண் ஏற முழம் சறுக்குவது போல்
சரித்திரச் சாதனைகள் புதைந்துப் போய்
ஓர் இரும்புத் துண்டுக்கு இரையாகி
நோக்கம் மறந்து தத்தளிக்கும் இளமைகள்.
வடங்கள் காவி வந்தச் சொல்
வண்டுகள் இரையும் ஓசைப் போல்
ஓயாது வந்து செவியோரம்
அழைப்பில் காத்திருக்கும் இம்சைகள்.
அஞர் எனும் பெருந்துயரம்
விரலசைவில் உறங்காமல் துடிக்கிறது
நள்ளிரவில் விழிகளிரண்டும் தவம் செய்து
தலைவலித் தொல்லையை விதியாக்குகிறது.
முகப்புத்தகத்தில் போராட்டம் அதிகம்
உள்ளத்தில் பேழ்கணித்தல் சிறிதுமில்லை
வையகத்தில் எதைத்தான் நம்ப
தொலைபேசிக்குள் நாடகமேறுகிறது சிந்தனைகள்.
திகிலாய் வந்து சேர்ந்த பணப் பேய்
அட்டையைச் சுரண்டி காசு தின்று
அட்டை இரத்தம் குடிப்பது போல்
காணாமல் போகிறது உழைப்பு.
விட முடியா தொடர் குறுஞ்செய்தி
வண்ணாத்திப் பூச்சுகளின் சேர்க்கையிங்கே
மரணம் வரை கூட்டிச் சென்று
தள்ளிவிட்டச் செய்திகள் ஆயிரம் ஆயிரமே.
சிறிது சிறிதாய் சீற்றங்கள்
சிகரத்தை உடைத்து விடும் ஒருநாள்
அது போல் மெது மெதுவாய் உட்புகுந்து
வாழ்வின் வழிகளையே சீர்கெடுக்கும்.
தொலைபேசியில் தொந்தரவின் தொல்லைகள்
உணர்வுகள் அதற்குள் அடிமையாகி
ஊசி போல் நுனியில் குத்தும் சாவு
தொல்லை பேசிதான் பொருந்தும் நாமம்
.
அப்துல் அலீம் முகமது அஸ்கர்.இரத்தினபுரி,


உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி நவம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் மாதம் -84 வது
போட்டிக் கவிதை இலக்கம்-22

தலைப்பு-தொலை(தொல்லை)பேசி
-கண்படாத் தூரத்தில்
காத்திருக்கும் காதலர்
கொண்டதம் அன்பினை
கொட்டிவிடும் பந்தமாய்
படுக்கையில் வீழ்ந்தவர்
புத்தகம் இன்றியே
நொடிப் பொழுதாயினும் ; உலக
நடப்பினை அறிவதாய்....
மலையென மடமை
மறந்திடு யுக்தியாய்
தொலைபேசி வருகை
தனியிடம் கண்டு
நாளைய விடியலின்
நாடிநரம்பாய் ஆனது,
வாழ்வினில் ஒன்றாய்
வழியென ஆகி
தொழிநுட்ப வளர்ச்சியில்
தனியிடம் ஆனது!
தூங்கிடு நேரம்
தொடர்ந்தே கழிவதும்,
ஏங்கியே பிணிதனில்
எம்மவர் வீழ்வதும்,
தாங்கிடும் உறவுகள் ; மனம்
தவித்தே நோவதும்
வழக்கமாய் ஆக்கியே
வாழ்வெனக் கண்டனர்,
இலக்குகள் குன்றியே
இழிசெயல் கொண்டனர்.
காதிலே கொஞ்சிடும்
காதலர் வார்த்தையாய்
பசியினை மறந்தவர்
பேசியே மகிழ்ந்தனர்,
போதையின் அடிமையில்
பெரும்புயல் வேகமாய்
வேதனை கொண்டதோ
வீம்புகள் செய்தது.
காலத்தை முந்தியோர்
கடந்ததம் வாழ்வினில்
நிலைத்திடும் ஆறுதல்
நெஞ்சதில் கண்டனர்,
வாழ்வுகள் வென்றதாய்
வக்கனை செய்துநாம்
வளர்ச்சியின் விந்தையில்
வாழ்வாகி வீழ்ச்சியுற்றோம்,
வடுக்களை மனதிலே
வலியாகப் பெற்றோம்
.
நல்லதோ கெடுதியோ
நடுநிலை ஆகினும்
உள்ளதை சொல்லியும்
உண்மைக்கு மாற்றமாய்
நல்லுள்ளம் பொறுக்கா
நீசர் செய்கையும்,
பொல்லாப் பழிச்செயல்
பாதக வேலையும்
உள்ளதாய் கொண்டதே
தொ(ல்)லை பேசித் தொடர்புகள்..
.
செ.இஸ்ஸத்ஏ-றாவூர்-இலங்கை


உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி நவம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் மாதம் -84 வது
போட்டிக் கவிதை இலக்கம்-23
தலைப்பு-தொலை(தொல்லை)பேசி

தொலை தூரத்திலிருந்தும் அருகாமை உணர்த்தும் அறிவியல் தந்த பரிசு நம் வரமாய்..
தெரியாத புது உறவுகளை நெருக்கமாக்கிய இவ்வரமே, வீட்டுக்குள் மனிதரை அந்நியமாக்கியது சாபமாய்..
கையடக்கத் தொலைபேசி உலகைக் கைக்குள் அடக்கித் தந்தது வரமாய்..
மேலதிகமாய் பற்பல இன்னல்கள் இறக்குமதி செய்து வைக்குதே சாபமாய்..
ஒரே சொடுக்கில் இணையத் தொடர்பில் எதையும் அறியத் தருதே வரமாய்..
மறுநொடியில் தவறிய தொடுகையில் நற்பெயரையே சரிய விடுகிறதே சாபமாய்..
வங்கிச் சேவைகள், வரிகள், கட்டணங்கள், விற்றல் வாங்கல், இன்னுமின்னுமாய் பல நன்மை செய்குதே வரமாய்..
இணையத் திருடர் புகுந்திட, பெருந்தேட்டை போட்டிட, நெடுக ஓட்டை வைக்குதே சாபமாய்..
டெலிகாம், மோபிட்டெல், ஏர்டெல், சன்டெல், பெல்,ஹட்ச் எத்தனை முன்னேற்றம் வரமாய்..
இத்தனையிருந்தும் சிறு காற்றிற்கும் மழைக்கும் தொடர்பு துண்டாகும் சாபமாய்..
தவறிய அழைப்பில் தூண்டில் போடும் தீயோர் கொள்ளுவார் கொண்டாட்டம்..
தவறான இணைப்பால் தடுக்கி விழுந்தவர் வாழ்க்கை ஆகுமே திண்டாட்டம்..
அலைக் கோபுரம் பரப்பும் மின்காந்த அலைவீச்சின் கொதிப்பில் சிக்குண்டு மறையுது சிறு உயிரினம் ..
அதிகரிக்கும் அலைவீச்சின் பாதிப்பில் நிலை நின்று சிறுசிறிதாய் சிதையுது மனித இனம்..
கவனத்தை சுத்தமாய் உறிஞ்சிக் குடித்துத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் அக்காட்டேறி..
ஒரு பின்ன நொடி நேர சிறு கவனச் சிதறலில் வாகனங்கள் ஓடி மகிழ்ந்திருக்கும் நம் மேலேறி..
நேரத்தை மொத்த குத்தகையில் சூறையாடிக் கொள்ளும் கொள்ளைக்காரன்..
நன்மைகளோடு பல கேடுகளையும் களமிறக்கிக் கொக்கரிக்கும் தொல்லைக்காரன்..
வாகனங்கள் இயக்கும் வேளையில் சட்டைப் பைக்குள் அழைப்பு மணி வரின் அதன் பேர் மரணம் ..
செல்லிடப்பேசியைக் கையிலெடுத்து ஏன் பிறருக்கும் தருகிறாய் மாறாத ரணம்..?
இணையத் தொடர்பு கிட்டாமல் சுற்றிக் கொண்டேயிருக்கும் சுழல்காற்றின் மையப்புள்ளி..
காய்ச்சல் ஆட்கொண்ட மேனியாய் சூடாகி.. விழி மூடி வீழ்கிறது கையிருப்பை மொத்தமாய் அள்ளி..
அதனுடன் எப்போதும் கவிழ்ந்து கொள்வார் கண்ணகற்றவியலா பிணைப்பில்..
கண் வலியோடு பிடரி வலி, முதுகு வலி, இடுப்பு வலிகள் என்றென்றும் இலவச இணைப்பில்..

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.