புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் தொடர் கதை🌺பனிவிழும் மலர் வனம்🌺 அத்தியாயம் - 33சங்கரின் சிந்தனையை கலைத்தபடி பெரும் பிரேக் சத்தத்தோடு வீட்டு வாசல் முன்பாக ஒரு கார் வந்து நின்றது. மதுமதி வந்து இறங்கினாள். அவளோடு அனசனின் குடும்பமும் கூட வந்ததை கண்ட சங்கரின் தாயார் "" சங்கர் இஞ்சை என்ன நடக்குது? நீயல்லவா அவளை கூட்டிவரப்போவாய் என நினைச்சன்.. இவையளுக்கு இஞ்சை என்ன வேலை?" என்றபடி வெளியே எட்டிப்பார்க்க அதைக்கண்ட சங்கருக்கு தாயின் மேல் பொல்லாத கோபம் வந்தது. " அம்மா .. இப்ப பேசாமல் இருங்கோ .. நான்தான் கூட்டிவர சொன்னேன் ... ஆட்களை கூப்பிடுங்க உள்ளே..."என தாயை அதட்டியபடி அவர்களுடன் வரவேற்புக்கூடத்திற்குள் நுழைந்தான். அனசனின் பெற்றோர் பெருமையற்றவர்கள். பிரசித்தமான மின்விளக்குகள் செய்யும் நிறுவனமொன்றில் விற்பனைப்பிரிவின் துணை அதிகாரிகளாக கடமையாற்றுகிறார்கள். எல்லோருடனும் சகஜமாக பழகுவார்கள்.
வெளிநாட்டவர்களுடன் நல்ல தொடர்பும் , இனமதங்கள் பாகுபட்டற்ற நல்ல மனங்கொண்டவர்கள். இதனால்தானோ என்னவோ தம் மகனின் வேற்றுகலாச்சாரக்காதலுக்கு உடந்தையாக அவர்கள் இருக்கிறார்கள். தமிழ்மக்கள் டென்மார்க்கில் சமுதாயத்தோடு ஒன்றி கல்வியில் வியத்தகு முன்னேற்றத்தோடு எல்லாத்துறைகளிலும் முன்னேறி வருவது கண்டு அவர்களுக்கு தமிழர்பால் அதிக பிரியம் இருப்பதை அவர்களின் சம்பாஷணை ஊடாக சங்கரும் நன்கு அறிந்திருந்தான். சங்கர் டென்மாரக்கில் வளர்ந்தபடியால் எந்த வேறுபாட்டையும் ஐரோப்பிய கலாச்சாரத்திற்குள் அவனால் உணரமுடியவில்லை.
" அடச்சீ.. இந்த அம்மாக்கு ஏன்தானிந்த வக்கிரபுத்தி.. மதுவோடை அவர்கள் சந்தோசமாக இருப்பது பிடிக்காமல் முகத்தை உம்மென்று வைச்சிருக்கா? நாகரிகம் தெரியாத மனிசி.. எப்படித்தான் அப்பா இத்தனைவருசம் இவாவோடு காலம் தள்ளினாரோ... " என மனதிற்குள் நினைத்தபடி தன் தகப்பனாரை பார்த்தான். "அவர் உண்மையில் ஜென்டில்மன்தான்..எல்லாவற்றிலும் பரந்த அறிவு ..என்ன அழகாய் டெனிஷ் பேசுகிறார்.." ஆம் சங்கரை பொறுத்தவரை தந்தை அவனுக்கு ஒரு முன்மாதிரிதான். சகஜமாக எல்லோரிடமும் வஞ்சகமின்றி பழகும் குணமுடையவர். உதவி என்று யார் வந்து என்ன கேட்டாலும் இல்லை என சொல்லாத தாராளமனதுடையவரின் மகனாக பிறந்ததே தான் செய்த தவப்பயனோ என சங்கர் எண்ணினான்.
வீடு நிறைய சொந்தங்களோடு சிரிப்பும் கதையுமாய் என வீடே குதூகலமாக இருந்தது. அமைதியாக இருந்த மதுமதியை பார்த்தான்., ஏதோ சிந்தனைவசப்பட்டவளாய் அவள் சங்கர் கண்களில் தென்பட்டாள். கோப்பியும் , குளிர்பானங்கள் பரிமாற்றத்தின் பின் ஒவ்வொரு குடும்பங்களாக எல்லோரும் விடைபெற தனக்காக ஒழுங்குப்படுத்தப்பட்ட அறைக்குள் மதுமதி நுழைந்தாள். அவளுக்கு உடல் அசதியாக இருந்தது..கட்டிலில் மெல்ல அமர்ந்தவள் கண்களை இறுக மூடினாள்.
மாடியில் உள்ள தனது அறைக்குள் சென்ற சங்கர் மதிமதிக்காக வாங்கி அடுக்கிவைக்கப்பட்ட ரமணிச்சந்திரனின் நாவல்களில் சிலவற்றை கையில் எடுத்தான்.. ரமணிச்சந்திரனின் நாவல்கள் அவள் விரும்பிப்படிப்பதுண்டு. மாடிப்படிக்கட்டுகளில் விரைவாக இறங்கி மதுவிடம் செல்பவனை பார்த்த தந்தையின் கண்கள் அகல விரிந்தன. " சங்கரா இது? தமிழ்புத்தகங்களோடு ...என் பையனுக்கும் தமிழ் படிக்க ஆசை வந்திருச்சோ?? இல்லை காதல் பூத்திருச்சோ?? இவனின் மனதிற்குள்ளும் இவ்வளவு ஆசையை இவ்வளவு நாளும் பூட்டி வைத்திருக்கிறான்.. " உதட்டோரம் மென்முறுவலோடு தன் இரவு கோப்பியை சுவைத்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.
"ஏய் மது கண்ணை மூடு இப்ப..உனக்காக ஒண்ணு வைத்திருக்கேன்" என்றான். " அடே நான் கண்ணை மூடிட்டுத்தான் இருக்கேன்..என்னடா சொல்லு"என கேட்டாள். " ஏய் என்ன சொன்னாய்? " டா" என்கிறாய்.. இந்த வாய்க்கொழுப்பு அடங்கலை இன்னும்.. என்றபடி " கண்ணைத்திறந்து பாரு" என்றதும், கண்களை திறந்த மதுமதியின் கண்களில் மகிழ்ச்சி பிரவாகத்தில் சிறு கண்ணீர்த்துளிகள். " தாங்ஸ்டா சங்கர் "
என்றவள் புத்தகங்களை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். " அட டா உனக்கும் அன்பு இருக்கே என்மேலே.. அதுதான் இன்று பனிப்பொழிவிற்கு பதிலாக மழை கொட்டுதடா.. ஹ ஹ " என கல கல என சிரித்தாள்.. அந்த சிரிப்பைப்பார்த்து பல மாதமாகிப்போனது. மீண்டும் அவளை இப்படிப்பார்க்கையில் அவனுக்குள்ளும் எல்லையற்ற சந்தோசம் இறக்கைக்கட்டி பறக்கத்தொடங்கியது.
இவற்றை எல்லாம் பார்த்தபடி உள்ளே வந்த சங்கரின் தாயார் மதுமதி அருகில் அமர்ந்து" மது இந்தக்குளிசைகளை போட மறக்காதேமா.. " என்றபடி ஒரு கப் யூசுடன் மாத்திரைகளை நீட்டினார். " ஏன் மாமி உங்களுக்கு சிரமம்.. நான் எடுத்து போடுவன்தானே" என " என்ன பொண்ணு நீ..நீ என் மருமகள் இல்லை மகள் அம்மா நீ.." என்றபடி தலையை மெல்ல வருடி விட்டார். " சரிம்மா " என்றபடி மாத்திரையை போட்டபடி பழரசத்தை பருகிய மது இவர்களின் அன்பில் மனம் நெகிழ்ந்தாள்.
மதுமதிக்கு blod prop(இரத்த உறைவு) இதயத்திலும் காலிலும் ஏற்பட்டிருந்தது. இரத்தஅழுத்தமோ உயர்வாகவே தொடர்ந்து இருப்பது எல்லோருக்கும் கவலையளித்திருந்தாலும் அதை குறைப்பதற்காக மாத்திரையும் ஓய்வும், தேகப்பயிற்சியும் தேவைப்பட்டது. அதிர்ச்சி தரும் தகவல் ஏதும் அவளுக்கு முன் பேசக்கூடாது என சங்கரும் குடும்பத்தவருக்கு கட்டளை போட்டிருந்தான்்
அங்கிருந்து அகன்ற சங்கரின் தாயார் மும்முரமாக இரவு உணவு தயாரிப்பில் ஈடுபட்டார். அங்கு வந்த சங்கர் " மம்ஸ் ஏதாவது உதவி செய்யிறதா?" என கேட்க .. புருவங்களை சற்று உயர்த்தி தன் மகனா இவன் என மனதிற்குள் நினைத்தபடி"" என்ன எல்லாம் புதுசாக்கிடக்கு.." என்றதும் " அது எல்லாம் வருங்கால மனைவிக்காகத்தான்... ஒரு ரெயினிங்...இப்ப சமைத்து கொடுக்கிறவர்களைதானே..பெண்கள் .விரும்புறாங்க.... " என தாயை உற்றுகவனித்தான். " என்ன சங்கர் உனக்கும் கல்யாண ஆசை வந்துட்டுதுபோல... சரி ஒரு பொண்ணை பார்த்தால் போச்சு.., டாக்டருக்கு யாருதான் பின்நிற்பாங்க பொண்ணு கொடுக்க..." என தன் மகனின் முகத்தை அவதானித்தார்... " அம்மோய் உங்களுக்கு இந்த சிரமம் வேணாம் .. நானே லவ் பண்ணிட்டு ஆளைக்காட்டுறன் ஓம் என்றால் போதும்..." என பதிலளித்துவிட்டு தாயாருக்கு தேங்காய் துருவி கொடுக்கத்தயாரானான். இடியப்பம் அவித்த கையோடு சொதி வைக்க தாயார் தயாராகும்போது சொல்லிவைத்தாற்போல பக்கத்துவீட்டு மாமி உள் நுழைந்தார்..
"வீட்டோடை வாழும் பொம்பிளை . இந்த ஊர் புதினங்கள் காவுறதில் அஸ்திப்படி.. நாட்டிலை இருந்து வந்தமாதிரியே இத்தனை வருசம் ஐரோப்பாவிலையும் இருக்கு.. வட்டிக்கு காசு கொடுக்கிறதுதான் வேலை.. பிள்ளைகள் ஏதோ படிச்சுப்போட்டு கிளீனிங் வேலைதான் செய்யுதுகள்... சரியான நாட்டுக்கட்டை" என தாயார் அடிக்கடி சொல்வதை மனதிற்குள் நினைத்தபடி அவ்விடத்தைவிட்டு மெல்ல நழுவினான். " என்ன ராசா அம்மாக்கு உதவியோ... எங்கை என்னை கண்டவுடனை ஓடுறாய்.. சுகமாய் இருக்கிறியளோ" என வினாவ "ஆம்" என்றபடி சிறு புன்முறுவலை வீசியபடி தன் அறையை நோக்கி நடந்தான்.


(தொடரும் )
❤️ரதி மோகன்


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.