புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் தொடர் கதை ❤️பனிவிழும் மலர்வனம்அத்தியாயம்-34


சங்கர் மனதில் ஏதோ இழந்ததுபோன்ற உணர்வு இருப்பதை உணர்ந்தான் . குறுக்கும் நெடுக்குமாக தன் அறைக்குள் நடந்தான். மேசையில் இருந்த மதுவின் டயறியில் கண்கள் குத்துண்டு நின்றது. "வேண்டாம் ... இதை அவளிடம் கொடுக்க வேணாம்..மீண்டும் அந்த நினைவுக்குள் அவள் போக வேணாம்.. கொஞ்சகாலம் நகர்ந்து போகட்டும்.. கொடுக்கலாம் இதை" என தனக்குள் பேசியபடி எல்லாக்கவிதைகளையும் ஒன்றும்விடாமல் படித்தான். ஆனால் எல்லாக்கவிதைகளின் கீழும் " மதுமதி அனசன்" என எழுதப்பட்டிருந்ததை அவனால் பொறுக்கமுடியவில்லை. கையிலே இருந்த பேனாவால் அதன்மேல் ஒரு கோடு போட்டுவிட்டு அதன் அருகில் "மதுமதி சங்கர்" என எழுதினான். ஆயிரம் மின்விளக்குகள் ஒளிரும் வெளிச்சம் அவனுள் பரவியது. மீண்டும் அவன் கைகள் அதை அழித்தன. " சீ எவ்வளவு முட்டாள்த்தனம்..ஏனிந்த பொறாமை? ஏன் எனக்குள் இப்படியொரு வில்லத்தனம்??? வேண்டாம் நினேவே போய்விடு... இன்னொருவரின் டயறியை பார்ப்பதே தப்பு. இதில் எனக்குள் ஏன் இந்த தகாத ஆசை... ஏய் மனமே.. மறந்துவிடு...அவள் வஞ்சகமில்லாதவள்..தப்பு தப்பு..என்று தன் மனதை தேற்றிக்கொண்டான்.
கண்ணாடியன்னல்வழியே கண்களை சற்று நகர்த்தி இருள் படியும் பொழுதையும்,மின்விளக்குகளின் ஒளியையும் ரசித்தான்.
குளிரில் உடல் நடுங்கியதை உணர்ந்தவன் நல்ல சிவேற்றர் ஒன்றை அணிந்தபடி கதிரையில் அமர்ந்து தன் வேலை சம்பந்தமான சில பைல்களை பார்த்தான் .
நேரம் இரவு 7.00 மணியை காட்டியது. சங்கரின் தாய் இரவு சாப்பாட்டிற்கு அழைக்கும் குரல் கேட்டது. மெல்ல மாடிப்படிகளில் இறங்கிவந்தவன் மதுமதியின் அறையை எட்டிப்பார்த்தான். அங்கு அவளைக்காணவில்லை. விரைவாக வந்து சாப்பாட்டு மேசையை நோக்கி எட்டிப்பார்த்தான். மதுமதி அங்கு சங்கரின் பெற்றோரிடம் பேசியபடி இருந்தாள். " வந்திட்டியா சங்கர்.. உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்... வா சாப்பிடுவோம்..." என்ற தாயிடம் " இதோ மா கை அலம்பிட்டு வாறேன்..." என்றான் .
சாப்பாட்டிற்கு இடைநடுவில் மதுமதி புரையேறி கஸ்ரப்பட அவனையறியாமலே திடீரென எழுந்து தலையில் தட்டி தண்ணீரை பருக கொடுத்தான். சங்கரின் தாயாரும் தந்தையும் இச்செயலைப்பார்த்து அசந்துபோய் ஒருகணம் நின்றனர்.. தமது மகனின் ஒவ்வொரு செய்கையும் புதுமையாக இருந்தபோதும் அவனை அவர்களால் இன்னும் எடைபோட முடியவில்லை.. அவன் டாக்டராக கடமையை செய்கிறானா? தன் முறைப்பெண்ணிடம் காதல் கொண்டானா? இது கேள்விக்குறியாக பெற்றவர்கள் மனதை குடைந்து கொண்டிருக்க சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அழகான பாடல் வானொலியில் ஒலித்தது" ""காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்.., அந்தத்திருமகளும் உன் அழகை பெற வேண்டும்...."
சங்கர் அந்த பாடலில் மனம் லயித்துபோய் ஓரக்கண்ணால் மதுசாப்பிடும் அழகை ரசித்தான். காந்தள் மலர் கரங்களில் சிக்குண்ட இடியப்பம் மெல்ல அவள் வாயினுள் புகுவதுபோல் ,அவள் செவ்வதரங்களில் சிக்குண்ட அவன் பார்வை கண்இமைக்காது வைத்த விழி நகராது இருக்க, தன் உணவை மறந்தான். சட்டென்று சுற்றுமுற்றும் பார்வையை சுழல விட்டவன் வெட்கத்தில் தலைகுனிந்தான். அவனுக்குள் ஏதோ ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்து பறப்பதை உணர்ந்தான். இதுதான் காதலா? இது வேண்டாம் தப்பு என மனதை தேற்றினான், இல்லை அவள் என் முறைப்பெண் எனக்கானவள் என மனம் தெளிந்தான்... மனம் நிலையற்றுத்தவிக்க ஒருதலைக்காதலில் "" இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்.."" மனதிற்குள் முணுமுணுத்தான். அவனின் உணவு உண்ணப்படாமல் அவன் தட்டிலே அப்படியே இருப்பதை கவனித்த சங்கரின் தாயார்" சங்கர் என்ன பலத்த யோசனை? உனக்கு பசிக்கலையா? " என்றவுடன்" இல்லை அம்மா எனக்கு தலைவலிக்குது.. நான் போய் படுக்கப்போறன்" என்றபடி சாப்பாட்டு மேசையை விட்டு நகர்ந்து மாடிப்படிகளில் தன் அறையை நோக்கி நடந்தான்.
சங்கர் ஐரோப்பிய கலாச்சாரத்தோடு ஒன்றி வாழும் இளங்காளை. தனது ஓய்வு நேரங்களில் டிஸ்கோ ரெக் எனவும் , ரெஸ்ரோரன்ற் என நண்பர்களுடன் திரிவான். அவனின் நண்பர்கள் காதலிகளுடன் சினிமா,பீச் என அலைந்து திரிந்தபோது அவன் புத்தகமும் கையுமாக திரிந்தவன். பல பெண் சினேகிதிகள் நட்பு இருந்தபோதும் ஒருவரிடமும் காதல் என்ற ஒரு உணர்வை அவன் உணர்ந்ததில்லை. காதல் வேறு நட்பு வேறு இரண்டிற்கும் முடிச்சு போட்டு பார்க்க அவன் நினைத்ததில்லை.தனக்கு வரப்போகிறவள் எப்படிஎல்லாம் இருக்க வேண்டும் என கனவு கண்டதில்லை. எந்த நிபந்தனையும் போடப்போவதில்லை.. ஓருயிராக ஈருடலாக காலமெல்லாம் அவளை இதயத்தில் சுமக்க வேண்டும் என்ற ஒரு ஆசையே அவனிடம் நிரம்பியிருந்தது. நண்பர்களுடன் பார்ட்டிகளில் மதுபானம் அருந்தி குதூகலிப்பான். ஆனால் நித்தக்குடிகாரனல்ல. அவனோடு பழகியவர்கள் ஒருபோதும் பிரிந்து போக துணிய மாட்டார்கள். அன்பும் கருணையும் பேச்சிலே இருக்கும். நோயாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அவனுக்கு இருந்தது. அவன் பேச்சில் பாதி நோய் விட்டுப்போகும் என பேசிக்கொண்டார்கள். கட்டிலில் தலைசாய்த்த அவன் உடனேயே துயில் கொண்டான். 

                                                   
அதிகாலை வெண்பனி தூறலுடன் மலர்ந்தது.. எங்கும் வெண்பூக்கள் 
பரவியிருப்பது போல் வெண்பனி நிலம் தெரியாது மூடி இருந்தது. வெப்பநிலை மைனஸ் 15 ஐ காட்டியது. காலையுணவின் பின் வேலைக்கு போக தயாராகும்போது தாயிடம் கேட்டான்"" அம்மா மது எழும்பிட்டாளா?அவள் குளிகைகள் எடுப்பதில் கவனக்குறைவு.. கொஞ்சம் கவனியுங்க" என்றபடி போகத்தயாராகும் வேளை தாயார் சொன்னார்"" சொல்ல மறந்திட்டேன் இரவு முழுக்க ஒரே தலையிடி என மது விழித்தே இருந்தாள்.. " என்றதும் அடுத்தகணம் விரைவாக அவளின் கதவருகே சென்று கதவைத்தட்டினான்"" ஏய். மது உள்ளே வரலாமா?? " அங்கு நிசப்தம். 
(தொடரும்)

ரதி மோகன் 🌺No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.