புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் தொடர் கதை 🌺 பனிவிழும் மலர் வனம்...🌺🌺🌸அத்தியாயம்- 35🌸

சங்கரின் கூப்பிட்ட குரலுக்கு பதில் மதுமதியிடமிருந்து வராததால் அவனுக்குள் சந்தேகம் எழ தாயை உரத்து அழைத்தான். ஆனால் மதுமதி வேறு ஒரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள்.. அவள் நேசிக்கும் கவிதைஉலகம் அது. அங்கு அவள் தன்காதலனோடு நீலாம்பரி இசைத்துக்கொண்டிருந்தாள்.. பாலை வனமும் அங்கு பூப்பூத்தது...நிலாவுக்கும் காதல் மலர்ந்தது...காதலுக்கு தடை போட யாரும் அங்கில்லை.. சோகம் இல்லை.. வேதனை இல்லை..மொட்டுக்களாய் விரியும் கவிதைகளை முகர்ந்தபடி இருந்தவளின் காதில் சங்கரின் குரல் விழுந்த போதும் அதை அவள் பொருட்படுத்தவில்லை. எழுதி முடித்த கவிதையை திரும்பவும் படித்தாள்..,
காதலெனும் தீபம்
ஏற்றியவனும் நீதான்
காட்டினிலே எனை
விட்டவனும் நீதான்
கண் மூடி நீ கிடக்க
தீயினிலே நான் நடக்க
நோயினிலே நீ துடிக்க
காயமே பொய்யென்று
காசினியை விட்டு
காரிகை இவள்
மறைந்திடவா
சொல் என் காதலா....
அனசனிடம் கேட்பதான வரிகள்.. கண்களில் திரண்ட கண்ணீர்முத்துக்களை தட்டியபடிஅவள் தலைநிமிரவும்,
மாடிப்படிகளில் ஏறின களைப்பில் மூச்சுத்திணற வந்த தாயார்"" இப்ப ஏன் இந்தக்காலையிலை இங்கு நின்று கத்துறாய் சங்கர்""என்றபடி அறையுள் நுழைந்தார். " ஏனம்மா ஒரு சொல்லு ஆம் என சொல்லக்கூடாது? என மாமியார் வார்த்தைகளை இழுத்தபடி மதுமதியின் அருகில் அமர. "இந்த சங்கர் லூசு ..சும்மா கத்தட்டும் என்றுதான் பேசாமல் இருந்தன் மா" என்றாள் மதுமதி. அதைக்கேட்ட சங்கருக்கு கோபம் வர உடனே வந்து அவள் தலையில் குட்ட அவள் கதற இருவருக்கும் இடையில் சங்கரின் தாயாரின் பாடு அப்பப்பா என்றாகிவிட்டது. இருவரும் பாம்பும் கீரியும் போல் அல்லவா இருக்கிறார்கள்.. " சீ சண்டை சச்சரவு உள்ள இடத்தில தானே அன்பு கூட இருக்கும்" என மனதில் சிந்தித்தவாறு திரும்ப கீழே இறங்கிச்செல்ல தாயை பின்தொடர்ந்து வந்த சங்கரும் வேலைக்கு செல்ல காரில் ஏறினான். வழி நெடுகளும் சங்கர் மதுவை பற்றிசிந்தித்தபடியே கார் ஓட்டினான் . " சீ இவள் ஏன் இப்படி இருக்காள்,? என் அன்பை கரிசனையை ஒரு பொருட்டாக நினைக்கிறாள் இல்லையே... பாவம் நான் தலையில் குட்டி இருக்கக்கூடாது..என்ன மடத்தனம் செய்து விட்டேன்"" தன்னையே நொந்து கொண்டான்..
பார்க்கும் இடமெல்லாம் எங்கும் பலவர்ண மின்விளக்குகளும் கிறிஸ்மஸ் சோடனைகளும் பார்ப்பவர் மனதில் சந்தோசத்தை அள்ளித்தரும் இந்த மார்கழிமாதம் நத்தார்க்காலத்திற்குரியது. நத்தார் பண்டிகைக்கால பேச்சும்,கலகலப்பும்,பரிசுப்பொருட்கள் கொள்வனவும் என கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டமும் , வேலைத்தளங்களில் ஒழுங்குசெய்யப்படும் தொழிலாளர் ஒன்று கூடலும், விருந்தோம்பலும் எங்கும் குதூகலம்.. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி..இந்திரலோகமே தரையிறங்கி வந்ததான பிரமிப்பு.
டென்மார்க்கில் 24 ம்திகதி இரவு நத்தார் இரவு(Jule Aften) என அனுஷ்டிக்கப்படுகிறது. குடும்பங்கள் ஒன்றுகூடி தடல்புடலான விருந்தோடு குதூகலிப்பார்கள். வீட்டினுள் வைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தின் கீழ் பல பரிசுப்பொருட்கள் வைக்கப்பட்டு அந்த மரத்தைச்சுற்றி கிறிஸ்மஸ்பாட்டுக்கள் படித்துக்கொண்டு உறவினர், நண்பர்களின் கைகளை கோர்த்தபடி வலம் வந்து பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொள்வார்கள். சங்கரின் நெருங்கிய நண்பன் அல்பேர்ட் சங்கரை கிறிஸ்மஸ் இரவுக்கு அழைத்திருந்தான்.அவனுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு குடும்பம் இல்லை .போலாந்து தேசத்து காதலி ஒருத்தியிருந்தாள். அவளும் அவனுடனான உறவை துண்டித்து பல மாதங்களாகிறது. அவனின் பெற்றோர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு நத்தாரும் நண்பர்களுடன் கொண்டாடுவான். நிறைய குடிப்பான். வைனும் விஸ்கி போத்தல்களுமே அவன் வீட்டு அலங்காரப்பொருட்கள். சங்கரின் பால்யநண்பன் அவன். இஞ்சினியராக இருக்கிறான். இவற்றை நினைவில் மீட்டியபடி காரைச்செலுத்திய சங்கரின் நினைவில் பட்டென அனசனின் தாயார் மதுமதியை கிறிஸ்மஸ் நாளன்று வீட்டிற்கு கொண்டுவந்து விடும்படி கேட்டிருந்தார். இந்த விடயத்தில் ஏனோ சங்கருக்கு விருப்பமிருக்கவில்லை. இதுவரை இதைப்பற்றி மதுமதியுடன் பேசவில்லை. " இன்று அவளுக்கு சொல்லணும். அல்பேர்ட்டிடம் போகும்போது அவளை அனசன் வீட்டிலை இறக்கிட்டு போவம்.." என மனதிற்குள் பேசிக்கொண்டான்.
ஆஸ்பத்திரி வாசலில் நிமிர்ந்து நின்ற உயரமான கிறிஸ்மஸ்மரம் அலங்காரத்தோடு அவனை வா வா என அழைப்பதுபோல் பிரகாசித்தது. அதைக்கடந்து உள்ளே சென்ற சங்கர் தன் கடமையில் மூழ்கினான்.
வீட்டிற்குள் முடங்கியிருக்க மதுமதிக்கு பிடிக்கவில்லை. அவளின் சுகயீனலீவையும் அவள் நீடிக்க விரும்பவில்லை. வரும் கிழமையுடன் வேலைக்கு திரும்ப போக வேண்டும் என திட்டம் போட்டிருந்தாள். மாமியாரிடம் வந்த அவள்" மாமி கடைக்கு போய் வருவோமா? சும்மா இருக்க போறிங்காக இருக்கம்மா..." என்றதும் " நானும் அதைத்தான் நினைச்சன் சங்கர் இன்று ஒரு மணியோடை வந்துடுவான் .. சேர்ந்து போவோமே.." என்றதும் " சங்கரோடையா.. குட்டினது வலிக்குது இப்பவும்..ஆனாலும் நீங்க தப்பா நினைக்காதீங்க.. அவனோடு சும்மா சண்டை போட பிடிக்கும்..மற்றும்படி அவன் மேல் கோபம் ஏதுமில்லை மா.."" இதைக்கேட்ட மாமியாருக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. ஆண்டவனுக்கு மனதிற்குள் நன்றி கூறியபடி தன் அலுவலை கவனிக்கப்போய்விட்டார்.
தன் மேசையில் பரவியிருந்த புத்தகங்களை ஒழுங்குபடுத்தினாள் மதுமதி. எல்லாம் சங்கருடைய புத்தகங்கள்தான். எல்லாம் மருத்துவ புத்தகங்கள்தான். " இவ்வளவு புத்தகத்தையும் எப்படித்தான் படிச்சானோ.. அதுதான் இந்தளவு விவேகம் ஆளுக்கு.. வா மச்சி உன்னை திருப்பிக்குட்டா விட்டால். எனக்குத்தூக்கமே வராது.." என தனக்குள் பேசியபடி குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
அன்னைதேசத்தில் மதியத்தை நேரம் தாண்டிச்சென்றுகொண்டிருந்தது. முத்துமாரியம்மன் கோயிலில் அன்னதானம் நிகழ்ந்து கொண்டிருந்தது. மதுமதியின் தாயார் மதிமதிக்காக வைத்த நேர்த்தியை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஒலித்தகோயில் மணியின் நாதத்தோடு அந்த தாயின் ஆத்ம ஒலியும் கலந்து இருந்தது. மார்கழி மாத திருவெம்பாவையும் அதைத்தொடர்ந்து பிள்ளையார் கதை என கோயிலே தஞ்சம் என திரிந்துக்கொண்டிருப்பவர் தாயார்.
மார்கழி மழையும் குளிரும் அந்த வயது முதிர்ந்த தாயாரின் உடம்புக்கு ஒத்துபோகவில்லை. அடிக்கடி நோய்வாய்ப்பட்டபோதிலும் செவ்வனே தன் அன்றாட அலுவல்களை செய்ய தவறவில்லை. அந்தளவு மனவலிமை கொண்டவர்.பலதடவை மதுவின் மாமி அவரை டென்மார்க வந்து பார்த்து போகும்படி அழைத்தபோதும் இந்த உடல் இந்த மண்ணிலைதான் வேகும் என கூறி மறுத்தவர். பிறந்தமண்ணின் மேல்அடங்காப்பற்றுள்ள பெண். சிங்கள காடையரிடம் பறிகொடுத்த அப்பாவியான தன்மகனின் ஆத்மாவும்,அதனால் மனமுடைந்து உயிர்விட்ட கணவனின் ஆத்மாவும் வாழும் தாயகமண்ணிலே தன்னுயிரும் போய் அவர்களோடு ஒன்றாகவேண்டும் என்ற ஆசை அவருக்கு எப்போதும் உண்டு. அதைவிட தன் தாய்த்தேசத்தின் அழகை எந்த தேசமும் விஞ்சிவிடப்போவதில்லை என்ற இறுமாப்பும் அவரிடம் உண்டு.
அந்தளவு தனித்தன்மை கொண்ட தாயகத்தின் அழகே தனிதான். பச்சைப்புல் வெளிகளும், பனைமரங்களும், தெம்மாங்கு பாடி வரும் தென்றலும், இன்னிசை பாடும் பறவைகளும் அதற்கேற்ப தோகைவிரித்தாடும் மயில்களும், கொப்பு விட்டு கொப்புத்தாவும் வானரங்களும், மேலெழுந்து தமிழ் பாட்டிசைக்கும் கடல் அலைகளும் கண்டு பாட்டு எழுதிப்போகாத கவிஞனே இல்லை.. அப்படிபட்ட கொள்ளைஅழகுடைய சொர்ணபூமியை விட்டுவர எவருக்கும் மனது வராது என்றாலும் காலத்தின் கோலத்தால் கட்டாயத்தின் பேரில் புலம்பெயர்ந்தோர் பலர். அவர்களில் மதுமதியும் ஒருத்தி. காலநீரோட்டத்தில் டென்மார்க்கலாச்சாரத்தோடு ஒன்றிப்போனாலும் அவள் சுவாசிப்பது என்னவோ தாயகநினைவுகளையே...
குளியலைமுடித்துவிட்டு வந்த மதுமதி தாயாரிடம் வந்த தொலைபேசி அழைப்புக்கு பதில் அளித்தாள். "அம்மா இந்த மழைக்குள் எப்படிம்மா இன்று அன்னதானம் செய்தீங்க..கவனம் அம்மா வெள்ளத்திற்கை... என்க்கொரு ஆசையம்மா.." சொல்லு மது என்னடா. " தாயின் குரலில் ஆவல். " அம்மா வாற மாசம் என்னுடைய பேர்த்டே வருகிறது.. எனக்கு இங்கு கேக் வெட்டி ஆடம்பரமாக செய்ய விரும்பலை...அங்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் வாழுமிடம் ஒன்றிலோ அல்லது வயோதிப மடம் ஒன்றிற்கோ ஒரு நேர உணவு கொடுக்க ஆயத்தம் செய்வாயோ அம்மா...உடுபுடவைகளும் வாங்கி கொடு அம்மா... " . இதைக்கேட்டதும் தாயாரின் மனம் சந்தோசத்தில் துள்ள"" அதைப்பற்றி யோசிக்காதை பிள்ளை உடனே ஏற்பாடு செய்யுறன்...என்றார். " சரிம்மா" என தொலைபேசியை வைத்துவிட்டு தலையை துவட்ட தொடங்கிய மதுமதியின் உள்ளத்தை மெல்ல அனசன் பற்றிய நினைவு வந்தது. மற்றவர்களை பொறுத்தவரை மனநோயால் பழயதை அவள் மறந்து விட்டாள் என நினைப்பு. ஆனால் அவள் பூரண நலம் பெற்றுவிட்டாள் என்பது அவளுக்கும் டாக்டருக்கும் ஏன் சங்கருக்கும் கூட தெரிந்த விடயம் . எவரிடமும் அனசனைப்பற்றி கேட்டறியும் துணிவு அவளிடம் இருக்கவில்லை. அனசனின் தாயாரின் தொலைபேசி இலக்கமும் மறந்து போயிருந்தாள். ஆனால் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருவரின் பிறந்தநாளும் ஒரே நாளே. ஆம் தைமாதம் முதலாம் திகதி. இந்த உலகமே கொண்டாடும் திருநாள். அந்த நாளில் அவனுக்காக பலருக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதே அவள் ஆசை..அதை தாயார் தாயகத்தில் செய்வார் என்ற நம்பிக்கையில் அவள் ரோஜாமுகம் மெல்ல திருப்தியோடு செக்கென சிவந்து அவன் நினைவோடு மலர்ந்து சிரித்தது...🌹

❤️ரதி மோகன்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.