புதியவை

ஜெர்மனி மீரா ,எழுதும் தொடர் கதைவர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 8
நிலம் நோக்கி சரிந்தது விழிகள். விழி வளைவில் வீழ்ந்தது அவன் சாயல், விழி ஆழத்தில் கலந்த உயிரின் துடிப்போ , நெஞ்சந்தான் துடித்தனவோ..! நெஞ்சந்தான் துடித்தனவோ..! நாணவிழி பார்வையினால் அளவெடுக்க தயங்கினாள், தன் மன வலி அறிந்து தேடி வந்தானோ ஆருயிர் கணவன் .
மயூரியின் பார்வை அடக்கமுடியா ஆவலுடன் தன் கணவனை நோக்க உயர்ந்து நிலைகுத்தியது. நீண்ட நெடிய உருவில் முன்னே நிற்கும் ஆணழகன் என் கணவன் இல்லையே . ஆவல் அவலாகியது . மலர்ந்த மனமும் மங்கி சோர்ந்தது . ஒரு நிமிட கற்பனை நிராசையானது. ரமேஷ்யின் உடல்வாகு இவனிடம் காணப்பட்டாலும் அவன் போன்று சிவந்த நிறத்தை கொண்டவனில்லை . ஆனால் அவள் மூளையில் எங்கோ ஒரு மூலையில் இவன் கவர்ச்சிகரமான முகத்தோற்றத்தை கொண்டவன் என்பது அவள் அறியாது பதிந்தது .
அன்புடன் உயர்த்திய கண்கள் சினம் கொள்ள அந்நிய ஆடவனிடம் பார்த்து வரத் தெரியாதா, என்னை உங்களுக்கு பெண்ணாக தெரியவில்லையா, வலி தருவது தான் வழக்கமா என்ற கடிந்த வார்த்தையுடன் தன் கைப்பையை இறுக்க பற்றியவாறே ஓட்டமும் நடையுமாக அகன்று சென்றாள் மயூரி .
சிந்தனையில் சிக்குண்ட நிலையில் சிந்திக்காது சினத்தை சிந்தி விட்டு செல்லும் சித்திர பாவை இவளின் சீற்றத்தின் காரணம் நான் அன்றே . தவறுதலாக மோதுண்டாள் . தக்க காரணம் இல்லாது தகராறு செய்கிறாள். இவள் தவிப்புக்கு தகுந்தவன் யாரோ என்று தன் மனதினுள் நினைந்தவன் கவனத்தை ஒரு சிறு கடுதாசி துண்டொன்று கவர்ந்தது ,
கவனமாக எடுத்தவன் கருத்தை கவர்ந்தது அங்கே எழுதப்படிருந்த கவிதை.
„எண்ணப்படாத நிமிடங்களில்
என்னவனின் எண்ணம்
நினைவுகள் சலிப்பில்லாமல்
கனவுகளில் உயிர்ப்புடன்
உன் ஒரு விழிப்பார்வையில்
உருகும் உள்ளம்
முற்றுப் பெறாமல்
மின்னலாக தாக்கி
பனியாய் உறைகிறதே
உன்னிடமும் ஒரு நாள்
காதல் பிறக்கும்
மொழி மறந்து என்னுள்
அன்று நீ உயிர்ப்பாய்
காத்திருக்கிறேன் கவிதையாய்
வானவில் நானே !“
காதலில் கட்டுண்டு , ஏக்கங்கள் அங்கு கொட்டுண்டு, ஆசைகள் ஆர்ப்பரிக்க அன்பை ஆர்வமாக்கி எதிர்பார்ப்புக்களால் எழுதப்பட்ட கவிதை . இவ்வரிகளுக்கு சொந்தமானவள் இவளாக இருக்குமோ . யார் இவள் மனதை கொள்ளையிட்டிருப்பான். அழகி இவள் , ஆனால் அழகன் ஒருவனுக்காக ஏங்குகிறாள் . எனக்காக இப்படி ஒருத்தி ஏங்கினால் எத்தனை நன்றாக இருக்கும் . சிந்தனைக்கு தடை போட்டு விட்டு அக்கவிதையை மடித்து தன் காற்சட்டை பையுக்குள் செருகியவாறே அலுவலகம் நோக்கி நடந்தான் .
வீட்டை சென்றடைந்த மயூரிக்கோ பதைபதைப்பு நீங்காமல் தவிப்பாக இருந்தது. ரமேஷின் கோபத்துக்கு மீண்டும் மீண்டும் ஆளாகிறேனே. யோசிக்காது அவசரப்பட்டு அவன் நிலைமை புரியாது அவனையே சங்கடத்திற்கு உள்ளாக்கிறேனா . அவனிடம் நான் கொண்ட அன்பினால் அவனை திக்குமுக்காட வைக்கிறேன் போலும் . அமைதியாக அவன் கருத்தை கவராமல் வலுக்காட்டயாக பெற நினைக்கிறேன் . அவன் எண்ணத்தில் நான் வியாபிக்க வேண்டும் என்ற ஏக்கமே என்னை அவசரபட வைக்கிறது போலும்.
என்னை மணந்தவன் என்னை புரிந்து கொள்ள அவகாசம் தேவை . தீர்மானம் செய்தாள் பெண்ணவள் . எண்ண ஓட்டங்களைச் சீராக்கி சிந்திக்கும் திறன் அவ் இளம்பெண்ணின் இள நீல நிறமாய் பூத்தது.ஜன்னலினூடாக வெளியே அலை பாய்ந்தது அவள் பார்வை . நீலவான ஓடையில் நீந்தியது வெண்ணிலா ,
வழமைபோன்று வேலை முடிந்து வீடு திரும்பினான் ரமேஷ் . வழமையாக அவன் கதவை திறக்கும் சத்தம் கேட்டாலே உற்சாகத்துடன் ஓடி அவனிடம் சென்று தயக்கத்துடன் உணவு பெட்டியை வாங்கிக் கொள்வாள். காலியாகிய உணவு சொல்லும் செய்தி அறிய. ஆனால் இன்று அவன் அதை வாங்க அவசியமில்லையே . தயங்கினாள். கணவன் முகத்தை பார்க்க உந்துதல் இருந்தாலும் அடக்கிக் கொண்டாள் . சமையலறையில் தஞ்சம் கொண்டாள் .
ஆனாலும் ரமேஷின் உற்சாகமான சினிமா பாடல் ஒன்றின் சீட்டி ஒலி அவளை இருப்புக்கொள்ள விடாது எட்டிப்பார்க்க வைத்தது . ரமேஷ் மிக சந்தோஷமான மனநிலையில் இருப்பது புரிந்தது . இவன் சந்தோஷத்திற்கு நான் காரணமாக இருப்போனோ . என் அன்பை புரிந்து கொண்டானோ . அவள் மனம் பூவாய் மலர்ந்தது .

தொடரும்
மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.