அடர் பச்சை நிறத்தில் என் முன் வைக்கப்பட்ட வாழை இலையில் வெவ்வேறு விதமான உணவுகள் முறைப்படி ஒன்றன் பின் ஒன்றாக வைக்கப்படும் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பாயசம், கிச்சடிகள், கோஸ், உருளைக்கிழங்கு, கூட்டு, ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், வடை, சாதம், பருப்பு, குழம்பு என அவை வைக்கப்பட்ட போது பச்சைத் தாளில் இயற்கை அன்னை உண(ர்)வால் கவிதை எழுதுவது போல் இருந்தது.
இலையில் இருந்த பதார்த்தங்கள் எல்லாம் ஒரு மோகினி போல் உருவெடுத்து உருவில்லா விரலை மடக்கி என்னிடம் வா என்று அழைத்தன.
பதார்த்தம் வா என்றாலும் யதார்த்தம் செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியது.
ஆம். நான் டயட்டில் இருக்கிறேன். அரிசி , இனிப்புகள், சிப்ஸ் உள்ளிட்ட பலவற்றை நான் சாப்பிடக் கூடாது.
ஆனால், நெருங்கிய நண்பனின் கல்யாணம். எப்படி சாப்பிடாமல் இருப்பது? அதனால் கூடுமான வரை இனிப்புகள், எண்ணெய் படைப்புகள் ஆகியவற்றைத் தவிர்த்து பிற தின்பண்டங்களை உண்டேன். வயிறு சிவப்பு விளக்கைப் போட்டதும் உடனே நிறுத்திக் கொண்டேன்.
பந்தியில் உள்ள அனைவரும் தீவிரமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க நான் மட்டும் இருக்கையில் இருந்து அத்துணை சீக்கிரம் எழுவேன் என்று ரசிகா எதிர்பார்க்கவில்லை.
"அதுக்குள்ள சாப்டாச்சா?"
"ம்ம். ஆச்சு"
"என்ன பா போதுமா. இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கோ. பசிக்கப் போறது"
"இல்ல மா போதும்"
"சொன்னா கேளுங்கோ. இன்னிக்கு ஒரு நாள் டயட்டெல்லாம் பார்க்க வேண்டாமே."
"இல்ல மா. பரவாயில்ல. "
கஷ்டப்பட்டு உறுதியாக நின்றுவிட்டேன். பிடித்த உணவு கண்ணெதிரே கண் சிமிட்ட அதை வேண்டாமென்று மறுதலிப்பது ஒரு வீர தீரச் செயல் . இல்லையா ?
ரசிகா முகத்தைத் திருப்பிக் கொண்ட சாப்பிடுவதைத் தொடர்ந்தாள்.
நான் கை கழுவும் தொட்டியை நோக்கி நகரத் தொடங்கிய போது ரசிகா மறித்து "சாப்பிட்டு முடிக்கற வரைக்கும் இங்கேயே வெயிட் பண்ணுங்கோ. எங்கயும் போய்டாதீங்கோ" என்றாள். மறுக்க முடியவில்லை.
இவள் சாப்பிட்டு முடிக்க இன்னும் ஒரு கால் மணி நேரம் ஆகுமே?
அதுவரை என்ன செய்வது?
அப்போது ஸ்வப்னாவின் குழந்தை விவான் அழுது கொண்டிருப்பது கண்ணில் தென்பட்டது.
அவனைச் சமாளிக்கவும் முடியாமல், தான் சாப்பிடவும் முடியாமல் ஸ்வப்னா அல்லாடிக் கொண்டிருந்தாள்.
அருகில் என் நண்பன், அவளது கணவன் ஜிஷ்ணு அதைக் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
நான் உடனே விவானை கையில் எடுத்துக் கொண்டேன்.
"நீ சாப்பிட்டு வா. அதுவரைக்கும் நான் பாத்துக்கறேன்" என்றதும் ஸ்வப்னா கண்களாலேயே நன்றி சொன்னாள். ஜிஷ்ணு "ரொம்ப தாங்கஸ் டா" என்றான்.
என்னிடம் வந்ததும் ஒவ்வாமை ஏற்பட்டு விவான் அழத் தொடங்கினான். அவனை என் இடுப்பிருக்கையில் அமர்த்தி கை கழுவிக் கொண்டேன். பிறகு மேலே பறந்த காக்கைகளை அறிமுகப் படுத்தத் தொடங்கினேன். அவற்றைப் பார்த்ததும் அழுகையை நிறுத்தி கொஞ்ச நொடியிலேயே கா,கி, கீ... என்று காக்கைகளின் மொழியைப் பேசலானான் விவான்.
நான், ஜிஷ்ணு, ஆதி, கார்த்திக் எல்லோரும் கல்லூரி நண்பர்கள்.
ஹைதராபாத்தில் ஒன்றாக விடுதியில் தங்கி படித்த நாள்கள் நினைவிலிருந்து அகற்ற முடியாதவை.
எங்கள் அணியில் ஜிஷ்ணுவுக்குத் தான் முதலில் கல்யாணம் நடந்தது.பிறகு ஆதிக்கு. பிறகு எனக்கு. இப்போது கார்த்திக்குக்கு.
ஆதி பெங்களூருவில் பணியாற்றிக் கொண்டிருந்தான். அவன் தந்தையாகி சில வாரங்களே ஆகியிருந்தன.
கார்த்திக் கல்யாணத்திற்காக சென்னை வந்திருந்தான்.
காக்கைகளின் உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கியிருந்த எங்களை ஸவப்னாவின் குரல் மீட்டு இந்த உலகிற்குக் கொண்டு வந்தது.
"வாங்க வாங்க வாங்க என்ன பேசினீங்க காக்கா கிட்ட" என்றவாறு அவள் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
"காஃபி சாப்பிடல" என்று கேட்டாள் ரசிகா.
"இல்ல மா. வயிறு நிறைஞ்சிருக்கு. வேண்டாம்" என்றேன்.
சிறிது நேரத்தில் லேசாக சலிப்பு ஏற்பட ஆரம்பித்தது." கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போலாம் டா" என்றான் ஜிஷ்ணு.
வாட்ஸ் அப்பில் வந்த குறுஞ்செய்திகளைப் படித்துக் கொண்டே அவர்கள் இருவருடனும் பேசிக் கொண்டிருந்தேன்.
வாடஸ் அப்புடனும் பேசிக் கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். அவனும் எங்களோடு திருமணத்திற்கு வந்திருக்கிறான் என்பது போல.
மண்டபம் சற்று சிறிதாய் இருந்தது. மக்கள் கூட்டம் மண்டபத்தில் கொள்ளாமல் பிதுங்கி வழிந்தது. கார்த்திக்கின் வசதிக்கு இது சற்று குறைவு தான். ஆச்சர்யமாக கார்த்திக்கின் பெற்றோர் எதிலுமே அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் பற்றற்று நின்று கொண்டிருந்தனர். அவர்களை மீறி கார்த்திக் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட கசப்பாக இருக்கலாம்.
ஆனால், கார்த்திக் அதைக் காண விரும்பாதவன் போல வெட்கம் கலந்த மகிழ்ச்சியுடன் தன் புத்திளம் மனைவியுடன் காட்சி தந்து கொண்டிருந்தான்.
மண்டபத்திலிருந்து மக்கள் கூட்டம் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தது. அத்துணை சீக்கிரம் மண்டபம் வெறுமையடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அதைப் பார்த்ததாலோ என்னவோ "சரி டா. டைம் ஆயிடுத்து. நான் கிளம்பறேன்" என்றான் ஆதி.
"ஓ. அப்படியா? இப்பவே கிளம்பணுமா" என்றேன்.
"ஆமாம் டா. ராத்திரி 11 மணிக்கு ரயில் இருக்கு. இப்ப வீட்டுக்குப் போய் கொஞ்ச நேர்ஂ ரெஸ்ட் எடுத்து அப்புறம் ஊருக்குக் கிளம்பினா தான் சரியாயிருக்கும்"
"எப்படி போற ஆதி?" என்றான் ஜிஷ்ணு. மண்டபம் திருவான்மியூரில் இருந்தது. ஆதியின் வீடு திருவல்லிக்கேணியில் இருந்தது.
"ஆட்டோவில தான்".
கைப்பேசி செயலியில் ஆட்டோவை புக் செய்து வாசலில்
மூவரும் காத்திருந்தோம். ஸ்வப்னா விவானை அவர்கள் வீட்டுக்காரின் நீண்ட பின்புறத்தில் அமர வைத்து அவனுக்குத் தயிர் சாதம் ஊட்டப் போராடிக் கொண்டிருந்தாள். ரசிகா காரின் உள்ளே அமர்ந்து வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கார்த்திக் கல்யாணத்துக்கு வீட்டிலிருந்து புறப்படும் போதே ரசிகா அதீத உற்சாகத்துடனும், இயல்பை மீறிய குதூலகத்துடனும் இருந்தாள். அவ்வப்போது மகிழ்ச்சியில் அசட்டுத்தனமாக ஏதேதோ உளறினாள். பார்ப்பதற்கு வெகு வெகு செயற்கையாக இருந்தது. எனக்கு அது பிடிக்கவில்லை. ஆனாலும் வெளிப்படுத்தவில்லை.
ஆட்டோ வரத் தாமதம் ஆகியது. ஆதி பேசியில் ஆட்டோ ஓட்டுநரைத் தொடர்பு கொள்ள நானும் ஜிஷ்ணுவும் உள்ளே வந்தோம்.
விவான் அடம் பிடித்துக் கொண்டிருக்க "அப்புறம் ஜிஷ்ணு அடுத்து என்ன பிளான்" என்று துள்ளி குதிக்காத குறையாகக் கேட்டாள் ரசிகா.
"தெரியலங்க. முதல்ல ரூம் போயிட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். பிறகு யோசிக்கலாம்"
ரசிகா அதை ரசிக்கவில்லை.
"என்ன ஜிஷ்ணு இப்படி சொல்றீங்க? கொஞ்ச தூரத்துல தான் மால் இருக்கு. அங்க போலாம். படம் பாக்கலாம். சாப்பிடலாம். அப்புறம் சாயுங்காலம் ரிசப்ஷனுக்கு வந்துடலாம்".
"ம்ம்.. பாக்கலாங்க. கொஞ்ச ரெஸ்ட் எடுத்துட்டு போலாமே. குழந்தையாலே ரெண்டு பேருமே நைட் சரியா தூங்கல..." என்று இழுத்தான் ஜிஷ்ணு.
"அப்படியா, அப்ப வேற எங்கயாவது பக்கத்துல போலாமா? ரூம்ல போய் சும்மா இருக்கறதுக்கா இங்க வந்தோம்?"
எனக்குக் கோபம் பொங்கியது.
"எதுக்கு இவ்வளவு அவசரப் படறே. அவன் தான் சொல்றான்ல"
"எனக்கு போர் அடிக்கறது. என்னால சும்மா இருக்க முடியாது"
"நாம கல்யாணத்துக்காகத்தான் வந்திருக்கோம். ஊர்சுத்திப் பாக்க இல்ல. இங்க பக்கத்துல ஒரு சூப்பர் ஓட்டல் இருக்காம். பிரியாணி செமயா இருக்குமாம். அங்க போய் சாப்பிடலாம்னு ஜிஷ்ணு சொல்லிண்டிருந்தான். அங்க போலாம். அதுவரைக்கும் தயவு செய்து கொஞ்சம் பொறுமையா இரு"
"ப்பா.. மாலுக்கு ஏன் போகக்கூடாது?"
"உனக்கு வேணும்னா நீ போ மா. என்னால வர முடியாது"
காற்று கிழிய கத்திவிட்டு வாசல் பக்கம் சென்றேன். ஜிஷ்ணுவும் கூடவே வந்தான்.
"டேய். நீங்க வேணும்னா கார் எடுத்துண்டு எங்கேயாவது போயிட்டு வாங்களேண்டா. நாங்க கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கோம்"
"சும்மா இரு டா. இதெல்லாம் தப்புடா.என்ன நினைச்சுண்டு இருக்கா அவ. பிரச்னை பண்றதுக்குன்னே பிறந்திருக்கா போலிருக்கு"
சாலையில் இடமும் வலமுமாய் வாகனங்கள் மாறி மாறிப் பாய்ந்தன.
அதைப் பார்க்கப் பார்க்க மனம் மேலும் மேலும் பதறி நடுங்கத் தொடங்கியது. விரும்பி ஒரு கூண்டுக்குள் சென்று பூட்டிக்கொண்டு சாவியை வேண்டுமென்றே தூக்கி எறிந்தது போல் இருந்தது.
கல்யாணத்திற்குப் பிறகு நாங்கள் இருவரும் சண்டை போடாத நாள்கள் மிக மிகக் குறைவு. அந்த நாள்களில் நெருக்கி அடித்து கஷ்டப்பட்டு சந்தோஷம் எங்கள் இருவருக்கும் இடையே உட்புகுந்து கொள்ளும்.
எப்போது வேண்டுமானாலும் பிரச்னை செய்வேன் என்ற சுபாவம் கொண்ட பெண்ணுடன் எப்படி நிம்மதியாக வாழ்வது? எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லையா? அவள் மாறவே மாட்டாளா?
சற்று நேரத்தில் ஆதி ஆட்டோவில் கிளம்பினான். பின்னர் நான் , ரசிகா, ஜிஷ்ணு, ஸ்வப்னா, விவான் எல்லோரும் ஜிஷ்ணுவின் காரில் மண்டபம் அருகில் இருந்த கெஸ்ட்ஹவுஸுக்கு வந்தோம்.
அறைக்கு வந்து அமர்ந்த பிறகு ரசிகாவின் கண்களைச் சந்தித்தேன். அதில் கோபமும் அதிருப்தியும் மின்னின. திரி கொளுத்திய பட்டாசு போல் எந்தக் கணமும் வெடிக்கலாம் என்பது போல் இருந்தன.
"நான் எங்கம்மா வீட்டுக்குப் போறேன்" என்றாள் திடீரென்று.
"எதுக்கு?"
"இங்க இருந்து பக்கம் தானே. நான் அங்கயாவது போயிட்டு வர்றேன்"
" ஓ. வெளிய போயே ஆகணும்னு முடிவு பண்ணிட்டியா. சாயங்காலம் ரிசப்ஷனுக்கு வேற போகணும். அது மட்டுமில்லாம மதியம் தான் வெளில சாப்பிடறோமே. அப்றம் ஏன் வீட்டுக்குப் போறே"
"அதுக்கான அறிகுறியே தெரியலையே"
"ஷப்பா. கொஞ்சம் பொறுமையா தான் இரேன் மா"
"உங்க ஃபிரெண்டு உள்ளே போய் படுத்துண்டாரு. இனிமே எங்க போறது?"
"அய்யோ. எக்கேடோ கெட்டு போ மா" என்று சொல்லி விட்டு வெளியே வந்துவிட்டேன்.
எங்களுக்காக வசதி நிறைந்த கெஸ்ட் ஹவுஸை கார்த்திக் ஏற்பாடு செய்திருந்தான். ஆங்காங்கே சிறு சிறு பச்சைப் புல்வெளிகள். மையத்தில் ஒரு சிறிய நீச்சல் குளம். வாசலில் கடல். இதை விட என்ன வேண்டும்? ரசிக்கும் நிலையில் மனம் வேண்டும். அது என்னிடம் இல்லை.
வெயில் சற்று மிதமாக வீசிக் கொண்டிருந்தது. காலைச் சூரியனில் தூரத்தில் கடல் அலைகள் பளபளத்தன.
எனக்குள் மூண்டெழுந்த நெருப்பை அணைக்க முயல்வதைப் போல
நீச்சல் குளத்திற்குள் காலை விட்டுக் கொண்டேன்.
நீரில் சில இலைகளும் பூக்களும் மிதந்தன. தொலைவில் ஒரு செழித்த கரும்பூனை அடி பிரதட்சணம் செய்வது போல மெல்ல மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தது. அரிதாக புன்னகைத்தேன்.
நடந்தவற்றை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து மனம் குரூர இன்பத்தைச் சுகித்துக் கொண்டிருந்த போது ரசிகா என்னைத் தேடி வந்தாள்.
அருகில் அமர்ந்து அவளும் கால்களை நீருக்குள் விட்டுக் கொண்டாள்.
தோளில் சாய்ந்தவாறு "ஏன் பா என் மேல கோவமா" என்றாள்.
நான் "பழகிப் போச்சு மா" என்றேன். " நான் எங்கம்மா வீட்டுக்குப் போகல" என்றாள்
எதிர்பார்த்தது தான். அவள் பதுங்குவதில் தான் வல்லவள். பாய்வதில் அல்ல என்ற உண்மை மீண்டும் நிரூபணமானது.
நான் சுரத்தே இல்லாமல் சரி என்றேன். "ஏம்ப்பா என்ன பாத்து பேச மாட்டேளா?"
நான் பதில் ஏதும் சொல்லவில்லை.
"சாரி பா. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது"
"பரவாயில்ல மா. கொட்றது தேளோட குணம். காயப்படுத்தறது உன்னோட குணம் . "
"அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ ப்ளீஸ்"
"உன் கூட இத்தனை நாள் வாழ்ந்ததுல நீ கொட்டுற கொட்டெல்லாம் தாங்கிக்க மனசு பழகிப் போச்சு ரசிகா"
"அதான் சாரி சொல்லிட்டேனே. அப்புறம் என்ன?. நார்மல் ஆயிடுங்கோளேன்"
இது தான் அவள். இப்படித் தான் அவள். அவள் மாறினால் நாமும் உடனே மாறி விட வேண்டும். அவள் சகஜமானால் நாமும் சகஜமாகி விட வேண்டும். அவளால் சட் சட்டென்று நிலை மாற முடியும். அவள் அதில் சாம்பியன்.
கத்தியை நெஞ்சில் செருகி அதன் மேலேயே ஒரு பூவை வைப்பது தான் அவள் ஸ்டைல். அல்லது முதலில் பூ. பின்பு கத்தி.
அவள் எந்தக் கணத்தில் எப்படி நடந்து கொள்வாள் என்று யூகிக்கவே முடியாது. அதுவே அவள் மேல் ஒரு பயத்தை ஏற்படுத்தியிருந்தது. அதை நினைத்துப் பார்க்கும் போது அருவருப்பாக வந்தது.
மேலே விழுந்த தூசியை உதறிவிட்டு நகர்வதைப் போல "சரி எழுந்திரு" என்று சொல்லி அறை நோக்கி நடந்தேன்.
எதுவும் நடக்காதது போல் இருந்து விடுவது தானே நம் அழகு? முன்னோக்கி நகர்ந்தால் தானே அதன் பேர் வாழ்க்கை? தேங்கி நிற்பதற்குப் பேர் வாழ்தலா?
அறைக்குள் சென்ற பிறகு சிறிது நேரம் கண்ணயர்ந்தேன்.
பிறகு ஓட்டலுக்குச் சென்றது, பிரியாணி சாப்பிட்டது, மீண்டும் கெஸ்ட் ஹவுசுக்கு வந்தது, ரிசப்ஷனுக்கு சென்றது, அங்கே உண்டது எல்லாமே ஒரு நாடகம் போல நடந்தது. நான் சோகத்தை உள்ளேயும் சிரிப்பை வெளியிலும் வைத்து சிறப்பாக நடித்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
அவ்வப்போது விவானை தோளில் தாங்கும் வாய்ப்பு கிடைத்தது தான் ஒரே நல்ல விஷயம். அவன் எழுந்து தோளில் சாய்ந்து தூங்கும் போதெல்லாம் உள்ளே இருக்கும் இறுக்கம் உடைந்து தூள் தூளாகும்.
சற்று நேரம் கழித்து மீண்டும் மேலெழுந்து வரும்.
கல்யாணம் முடிந்து வீட்டிற்குக் கிளம்பினோம். கிளம்புகையில் எல்லோருக்கும் மரக்கன்று கொடுத்தார்கள்.
"என்னாச்சு டா. ஏன் டல்லா இருக்கே? " என்று ஜிஷ்ணு கேட்டுக் கொண்டே இருந்தான். நான் தலைவலி என்று சொல்லி சமாளித்தேன்.
ஜிஷ்ணு வீடு வரைக்கும் வந்து எங்களைக் கொண்டுவிட்டான்.
அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தேன். பின்னர் விட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது ரசிகா உருண்டு அருகில் வந்து " இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் பா. ஐ லவ் யூ" என்று கட்டிப்பிடித்து முத்தமிட்டாள்.
நான் மறுமொழி சொல்வதற்குள் மீண்டு தன்னிடத்துக்கே சென்று நன்றாக இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்கத் தொடங்கினாள்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.