புதியவை

பொலிந்துவிட வா ! ( என் .ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா )இரண்டாயிரத்துப் பதினேழே 
இன்முகத்துடனே எழுந்தோடிவா
இயலாமைபோக்கிட எழுச்சியொடுவா
வறுமையொடு பிணி
வரம்கொண்டு வா
வளங்கொளிக்கும் வாழ்வுவர
மனங்கொண்டு வா 
அறியாமை இருளகல
அறிவொளியாய் வா
அரக்ககுணம் அழித்துவிட
அஸ்த்திரமாய் வா
நிலையாக தர்மெங்கும்
நிறுத்திவிட வா
நிம்மதியாய் வாழ்வுவர
 நீநினைந்து  வா !


சாதிமதச் சண்டையினை
சம்கரிக்க வா
சமாதானம் குலைப்பார்க்கு
சவுக்காக வா
நீதியொடு சமாதானம்
நிலைநிறுத்த வா
நிட்டூரம் செய்வாரை
குட்டிவிட வா
வாதமிட்டு வம்புசெய்வார்
வாயொடுக்க வா
வாழ்வென்றும் வசந்தம்வர
மனம்சிரித்து வா !

சாந்தியுடன் சமாதானம்
கொண்டுநீ வா
சச்சரவு ஒழித்துவிடும்
தீர்வுடனே வா
காந்திபோல பலமனிதர்
பிறக்கவெண்ணி வா
கசடெல்லாம் கழன்றோட
காத்திரமாய் வா
பூந்தோட்டமாய் உலகு
பொலிந்துவிட வா
புதும்தெம்பு வாழ்வெல்லாம்
 புறப்படநீ வா !
 
                 ஆட்சிபுரி உள்ளங்கள் மாறவேண்டும் 
                        அவர்மனதில் அறவுணர்வு தோன்றவேண்டும்
                 அதிகாரம் காட்டுவார் திருந்தவேண்டும்
                          அமைதிபற்றி அவர்மனது நினைக்கவேண்டும்
                  காட்டுத்தனம் நாட்டைவிட்டு நீங்கவேண்டும்
                          கருணைபற்றி யாவருமே எண்ணல் வேண்டும்
                   நாட்டினிலே நலன்கள்பல பெருகுதற்கு 
                           நன்மைதரும் ஆண்டாக வரவாய்நீயும் !

                உன்னைவரவேற்க உவப்புடனே இருக்கின்றோம் 
                      முன்னைக் கவலையெலாம் முழுதாகபோக்கிவிடு 
                அன்னை எனநினைத்து ஆவலுடனிருக்கின்றோம்
                        அரவணைத்து ஆதரிக்கும் ஆண்டாகநீவருக !
                         

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.