புதியவை

ஜெர்மன்- மீரா எழுதும் ( தொடர்கதை ) 'வர்ணங்களின் வர்ணஜாலம்' அத்தியாயம் 11 -12-13வர்ணங்களின் வர்ணஜாலம் ( தொடர்கதை )அத்தியாயம் 11 

இனிமையின் இதத்தோடு சிறகு விரித்து பரந்த மனம் , கருமையின் கோலம் கண்டு கண்களில் மருட்சி கொண்டது . காருண்யம் எதிர்பார்த்து கணவன் முகம் நோக்கிய மங்கையவளிடம், மணவாளன் மனமிரங்கி மனதை அறிந்து கொள்வானா என்ற ஏக்கத்தில் எதிர்கொண்டாள் .
அந்த கணம், ஒரே கணத்தில் வேறு உரு மாற்றிக்கொண்டது . மஞ்சள் மங்கலம் மனம் மாறி மாயையில் புகுந்து கொண்டதோ? . எல்லாமே பொய்த்துப்போய் ரமேஷின் சுடு சொற்கள் ரணமாக மெல்ல வந்து இறங்க பதை பதைதுப்போனாள் மயூரி .
„என்னை வேண்டும் என்றே வருத்திப்பார்ப்பது தான் உங்கள் எண்ணமா மயூரி ?. உங்களை மகிழ்விக்க வெளியே கூட்டி சென்றமைக்கு நீங்கள் பரிசு தருகிறீர்களோ ?. அதுவும் தேடிப்பார்த்து எதை பரிசளித்தால் என் இதயம் வாடுமோ அதையே நீங்கள் வாங்கி பத்திரபடுத்தியிருகிறீர்கள்! . அன்று எனது அரிய பொருளை உடைத்து என் இதயத்தை சுக்குநூறாக்கினீர்கள். இன்று மீண்டும் நினைவூட்டி மனதை வலிக்க பண்ணிவிட்டீர்கள். உடைந்த ஒன்று மீண்டும் உயிர் பெற முடியாது என்பது உங்களுக்கு தெரியாத ஒன்றல்லவே“
.
„மயூரி நீங்களா இப்படி ?, உங்களிடம் இப்படி ஒரு செயலை நான் எதிர்பார்க்கவேயில்லை“ வெறுப்பான பார்வையை அவளிடம் வீசி விட்டு தன் அறையை நாடிச்சென்றான் . தன் அறையையே தஞ்சமாக்கி கொள்வது அவனிடம் வழக்கமாகி விட்டதோ !.
„ஐயகோ நெருங்க நினைக்கிறேன் , ஆனால் நானே விலக்கி விடுகிறேன்! . அவன் இதயத்தை பறிக்க முயல்கிறேன் , ஆனால் நானே அதில் முள்ளையும் தைத்தும் விடுகிறேன் !. என்னை புரிந்து கொள்ளவேண்டும் என்று கெஞ்சுகிறேன் ஆனால் என்னை அறியாமல் கெடுதலை செய்கிறேன். என் இந்நிலைக்கு நானே காரணமாகி விடுகிறேனே“ .
பேதை செய்வதறியாது தன்னையே நொந்துகொண்டாள். தன்னவன் தன்மையை தனதாக்கும் எண்ணம் தகர்ந்து தவிடு பொடியாகியது . தளிர் விட்ட அன்பும் தகமையை இழந்து ஏனோ பரிதாபமானது மயூரியின் வாழ்வில் . வாடி , வதங்கி தன்னுள் அடங்கிக்கொண்டாள் .
அடுத்து வந்த நாட்கள் இரு அன்னியர்கள் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்த கதையாகியது . மயூரி தன் கடமையை செவ்வனே செய்தாள். ரமேஷ்யின் உணவு , உடை என்று மிக கரிசனையுடன் குறை விடாது செய்தாலும் அவனுடன் சகஜமாக பேசுவதை மட்டும் தவிர்த்துக்கொண்டாள் . இவளின் இந்த மாற்றத்தை அவன் கண்டு கொண்டதாகவேயில்லை . அவனும் ஏதோ தீவிர சிந்தனையில் சிக்குண்டு கிடந்தான் .
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. பழைய நாட்களை புறந்தள்ளி புது நாளில் உரம் கொள்ள புதுவருடத்தில் புகுந்தது புத்துணர்ச்சியுடன் பொதுவிழாவாகிய பொங்கல் விழா.
தன் வீட்டில் தன் ஊரில் பொங்கல் என்றாலே குதூகலம் தான் . கரும்பும் மாவிலையும் கொண்டு வீட்டு வாசலில் தோரணம் கட்டி , மா கோலமிட்டு சூரியன் உதிக்கும் முன்னரே அம்மாவின் கூப்பாட்டில் எழும்பி , குளித்து புத்தாடையுடன் புதுப்பானையில், புது நெல் அரிசியைக் கொண்டு அப்பா பானையில் இட எல்லோரும் சேர்ந்து இறைவனை வணங்கி செய்த பொங்கல், அன்று நாள் முழுவதும் வாயில் தித்திக்குமே .
மயூரியின் கண்கள் பனித்தது. ஏக்கம் அவளை ஆட்கொண்டது . அம்மாவின் பாச அணைப்பு அவளுக்கு வெகுவாகவே தேவைப்பட்டது . அவள் மடியில் விழுந்து காரணங்களை கூறாது அழ வேண்டும் போலிருந்தது. நினைத்தவுடன் அம்மாவை தொழிநுட்பம் தந்த வரபிராசதங்களினால் தொலைபேசியில் அழைக்க முடியும் . நேரிலேயே முகம் கண்டு பேசவும் முடியும் . ஆனாலும் அம்மாவுடன் கூட இருந்து தன் கவலைகளை பகிர்ந்து கொள்ளும் நெருக்கம் ஏனோ அலைபேசியில் உரையாடும் பொழுது அலையாடியது . எப்படியம்மா இருக்கிறாய் என்ற ஒரு கேள்விக்கு எல்லாம் நலம் என்று ஒரேயொரு பதிலை மட்டுமே மயூரியினால் தர முடிந்தது .
பொங்கும் ஆனந்தத்தை அள்ளித்தர பொங்கல் நாள் விடிந்தது . மயூரி விடியலை தட்டி, எழுப்பி விடிய மறுக்கும் வேளையை தன் ஜன்னலூடாக பார்த்தாள். பனி சூழ்ந்து ஞாயிறை புறந்தள்ளி கருமை மேகங்கள் கும்மி அடித்துகொண்டிருந்தன வானில் . இதோ உங்களுக்கே சவால் விடுகிறேன் என்று துள்ளலோடு எழுந்தவள் குளித்து புத்தாடை அணிந்து பொங்கல் பானையுடன் சமையலறையில் மும்முரமானாள் .
ஓய்வாக வீட்டிலிருக்கும் கணவன் முதல் முறையாக தமிழர் விழாவை தன்னுடன் வரவேற்பானா என்ற எதிர்பார்ப்பு அவளிடம் எட்டிப்பார்த்தது .
தொடரும் .......
மீரா , ஜெர்மனி


வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 12
„மின் அடுப்பில் புதுப்பானை வைத்து ,
மிகுதியாய் பொங்கல் செய்து
நேசம் கொண்ட என் மச்சானுக்கு
நேர்த்தியாய் நான் தருவேன் ஆசையாக !“
மயூரி புது சுரிதார் அணிந்து , கை வளையல் குலுங்க , கண்களில் புதுமலர் பூக்க , ரமேஷை நெருங்கினாள் . இன்பங்கள் சிறக்க வந்த இனிய தைத்திருநாளில் நேற்றைய நாளை புறந்தள்ளி , வரும் நாள் என்றும் சிறக்க , இன்றைய நாளை நலமாக்க கணவன் ஆர்வமாக காத்திருப்பான் என்ற நம்பிக்கையில், „வாருங்கள் இறைவனை பணிந்து, பொங்கலும் வடையும் சாப்பிடுவோம் என்று உற்சாக தொனியில் அன்பாக அழைத்தாள் வீட்டுக்கு விளகேற்ற வந்த தமிழச்சி.
„மயூரி என்னை தவறாக என்ன வேண்டாம் ஆனால் எனக்கு இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை . நாம் வாழ்வது வெளிநாட்டில் . இங்கே இந்த குளிர்காலத்தில் அதிகாலை வேளை சூரியனை காண்பதே அரிது . அத்துடன் விவசாயிகளை எங்கு தேடிப்போய் நன்றி சொல்வது . இந்நாடுகளில் பெரிதும் இயந்தரங்களை பயன்படுத்தியே பயிர் நடுகை இடம்பெறுகிறது . ஊரில் கொண்டாடும் கொண்டாட்டங்களை அதே முறைப்படி இங்கே கொண்டாடுவது எப்படி சாத்தியமாகும் ?“.
„எனக்கு இத்தகைய கொண்டாட்டங்களுடன் உடன்பாடு இல்லை . கண்ணில் தெரியாத சூரியனுக்கு சமையலறையில் பொங்கல் படைப்பதா?. ம்ஹூம், அத்துடன் இனிப்பான பொங்கலை காலை உணவாக உண்பது எனக்கு கஷ்டம் . என் நண்பி ஒருத்தியை சந்திக்க வருவதாக சொல்லியிருந்தேன் . ஆகவே நான் வெளியே என் உணவை கவனித்துக்கொள்கிறேன் . நீங்களே பொங்கலை படைத்து சாப்பிடுங்கள்“ என்றவாறே கிளம்பினான் .
மயூரி அவனை வெறித்துப்பார்த்தாள் . „தன் கணவனா, இப்படி பேசிவிட்டு போவது . புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நாம் தமிழர் என்ற அடையாளத்தை மறந்து வாழலலாமா ?. மிக முக்கியமாக, நமக்கான அடையாளத்தை மறக்காது இருக்கவேண்டிலும் நம் தமிழர் விழாக்களை கோலாகலமாக கொண்டாட வேண்டுமே . மிக குழம்பிய நிலைக்குள்ளானாள் அப்பாவி பாவை .
„கூடவே தன் நண்பி ஒருத்தியை சந்திக்க செல்வதாக கூறினானே !“ . ஏதோ வெறுக்கத்தக்க உணர்வில் தன் கன்னங்கள தகதகப்பதை உணர்ந்தாள் . சுயத்தை சுட்டெரிக்கும் கோபத்தீ . வஞ்சனையின் வாஞ்சைக்கு வசமாகும் பொறாமையில் புழுங்கினால் மயூரி . அவளை ஏதோ வேகம் ஆட்கொண்டது மீண்டும் .
எத்தனை ஆசையுடன் முதல் பொங்கல் நாளை எதிர்பார்த்தாள். ரமேஷுடன் குதூகலமாக ஊர்கோலம் போனவள் காட்சி மாற்றம் கொண்டமையினால் தனிமை கோலத்தில் தவித்தாளே . தவமிருந்தாயினும், தனக்கானவன் தாபம் கொள்ள காத்திருந்தாள் . ஆனால் மீண்டும் ஏமாற்றமே .
பொங்கலோ பொங்கல் என்று பொங்கிய பொங்கலின் பால் நுரை அடங்கியிருந்தது . தனியே அமர்ந்து உண்ண மனமில்லாது ஏதோ மனம் போன போக்கில் கிளம்பினாள் . அவர்கள் வீட்டின் அருகாமையில், ஒரு பூங்காவில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள் மனம் தாளாமல் அழுது தீர்த்தாள். „ஏன் எனக்கு தொடர்ந்து ஏமாற்றங்களை ரமேஷ் தருகிறான் . என்னை விரும்பியே திருமணம் செய்தவன் ஆனால் திருமணத்தின் பின் புறக்கணிக்கிறான் .
நெருங்கி வருகிறான் ஆனால் மீண்டும் தவறு என்பது போல் விலகி விடுகிறான் . என் அழகை ரசிக்கிறான் ஆனால் மீண்டும் வெறுப்பை உமிழ்கிறான் . அன்பை தர முயல்கிறான் ஆனால் அடுத்த கணம் அந்நியன் ஆகின்றான் . மென்மையாகுகிறான், பின் கடினம் காட்டுகிறான் . இரு வேறு நிறங்களில், இரு வேறு துருவ ஒளியில், எந்த நிறத்தின் குணம் கொள்கிறான் என்பது தெரியாத மங்கிய சூழ்நிலை .
மயூரியின் கண்களிலிருந்து நீர்த்திவலைகள் சிந்தியதை அறியும் நிலையில் அவள் இல்லை . எண்ணங்களில் சரணடைந்து ஆயிரம் கேள்விகளை விடுத்து பதில் கிடைக்காது அவதியுற்றாள் . இவளின் அவதியை இரு ஜோடிக்கண்கள் கவனித்ததை அறியாது சிலையாக அமர்ந்திருந்தாள் மயூரி .
தொடரும் …………..
மீரா , ஜெர்மனி

வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 13
“விழி வழி வழிந்து வீழ்ந்தது கண்ணீர் துளி . ஈரவிழி கண்டு தெரு வழி வந்தவன் இதயவழி வாசல் திறந்து கொண்டதால், உயிர் வலி கொண்டான் “.
வாடிய வதனத்துடன் வார்த்த சிலை போல் அமர்ந்திருந்த அவள் அழகு உருவம் அவன் மனதை கசக்கியது . “இவள் தானே அவள். கலக்கங்கள் கண்களில் கதற , கசப்பான வார்த்தைகளை கக்கி விட்டு சென்ற காரிகை இவள் தானே . ஆனால் அவள் தவற விட்டு சென்ற அந்த கவி வரிகள் மட்டும் அவனை கவர்ந்தது மட்டுமின்றி மனதில் கற்பதிவாகி விட்டதே . அவளது ஏக்கம் அந்த வரிகளில் கொட்டி எழுதப்பட்டிருந்தது” .
அருகில் சென்று ஆறுதல் தர வேண்டும் போலிருந்தது அவனுக்கு . எத்தனையோ பெண்கள் வீதியில் தினம் தினம் காண்கிறான் . அவனது அலுவலகத்திலும் பலர் பணியாற்றுகிறார்கள் . ஒருவரிடமும் நெருக்கம் கொள்ளாதவனுக்கு இப்பெண்ணின் சோகம் அவன் மனதில் கருணையை தோற்றுவித்தது போலும் .
உடற்பயிற்சிக்காக தன் நண்பியுடன் பூங்காவிற்கு வந்திருந்தவன் ஓட்டத்தையும் மறந்து தயங்கி நின்று விட்டதை உணர்ந்த அவன் நண்பி மீண்டும் திரும்பி இவனை அழைத்தாள் . ஆனால் மயூரியின் சோகத்தில் தாக்குண்டவன் செவியில் அந்த அழைப்பு கேட்கவில்லை .
ஈரடி எடுத்து வைத்தவன் மயூரியின் நிமிர்ந்த பார்வை தன்னுள் ஊடுருவதை கண்டதும் நின்று விட்டான் . நேர் கொண்ட பார்வை . தெரிந்து கொண்டேன் ஆனாலும் அறிமுகம் இல்லாத ஒருவர் என்பதை குறிப்பாக குறிக்கும் பார்வை . கனல் கொண்டு கருணையை களைவிக்க கோரும் பார்வை .
அவன் நின்றான் . அவள் சென்றாள் . காரணமின்றி வரும் சந்திப்புக்களுக்கு காரணங்கள் எங்கோ தோற்றுவிக்கப்படுகிறது என்பது கால நியதி .
கார்மேகம் சூழ்ந்த இதயத்துடன் வீடு வந்து சேர்ந்தாள் மயூரி . நன்நாள் வீணாது அவளுக்கு . அவள் இல்லம் இல்லத்தவன் இல்லாமையினால் இருள் சூழ்ந்திருந்தது . தனிமை தாங்கொண்ணா துயரம் தர தவிப்பில் துயருற்றாள் .
மாலை மங்கிய பின்னரே ரமேஷ் வீடு திரும்பினான் . வந்தவன் மிக சரளமாக மயூரியிடம் “பொங்கல் கொண்டாடி விட்டீர்களா மயூரி ?, இன்று நீங்கள் மரக்கறி உணவு சமைத்து இருப்பீர்கள் என்பதனால் நான் வெளியே என் உணவை முடித்து விட்டேன் . நீங்கள் தாமதமின்றி சாப்பிடுங்கள் . சாப்பிட்டு விட்டு வாருங்கள் . உங்களுக்கு தானே சினிமா பார்ப்பது பிடிக்கும் . இருவரும் சேர்ந்து ஏதாவது சினிமா பார்ப்போம்” என்று சாதாரணமாக கூறிவிட்டு சென்றான் .
மயூரிக்கு அன்றைய நாளின் ஏமாற்றம் , தனிமை , வேதனை எல்லாம் சேர்ந்து கோபத்தை ஏற்படுத்தியது . ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் போல் ஒரு கணமும் சிந்தியாமல் ரமேஷிடம் சென்று „சினிமாவை நீங்கள் தனியே இருந்து பார்த்து ரசியுங்கள் . ஏன் அந்த சினிமாவை உங்கள் நண்பியுடன் சேர்ந்து பார்த்து ரசித்து விட்டு வந்திருக்கலாமே” என்று குத்தலாக வார்த்தைகளை கொட்டி விட்டு தன் அறைக்கு சென்று மீண்டும் குமுறி குமுறி அழுதாள்.
“பூ புயலானதோ ?”
தொடரும் ...
மீரா , ஜெர்மனி


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.