புதியவை

2016 ல் நடைபெற்ற உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் (இறுதிக் கவிதை டிசம்பர் மாதம் 31) 'தடாகத்தின் தாமரைகள்'.பாராட்டுப்பெறும் சிறந்த கவிதைகளை எழுதிய கவியாத்மாக்களுக்கு தடாகத்தின் பாராட்டுக்கள்


போட்டி இலக்கம் மாதம் -85 வது
தலைப்பு--- உன்னுள் நீ 03
என்னுள்ளே என்னையேன் மாற்ற வேண்டும்
எல்லோர்க்கும் ஏற்றபடி மாறு யென்றே
என்னிடத்தில் ஏன்இவர்கள் சொல்ல வேண்டும்
எதற்காக சமரசம்நான் செய்ய வேண்டும்
என்சுயத்தை யாருக்காய் இழக்க வேண்டும்
என்வழியை யாருக்காய் மாற்ற வேண்டும்
என்கொள்கை என்குறிக்கோள் அடைவ தற்கே
எவர்தடையாய் நின்றாலும் தகர்த்த ழிப்பேன் !
ஊருடனே ஒத்துப்போ என்று ரைப்பார்
ஊர்செய்யும் தவறுகளுக் கிசைவ தோநான்
சேறுதனைச் சந்தனந்தான் பூசி டென்றே
செப்பிடுவோர் கூற்றுதனை ஏற்ப தோநான்
நாருதனில் மலர்கோர்த்த லின்றிச் சுற்றி
நறுங்கழுத்தை இறுக்குவோரைப் போற்ற வோநான்
ஏறுபோல தீமைகளை எதிர்த்தி டாமல்
எச்சில்நாய் போலிருக்க முடியா தென்னால் !
குற்றத்தைக் குற்றமெனச் சொல்ல அஞ்சிக்
குற்றேவல் புரிவதற்கா வாழ்வைப் பெற்றேன்
வெற்றுக்கே வாழ்வதினால் பயன்தான் என்னே
வெறும்வயிற்றை நிரப்புதற்கா இந்த வாழ்வு
சிற்றெறும்பும் கடித்தபின்பே உயிர்து றக்கும்
சிறுபுலியும் சினந்தெழுந்தால் யானை ஓடும்
பெற்றயென்றன் தமிழைநாட்டை உயர்த்தும் போரில்
பெறுகின்ற விழுப்புண்ணே என்னைக் காட்டும் !

பாவலர் கருமலைத்தமிழாழன்
போட்டி இலக்கம் மாதம் -85 வது
தலைப்பு--- உன்னுள் நீ 17
விட்டம்பார்க்கும் கருவிழிச்சிமினி
விருட்டென தாவி விழுந்திடப்போகும்
 விசப்பல்லியாசையை விடாதுகாக்கும் முயற்சியில்
கேவிக்கேவியடைக்கும் தொண்டைக்குழி
திடுமென அடைத்திடும் உணர்வினை
மெல்லவிழுங்கிடப்பார்க்கும் மிரட்சியில்!
ஆலாபனை ஆலிங்கனம்
ஆராதனை ஆயக்கலைகளினுள்
அடைக்கலம் தேடியோடும்
ஓட்டை நிரம்பிய ஊன் ஒழுகும்பாத்திர நுனியினில்!
காலக்குடுவை கடகடவென அடித்திட
மாயக்கலவைக்குள்
மதிமுழிப் பிதிங்கிட
தீயசெயல்கிலி ருத்ரவமாடிட
மைய்யல் மெய்யொன்று ரெளத்திரம் பழகிட!
உருமாறி உருமாறி உடற்கூடு துருவேறி
தடமாறி திடமாகி
தவப்பொய்மையில் நீராடி!
பொதிகைக்கு வழிதேடும்
பொதிசுமக்கும் மாடாகி
இச்சைக்குழிக்கு இழுத்தோடும்
இழியின்ப சுவைதேடி!
நையப்புடைத்திடும் நாழிகையைக்கடத்த
நெற்றிதேய்க்க நிலம்தாழ்த்தும் சிரமுன் உள்ளழுக்குப்போகிட
மெய்யுருகி மனம்வருத்தி!
மீளாத் துயரொன்றின்
மீளும் மகிழ்வொன்றின் பொழுதொன்றில்
புவிப்பொய்கையின் தூண்டில்மீனாய் உன்னுள் நீ ,,,,
களிமண் நீ கலவிக்கழி நீ
கருவுரு நீ களிப்பாய் நீ
உன்னின் நீ உனதாய் நீ
தன்னில் நீ தனதாய் நீ
நீ நீ நீ ,,,,
நிலையற்ற நிலத்தில்
நீட்சிதேடியலையும் பாவமீட்சியாய்
உன்னில் நீ........
"கவியருவி"மலிக்கா ஃபாரூக்
62 லெப்பை லயன்
திமிலத்தெரு
முத்துப்பேட்டை
திருவாரூர் மாவட்டம் 614704

போட்டி இலக்கம் மாதம் -85 வது
தலைப்பு--- உன்னுள் நீ 03
அனந்த சக்திமான் ஆண்டவன் படைப்பில்
அனைவருக்குள்ளும் ஒரே சக்தியா ?
ஆற்றலும் திறனும் வேறுபட்டிருப்பதால்
உன்னுள் நீ என்பதை அறிந்து செயல்படு.
உள்ளத்தில் நீ உயர்ந்து செயல்பாடு. 
எண்ணிய எண்ணத்தில் ஏற்றம் வெளிப்படும்.
உன் திறன் படிப்பதிலும் இருக்கலாம்
உன் ஆற்றல் படைப்பதிலும் இருக்கலாம்.
உன் ஆற்றல் ஆக்கத்திலும் மேன்படலாம்.
உன் ஆற்றல் அழிவிலும் மேம்படலாம்.
உன்னுள் நீ என்றால் அது உன் தனி குணம்.
உன்னுள் இருக்கும் கலை ஆற்றல்
உன்னுள் இருக்கும் இசை ஆற்றல்
உன்னுள் இருக்கும் ஆளுமை
உன்னுள் இருக்கும் ஆன்மிகம்
அறிந்தே செயல் படு,
அறியப்படுவாய். ஆராயப்படுவாய்.
அக்கரையுடன் உன்னுள் இருக்கும் ஆற்றல்
அறிந்து ஆவன செய், அவனி அறியும்.
ஆற்றல் அறிந்து செயல்படா விட்டால்
ஆத்மாவில் உள்ள பரமாத்மா அறியாவிட்டால்
அல்லல் படுவாய் ,அவமானப்படுவாய்.
இன்னல் உருவாய் , இனியன அறியாய்.
நல்லவனைத்தேடி உன்னுள் நீயே பார்.
தீயவனைத் தேடிப்பார் உன்னுள்
உன்னையே நீ அறிந்துகொள்.
உலகில் உயர்வாய். எண்ணங்கள் நிறைவேறும்.
முகம்மதுவும் புத்தரும் தன்னுள் இருக்கும்
உன்னுள் நீ என்ற உணர்வரிந்தே
ஞான ஒளி பெற்றதனை உணர்ந்து செல்.
உன்னுள் நீ உன்னொளி கண்டால்
உலகில் உன் செயல் நற்செயலாகும்.
உன்னுள்ளம் எப்படியோ அப்படியே
நிலஉலகம் மட்டுமல்ல ,
தேவலோகமும் உன்னைக்காணும்
.

-அனந்தகிருஷ்ணன் .
ஓய்வுபெற்ற ஹிந்தி ஆசான் (முதுகலை)
தலைமை ஆசிரியர







போட்டி இலக்கம் மாதம் -85 வது

தலைப்பு--- உன்னுள் நீ 12
இறைவனின் படைப்புகளில்
எத்தனையோ வண்ணங்கள்
வண்ணங்களும் வரமாகும்
சில நேரங்களில் வண்ணங்களும்
நிறமிழக்கும் என்றிருந்தேன்
எண்ணமெல்லாம் விரக்தியாக
என்ன செய்வது என்றிருக்கையில்
கையிலே திறனிருக்க
கலங்கவும் செய்யலாமோ
பெண்கல்வி எதற்களித்தான்
பெருமைபட வாழ்வதற்கே
நெஞ்சிலே தீரம் எழ
நிமிர்ந்து நின்றேன் உலகினிலே
தன்னிலைதனை அறிய என்னையே
உரசிப் பார்த்தேன் தங்கமென
எனை நினைத்து
தன்னம்பிக்கை கை கொடுக்க
அவநம்பிக்கை விட்டகல
திறமையோடு எதிர்த்து நின்றேன்
கவலையெல்லாம்
திசைக்கொன்றாய் சிதறியது
கற்ற கல்வி கைகொடுக்க
சமுதாயத்தில் என் நிலைமையோ
தானாக உயர்ந்தது
சிறகடிக்கும் பறவையாக
வான் நோக்கிப் பறந்திட
இறைவனருள் இருந்ததாலே
எனக்குள்ளேயும் ஒரு தீப்பொறி
எந்நிலையிலும் சிந்திக்கத் தூண்டியதே
தன்னிலையறிதலால் தரமதும்
இழக்காமல் தரணியில் வாழவே
புடம் போட்ட தங்கமாய் புவிதனில்
புனிதமாய் வாழ்ந்திடலாம்
நல்லவை நடக்குமே தீயவை ஒழியுமே
தன் கண்ணறிய பொய்மையை விலக்கினாலே
பொலிவுடன் சிறக்கவே நல்வழி காட்டுமே....!!!
உமா மகேஷ்வரி.. ஆசிரியை
2/5 ஜீவாநகர் 2 வது தெரு
மதுரை_625011
மதுரை மாவட்டம்
தமிழ்நாடு.. இந்தியா

போட்டி இலக்கம் மாதம் -85 வது
-தலைப்பு--- உன்னுள் நீ 01
மாயுவுரு மருள்கண்ட மானிடனென் நெஞ்சில்
தூயவொரு மனப்பான்மை துய்த்திக்கக் கண்டேன்
பாயவரும் விலங்குதனைப் பார்த்தொதுங்கி நின்று
மாயவனை நான்வணங்க மறைபொருளைத் தந்தான்
கண்ணிருந்தும் கண்டதனைக் காட்சியதை மறந்து
மண்ணில்வளர் பயிரெனவே மனமொறுத்து வளர
என்னிருகை எடுத்தசெயல் தடுத்தது நீயென்றே
என்னுயிரைக் காத்திடவே எனக்குள்நீ தனித்தாய்
அடியனென அடிபணிய வைத்தவனும் நீதான்
துடித்திடவே கண்டதவண் துடித்தவனும் நீதான்
மடியவுளம் துணிந்துதுயர் களைபவனும் நீதான்
விடிந்திடவே வாழ்வதனை விளைத்தவனும் நீதான்
அஞ்சுதலை நெஞ்சமர்த்தி அசைவறுக்க வந்தாய்
பிஞ்சுமனம் என்றுறுத்தி பிழைகளைய வைத்தாய்
வஞ்சமகள் வலைநீக்கி விஞ்சுகுணம் கொடுத்தாய்
தஞ்சமெனத் தலைசாய்த்து தலைநிமிரச் செய்தாய்
எனக்கென்றும் தனக்கென்றும் இசைவறுக்கச் செய்தாய்
எனக்குள்ளே நீயிருந்து தனித்திருக்க வைத்தாய்
கணக்கொன்று தப்பாது கவலைகளைத் துரத்தி
உனக்குள்ளே நானிருக்க உடனிருந்து மகிழ்வாய்
கண்ணன் கோபாலன் , (ஆசிரியர்)
5 B - 1, ரோவர் பள்ளிச் சாலை,
மதனகோபாலபுரம்,
பெரம்பலூர் - 621212 தமிழ்நாடு - இந்தியா.


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.