புதியவை

டென்மார்க் ரதிமோகன் எழுதும்தொடர் கதை ❤️பனி விழும் மலர் வனம்... அத்தியாயம்-36


நாட்களோ மெல்ல மெல்ல பனியும் குளிருமாக நகர்ந்து செல்ல புது ஆண்டில் அவள் விழியோரம் மலர்ந்த காதல்கனவுகள் நிஜமாவதுபோல நல்ல சம்பவம் நிகழ ஆரம்பித்திருந்தது. .நீண்ட தூக்கத்தில் இருந்து அனசன் கண்விழித்திருந்தான் என்ற சேதி சக்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்ததுபோல் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிய அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உடனே போய் அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தபோதும். அந்த ஆசையை மனதிற்குள் புதைத்துக்கொண்டாள். ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு எரிச்சலையும் கோபத்தையும் சங்கர்மேல் வரவழைத்தது அவன் அனசனின் உடல்நிலையைப்பற்றி அவளிடம் சொல்லாமல் இருந்தது. ஆனாலும் மதுமதி பொறுமை மிகுந்தவள். எதையும் ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் மனதுடையவள்..இத்தனை நாட்கள் பொறுத்த அவளால் இன்னும் இரு நாட்கள் பொறுத்திருக்க முடியாதா என்ன? மீண்டும் அதே வைத்தியசாலையில் நீண்டகால உடல் உள நலமின்மை ஓய்வின்பின் தன் பதவியை தொடரப்போகிறாள்.
கார்ச்சத்தம் ஒன்று கிட்டதாக கேட்டது..,மெல்ல சாளரம் வழியே கண்களை சுழல விட்டாள். சங்கர்தான் காரிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான். அவனை நேரில் பார்க்க விருப்பமின்றிய மதுமதி தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டாள். " என்ன இவன் அனசன் எழும்பியதை எனக்கு எதற்காக மறைக்கிறான்? எனக்கு தகவல் கிடையாதா என நினைத்தானா?""மனதிற்குள் பொருமிக்கொண்டாள். வந்ததும் வராததுமாய் மதுமதியின் கதவை பலமாக தட்டினான் "" ஏய் மது இங்கே வெளியே வாயேன்... உன் பேர்த்டேக்கு ஒன்னும் வாங்கித்தரலை.. உனக்காக இன்று ஒன்னு வாங்கிவந்தேன்.. வா பிளீஸ் "" என அவளை அழைத்தான் . கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள் கடுகடுப்புடன்"" நான் உன்னை கேட்டேனா?? எதற்கு என்னை தொந்தரவு பண்றாய்.. போ போ.." என்றதும் சங்கரின் முகம் வாடிப்போனது. " சரி பிரச்சனை இல்லை sorry " என்றபடி கொண்டு வந்த பார்சலை நிலத்திலே வீசி எறிந்துவிட்டு மீண்டும் போய் தன்காரில் ஏறினான். கார் இடத்தைவிட்டு வேகமாக நகரும் சத்தம் கேட்டது. இவற்றை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சங்கரின் தாயாருக்கு இருவரின் மேலும கோபம் வந்தபோதும் அதை வெளிக்காட்டாது மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தார்.
மெல்ல வெளியே வந்த மதுமதி சங்கர் எறிந்து விட்டுப்போன பார்சலை மெல்ல திறந்து பார்த்தாள். வெண்ணிறத்தில் கருப்பு பொட்டுக்கள் போட்ட அழகான ஒரு சட்டை இருந்தது. அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அதை அப்படியே திருப்பி அதே இடத்தில் வைத்துவிட்டு சத்தம் சந்தடியில்லாமல் மெல்ல தன் அறையினுள் மீண்டும் புகுந்தாள். இதைப்பார்த்த சங்கரின் தாயார் வாய்விட்டே சிரித்தார். " சே இவள் என்ன பொண்ணு.. கொடுக்கிறபோது வேணாம் என்றாளே.. இப்ப மட்டும் ஆசையோடை எடுத்து பார்க்கிறாளே..""என எண்ணியபடி மாலை நேர தேநீருக்காக தயாரித்த வாய்ப்பன்களை எடுத்து மேசையில் வைத்துக்கொண்டார். அதன்பின் வெளியே வந்து மதுமதியையும் தேநீர் அருந்த அழைத்தபடி சோபாவில் சற்று அமர்ந்தார். அங்கே வந்த மதுமதி" சூப்பர் மாமி எனக்கு பிடித்தமான வாய்ப்பன் செய்திருக்கிறியள்.." என்றபடி
அதில் ஒன்றை எடுத்து சுவைத்தபடி சோபாவில் மாமி அருகில் அமர்ந்தாள். இருவரும் கதைத்தபடி தேநீர் அருந்திக்கொண்டிருந்த சமயம் அங்கு வந்த சங்கர் மௌனமாக தன் அறைக்குள் நுழைந்தான். அவன் முகத்தில் வாட்டம் தெரிந்தது.. சற்று நேரத்தின் பின்னர் வெளியே வந்த சங்கர் கீழே இருந்த பார்சலை மேசையில் வைத்தபடி தேநீரை சுவைத்துக்கொண்டிருந்தான்.. அந்த இடத்தைவிட்டு அகன்ற மதுமதி அவன் வைத்த பார்சலை எடுத்தபடி தன் அறைக்குள் நுழைந்தாள்.. அதை கவனித்த சங்கரும் தாயாரும் மெல்ல தமக்குள் சிரித்துக்கொண்டனர். மதுமதி சங்கரை கோபித்துக்கொண்டாலும் அவனை புண்படுத்தியதுக்கு தன்னைத்தானே நொந்துகொண்டாள். ஆனால் அவனிடம் மன்னிப்பு கேட்க அவளின் ஈகோ இடங்கொடுக்கவில்லை. சங்கர் அவளின் குணத்தை நன்குஅறிந்து இருந்தான்.. மலரிலும் மெல்லிய மனதுடையவள் என்பதும் அவனுக்கு தெரியாததா..
திடீரென்று புதுச்சட்டையை அணிந்து கொண்டு வெளியே வந்தவள்"" மாமி எப்படி இந்த சட்டை.. ரொம்ப வடிவாக இருக்கல்லோ.. பாருங்க.. " என்றபடி ஒரு சுற்று சுற்றினாள். மாமியோ ""ரொம்ப அழகாய் இருக்கு புதுசா? " என ஒன்றும் தெரியாதமாதிரி வினாவ " இல்லை மாமி உங்க டாக்டர் ஐயாதான் தந்தாரு.." என்றபடி சங்கரின் முகத்தை பார்த்தாள். அவன் வேண்டுமென்றே முகத்தை "ம்" என்றே வைத்திருந்தான். அவன் அருகே வந்தவள்" டாக்டர்ஐயா நன்றி ரொம்ப பிடிச்சிருக்கு"்என்றவளை அப்போதுதான் ஏறெடுத்து பார்த்து சிறுபுன்முறுவல் செய்தான் . மதுமதிக்கு அப்போதுதான் தன்மேல் இருந்த குற்ற உணர்வு அகன்றது.
மாடிப்படிகளில் ஏறிப்போனவளைத்தடுத்த சங்கர் " உன்னோடு பேச வேண்டும்.. வெளியில் போய் பேசுவோமா? எனக்கேட்டான். மதுமதியின் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் வந்தபோதும் கேள்விகேட்டு மறுத்து அவன் மனதை மீண்டும் கவலையடைய வைக்காமல் " ஒரு ஐஞ்சு நிமிசம் பொறு சங்கர் வாறன் " என்றவள் . தலைமுடியை வாரி அழகுபடுத்தி முகத்திற்கு பவுடர் பூசி ஒரு சிறு அலங்காரத்தோடு வந்து காரில் அவனோடு ஏறினாள் . "சங்கர் மெல்ல காரை ஓட்டு.. றோட்டெல்லாம் ஒரே சினோ பளிங்கு போல கிடக்கு.. சறுக்கும் கவனம்" என்றபடி அவர்களுக்கு விடைகொடுத்து தாயார் வழியனுப்பினார்.
சங்கரின் முழுக்கவனமும் காரை செலுத்துவதிலேயே இருந்தது. பனி பொழிந்தபடி இருந்தது. காற்றும் பலமாக வீசியது. ஆஸ்பத்திரிமுன் காரை நிறுத்தியவன் " கவனம் மது சறுக்கிறது.. மெல்லமாக இறங்கு " என்றபடி முன்னே நடந்தான் . அவனை பின் தொடர்ந்த மதுமதி எதுவும் பேசாமல் நடந்தாள்.
அங்கு அனசன் சுழல் நாற்காலியில் இருந்தான். இவர்களை கண்டதும் அனசனின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. பிரிந்தவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும்போது
அங்கு வார்த்தைகள் ஏது.. மௌனம்தான் அங்கு பேசியது.. மதுமதி விக்கி விக்கி குழந்தையைப் போல அழுதாள். நிலைமையை புரிந்த சங்கர் " நீங்கள் பேசுங்க எனக்கு வேறு ஒரு அலுவல் இருக்கு" என அங்கிருந்து அகன்றான்.
" அனஸ் எத்தனை மாதங்கள் ஆச்சுடா..உன்னைவிட்டு நான் பைத்தியமாகவே இருந்தேனடா.. நான் கனவிலும் நினைக்கலைடா உனை நான் திரும்பவும் பார்ப்பேன் என.. தாங்ஸ் கோட்" அழுதபடி இருகரம் கூப்பினாள். அவளின் கரங்களை பிடித்தபடி" மது நான் கண்விழித்ததும்பார்க்க நினைத்தது என் தேவதையைத்தான்.. ஆனால். இரண்டு வாரம்போயும் பார்க்க கிடைக்கலை. உன் இதயம் பலவீனமானது அதனால் இதை சங்கரும் சொல்லலை... "" என்ற அனசன்" மது பார் ஓடித்திருந்த என் கால்கள் எங்கே? எல்லாமே தொலைஞ்சிட்டுது. நான் உயிரோடு இருந்து என்ன பலன்? சொல்லு மது" என டெனிசில் கத்தினான்.
அவனின் வேதனையான வார்த்தைகளை கேட்க முடியாத அவளின் இதயம் வலித்தது. கண்கள் இருட்டுவதுபோல வரத்தொடங்க மெல்ல கதிரையில் அமர்ந்தாள்.
(தொடரும் )

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.