புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் தொடர் கதை ' ❤️பனிவிழும் மலர் வனம்❤️ அத்தியாயம்-37-38"பனிவிழும் மலர் வனம்"❤️அத்தியாயம்-37🌺
பலத்த காற்று அசுரத்தனமாக வீசியது. சில்லென்றகுளிரில் சிலிர்த்துப்போன அவளின் உடலை ஏக்கப்பெருமூச்சுக்கள்தான் சூடேற்றிச்சென்றன..கற்கள் எறிவது போல் கண்ணாடி யன்னலில் வழியே விழும் வந்து பனித்துகள் கட்டிகளின் ஓசையும் அவளுக்கு ஏதோ ஒரு பயப்பிராந்தியை ஏற்படுத்திச்செல்லவும், மதுமதியின் மனத்தை ஈட்டியால் யாரோ வந்து குத்துவதுபோல் உணர்ந்தாள்..மூடிய கண்களை மெல்ல மெல்லத்திறந்தாள். அனசனோ வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
மௌனத்தின் பரிபாஷையை இரு உள்ளங்களும் பரிமாறிக்கொண்டன..
"உனை உயிருக்கு மேலாகத்தானே காதலிக்கிறேனடி... நீயும் நானும் சேர்ந்துவாழத்தானே அழகாக நான் அமைத்தேன் வீடு.. அந்த வீடும் இன்று கடலோடு தனியாகத்தான் பேசிக்கிடக்கிறது அன்பே நீ பாராய்...அதைப்போல நானும் தனிமையில் கிடந்து வாடுகிறேன்....சே சே..என்ன வாழ்க்கையடா இது என சொல்லி எழக்கூட என்னால் முடியலையே...வாழ்வில் நினைத்தது எல்லாம் நடந்தது.... நீயும் என்னோடு ஒன்றாகும் இந்த நேரம் பார்த்துஎன் வாழ்வில் ஏனடி இடி விழுந்தது??இந்த முடவனோடு நீ இனி வாழ்வாயா?? யேசுஸ் எனைப்பார்.. கருணை காட்டாயோ..."அவன் கண்கள் மீண்டும் குளமாகின. அதை கவனித்த மதுமதி மெல்ல அவனருகில் வந்து முழந்தாளிட்டு உட்கார்ந்தாள். ஆதரவாக அவன் கைகளைப்பற்றி "" காலுக்கு காலாக உன்னோடு நான் வருவேன்.. உனக்காக உயிர் தருவேன்., நீயே என் சொந்தமடா.. நீயே என்னுயிர் ஆகிறாய்...எனக்கு எல்லாமே நீதான்...அழுவாதே... வாழ்க்கை வாழத்தான்.. என்னைப்பார் என் முகத்தைப்பார்..உன் நிழலாக நான் தொடர்ந்து வருவேன் பாரடா.. கஸ்ரத்திலும் நஷ்டத்திலும் உன்னோடு எப்போதும் வருவேன் .. கலங்காதே""விசும்பி விசும்பி அழுதாள் . அவன் கைகளில் அன்போடு முத்தமிட்டாள்.
குனிந்து மெல்ல மதுமதியின் அழகான தாமரையொத்த வதனத்தை கையிலேந்திய அனசன் மெல்ல தன் இதழோடு இதழ் வைத்து முத்தம் பதிக்க முற்பட்டபோதும் தீடீரென்று தன் எண்ணத்தை நினைத்து வெட்கப்பட்டுசற்று பின்வாங்கினான். அவன் தரும் அந்த முத்தத்தை ஆவலோடு ஆசையோடு எதிர்பார்த்திருந்த மதுமதிக்கு ஏமாற்றமாக போய்விட அவன் கைகளை பற்றியபடி " ஏண்டா என்னாச்சு" மெல்லியதாய் கிசுகிசுத்தாள். " இல்லை மது வேணாம்.. நீ போட்ட சத்தியத்தை மறந்து விட்டாயா?? அன்று உன்னை முத்தமிட வரும்போது நீ சொன்ன வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சோடு .. கல்யாணத்திற்கு பின்புதான் என் முத்தத்தை அனுமதிப்பேன் என்று நீ செய்த சத்தியத்தை மறந்து விட்டாயா?? அனுதாபத்திற்காக இப்ப நீ மாறக்கூடாது.., பண்பாடு தவறாத தமிழ்ப்பொண்ணு நீ... உடல்களை தாண்டியது உள்ளத்தைத்தொட்டது நம்காதல்..இது ஒரு தெய்வீகக்காதல் ...எம்மை பாட ஷெல்லியும் வேணாம் சேக்ஸ்பியரும் வேணாம்.. காலம் வரும் நாளை நம்காதலை உலகமே பாராட்டும்.... என் அன்புத் தேவதையே.."".என அவளின் கைகளை இறுகப்பற்றினான். அவன் பிடித்தபிடி அசுரப்பிடிபோல் அவளுக்கு இருந்தது.. அவனை விட்டு போய் விடாதே என்று கூறுவதுபோல் இருந்தது.அவளின் காந்தள்மலர் விரல்களும் ரோஜாக்கன்னங்களும் செக்கென சிவந்துபோய் அத்திப்பழங்களாக மாறின. "அனஸ் ..கை நோவுதடா விடு" கைகளை உதறியபடி அவள் எழுந்தாள். அவனுக்குப்பிடித்தமான தோடம்பழபானத்தை எடுத்து அவனுக்கு பருக கொடுத்தாள்.
அதே நேரம் மெல்லிய இருமலோடு அங்கு வந்த சங்கர் சொக்லேட் பக்கற் ஒன்றை நீட்டினான். அதை பகிர்ந்து மூவரும் உண்டபடி பல விடயங்கள் பற்றி பேசினார்கள். கதையின் நடுவே அனசன் இன்னும் இரு நாட்களில் தான் தன்வீடு போவதாகவும், அவனை கவனிப்புக்கு உதவியாக மருத்துவ பராமரிப்புக்கு உதவியாக தாதிமார் வருவார்கள் என கூறினான்.அவனின் உடல்நிலையில் வந்த மாறுதலும், முன்னேற்றமும் கண்டு அளவில்லா மகிழ்ச்சி எல்லோரும் அடைந்தனர். அனசனின் தாயார் தன் மகன் தனக்கு திரும்ப கிடைத்ததையிட்டு ஆண்டவனுக்கு நன்றி செலுத்தினார் .
அனசனிடம் இருந்து விடைபெற்ற இருவரும் வீடுநோக்கி பயணித்தார்கள். இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசவில்லை. பனிமழைக்கும் காற்றுக்கும் போட்டிபோட முடியாமல் காரும் ஆமை வேகத்தில் நகர்ந்தது.
வீடு வந்தவர்களை பார்த்த சங்கரின் தாயும்தந்தையும்"என்ன இரண்டு பேரும் ஒன்றும் பேசாமல் வாறியள்.. எங்கை போனீங்க.. " என . "அது வந்து.." என மது மதி தொடங்க அதை இடைமறித்த சங்கர் சும்மா வெளியில் போய் கோப்பி குடித்திட்டு (f)பிரண்ட்டையும் பார்த்திட்டு வாறம் .. என்னம்மா சாப்பாடு.." என்ற படி உடுப்பை மாற்ற அவன் செல்ல மதுமதியும் புன்முறுவலோடு தானும் உடுப்பை மாற்ற சென்றாள்.
உணவு பரிமாற்றத்தின் இடையில் சங்கரின் தாயார் சொன்னார். " தம்பி தை பிறந்திட்டுது.. உனக்கு ஒரு கல்யாணத்தை செய்து பார்த்திட்டன் என்றால் நான் நிம்மதியாக இருப்பன். ஒன்றுக்கும் நீ சம்மதிக்கிறாய் இல்லையே... " என.. சங்கர் தலையை சற்று நிமிர்த்தி மதுமதியை பார்த்தான் . அவளோ தன் கவனத்தை இவர்கள் பேச்சில் செலுத்தாது சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
" நீ சாப்பிடு என் காதலின் அவஸ்தை உனக்கு புரிய நியாயமில்லை..உன் உள்ளத்தில் அவன்தானே.. "என மனதிற்குள் சிந்திந்தபடி"" அம்மா நான் இடமாற்றத்திற்கு கேட்டிருக்கேன்.. இதைவிட வேறு ஆஸ்பத்திரிக்கு போற ஐடியா இருக்கம்மா... " என மெல்ல இழுத்தான் .
அப்போதுதான் மதுமதி தலையை நிமிர்த்தி"" உனக்கென்ன பைத்தியமா? கிட்ட உள்ளதை விட்டு எட்ட போக நினைக்கிறாய்?? அந்த கதையை மறந்திடு..." என்றாள். அதற்கு அவனின் தாயும் தந்தையும் ""அதுதான் கேள் பிள்ளை.. ராசாக்கு இங்கு என்ன குறைச்சல் என்று...ஏகோபித்த குரலில் சொல்ல.. "என்னை புரியுங்கோ. ஏதோ எனக்கு இங்கு பிடிக்கலை.." என்றபடி மௌனமானான்.
"மது என்னை பிடிக்கும் என்று ஒரு வார்த்தை சொல்லு. இந்த உலகத்தையே உன் காலடியில் தருவேன் . போ நீ போ . உன் நினைவு முழுதும் அவன் தானே.. எப்படி எனை நினைப்பாய்??
அவனின் மனம் அழுதது.....
(தொடரும்)
ரதிமோகன் ❤️


டென்மார்க்  ரதி மோகன் எழுதும் தொடர் கதை '

❤️பனிவிழும் மலர் வனம்❤️
அத்தியாயம்-38
காதல் வலியைத்தந்தபோதும் அதை வெளிக்காட்டாது சங்கர் தன் இயல்பான புன்னகைக்குள் புதைத்துக்கொண்டான்.வேலை மாற்றம் ஒன்று மனமாற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கையொன்று அவனோடு எப்பவும் இருந்தது. எப்படியும் மதுமதியை விட்டு தூரப்போயிடவேண்டும் என்ற எண்ணம் வலுவானது. மதுமதியுடனான தொடர்பு மோதலோடு ஆரம்பித்து இன்று காதலாக மாறும் என அவன் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. "வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.. " என்ற பாடலை வாய்க்குள் முணுமுணுத்தபடி கட்டிலில் மெல்ல சாய்ந்தான்.
மனச்சோர்வும் உடற்சோர்வும் சேர்ந்து துரிதமாகவே அவனுக்கு தூக்கத்தைக்கொடுத்தது. உயிரை உறைய வைக்கும் குளிர் வெளியில் மைனஸ் 10 ஐ காட்டியது. வெப்பமாக்கி மூலம் பெறப்படும் வெப்பம் வீட்டிற்குள் இதமாக இருந்தது. போர்வைக்குள் முடங்கிபோய் கிடந்தான். அதிகாலை 4 மணியிருக்கும் தொலைபேசி சத்தம் சங்கரின் தூக்கத்தை கலைத்தது. ஆனால் எல்லோரும் தூக்கத்தில் இருந்ததால் எவரும் அதை தூக்கியதாக தெரியவில்லை. மெல்ல எழுந்து "கலோ நான் சங்கர்" என எதிர் முனையில் "ஓஓ மச்சு நீயா .. எப்படி இருக்காய்.. எங்களோடை எல்லாம் பேச மாட்டாய் என்ன..ஓகோ டாக்டராச்சே.. " என "" அப்படிஎல்லாம் இல்லையே நீ என்ன பண்றாய்" என தொடங்கி அவர்கள் சம்பாசணை நீண்ட நேரமானது. மதுவின் தங்கை அவளுக்கு எதிர்மாறு அதிக பிரசங்கி. இறுதியில் அக்காளிடம் தொலைபேசியை கொடுக்கச்சொல்ல மெல்ல போய் மதுமதியின் அறைக்கதவை தட்டினான் .
தூக்கக்கலக்கத்தோடு கண்ணை கசக்கியபடி கதவைத்திறந்த மதுமிதா. " என்ன சங்கர் இந்த நேரத்திலை" என்றபடி வெளிர் நீல இரவு உடையில் நீல வானில் உலா வரும் நிலாவாக இருந்தாள் . அங்கங்கள் உடையூடு தெளிவாக தெரிய அதை பார்த்த சங்கருக்கு ஏதோ கூச்ச உணர்வோடு "" உன் தங்கைதான் லைனில்..." என்றபடி தொலைபேசியை கொடுத்துவிட்டு விடுக்கென்று தன் அறையை நோக்கி நடந்தான். எத்தனை பெண்களை கடந்து சென்றிருப்பான். எத்தனை பெண்சினேகிதிகளுடன் பழகியிருக்கிறான். ஆனால் இந்த மதுமதி ஒருத்திதானே அவனை பைத்தியமாக்கி போதைஊட்டுகிறாள். காதல் நரம்பை தட்டி இளமைக்கு தாகம் ஊட்டுகிறாள்"" இவள் என்ன ரம்மையா ஊர்வசியா இல்லை மன்மதனை மயக்கும் ரதியோ.".. என மனதிற்குள் எண்ணியவாறு காதலெனும் நோயால் வருந்தினான்.
தாயகத்தில் நேரம் முற்பகலை அண்மித்து கொண்டுஇருந்தது. மதுமதியின் தாயார் சமையல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். மனம் மட்டும் மதுமதியை பற்றியே சிந்தித்த வண்ணம் இருந்தது. எப்படியும் அவளை மாலையும் கழுத்துமாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் அவருக்கு மேலோங்கி இருந்தது. தனது அண்ணனோடும் மச்சாளோடும் பேசிய வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கை தருவதாகவும் இருந்தது. சங்கரின் சாதகத்தை அனுப்பி வைப்பதாக அவர்கள் சொன்னது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ""ஆண்டவனே பத்து பொருத்தமும் சரிவர அமையவேணும்.. "மனதிற்குள் இறைவனை வேண்டிக்கொண்டார். "அம்மோய் கேட்டீங்களா.. சங்கர் மச்சு சூப்பரா பேசுறானே.. பேச்சிலேயே குணம் தெரியுது.. இந்த அக்கா இருக்காளே சுத்த வேஸ்ற்று... நானென்றால் அங்கு இருந்தால் லவ் பண்ணியிருப்பன்"" என கல கல சிரித்தாள். " இப்ப உனக்கு ரொம்ப கதை ஜாஸ்தி ... போய் அலுவலைப்பார்... " என்றபடி தரையில் காலை நீட்டி அமர்ந்த அந்தத்தாயின் உள்ளத்தை ஏதோ கவலை வாட்டியது. " இந்த மதுமதி மாறுவாளா..இல்லை வெள்ளைக்காரனோடுதான் இன்னமும் வாழ்வேன் என அடம் பிடிப்பாளா..." ஆயிரம் கேள்விகள் மனதிற்குள். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் அவள் மாற்றமுடியும் என்ற ஒரு நம்பிக்கை அந்தத்தாயின் மனதில் இருந்தது.
மதுமதியின்தாய் ஒருபோதும் வேற்றுமத மொழி இன கலப்பு திருமணத்தை ஆதரிக்கபோவதில்லை.சாதி விட்டு சாதி மாறி கல்யாணம் கட்டி கொடுக்க தயாராகவில்லை. அவர் வாழ்ந்த வாழ்வியல் வேறு. கலப்புத்திருமணம் என்ற பேச்சுக்கு மதுமதி வீட்டில் அனுமதி கிடையாது என்பதும் மதுமதிக்கும் தெரியும். சுத்த சைவப்பரம்பரையில் தோன்றிய மதுமதி கிறீஸ்தவனை மணம் முடிப்பது என்பது தாயாரை பொறுத்தவரை சாத்தியமே இல்லை. இந்தளவு நிலை அறிந்திருந்த மதுமதி எப்படி காதலில் வீழ்ந்தாள் என்பதும் அதிசயமே. காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இங்கு நிலைமை இப்படி இருக்க...
அனசன் தன் எதிர்காலத்தை நினைத்து மனதிற்குள் அழுது கொண்டிருந்தான் . "" பாவம் மதுமதி அவள் எனக்காக ஏன் சந்தோசத்தை இழக்கணும்.. இந்த முடவனோடு எப்படி வாழ முடியும்.."" தன்னையே கேள்வி கேட்டபோதும் அந்தக்காதல் தேவதையின் நினைப்பொன்றே தொடர்ந்து அவனை வாழ வைக்கிறது என்பதை புரிந்துகொள்ள எவருமில்லை...
(தொடரும் )
ரதிமோகன் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.