புதியவை

கண்களின் வார்த்தைகள் *மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்*

கண்களுக்கு வார்த்தையெனச் சொல்லும் போது
   காதல்தான் பலருக்குக் கருத்தில் தோன்றும்.
புண்ணுக்கு  மருந்தேபோல் கண்ணில் தோன்றும்
   புதுப்பார்வை காதலர்க்கு வார்த்தை யாகும்.
கண்ணாலே காதலியர் சொல்லும் வார்த்தை
   காதலனின் உணர்வுக்கு வலிமை யென்பார்.
கண்களின்வார்த் தையென்றால் இவையா நண்பா.?
    கண்டிப்பாய் இல்லையில்லை விளக்கு கின்றேன்.

எழுதுகோலின் கண்ணிருந்து சொட்டும் மையின்
   எழுத்துகளின் வார்த்தையினால் எழுச்சித் தோன்றும்
உழுகின்ற விவசாயி உடம்புக் கண்ணில்
   உதிர்கின்ற வியர்வைதான் உணவை நல்கும்
அழுகின்ற வானத்துக்கண்ணின் வார்த்தை 
   அனைவர்க்கும் உதவுகின்ற மழையாய்ப் பெய்யும்.
எழுகின்ற கடல்முகத்தின் அலைக்கண் வார்த்தை
   எழுச்சியுடன் முயற்சியினை எடுத்துக் கூறும்.

சுட்டெரிக்கும் பகலவனின் சுடர்க்கண் வார்த்தை
   துயிலெழுப்பும் தூயவொளி தந்தே வீழும்.
கட்டழகு வான்மகளின் கடைக்கண் வார்த்தை
   காரிருளில் வெண்ணிலவாய் ஒளியை வீசும்.
பட்டவுடன் குளிர்கின்ற தென்றல் கண்ணின்
   பார்வைதான் மென்காற்றைப் பரப்பிச் செல்லும்.
மொட்டவிழும் மலர்க்கண்ணின் வார்த்தை கூட
   மொய்க்கின்ற வண்டாலே தேனாய் மாறும்.

வாழ்கின்ற வாழ்நாளில் பயனாய் வாழ்ந்து
   மடிகின்ற செயலில்தான் இன்ப முண்டு.
தாழ்கின்றோம் சாதியின வன்மு றையால்
   சாக்காட்டில் வீழ்கின்றோம் பயனே யின்றி.!
பாழில்லா நல்வாழ்வைத் தருவ தற்குப்
   பார்வைபெற்றும் குருடரென வாழ்கின் றோமே.
ஆழ்த்திடுவோம் வன்செயலைக் கலவ ரத்தை
   அன்பாலே உலகத்தைப் பார்ப்போம் இன்றே.!
      

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.