புதியவை

குடிமகன் (சிறுகதை) நிரஞ்சன்


சுவரில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரத்தில்  கேசவன் தன் கட்டை விரலைச் சில வினாடிகள் வைத்து பின் எடுத்தார். அந்த இயந்திரம் "பீப்"பிட்டது. 

ஆலைகளில் கேட்கும் சங்கொலியின் டிஜிட்டல் வெர்ஷன் போல.

கை வைத்து எடுத்த பின் கேசவன் அதில் மணி பார்த்தார். மணி இரவு 8.05.

இன்னும் 12 மணி நேரம் தூங்காமல் அங்கும் இங்கும் நடந்து அலுவலகத்தைக் காவல் காக்க வேண்டும் என்று நினைத்த போது அவருக்குக் கொஞ்சம் கடுப்பு வந்தது

அந்தக் கடுப்போடு  அலுவலக வரவேற்பறையில் உள்ள மேசைக்கு அருகே போய் உட்கார்ந்து கொண்டார்.

அலுவலகம்  அவர் கண் முன்னே மெல்ல மெல்ல லேசாகிக் கொண்டிருந்தது.   

பணி முடிந்து கிளம்பிய  ஒவ்வொரு ஊழியரிடமும் கேசவன் எழுந்து சல்யூட் அடித்து குட் நைட் சொன்னார்.

தன்னை விட வயதில் குறைந்த நபர்களிடமும்  சல்யூட் அடிப்பதை நினைக்கும் போது அவருக்கு எரிச்சல் வந்தது.

அவருக்கு அது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக 
இதையே தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.  என்றாலும்  சமீப காலமாக தன் பணியின் மேல் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருந்தது.  

காரணம் தன்  குடிகாரப் பிள்ளை அன்பு. 

குடிப்பதையே முழு நேரத் தொழிலாகச் செய்பவன். அவன் மட்டும் பொறுப்போடு ஒரு வேலைக்குப் போய் சம்பாதித்து மனைவி , 
பிள்ளையைக்  கவனித்து  தன்னையும் அவன் அம்மாவையும் நன்கு பார்த்துக் கொண்டால் தான் ஏன் 60 வயதில் இந்த வேலைக்கு வர வேண்டும்? 

மனைவி இதய நோயாளி. 5 வயது பேரனுடன் மருமகள் இருக்கிறாள்.அவள் வேலைக்குச் செல்வதில்லை. 

பேரன் பள்ளிக்குப் போகிறான். 

மனைவியின் மருத்துவச் செலவு, பேரனின் படிப்புச்செலவு, வீட்டுச்செலவு, மகனின் குடிச்செலவு எல்லாவற்றையும் அவர் வாங்கும் ரூ.12,500 சம்பளம் தானே பார்த்துக் கொள்ள வேண்டும்?

கேசவன் பெருமூச்சு விட்டார். தன்னை நொந்து கொள்வதைத் தவிர அவரால் வேறு எதையும் செய்ய முடியவில்லை.கேசவன் டிவியில் சேனல் மாற்றிக் கொண்டே இருந்தார். இருளில் டி.வியிலிருந்து புறப்பட்ட வண்ணக் கவலைகள் சுவரில் ஒளி நடனமிட்டன. ஒரு 15 நிமிடம் பார்த்திருப்பார். அதற்குள் சலித்து விட்டது.

மணி நள்ளிரவு 1.30 அடித்த  போது கேசவனின் செல்ஃபோன் ஒலித்தது. அவர் அதை எதிர்பார்க்கவில்லை.  மெல்லிய திடுக்கிடலோடு செல்ஃபோனை எடுத்தார். வீட்டிலிருந்து தான் அழைப்பு.

பதற்றத்தோடு "ஹலோ" என்றார்.

"மாமா நான் தான் பேசறேன்"

"சொல்லு மா. என்ன இந்த நேரத்துல"

"அத்தை அப்படியே நெஞ்ச பிடிச்சிட்டு மயங்கி விழுந்துட்டாங்க"

"அய்யோ"

"மாமா நீங்க உடனே கிளம்பி வர்றீங்களா?"

"நானா... நான் எப்படி மா... அ... அன்பு இல்லயா?

"அவர் குடிச்சுட்டு வந்து அப்படியே படுத்துட்டாரு. என்ன செஞ்சாலும் எந்திரிக்க மாட்டேங்கிறாரு"

கேசவனுக்கு ஆத்திரமாக வந்தது. அடக்கிக் கொண்டார்.

"ம்ம்ம்.... சரி நான் வர்றேன்".

நாம் போய்விட்டால் அலுவலகத்தை யார் பார்த்துக்கொள்வார்கள் ? என்ற பயம் தொற்றிக் கொண்டது

ஆனால்  அந்தப் பயத்தில் கேசவனால் எதையும் யோசிக்க முடியவில்லை.  

தன் மனைவி , மருமகள் மற்றும் பேரனோடு கேசவன் ஆட்டோவில் மருத்துவமனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

தன் அலுவலக எச்.ஆருக்கு ஃபோன் செய்தார். அவர் எடுக்கவில்லை.

அய்யாசாமியை கேட்கலாம்.  ஆனால் தனக்கு முன் தான் அவன் 12 மணி நேரம் பணிபார்த்திருக்கிறான். அவனை மீண்டும் வரவழைப்பது தவறு.

அதையும் மீறி அவனைக் கூப்பிட்டாலும் அவன் வருவதற்கு ஒரு மணி நேரமாகுமே? 

மகேஷுக்கு இன்று பணியில்லை அல்லவா? அவனை வரச் சொல்லலாமே. அவன் தங்கியிருக்கும் மேன்ஷன் அலுவலகத்துக்கு அருகில் தானே இருக்கிறது.

கேசவன் சற்றுத் தெம்புடன் மகேஷை அழைத்தார்.  

"அண்ணே நான் ஊருக்கு போயிட்டிருக்கேன்"

"ஊருக்கா?"

"ஆமாண்ணே. என் தம்பிக்கு கல்யாணம். "

."ஸ்ஸ்ஸ்..சொன்னே இல்ல. மறந்தே போயிட்டேன்"

"ஆமாண்ணே. என்ன அண்ணே இந்த நேரத்துல...."

"ஒன்னும் இல்ல பா"

கேசவன் கட் செய்தார். நாம் வேறு யாரையும் காவலுக்கு வைக்காமல் அலுவலகத்தை அப்படியே  விட்டுவிட்டு வந்து விட்டோமே? ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் என்னாவது? இதனால் தனக்கு ஏதேனும் பிரச்னை வருமா? 

இதயம் படபடத்துக் கொண்டே இருக்க ஆட்டோ மருத்துவமனை வாசலில் வந்து நின்றது

பெருமூச்சு விட்ட படி  கேசவன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
அருகில் அவரது ஆருயிர் நண்பன் சதாசிவம் தோளில் தடவி
"டாக்டர் என்ன சொன்னார்? காமாட்சிக்கு ஒன்னும் ஆபத்தில்லையே?" என்று கேட்டார். 

"நல்ல வேளை  நேரத்துக்கு கொண்டு வந்துட்டீங்க. ஒரு 10 நிமிஷம் லேட்டா வந்திருந்தா உயிரே போயிருக்கும்னு சொன்னார்"

"முருகா"

"ஆனா பைபாஸ் சீக்கிரம் பண்ணியாகணும்னு சொல்லிட்டாரு.  எப்போன்னு தெரியல. அது வரைக்கும் காமாட்சிய இங்க தான் இருக்கணுமாம்.  அவசரத்துல காசு எதுவும் எடுத்துட்டு வரல. வீட்டுக்கும் போக முடியல. அதான் உனக்கு ஃபோன் பண்ணேன். ஏதாச்சும் மருந்து வாங்கணும்னா கூட காசில்ல"

"கவலைப்படாத. என் கிட்ட பணமிருக்கு. ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும்?"

"இரண்டரை லட்சம் ஆகுமாம்"

"கையில எவ்வளவு இருக்கு? வேணும்னா சொல்லு. எனக்கு சில நண்பர்கள் இருக்காங்க. அவங்க கிட்ட கேட்டு பாக்கலாம்"

"இன்னிக்கி காலைல எங்க எச்.ஆர்.பேசினாரு. அவர் கிட்ட விவரத்தை சொன்னேன். கவலைப்படாதீங்க. இன்சூரன்ஸ் மூலம் பணம் கிடைக்கும் அப்படின்னாரு. கொஞ்சம் ஆறுதலா இருந்தது"

"விடு கேசவா. எல்லாம் சரியாயிடும்"

"இல்ல சிகா சரியாகாது"

"என்ன சரியாகாது?"

"பேருக்குத் தான் பிள்ளைன்னு பேரு. வழக்கம் போல இன்னிக்கும் குடிச்சிட்டு வந்து படுத்துட்டான். எந்திரிக்கவே இல்ல"

"அத விடு பா. அதான் தெரிஞ்ச விஷயமாச்சே"

"எப்படி விட முடியும். இவன் எந்திரிக்காததுனால நான் ஆஃபிஸுல போட்டது போட்டபடி ஓடியாந்துட்டேன். இப்ப நினைச்சா கூட பகீர்னு இருக்கு"

"தப்பு தான்"

"இன்னிக்கு எப்படியோ அவள காப்பாத்திட்டேன். இதே மாதிரி எப்போதும் நடக்குமா? இவன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கான்?"

சற்று நேரம் அமைதி நிலவியது.

"ஆயிரம் வாட்டி சொல்லியாச்சு. உனக்குன்னு குடும்பம் இருக்குடா. அத நீ  காப்பாத்தணும்டா. அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்ல. குடிச்சு குடிச்சு சீரழியாதேன்னு. அவன் கேக்கற மாதிரி இல்ல. இவளுக்கு முதல்ல சரியாகட்டும். அவன இரண்டுல ஒன்னு பாத்துடறேன்"

"கேசவா நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே"

"இல்ல சொல்லு"

"என்னிக்காவது உனக்கு என்ன பிரச்னை? ஏன் நீ குடிக்கறே? அப்பா கிட்ட சொல்லக்கூடாதான்னு அன்பு கிட்ட அன்பா கேட்டிருக்கியா?

கேசவன் பதில் ஏதும் பேசாமல் இருந்தார்.

"நீ அவன் கிட்ட அன்பா பேசி நான் பாத்ததே இல்ல. அதட்டி தான் பாத்திருக்கேன். அவனுக்கு என்ன பிரச்னையோ? 

"அவனுக்கு நான் என்ன குறை வச்சேன். கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். படிச்சு பெரிய ஆளா வருவான்னு பாத்தா பிளஸ் 2 ஃபெயில் ஆகி அப்புறம் படிப்பு பக்கமே போகல. நிறைய பேரு கைல கால்ல விழுந்து வேலை வாங்கிக் கொடுத்தேன். ஆனா பாவி பையன் எந்த ஒரு வேலையிலயும் நிக்க மாட்டேங்கறானே"

" அதெல்லாம் சரி . அவனுக்கு ஏதாவது ஆசை இருந்திருக்கலாம் . அது  நிறைவேறாத விரக்தியில குடிக்க ஆரம்பிச்சிருக்கலாம்"

"என்ன பெரிய ஆசை, லட்சியம்? என்ன இவரு பெரிய கலெக்டர் ஆயிருப்பாரா?"

"அப்படி இல்ல கேசவா.  அவனுக்கு ஏதாவது திறமை இருந்திருக்கலாம்.  அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு என்னிக்காவது கேட்டிருக்கியா?  என்ன செய்யணும்னு ஆசைப்படற  அப்படின்னெல்லாம் பேசியிருக்கியா?

"....இல்ல"

"இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல. "

" நீ என்ன சொல்ல வர்றே. அவன் குடிக்கறது சரின்னு சொல்றியா?"

"இல்ல. அவன் குடிக்கறது தப்பு தான். ஆனா நீ கேட்டா குறைஞ்சா போயிடுவே. கேட்டு தான் பாரேன்.   அவன் குடிக்கறத நிறுத்தினா  நல்லது தானே"

"பேசினா அப்படியே குடிக்கறது நிப்பாடிடுவாரோ?'

"எனக்காக ஒரு வாட்டி பேசிப் பாருடா"

"என்னமோ சொல்ற எனக்குத் தெரியல"

கேசவனால் அதை ஏற்க முடியவில்லை. ஆனால் நண்பன் சொல்வதைத் தட்டவும் முடியவில்லை. அவர் ஈகோ இரண்டுக்கும் நடுவே தடுப்புச்சுவர் போல் எழுந்து நின்றது.


"சார். கூப்டீங்களா" என்று பவ்யமாக கேட்டபடியே கேசவன் தன் எச்.ஆர்.மானேஜர் அருகில் வந்து நின்றார்.

"வைஃப் எப்படி இருக்காங்க?"

"இப்ப பரவாயில்ல சார். இன்னும் இரண்டு நாள்ல ஆபரேஷன் "

"இன்சூரன்ஸ் க்ளெயிம் பண்ணிக்கிட்டீங்க இல்ல"

"ஆங்"

"ஓகே" என்று சொல்லிவிட்டு தன் மேசையிலிருந்த ஓர் வெள்ளை உறையை எடுத்து நீட்டினார். கேசவன் புரியாமல் அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தார். உள்ளே ஒரு காகிதத்தில் ஏதோ ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அவருக்குப் புரியவில்லை.

"இது என்னது சார்?"

"மெமோ"

"அப்படின்னா?"

"இனிமே இந்த மாதிரி தப்பு பண்ணாதீங்க. அடுத்த வாட்டி இந்த மாதிரி ஆஃபீஸ தனியா விட்டு போனீங்கன்னா உங்கள வேலைய விட்டே நிறுத்த வேண்டியிருக்கும் அப்படின்னு எழுதியிருக்கு."

"சார். என்ன சார் இது?  என் பொண்டாட்டி சாகக் கிடந்தா சார்.
கிளம்பறதுக்கு முன்னாடி  உங்களுக்கு கூட ஃபோன் பண்ணேன். நீங்க எடுக்கல சார். அய்யாசாமி, மகேஷால கூட வர முடியல"

"உண்மை தான். இல்லைன்னு சொல்லல. இந்த பில்டிங்ல மூணு கம்பெனி இருக்கு. அவங்க செக்யூரிட்டி கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாமே"

"அந்த அவசரத்துல தோணல சார்"

"உங்களால நான் நிறைய பேரோட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கு.  எம்ர்ஜென்சி அப்படிங்கறதுனால மெமோவோட விடறேன். இதான் லாஸ்ட் டைம். இனிமே இப்படி பண்ணாதீங்க"

கேசவனுக்குக்  கண்ணீர் வந்து விட்டது. வாடி வதங்கிய முகத்துடன்  தன் இருக்கைக்குப் போனார்.

அப்போது அவரது செல்ஃபோன் பாடியது. எடுத்துப் பார்க்கையில் ஏதோ புது எண்ணாக இருந்தது.

"ஹலோ"

"நான் அன்போட ஃபிரெண்டு கதிர் பேசறேன் அங்கிள்"

"சொல்லு பா"

"லாரி மோதி அன்பு  ஸ்பாட்லயே செத்துட்டான் அங்கிள். இங்க தான்  நுங்கம்பாக்கத்துல. நீங்க உடனே வாங்களேன்.  குடிச்சுட்டு ரோட்ட க்ராஸ் பண்ணிருக்கான். அப்போ வேகமா வந்த லாரி...."

கேசவனால் தொடர்ந்து கேட்க முடியவில்லை. அவருக்குள் ஏதோ உருக்குலையத் தொடங்கியது.

அன்பின் மரணத்தை விட அன்புடன் இத்தனை நாள் பேசாமல்  இருந்தது தவறோ என்ற மெல்லிய குற்ற உணர்ச்சியும் அன்போடு தான் இன்று பேச நினைத்திருந்ததும்  அவருக்குள் இருந்து பெரும் வலியையும் சோகத்தையும் கிளர்ந்தெழச் செய்த படியே இருந்தன.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.