புதியவை

ஜெர்மனி மீரா எழுதும் தொடர் கதை வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 14-15
                                      வர்ணங்களின் வர்ணஜாலம்அத்தியாயம் 14 
நிகழ்வுகளில் நிழல்கள் நெஞ்சோடு சமர் செய்ய நிதர்சனத்தை உணர முற்பட்டவள், முட்டி மோதியது தன் முகத்தோடு போலும் . விழி நீர் நனைக்க மனதோடு வலிக்க கண்ணயர்ந்தாள் மயூரி.
ரமேஷ், அவள் கணவனோ மணம் கொண்டாலும் மனதை அடகுவைக்கவில்லை மனையாட்டியிடம் . அவள் கொண்ட கோபத்தின் காரணமும் அவனுக்கு புரியவில்லை . மாறாக அமைதியாக வலம் வந்தவள் தன் சுயரூபத்தை காட்ட தொடங்குகிறாள் என்ற மனகணக்கை தட்டி விட்டான் . காரணம் இங்கு இல்லை . கரணம் போடுகிறாள். „தேவையில்லாமல் இவள் ஏன் அனோஜாவிடம் பொறாமை கொள்ளவேண்டும் !“.
„ஆபீஸ் வேலை சம்பந்தமாக அல்லவா பேசிவிட்டு வந்தேன் . மயூரிக்கு சமையல் வேலையை இலகுவாக்கும் எண்ணத்துடன் அனோஜாவுடன் இரவு உணவையும் முடித்துக்கொண்டேன் . அன்று என்னைவிட்டே அகன்று அசைபோட்டவள், அலையாக இன்று அருகில் வந்து மெல்ல கரைதொடுகிறாள் . அப்படிப்பட்ட அனோஜாவின் அருகாமை ஆர்வத்தை கிள்ளினாலும் திரையை இழுத்துவிட்டு செய்து முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட் பற்றி கலந்தாலோசனையில் ஈடுபட்டு நேரம் பிந்தியமையினால் உணவையும் முடித்து வீடு வந்தேன்“ .
மயூரியின் வாடிய வதனம் அவன் உள்ளத்தை லேசாக உணர்த்த, சமாதானமாக்க அவள் விரும்பும் திரைப்படம் பார்க்க அழைப்பு விடுத்தால், இப்படியா சினம் கொள்ள வேண்டும்? . „இடையில் வந்தவள் எப்படி இடர் தரலாம் ?“. ரமேஷ் குமுறினான் . காரணமில்லாமல் கோபம் கொண்டவள் தன் பிழை உணர வேண்டும் . உணர்த்த வேண்டும் . தீர்மானித்துக் கொண்டான் .
அடுத்த வந்த இரு தினங்களும் திரை மறைவில் பனிப்போர் மூண்டது . பொறாமை தீயில் அவள் வெந்தாள் . கோபக்கனலில் இவன் கொதித்தான் . வெறுமை உலகில் இவள் உழன்றாள் , அவனோ வேண்டாத ஒருத்தியின் அருகாமையை வேண்டி நின்றான் .
அன்றும் முகம் பாராது வேலை சென்றவனை நினைத்து வேதனையுடன் வீட்டில் சுழன்றவள் கைப்பேசி அலறிய சத்தம் கேட்டு கணவன் தானோ என்று ஓடி வந்தவள் அறிமுகம் இல்லா தொலைபேசி இலக்கம் கண்டு வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டாள் .மறுமுனையில் மிக இனிமையான பெண் குரல் !வணக்கம் திருமதி ரமேஷ் , நலமா என்றது?“ .
மயூரி தன்னை சுதாகரித்துக்கொண்டவாறே , „வணக்கம் நான் நலம், நீங்கள் யார் ?, என்ன விஷயமாக அழைத்துள்ளீர்கள்? என்று மிக மரியாதையாக வினாவினாள் . மறுமுனையிலிருந்த பெண்ணவளோ சிரித்தபடி „திருமதி ரமேஷ் , எனது பிறந்தநாளை வரும் சனிக்கிழமை கொண்டாட உள்ளேன் . ரமேஷிடம் உங்களை கட்டாயம் அழைத்து வர கேட்டேன் . ஆனால் அவனோ நீங்கள் இப்படி பார்ட்டிகளில் கலந்துகொள்ள பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என்று மறுத்தான் . என் அழைப்பை நீங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வீர்கள் என்று சவால் விட்டு உங்களை தொடர்பு கொண்டேன் . நீங்கள் வருவீர்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்“ என்றவாறே அழைப்பை துண்டித்தாள் .
மயூரிக்கு குழப்பம் . „தான் பார்ட்டிக்கு போக விரும்புவதில்லை என்று ரமேஷ் எப்படி தானாக முடிவு செய்யலாம் ?. தன்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே . என்னை உதாசீனம் செய்கிறானே என்று அல்லவா நான் வேதனைபடுகிறேன் .அன்று இருவரும் கடைப்பக்கம் ஊர்கோலம் சென்ற வேளை எத்தனை ஆனந்தமாக இருந்தது . ரமேஷ் என்னுடன் மிக கரிசனையுடனும் அன்புடனும் நடந்து கொண்டானே . ஆனால் வீடு வந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது“ . அந்த நெருக்கம் மீண்டும் எப்படி வருமென்று தானே இவள் காத்துக்கொண்டு இருக்கிறாள் . நான் இந்த பெண்ணின் பிறந்தநாள் பார்ட்டிக்கு ரமேஷுடன் நிச்சயம் செல்ல வேண்டும். மனதில் நிச்சயம் செய்து கொண்டாள் . 
அதன்பிறகு அந்நாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டும் இருந்தாள் . அவளை உற்சாகம் தொற்றிக்கொண்டது . தான் அணிந்து செல்ல வேண்டிய சேலையை மிக கவனமாக தெரிந்தெடுத்தாள் . கூடவே ரமேஷ் என்ன அணிவான் என்ற எண்ணம் வர முதல் முறையாக அவன் உடைகள் இருந்த அலுமாரியை திறந்து பார்த்தாள்.
வழமையாக அவன் அணிந்த ஷர்ட் , பாண்ட்ஸ் என்பவற்றை கழுவி,அயர்ன் செய்து அவன் கட்டிலில் வைத்துவிடுவாள் . ரமேஷின் அலுமாரியை திறப்பதற்கு ஏனோ அவளிடம் தயக்கம் . அவர்களிடம் அந்த அன்னியோன்யம் இன்னமும் வராதமையே இவளின் தயக்கத்துக்கு காரணமாக இருந்தது . இவள் ஆர்வமாக இருந்தாலும் ரமேஷ் அல்லவா நெருக்கம் காட்ட முன் வரவேண்டும் . பெண் இவள் பாவம் என்ன செய்வாள் .
ரமேஷ் அவன் உடைகளை மிக சீராக ஒழுங்காகத்தான் அடுக்கி வைத்திருந்தான் . தன் அப்பாவை போல் அல்லாது இவன் தன் உடமைகளை மிக ஒழுங்காக வைத்திருக்கிறானே என்பதை காண அவளுக்கு பெருமையாக இருந்தது . அம்மா இல்லாமல் மயூரியின் அப்பாவினால் தனித்து இயங்கவே முடியாது . உடை என்றாலும் அம்மா தான் எடுத்து கொடுக்க வேண்டும் . அவர்களை போல் தானும் ரமேஷ்யும் வாழ வேண்டும் என்பதே இவளின் ஆசை .
எந்த ஷர்ட் நாளை பிறந்தநாள் பார்ட்டிக்கு தன் கணவனுக்கு எடுப்பாக இருக்கும் என்று நோக்கம் விட்டவள் கண்களில் மிக அழகாக சுற்றப்பட்ட ஒரு நகைப்பெட்டி ஒன்று கண்களில் தென்பட்டது . ஆர்வத்துடன் மெல்ல அந்த பெட்டியை எடுத்து திறந்துப்பார்த்தாள் .அவனை கேளாமல் இப்படி எடுத்துப்பார்ப்பது தவறு என்று ஒரு கணம் உறுத்தினாலும் உடனே அவ் எண்ணத்தை கைவிட்டு விட்டு அப்பெட்டியினுள் ஜொலித்த அழகிய சங்கிலியுடன் கூடிய பென்டன் அவள் கண்களை கவர்ந்தது . மெல்லிய அந்த சங்கிலியில் கோர்க்கப்பட்ட மலர்ந்தபூ போன்ற பென்டன், எனக்கு வைத்திருப்பதை என்னிடம் தராமல் இங்கே ஏன் வைத்திருக்கிறான் . குறும்புக்கார மன்னன் அவன் . அவள் விரல்களில் அந்த மலர் புன்னகைத்தது .
தொடரும் 
மீரா , ஜெர்மனி

                                  வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 15

பளபளத்தது நகை கையில்
படபடத்தது இதயம் 
கடுகதியாய் வந்த நினைவில்
சடசடத்தது அவள் கொட்டிய வார்த்தை
“அடடா, தவறு செய்து விட்டேனே . இதற்கு தானா அவசரபுத்தி என்பது . எனக்கு பரிசளிக்க அல்லவா இங்கே மறைத்து வைத்திருக்கிறார் . தகுந்த நேரம் பார்த்து காத்து இருந்தாரா? , அதற்குள் நான் கோபத்தில் வார்த்தைகளை அள்ளி கொட்டிவிட்டேனா?” கடுகடுத்தாள் மயூரி தன் மடமையை எண்ணி .
பூரிப்பதும் பின்பு வாடுவதும் அவள் வழக்கமாகி போகின்றதோ! . வீடு வந்தவனுக்கு ஆச்சரியம் . புன்முறுவலுடன் மனைவி காத்திருந்தாள். பிடித்த உணவுவகைகளை சமைத்திருந்தாள் . தோளை குலுக்கியவண்ணம் அவனும் புசித்தான் . வழமை திரும்பியது .
அனோஜாவின் பிறந்தநாள் தினம். அன்று வழமை போன்று ரமேஷ் வெளியே கிளம்பும் பொழுது மயூரி அவன் பின்னே ஓடி வந்தாள். “ரமேஷ் நான் எத்தனை மணிக்கு தயாராக இருக்க வேண்டும்?” என்றாள். பின்குரல் கேட்டு திரும்பியவன் “எதற்கு?” என்று புரியாது வினா தொடுத்தான் . “இன்று அனோஜாவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு போவதற்கு எத்தனை மணிக்கு நான் தயாராக இருக்கவேண்டும் என்று கேட்டேன்?. என்ன ரமேஷ் நீங்கள் அதை மறந்து விட்டீர்களா?. அவள் உங்களுடன் அல்லவா வேலை செய்கிறாள் . நாம் நிச்சயம் போக வேண்டும் . தொலைபேசியில் அவள் குரல் மிக இனிமையாக இருந்தது” என்று தொடர்ந்தாள் .
ரமேஷின் முகம் மாறியது . “மயூரி உங்களுக்கு பார்ட்டிகள் பிடிக்காது என்று நினைத்து வரமாட்டீர்கள் என்று கூறிவிட்டேன்”, சிரித்தவாறே, “தெரியும் ரமேஷ் , அனோஜா என்னிடமே போன் பண்ணி எல்லாவற்றையும் சொன்னா , நீங்க நேரத்தை மட்டும் சொல்லுங்கோ . நான் தயாரா இருப்பேன்” முடித்தாள் மனைவி .
மிக தணிந்த குரலில் „ஆறு மணியளவில் போவதாக இருந்தேன்”, அவன் முடிக்கும் முன்னர், “நான் தயாராக இருப்பேன்” என்று மகிழ்வுடன் உள்ளே சென்றாள்.
மயூரி தன் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்து ரசித்தாள். „நீ அழகி தான் மயூரி , ரமேஷின் நண்பர்கள் நிச்சயம் அவனுக்கு ஏற்ற ஜோடியை தான் மணந்திருக்கிறான் என்று பேசிக்கொள்ள போகிறார்கள். இன்று என் அழகில் பிரமித்து எனக்காக வைத்திருக்கும் அந்த பரிசை தர போவது நிச்சயம். எத்தனை நாள் தான் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு . நாம் இருவரும் ஒன்றாகும் நாள் விரைவில் வரவேண்டுமே !” . நாணம் அவள் கன்னத்தில் கோலமிட்டது . “கன்னம் சிவக்க, எண்ணம் மலர, புது மொழி வரைய ,விழிகள் மயங்க வெட்கதில் சிரித்தாள்” .
குறிப்பிட்ட நேரத்திற்குள் தானும் தயாரானான் ரமேஷ் , “வாருங்கள் மயூரி” என்று அவசரமாக காரினுள் ஏறியவன் கண்கள் இவளை நோக்காதது மயூரிக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது . தன்னை கவனிப்பானா என்பதை இவள் கவனித்து கொண்டிருந்தாள் . விழிகளில் ஏக்கம் குடிகொண்டது . என் பக்கம் திரும்பினால் நிச்சயம் அவன் விழிகள் என்னிடம் நிலை கொண்டு விடும் . அந்த நேரம் நான் கவனிக்காத மாதிரி பாசாங்கு செய்ய வேண்டும் . கற்பனை சிறகுகள் அழகாக விரிந்து பறந்தது .
விருந்தினர்களுடன் கலகலப்பாக பேசிக்கொண்டு இருந்த அனோஜா இவர்களை கண்டவுடன் உடனே ஓடி வந்தாள். மிகவும் சகஜமாக ரமேஷ் என்று அவன் கையில் தன் கையை கோர்த்தவண்ணம் “இவ்வளவு நேரமாகியா வரவேண்டும்” என்று செல்ல கோபத்துடன் அவனை இழுத்துக் கொண்டு சென்றாள் .
மயூரி மிகுந்த சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டாள். “என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் என் கணவனை உரிமையுடன் அழைத்து செல்வதற்கு இவள் யார்?”. ஒருவரையும் அறிமுகமில்லா இந்த கூட்டத்தில் இவள் தனித்து விடப்பட்டவளாக . மீண்டும் அவள் உள்ளத்தில் பொறாமை தீ கனன்றது .
தொடரும்
மீரா , ஜெர்மனி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.