புதியவை

டென் மார்க் ரதி மோகன் எழுதும் "பனி விழும் மலர் வனம்"❤️ தொடர் அத்தியாங்கள் - 39--40                              "பனி விழும் மலர் வனம்"❤️அத்தியாயம்- 39
அனசனின் உள்ளம் வலித்தது போல் அவன் இடுப்புப்பகுதி முழுவதும் பெரும் வலியை அவனுக்கு கொடுத்தது. முள்ளத்தண்டில் விண் என்று கசியிழைய இடம்பெயர்வால் (prolapsed disc) மரணவலியை கொடுத்தது.வலியை தடுக்கும் மருந்துகளை தாண்டிய வேதனை உடல்பூராவும் பரவுவதை அனசன் உணர்ந்தான். அங்கு வந்த தாதி morfin மருந்தை ஊசிமூலம் உடனடி வலி நிவாரணியாக செலுத்தினார். இந்த மருந்திற்கு தூக்கம் தூக்கமாக வரும் என்பது அவனுக்குத்தெரியும். அது மீளாத தூக்கமாக வந்து தொலைந்து போக வேண்டும் என்ற தற்கொலை செய்யும் எண்ணங்கள் அவனையறியாமலே மனதிற்குள் புகுந்து பயமுறுத்துவதை உணர்ந்தான் . "மதுமதி "... அவள் மட்டும் அனசன் வாழ்வில் வராவிட்டால் எப்பவோ இதை செய்து முடித்திருப்பான்.. அவனை இற்றைவரை வாழ வைத்துகொண்டிருப்பது மதுமதியின் மேல் அவன் கொண்ட காதல். காதல் ஒன்றுதான் வாழ வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறது.நள்ளிரவிலும் சூரியனை பார்க்க வைக்கிறது. உலகமே காலடியில் கிடப்பதாக உணரவைக்கிறது... பைத்தியம்போல் சிரிக்க வைக்கிறது...காதல் காதல் காதல் இல்லையேல் சாதல்...கல்லறை செல்லுங்கள்.. கம்பனையும் ஷெல்லியையும் துயிலெழுப்பி வாருங்கள்..இவர்களின் காதலின் ஆழத்தை அவர்களாலேயே தங்கள் வார்த்தைகளுக்குள் எளிதில் அடக்கிவிட முடியுமா என கேட்டுப்பாருங்கள்...என சொல்லுமளவிற்கு பரந்த உன்னதமான காதல் இது. உடலையும் தாண்டி, உணர்வையும்தாண்டி அதற்கு மேலாக இதயங்கள் மௌனமாக பேசிக்கொண்டிருக்கும் இவர்களின் மொழிக்கு மொழிபெயர்ப்பு எந்த அகராதியிலும் கிடையாது. கிடைக்கப்போவதும் இல்லை. காதலிற்கு ஒரு புதுவேதம் இவர்களால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
" மதுமதி மதுமதி... " உரத்து கத்தினான்.. திடுக்கிட்ட தாதி" என்ன" என வினாவ, " நா.., வந்து... ஒன்னுமில்லை" என்றவன். ""பெயருக்குள்ளே மதுவை ஒளித்து வைத்து என்னை போதை ஏத்துகிறாளே.. அடி பாதகி... நீயென்ன நிலவின் மகளா? இல்லை தினம் தினம் என்னை கொன்று போடும் இராட்சசியா..," மனம் பேசிய வார்த்தைகளுடன் உறங்கியே போனான்.
அனசன் வீட்டில் மகிழ்ச்சி களைகட்டத்தொடங்கியது... பல மாதங்கள் வைத்தியசாலை வாழ்க்கைக்குப்பிறகு புதுமனிதனாக தன் இல்லம் நோக்கி வருகிறான்.அவனின் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் நவீன பாணியிலான உயர்த்தவும் பதிக்கவும் திருப்பவும் கூடிய கட்டில் , கதிரை என எல்லாம் பல அன்றாட தேவைக்கான பொருட்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.. அனசனின் தாயார் அவனுக்கு பிடித்தமான மரக்கறிவகைகளுடன் குசினியில் போராடிக்கொண்டிருந்தார். கூகிலில் தேடி எடுத்த குறிப்பையும் மதுமதியிடம் கேட்டு அறிந்த சமையற்குறிப்பையும் வைத்து ஈழதேசத்து உணவை செய்வதில் காட்டிய மும்முரம் கண்டு பிட்சாவும் பேக்கரும் என அலையும் ஈழத்துப்பெண்கள் சற்று தலைகுனியத்தான்வேண்டும்..
மதுவைப்போலவே சைவ உணவுகளில் அனசனுக்கு நாட்டம் மிகுந்து இருந்தது. இதுவும் காதல் தந்த உத்வேகமோ..
மதுமதியின் உள்ளம் ஏக்கத்தால் துடித்தது. அனசன் வீட்டை எப்படியும் போக வேண்டும் என்ற ஆவல் ஒருபுறம்., மறுபுறம் மழையோ சோ சோவென கொட்டியது .. பனிக்கால மேகத்தை போட்டிபோட்டுக்கொண்டு கார்க்கால மேகத்தின் பிரவேசமும் கும்மிருட்டும் போக்குவரத்திற்கு இடைஞ்சலானது. சோபாவில் சாய்ந்திருந்த மாமியின் அருகில் வந்தமர்ந்தவள் மெல்ல "" மாமி நான் ஒருக்கா வெளியில் போட்டு வரட்டா.. என் பிரண்ட்டுக்கு உடல்நலமில்லை என மெசேஜ் போட்டவள்.. ஒரு அரை மணித்தியாலத்திலை வந்திடுவன்.. " என கேட்க.. " இந்த மழைக்கை இப்ப என்ன அவசரம்? எதற்கும் சங்கரை கூட்டிக்கொண்டு போவனம்மா.. தம்பியும் வேலையாலை இப்ப வந்திடுவான்.. " என்றபடி தொலைக்காட்சி பார்ப்பதில் கவனத்தை செலுத்தினார். மதுமதிக்கு தூக்கிவாரிப்போட்டது... "" கண்டறியாத மாமி.. எதற்கெடுத்தாலும் தம்பி தம்பி.. ." என மனதிற்குள் நொந்தபடி வேண்டாவெறுப்பாக டெனிஷ் படம் ஒன்றை மாமியோடு சேர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
வாசலில் சங்கரின் காலடியோசை கேட்டது.. வீட்டை வந்ததும் வராததுமாய் " அம்மா நான் வெளியில் டினர் எடுத்துக்கறேன்..இப்ப அவசரமாக ஓரிடம்போகணும் பிறகு வந்து பேசுறேனே என்றபடி குளியலறைக்குள் நுழைந்தான். அங்கு பத்தே பத்து நிமிடங்கள்தான்...அவசர அவசரமாக வேறு உடை அணிந்து கொண்டான் . அவனின் கம்பீரமும் நடையும் வைத்தியனுக்கான மிடுக்கான தோற்றமும் பார்த்தோரை மீண்டும் ஒரு தடவை திரும்பி பார்க்க வைக்கும். "" சங்கர் ஒருக்கா மதுவை அவளின் பிரண்ட் வீட்டை இறக்கிட்டு போறியா... இந்த இருட்டுக்கை நான்தான் தனியாக அவளை போக விடவில்லை...." என இழுத்தவாறே மாமி மகனுக்கு தேநீரை நீட்டினார். "" ஆகா நம்ம மகாராணிக்கு இப்ப அப்படி என்ன அவசரமோ.." என சீண்டலுடன் "" ஓஓ சரி சரி வாயேன்.. " என்றபடி... அவளை அழைக்க" இல்லை இல்லை இப்ப தலைவலிக்குது நான் வரலை"" என வெடுக்கென்று இடத்தைவிட்டு நகர்ந்து தன் அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டுக்கொண்டாள். இந்த செய்கை சங்கருக்கு வேதனையாக இருந்தது. " இற்ஸ் ஓகே" என்றபடி தோளை சற்று உலுக்கியபடி காரினுள் ஏறிக்கொண்டான்..
மதுமதி சற்று கோபம் தணிந்து வெளியே வந்தவள். மாமாவும் மாமியும் இவளுக்காக சாப்பிடாமல் காத்திருப்பதைப்பார்த்து அவளுக்கு சுர் என்று வலித்தது."" என்மேல் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் .இவர்கள்.... நான் தான் இவர்களை உதாசீனப்படுத்துகிறேனோ ""என எண்ணியபடி குற்ற உணர்விற்குள்ளானாள்..விலகினால் நெருங்கிச்செல்வதும், நெருங்கிச்சென்றால் விலகுவதும் பெண்மைக்கே உரித்தான நனினங்களோ.. இல்லை அவளின் சின்னச்சின்ன கோபங்களின் கோலங்களோ.. மதுமதி தன்னை சுதாகரித்துக்கொண்டு மாமாமாமியுடன் உணவு அருந்தினாள். நீண்ட நேர கலகலப்பான பேச்சு அவளின் மனதுக்கு இலேசாக இருந்தது. இரவு 22.00 மணியை தாண்ட அங்கிருந்து புறப்பட்டு இரவு உடைக்குள் தன்னை புகுத்திக்கொண்டாள். வெளியில் மழையும் ஓய்ந்திருந்தது. இரவின் நிசப்தம். கண்களை மெல்ல மூடினாள்...
அனசன் மதுமதி வருவாள் என எதிர்பார் த்து ஏமாற்றமடைந்தான். அவனுக்கு அவளின் குடும்பபிண்ணனி நன்கு தெரிந்திருந்தது. கீழைத்தேய பெண்கள் விண்ணில் பறந்தபோதும் ஒரு கட்டுக்கோப்பான குடும்ப அமைப்புக்குள்ளும் வளர்ப்புமுறைக்குள்ளும் தம்மை எப் போதும் இணைத்துக்கொண்டவர்கள் என்பதும் அந்த விதித்த கோட்டை இல்லை வட்டத்தை தாண்டவும் மாட்டார்கள் என்பதும்.. அவன் அறிந்ததே. அவனின் மனம் அதை ஏற்றுக்கொண்டாலும் காத்திருந்த விழிகள் ஏமாற்றத்தால் தூங்க மறுத்து அடம் பிடித்தன..
புத்தம்புதிய நாளின் புதுப்பொலிவோடு மதுமதி காலையிலேயே வேலைக்குப்போகமுன்னாடியே அனசனிடம் ஓடோடி வந்தாள். அவனை படுக்கையிலேயே சென்று நலம் விசாரித்துவிட்டு தன் கடமைக்கு சென்றபோதும் அவனை பார்த்த விழிகள்... விலத்தி செல்ல மறுத்த அந்த கணங்கள்...விழிகளில் அவனை மெல்ல சிறைப்பிடித்தாள். அந்த நினைவில் அந்த நாளும் இனிமையாகிப்போனது.
மாலைவேளையும் அவனை பார்த்துவிட்டு தன்வீடு பயணமாவதை பழக்கப்படுத்திக்கொண்டாள் மதுமதி. இந்த சந்தர்ப்பத்தில்தான் அவளுக்கு பேரிடியாக ஒரு செய்தி அவள் காதுகளை வந்தடைந்தது...
( தொடரும்)

ரதிமோகன்❤️

                               "பனி விழும் மலர் வனம்"❤️அத்தியாயம்-40
மதுமதியின் காதுகளில் வீழ்ந்த அந்த சேதி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதாக வலியைக்கொடுத்தது. அவனுக்கு ஏற்பட்ட அந்த விபத்தின் பின்னர் பல சத்திரசிகிச்சைகளை அவன் சந்தித்திருந்தான். ஏதோ ஒரு காரணத்தால் அவனுக்கு மெல்ல மெல்ல இடுப்புக்கீழான உடற்பகுதியில் உணர்ச்சி குறைந்து கொண்டு போவதும் செயற்கையாக கால்கள் பொருத்தினாலும் எழுந்து நிற்க முடியாமல் போகலாம் என்பதும் வைத்திய வட்டாரத்தின் தகவல்...வைத்தியர்களுக்கே புரியாத புதிராக அவன் உடல் நிலை நாளுக்கு நாள் மாறும் நிலை விதியின் விளையாட்டா அல்லது போன ஜென்மத்து ஊழ்வினையின் தொடர்ச்சியா? இந்த கேள்வி அனசனின் குடும்பத்தினரையும் மதுமதியையும் ஆட்டுவிப்பதாகியது.."பாவம் அனசன் எப்படி எல்லாம் இவற்றைத்தாங்கிக்கொள்வான்... அவன் மென்மையாவன்.. அவன் வாழ்வில் எந்தக்கடினத்தையும் கண்டதில்லையே...எந்த இழப்பையும் சந்திக்கவேயில்லையே..அவனுக்கு இப்படியொரு நிலை வருமென்று கனவிலும் நினைக்கலையே...உனக்காக என்னுயிர் தந்து நான் வாழ்வேனடா"" மனதோடு சத்தியம் செய்து கொண்டாள்.
மதுமதி டென்மார்க் மண்ணை மிதிக்கும்வரை அவளின் வாழ்வும் சோதனைமிகுந்ததே.. எத்தனை இழப்புக்கள் ஒன்றன்பின் ஒன்றாக தந்தை, அண்ணன் என.. நெருங்கி பழகிய பால்யத்துத்தோழியின் மரணம் ... ஆம் இவள் கண்முன்னே துடிதுடித்து இறந்ததை எளிதில் இவளால் மறந்துவிட முடியுமா என்ன? இராட்சத போர் விமானம் வீசிச்சென்ற குண்டில் தலைபிளந்து அவள் இரத்த வெள்ளத்தில் இருந்த காட்சி . சொல்லியழுவதற்கு வார்த்தைகள் இருக்கவில்லை. பங்கருக்குள் இருந்து தலையை எட்டி பார்த்தபடி " நல்லூரானே காப்பாற்று.. முருகா வடிவேலா" என அழுதாளே தவிர அந்த உயிரை ஓடிச்சென்று காப்பாற்ற அவளால் முடியவில்லை .. இப்படி எத்தனை அப்பாவி உயிர்கள் போர் என்ற அரக்கனால் காவு கொள்ளப்பட்டது ஈழமண்ணிலே அன்று..அந்த இருண்ட காலப்பகுதியை நினைக்க அவளின் உடம்பு இன்றும் இலேசாக நடுங்கும்..அந்தத்தோழியின் தந்தை கூட மிதிவெடியில் கால்களை இழந்து சுழல்நாற்காலியில் வாழ்வாதாரமின்றி தவிப்போடு அவர்கள் வாழ்வு இன்றும் நகர்கிறது. மழைவிட்ட பின்பும்
தூவானம் ஓயவில்லை என்ற கதைதான் அந்த குடும்பத்தின் வாழ்வின் தொடர்கதை. இவற்றை எல்லாம் உதாரணம் காட்டி அனசனுக்கு சொல்லி அவன் மனதை தேற்ற வேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
அதற்கு ஏற்றாற்போல் அனசனின் தங்கையின் தொலைபேசி அழைப்பு வந்தது. நேரம் இருந்தால் ஒருதடவை அண்ணனை வந்து பார்க்கும்படி அவள் கேட்டிருந்தாள். மதுமதி வருவதாக அவளுக்கு பதில் அளித்த அடுத்த நிமிடமே தன் காரில் அனசன் வீடுநோக்கி பயணமானாள். அங்கு அனசன் சாய்வு நாற்காலியில் இருந்தான் . அவனின் பார்வை எங்கோ கூரையை வெறித்தபடி இருந்தது.தொலைக்காட்சி தன்பாட்டிற்கு இயங்கிக்கொண்டிருந்தது. மதுமதியை பார்த்தபோதும் கூட முகத்தில் எந்தவித சலனத்தையும் அவன் முகம் காட்டிக்கொள்ளவில்லை. கண்கள் சிவந்து வீங்கி இருந்த காட்சி அவள் இதயத்தை ஊசியாக தைத்தது. அவனை சிறைப்பிடித்து வைத்திருக்கும் மலர்வனமான அவள் இதயத்தில் பூத்த காதற்பூக்கள் எல்லாம் ஒருகணம் வாடி வதங்கின.. குளிருக்குள்ளும் வியர்த்தது.. உடலின் வெப்பநிலை 37c ஐ தாண்டி செல்வது போன்று உணர்ந்தாள். அவன் அருகே நெருங்கி "அனஸ்.... " என அவனை அழைத்தாள். மெல்ல வடிந்த கண்ணீரோடு" ஏன் இங்கு வந்தாய்" என அவன் கேட்டான். காதலித்த காலத்தில் வெறுப்பை அவன் அனலாக வீசியது இதுதான் முதற்தடவை. அவனின் வேதனையான சூழ்நிலை அவளுக்கு புரிந்தபோதும் அந்த வேதனையை அவள் மீது அனசன் இப்படியா காட்ட வேண்டும்?காதல் என்ன கண்ணாமூச்சி விளையாட்டா? காதல் என்று உருகிப்பழகுவதும் , வெறுப்பு , கோபம் என்றால் ஒற்றைச்சொல்லில் எறிகணையாக அவள் தலையை கொய்து விடும் வீச்சான வார்த்தையை கையாளுவதும் இந்த ஆண்களுக்கு இவ்வளவு எளிதில் எப்படி சுலபமாகிறது.? விடை தெரியாத வினாவாக அவளின் இதயம் பேசியது. பெண்கள் எளிதில் அன்பை காதலை கொடுக்க மாட்டார்கள்., அதை கொடுத்துவிட்டாலோ அதற்கு உரியவனை சாவிலும் மறக்கமாட்டார்கள்.. அப்படிப்பட்ட உண்மையான ஆழமான காதல் மதுமதியினுடையது.. நாளுக்கு நாள் ஆடை மாற்றுவதுபோல் ஆளை மாற்றும் நவீன காதல் அல்ல அனசன் மேல் கொண்ட இந்தக் காதல் இதிகாசங்களை தாண்டிச்செல்லும் உன்னதமான காதலிது .. ஏன் ஏன் அவன் இன்று இப்படி மாறிப்போனான்??? ஒவ்வொரு கணங்களும் தீயுக்குள் நிற்பதாய் உணர்ந்தாள்..
மதுமதியின் கண்களில் இருந்து கங்கை ஒன்று கரைபுரண்டோடியது. கண்ணீரை அடக்க முடிந்தும் தோற்றுவிட்டாள். அனசனோ மதுமதியின் முகத்தை ஏறெடுத்துப்பார்க்காது தன் தாயை அழைத்தான். இவற்றை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த தாயார் மதுமதிக்கு கண்களால் சைகை காட்டினார் சமையலறைக்கு அவளை வரும்படி. அங்கிருந்து மெல்ல அகன்ற மதுமதி சமையலறைக்குள் நுழைந்தபோது மதுமதியின் தங்கை ஓடிவந்து அவளை தழுவி " நீங்க கவலைப்படாதைங்கோ.. எங்களையும் அனசன் திட்டியே.. துரத்துகிறான்.. அவன் மனம் ரொம்ப பாதித்து இருக்கிறது போல இருக்கு" என்றபடி சுடச்சுட காப்பியைக்கொடுத்தாள்.
சிரிக்க முயன்றும் தோற்றுவிட்டாள். சாப்பாட்டு மேசையில் இருந்த ஒருதுண்டு காகிதத்தில் அவளின்
உள்ளத்து உணர்வை கவிதையாக்கினாள்...
" உன்னால் எப்படி முடிகிறது
ஒற்றை வார்த்தையில் காதலை
எடுத்தெறிந்து போகிறாய் போ..
காதலர் தினத்தில் பூவோடு வா
காதலை தெரிவிக்க அல்ல
என் கல்லறைக்கு வைப்பதற்கு..
அப்போதாவது ஒரு சொட்டு
கண்ணீரை எனக்காக உதிர்த்திவிடு
அங்காவது என் ஆத்மா நிம்மதியாக
தூங்கட்டும்....
அன்போடு உன் மதுமதி❤️
காப்பியை அருந்திய கையோடு அவர்களிடம் விடைபெற்று போகத்தயாராகும் வேளை பார்வையை அனசன் இருக்கும் இடத்தை நோக்கி வீசினாள். அவன் தன் உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான்..
(தொடரும்)
ரதிமோகன்❤️

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.