புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் பனி விழும் மலர் வனம்"❤️தொடர் அத்தியாயம்-41


மதுமதியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.. விரைவாக வெளியே வந்தவள் காரினுள் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள். "ஏனிவன் இப்படிப்பண்றான்? எவ்வளவு அன்பும் ஆசையும் அவன் மேல் வைத்திருக்கேன்..சீ என்ன இவன்?என் காதலை ஒற்றை வார்த்தையில் தூக்கி எறிந்திட்டானே..போடா நீ போ.. வேண்டாம் இந்த காதலும் கத்தரிக்காயும்.. "" அவளை எவரும் இப்படித் தூக்கி எறிந்து பேசியதேயில்லை. அவளோடு பேசியவர்களை மீண்டும் மீண்டும் பேசத்தூண்டும் இனிமையும் மென்மையும் கலந்த பெண்ணவள். அனசன் தனியே அவளை அழைத்து கூறிஇருந்தால் கூட இந்தளவு கவலை அவளுக்கு இருந்திருக்காது..பலர் முன்னிலையில் அதுவும் அவனது குடும்பத்தினர் முன்னிலையில் அவளை அவன் அவமதித்தது ஆழமான ரணத்தை இதயத்தில் ஏற்படுத்தியது. காரை செலுத்தியவளுக்கு வீடு போக மனமிருக்கவில்லை. கார் நகரம் தாண்டி நகரம் பறந்தது.. எங்கு செல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.. வீதியோரமாக காரை நிறுத்திவிட்டு தனது கைத்தொலைபேசியை பார்த்தாள். சிறு நப்பாசை மனதிற்குள் மன்னிப்புக்கேட்டு ஏதாவது எழுதி இருப்பானோ என. அங்கு எந்த குறுந்தகவலும் வந்திருக்கவில்லை.. அவனின் நம்பருக்கு போன் செய்தாள். இந்த தொலைபேசி எண் பாவனையில் இல்லை என சொல்லியது. அவள் மனதில் இப்போது ஆத்திரம் சூழ்ந்து கொண்டது. அவன் மேல் இருந்த பரிதாபம் காதலோ துளியளவும் இல்லாத ஓர் உணர்வு தோன்றியது.
அவள் கைகள் தன்னையறியாமலே பாட்டைப் போட ...அந்த பாட்டினிலே அவனோடு அவள் பழகிய காலத்தின் வரிகளாகவே .. "" வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை யெல்லாம் நான் இருந்து வாடுகிறேன். நா வறண்டு பாடுகிறேன் ...."தன்னை மறந்தாள்.. அந்த காலத்தின் சுகந்தத்தை நுகர்ந்தாள். சோகத்திலும் ஒரு இனிமை உடலினுள் பரவுவதை உணர்ந்தாள். இதுதான் காதலின் அபூர்வசக்தி. அப்போது சங்கரின் ரெலிபோன் வந்திருந்தது. " மது எங்கே நிற்கிறாய்?. உனக்காக நாம இங்கே வெயிற் பண்ணிட்டு இருக்கோம்?? கெதியிலை வா.. வெதரும் சரியில்லை., கவனமடா.." எதுவும் அவனை கேட்காது "சரி இப்போ வருகிறேன் "என ரெலிபோனை நிறுத்தியவளுக்கு அப்போதுதான் நினைவில் வந்தது . இன்று அவள் மண்தொட்ட பொன்னாள்.. பூவாக பூமிக்கு வந்தநாள்.. அவளுக்கு இதெல்லாம் கொண்டாடுவதில் விருப்பு ஒருபோதும் இருந்ததில்லை. அதுவும் தந்தையை இழந்தபின் அந்த நினைப்பே சுத்தமாக இல்லை. அனசனுடன் பழகிய காலத்தில் ரெஸ்ரோரன்ற் போய் சாப்பிடுவதோடு சரி. மாமி இடைக்கிடை ஒரு கேக் செய்து வெட்டுவது வழக்கம். சங்கர் வாழ்த்து சொல்வதோடு சரி. ஆனால் இந்தமுறை அவனும் அங்கு நிற்கிறான் என்ற சிந்தனையோடு காரை வீட்டை நோக்கி செலுத்தினாள் .
அனசன் தன்னை தன் பிறந்தநாளிலேயே உதாசீனப்படித்தி விட்டான் என்ற கவலை கோபமாக மாறியது. இனிமேல் எந்தக்காரணம் கொண்டும். அவனோடு பேசப்போவதில்லை என மனதிற்குள் முடிவெடுத்தாள் .. எல்லாவற்றையும் ஒரு கெட்ட கனவாக மறந்துவிட வேண்டும் என தீர்மானித்தாள்.
ஆனாலும் மனதின் மறுபக்கம் சொல்லியது" அனசு பாவம்.. வேதனையில் என்னை கோபித்து இருப்பானோ.. இல்லை எனை மறக்க துணிய மாட்டான் "" மனதிற்குள் ஒரு போராட்டம். இதுதான் பொம்பிளை மனசு என்பதோ? நினைத்தவனை எளிதில் மறக்க மாட்டாள் பெண்.
மதுமதியின் எண்ணங்களுக்கு சவால் விடுவதுபோல் காரும் வேகமாக வீட்டை அடைந்தது. வீட்டிற்குள் நுழைந்தவள் இன்ப அதிர்ச்சியில் ஒரு கணம் அப்படியே நின்றாள் . சங்கரின் தங்கை சங்கீதா கணவன் உட்பட அவளின் சினேகிதிகளின் குடும்பங்கள் என முப்பது பேரளவில் நின்றனர். எல்லோரும் ஏகோபித்த குரலில் மும்மொழிகளிலும் பிறந்தநாள். வாழ்த்துக்கள், Happy Birthday to you, Tillykke med Fødselsdagen.. என வாழ்த்துரைத்தனர்.
உதடுகளில் மெல்லிய புன்னகையை வீசியபடி குளியலறைக்குள் நுழைய முற்பட்டவளை மறித்த சங்கர் இந்த உடுப்பை உடுத்தி வா என நீட்டவும் மறுப்பு ஏதும் இன்றியே அதை வாங்கியபடி குளியறைக்குள் நுழைந்தாள்.
அவள் வெளியே வந்தபோது பெண்களே அவள் அழகைக்கண்ட மயங்கும் அளவுக்கு அந்த பச்சைக்கலர் சுடிதார் எடுப்பாக இருந்தது..அவளின் மஞ்சள் கலந்த மேனியின் அழகை இரட்டிப்பாக்கியது. சங்கரின் கண்கள் அவளின் அழகை கள்ளமாக ரசிப்பதை கண்ட அவளுக்கு ஏதோ ஒரு வெட்கம் படர மாமிக்கு பின் சற்று மறைந்தாள். "" என்ன இந்த சங்கர்.. ஆளை விழுங்குவதுபோல் பார்க்கிறானே..இதுநாள்வரை பார்க்காதவன் போல்... இரு மச்சி ஆட்கள் போகட்டும் பிறகு பேசிக்கிறேன்." என மனதோடு பேசி கொண்டாள் ..
பக்கத்துவீட்டு மாமியும் வந்திருந்தார். அந்த மனிசியின் வாய் ஒருபோதும் சும்மா இருந்தது இல்லை. யாரையாவது பற்றி குறை சொல்லிகொண்டிருப்பது அல்லது ஊர் விடுப்பு கதைப்பது வழக்கம். அவாவின் வாயில் இருந்து அடிக்கடி மதுமதி மதுமதி என வெளிவருவதை அவதானித்த மதுமதி சற்று அங்கு நோட்டமிட்டாள். "" என்ன மச்சாள் நீங்க பத்து பொருத்தம் சரியென்றால் பிறகு எதுக்கு தாமதிக்கிறியள்..தோசம் இல்லாத சாதகம் ... இப்படி அமையாது கண்டியளோ... சட்டு புட்டென்று முடிச்சுடுங்க.. ஆத்திலை நல்ல காரியத்தை எதற்கு தள்ளிப்போடுவான்?? இஞ்சப்பாருங்கோ..பங்குனி முதல் நாளுக்கே பாருங்க.. நல்ல சோடிப்பொருத்தம்.. என் கண்ணே பட்டு விடும் போலக்கிடக்கு.." .பக்கத்து வீட்டு மாமியின் குரல் துல்லியமாக கேட்டது.. மிகுதி கேட்பதற்கு இடையில் அங்கு வந்த சங்கீதா( சங்கர் தங்கை) மதுவை பலவந்தமாக செல்பி எடுக்க இழுத்துக்கொண்டு சென்றாள். மதுமதிக்கோ மனம் ஒருநிலைப்படவில்லை. சஞ்சலம் ஏற்பட்டது.. "" யாருடைய கல்யாண அலுவல் நடக்கிறது?? ஒருவேளை சங்கருக்கு கல்யாணப்பேச்சோ?? என சிந்தித்தாள்.
அனசனின் மனம் அழுதது. "" யேசுவே எனை மன்னித்தருளும்.. அவள் ஏதும் பாவமறியாத மாசற்ற மனமுடையவள். அவளை வெறுக்கும்படி நான் பேச வேண்டிய கட்டாயம்.. அவள் என்னை வெறுத்து ஒதுக்க வேண்டும்.. அவள் எனக்காக தன் வாழ்க்கையை சீரழிக்க கூடாது.. யேசுவே அவள் மனதை சந்தோசித்து இருக்க ஆசீர்வதியும்.. பரலோகத்தில் இருக்கும் பிதாவே..."" என தன் கடவுளாகிய யேசவை தொழுதான்.

(தொடரும)


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.