புதியவை

ஜெர்மனி மீரா எழுதும் தொடர் கதை வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 17-18


கண்ணீர் திவலைகள் பார்வையை கலங்கடிக்க, மங்கிய இருளில் மாதவனாக முன் நிற்பவன் யாரிவன் ?, மயூரி மனதில் எண்ணம் தோன்ற, அந்நியன் என்று துக்கமுயன்றாள் . „கனிவுடன் தேற்ற முன்வந்தவன் கயவனாக இருந்தால் ?“.
தெரிந்தவன் ஆனால் அறிந்தவன் இல்லை . அழகன் ஆனால் பழகியவன் இல்லை . இவள் திண்டாடினாள் . உள்ளே மீண்டும் பார்ட்டியில் கலந்துகொள்ளும் ஆவல் அவளிடம் கொஞ்சம்கூட இருக்கவில்லை . ஆனால் தனியாக இப்படி வெளியே நிற்பது இவன் போன்றவரின் கவனத்தை ஈர்ப்பதும் அவளுக்கு பிடிக்காமல் திண்டாடியதை புதியவனும் உணர்ந்துகொண்டான் போலும் . „உங்களை, உங்கள் வீட்டில் விட்டுவிடுகிறேன், வாருங்கள் “ என்று முன்வந்தான் .
அவள் உடனே „இல்லை , நானே ஒரு டாக்ஸி பிடித்து சென்று கொள்கிறேன் , நன்றி“ என முனுமுனுத்தவாறே அவள் கைபேசியில் தொலைபேசி இலக்கத்தை அழுத்தினாள்.
டாக்ஸியில் ஏறி மறைபவளை பார்த்துகொண்டு இருந்தவன், அவள் சோகம் இவன் மனதை வாட வைப்பதன் காரணம் புரியாமல் குழம்பினான். „மிக அழகான பெண் தான் . கொஞ்சம் அப்பாவித்தனமும் அவளிடம் கலந்திருக்கிறது . எல்லாவற்றுக்கும் மேலாக, அன்று அவள் விட்டுச்சென்ற அந்த கவிதை அவன் மனதை மிகவும் தொட்டு விட்டது . அவளிடம் அக்கவிதையை கொடுத்து விட வேண்டும் என்று மீண்டும் நினைத்துக்கொண்டு பார்ட்டியில் கலந்து கொள்ள உள்ளே சென்றான் .
„மயூரி…. , மயூரி எங்கே நீங்கள் ?, உங்களை காணாமையினால் பார்ட்டியின் பாதியில் தேடி வீடு வந்தேன் . என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு கிளம்பியிருக்கலாமே . நானே வீடு கொண்டு வந்து விட்டு மீண்டும் சென்றிருப்பேன் . அதுசரி மயூரி, எப்படி வீடு வந்தீர்கள் ? இரவில் தனியாக, அதுவும் உங்களுக்கு பழக்கமில்லாமல் இப்படி பாதியிலேயே வர வேண்டுமா ? . உங்களுக்கு இப்படிப்பட்ட பார்ட்டிகள் பிடிக்காது என தெரிந்து தான் கூட்டி போக விரும்பவில்லை . ஆனால் நீங்கள் வர வேண்டும் என அடம் பிடித்தீர்கள் மயூரி „. ரமேஷ் ஆவேசமாகவும், அவசரமாகவும் அவளிடம் கூறினான் . அவனிடம் அதிகமான பதட்டம் வெளிப்படையாகவே தெரிந்தது .
மயூரி ரமேஷ்யை முறைத்துப்பார்த்தாள் . „இவனின் அலட்சியமல்லவா, அங்கிருந்து அவளை கிளப்பியது . இத்தனை மணித்தியாலங்களுக்கு பிறகு தான் நான் அங்கு இல்லை என்பதை உணர்ந்தானோ . இப்பொழுது வந்து என்னை தேடினேன் , காணவில்லை என்று கதை அளக்கிறான் . அங்கே என் கண் முன்னே அனோஜாவிடம் அளவுக்கு மீறி வழிந்து விட்டு பெரிதாக கரிசனை காட்டுகிறான்“ . மயூரி கோபத்தில் முகம் சிவந்தாலும் வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெளிவரவில்லை .
பெருமூச்சுடன் „நீங்கள் பாதியிலே சென்றுவிட்டதையிட்டு அனோஜா மிகவும் கவலைபட்டா . நீங்கள் பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விட்டீர்கள் என்பதை அவளுக்கு முதல் அறியத்தர வேண்டும் . சரி மயூரி நீங்கள் தூங்குங்கள் . நான் அனோஜாவிடம் பேசி விட்டு வருகிறேன்“ என்று தன் தொலைபேசியுடன் அவளை விட்டு அகன்று சென்றான் . மயூரி மன புகைச்சலுடன் அவன் செல்வதை பார்த்துக்கொண்டு இருந்தாள் .
காரணமாகிய பொறாமையினால்
 காரணத்துடன் தவிப்பதால்
இதத்தின் இடையே, குறுக்கே குறுக்கிடுவதால்
உடைவது என்னவோ இதயம் தான் !
மனமே நீ ஒரு கணம் பொறுமை கொள்
 தெளிவான சிந்தனையை நீ மெல்ல பெறு
வளமான வாழ்வின்
ஏக்கத்தின் வளம் கெடுமே
பொறாமை எனும் தீயில் மனமே நீ விழுந்தாள் .
தொடரும் 
வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 18
„நான் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன் என்பதை அவ்வளவு அவசரமாக அனோஜாவுக்கு எடுத்து சொல்லவேண்டுமா ? . அவ என்ன என் சகோதரி என்று ரமேஷ் நினைத்து விட்டாரா ?. என் நலனில் அக்கறை உள்ளவள் என்றால், ஏன் என் கணவனை பார்ட்டியில் களவாட வேண்டும் ? . இவரும் என்னை மறந்து அவள் பின்னால் சென்றாரே ! . பல கேள்விகளுடன், மயூரியின் சினம் அடங்கவில்லை ஆனால் அவளால் வாயை திறந்து தன் கொந்தளிக்கும் உணர்வுகளை காட்டமுடியாமல் மனதினுள் பொருமினாள் .
ரமேஷ் அவளிடம் தொலைபேசியை நீட்டியதை கூட கவனிக்காமல் அவள் பற்றி எரியும் தணலில் வெந்து கொண்டிருந்தாள் . „மயூரி“ என்ற ஒரு அதட்டலின் பின்னரே தன் சுயநினைவுக்கு வந்தாள் மனையாட்டி . „எனக்கா அழைப்பு ?“, என்றவள் „அனோஜா ரமேஷ்யிடம், கொஞ்சலின் பின் ஏதோ சாக்கு போக்குக்காக என்னிடம் பேச விரும்புகிறாள் போலும் . ஆனால் எப்படி ரமேஷுக்கு முன்னர் மறுப்பு தெரிவிப்பது ?. தயக்கத்துடன் தொலைபேசியை வாங்கிக்கொண்டாள் .
மிக மெல்லிய குரலில் அனோஜாவின் குரலை எதிர்பார்த்த வண்ணம் „ஹல்லோ“ என்றாள். „மயூரி ஏனம்மா இத்தனை நேரம் தொலைபேசி அழைப்புக்கு வருவதற்கு . நீ வேலையாக இருக்கிறாய் என்றால் பிறிதொரு நேரம் எடுக்கவா?“ என்ற பாச குரல் கேட்டது தான் தாமதம் அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக சொரிந்தது .
„காரணம் தெரியவில்லை
காதலும் கூடவில்லை
உணர்வுகளின் போராட்டத்தில்
உடமையை இழந்தவள் போல் இங்கே
அடைக்கலம் தந்தவனோ
ஆறுதல் தர ஏனோ மறந்துவிட்டான்
ஆசைகள் துறக்கும் தருணம் வரும் முன்னர்
அம்மா உன் மடி தேடுகிறேன் தனியாக இன்று“
மயூரியின் „அம்மா!“ என்ற குரல் தழுதழுத்தது. தாய் அவள் நிலை புரிந்து கொண்டாள் . „அம்மா மயூரி, ஏனம்மா உன் குரல் தழுதழுக்கிறது ?. ரமேஷ் உன்னிடம் கோபித்து கொண்டானா ?. கவலை கொள்ள வேண்டாம் மயூரி . ஆண்கள் கொஞ்சம் அவசரபடுவார்கள் . ரமேஷ் ஆத்திரம் கொண்டு உன் மனதை வருத்தினாலும் ஆத்திரம் அடங்கியதும் தன் பிழையை உணர்ந்து கொள்வான் . தானாக வந்து உன்னிடம் மன்னிப்பும் கேட்பான் . ஆகவே மயூரி நீ தான் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் . உன் நல்ல குணத்தை அவன் விரைவில் தெரிந்து கொண்டு அன்பாக இருப்பான் . மனதை வாட விட வேண்டாம்“ என்ற அம்மா பாசத்துடன் கூடிய அறிவுரையை சொல்லிக்கொண்டு போனார்.
விக்கினாள் மகள் . விளக்கம் சொல்ல முடியவில்லை . விசனத்தின் விபரம் விடுப்பு இல்லையே . விசுவாசமான மனைவி வீட்டு விஷயங்களை விட்டு கொடுப்பவள் அல்லவே . விழுங்கிக்கொண்டாள் .
„அப்படி ஒன்றுமில்லை அம்மா . நாம் ஒரு பார்டிக்கு போய் வந்தோம் . அதுசரி அப்பா , தம்பி எப்படி இருக்கிறார்கள் ?. தம்பியின் படிப்பு எப்படி போகிறது ?. அவனை முதலில் படிப்பில் கவனம் செலுத்த சொல்லுங்கோ“ என்று சமாளித்தாள் . „
அம்மா என் துன்பம் தெரிந்தால் எவ்வளவு கவலைபடுவார்கள் ?. ஆனாலும் அம்மாவிடம் அவள் ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல் துடித்தாள் . அதாவது „ரமேஷ் என்னை கண்டு விரும்பி தானே மணம் செய்ய முன்வந்தான் . அப்படி தானே நீங்கள் சொன்னீர்கள் . அப்படியாயின் ஏன் இன்னமும் என்னிடம் நெருங்கி வராமல் ஒரு அந்நியனை போல் நடந்து கொள்கிறார் ?. என்னிடம் காட்ட வேண்டிய உரிமையை அந்த அனோஜாவுக்கு இரவல் கொடுத்து விட்டது போல் நடந்து கொள்கிறாரே“ .
„ஒரு கணம் அருகே , மறு கணம் தொலைவில் . கனிவு காட்டும் அதே கண்கள் காதலை காட்ட மட்டும் மறுக்கும் காரணம் என்ன ?. கடல் கடந்து கணவன் கை பிடித்து எத்தனையோ கற்பனைகளுடன் வந்தேனே . அத்தனையும் கனவாக அல்லவா காத்திருக்கின்றன!“ .
தொடரும் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.