புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் "பனி விழும் மலர் வனம்"❤️ தொடர்அத்தியாயம்-42மெல்லிய மழைத்தூறலும் பனிச்சாரலும் சேர்ந்த பொழிவும் , கடுங்குளிரும் மாசி மாதமிது என சான்றுபகர ஞாயிறு விடுமுறையிலும் வெளியில் போக மனமின்றிய மதுமதி இழுத்துப்போர்த்துக்கொண்டு படுத்திருந்தாள். அவளின் பிறந்தநாளும் , அனசனின் காதல் நிராகரிப்பும் அவளின் மனதில் நிழலாட கண்கள் முகட்டை பார்த்த வண்ணம் அவள் இன்னொரு அழகான உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள்.
அங்கே மனிதர்கள் இல்லை. போட்டி இல்லை ..பொறாமை இல்லை.. வஞ்சம் இல்லை.. வேதனை இல்லை.. சோகம் இல்லை..எங்கும் மலர்கள் ...பூத்து குலுங்கும் மலர்வனம் அமைந்த அழகான ஒரு தீவு. அங்கே துள்ளிவிளையாடும் அழகான மான்கள், கானமிசைக்கும் பறவைகள்.. தோகை விரித்தாடும் மயில்கள் .. மரம் விட்டு மரம் தாவும் மந்திகள்.. இவற்றின் அழகை எல்லாம் கண்டு அவள் கையில் நர்த்தனமாடும் அந்த எழுதுகோல். எழுதுகோலிலே தமிழின் மைகொண்டு அவள் வரையும் கோலங்கள் கவிதைகள் என தம்மை பெயர் சூடிக்கொள்ள அவள் சந்தோசமான வானிலே பறக்கிறாள்.. சட்டென்று அவள் முகம் வாடிய ஆம்பலாக மாறுகிறது.. தீடீரென நூலறுந்த பட்டமாக எழுந்து சரிகிறாள். சில கணங்களின் சந்தோசங்களையும் பறித்துச்செல்லும் பாதகன் அவனின் நினைவு.... மீண்டும் அவள் மனதை ஆக்கிரமிக்கிறான்.. ஆனால் அவளை கடந்து அவன் போய் சில நாட்களானபோதும் அவன் பதித்து சென்ற தடங்கள் இதயத்தில் இருப்பதை அவளால் எதுவும் செய்ய முடியவில்லை..
"மது மது என்ன பண்றாய்? கூப்பிடுவது காதில் கேட்கலையா? " மாமியின் குரல் சமையலறையைத்தாண்டி அவள் படுக்கை அறைவரை ஒலித்தது. திடுக்கிட்டு எழுந்தவள் தன்னை சுதாகரித்துக்கொண்டு மாமியிடம் எழுந்து வந்தாள்.. " மது ...அம்மா லைனிலை... பேசு" என ரெலிபோனை கொடுக்க அதை வாங்கி காதில் வைத்தாள். அம்மா எதிர் முனையில் அவளின் கல்யாணமும், சாதகப்பொருத்தமும் நன்றாக அமைந்துள்ளதாகவும், மாமி சொற் கேட்டு நடக்கும்படியும் பேசிக்கொண்டே போனார் . தாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் சரி சரி என்றாலே தவிர மறுப்பு வார்த்தை எதுவும் அவளிடம் இருந்து வரவில்லை. மாமிக்கும் இச்செய்கை அதிசயமாக இருந்தபோதும் மறுப்பு ஏதும் சொல்லாமல் மதுமதி சங்கரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
மதுமதியை பொறுத்தவரை காதல் அவளை கடந்து போனதில் இருந்து தன்னை ஒரு நடைப்பிணமாகவே கருதினாள் . இதுவரை தன் சந்தோசத்திற்காக தீர்மானித்த எதுவும் அவளோடு கூட வரவில்லை.இனியாவது பெரியவர்கள் காட்டும் பாதையில் நடப்பது என்ற அசைக்க முடியாத அவளின் தீர்மானம் அது.அத்தோடு யாருக்காக இனி அவள் வாதாட வேண்டும்??அவனே அவளை வெறுத்துவிட்டான். அனசன் மேல் கொண்ட வெறுப்பு பூதாகாரமாக உருவெடுத்து அவளுக்குள் வேரூன்றிப்போனது.
தாயகத்தில் உச்சி வெயிலால் தலையைப்பிளக்க வைத்த ஆதவன் தணிந்து மெல்ல அந்திவானம் தொட்டு மறைகிறான். மதுமதியின் தாயார் மடப்பள்ளியில் பொரித்தெடுத்த, அவித்தெடுத்த மோதகங்களை அடுக்கிக்கொண்டிருந்தார். பூசைக்கான நைவேத்தியங்கள் தயாராகவும் இருக்கவும், சிவராத்திரி விரதபக்தர்கள் நாலு ஜாம பூசைக்காக பெரும் அளவில் குழுமி இருந்தனர். சிவபுராணத்தை பாராயணம் மனதிற்குள் செய்தபடி பூமாலைகளை சிவனின் அலங்காரத்திற்கு கட்டி எடுத்து அர்ச்சகரிடம் மதுமதியின் தங்கை கொடுத்தாள்.
தாயாரின் மனம் மதுமதியின் கல்யாண செய்தியால் ஆனந்த மழையில் நனைந்து கொண்டிருந்தது.. கர்ப்பக்கிரகத்தில் ஆராத்தி ஒளி அவரின் உள்ளத்திலும் சுடராக ஒளிர்ந்தது..
பக்தர்களின் அரோகரா ஒலியைத்தாண்டி மதுமதி ஆம் என கல்யாணத்திற்கு சம்மதம் தந்த ஒலி அந்தளவு அவரின் உள்ளத்தில் ஓங்கி ஒலித்தது. தாயாரின் மனதிற்குள் பெரிய ஆசை மதுமதியின் கல்யாணத்தை நேரில் பார்க்க வேண்டும் என்பதே.அங்கு போவதற்கு வசதி இருந்தபோதும் இளையமகளை தனியே விட்டுப்போக மனசுவரவில்லை. யாழ்ப்பாணம்
தற்போது இருக்கும் நிலையில் எப்படி இது சாத்தியமாகும்?? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை என யாழ்ப்பாணம் சீர்கெட்டுக்கொண்டிருக்கிறது. இவற்றை பார்த்து மனதிற்குள் கவலை கொள்ள முடியுமே தவிர அவரால் வேறென்ன செய்யமுடியும்..
நாலாம் ஜாமபூசை முடிவடைந்திருந்து. ஒவ்வொரு ஜாம பூசைக்கும் ஒவ்வொரு நைவேத்தியம் வைத்தே பூசை செய்வர்.
கண்விழித்து விரதபயனை அடையும் நேரமும் நெருங்கியது.
ஆலயம் ஒன்றே மனதிற்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் தரும் இடம்
என்பதும் மறுப்பதற்கில்லை. இந்த சிவன் ஆலயத்தொண்டும் வழிபாடும் என்றே மதுமதியின் தாயாரின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. வசந்த மண்டப பூசையுடன் சிவராத்திரி பூஜை ஒரு நிறைவுக்குள் வந்துவிடும் என நினைப்போடு மதுமதியின் தங்கை துயிலாத விழிகளில் வாட்டத்தோடும் கடிகாரத்தைப்பார்த்தாள். நேரமோ விடியற்காலை 5.30 ஐ காட்டியது.
காலைச்சூரியனின் இதமான கதிர்களின் வீச்சு பூமாதேவியை முத்தமிட வீடு வந்த தாயும், மகளும் சற்று இளைப்பாறிய சந்தர்ப்பத்தில்தான் டென்மார்க்கில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மதுமதிதான் பேசினாள்"" அம்மா ...சிவப்பு, பச்சைக்கலரிலை இரண்டு பட்டுசாறி வாங்கி அனுப்புறியா அம்மா..,? நான் நெற்றில் பார்த்தனன்..ஆனா கலர் அந்தளவு பிடிக்கலை...நேரே பார்த்து வாங்கும் மாதிரி வராதுதானே..," என அவள் சொல்லவும்.. அங்கு ஓடி வந்த மதுமதியின் தங்கை தொலைபேசியை தாயிடம் பறித்து"" ஏய் அக்கா நீ என்ன லூசா?? எப்படி உன்னாலை இப்படி மனம் மாற முடிகிறது சொல்லடி? அனசனைத்தான் மரி பண்ணுவாய் என ஒற்றைக்காலில் நின்றாய்.. எவ்வளவோ சண்டை போட்டாய்... பிளீஸ்டி காதலோடை விளையாடாதே.. கால் இல்லாதவனோடு வாழ்ந்தால் உன் தரம் குறைந்து விடும் என நினைக்கிறாயா??
பாவம் அவன்.. ஒரு தடவை யோசி பிளீஸ்.., "" அவள் வார்த்தைகளால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல கொட்டினாள். " என் லைவ்வைப்பற்றி எனக்குத்தெரியும் உன் அட்வைஸ் தேவையில்லை.." என்றபடி தொலைபேசியை வீசி கட்டிலில் எறிந்தாள்.. அந்த நேரம் சங்கர் அங்கே வந்து கொண்டிருந்தான். "" என்ன மகாராணி பயங்கர கோபம் போல் இருக்கே.. யாரோடு?? அதற்கு போனை இப்படியா எறிவாங்க??? " போனை எடுத்தபடி நையாண்டியாக கேட்டான்.
மதுமதி அப்படி ஒன்றுமில்லை என பதிலளித்துவிட்டு மெல்ல அவ்விடத்தைவிட்டு நகர முயன்றாள். அவளின் கையை பற்றி இழுத்தவன் "" எங்கே போறாய் நில் மது.. உனக்காக ஒன்று கொண்டு வந்திருக்கேன் கண்ணை மூடு பார்க்கலாம்.,, " என்றபடி அவளை தன் அருகே அமர்த்தினான். அவனை விட்டு விலகமுடியாத நிமித்தம் கண்களை இறுக மூடினாள்.. ஒரு சிறிய பார்சலை அவள் கைகளில் கொடுத்தான்..."" யெஸ் இப்போ கண்ணைத்திற பார்க்கலாம்.... "" என சங்கர் கூறியவுடன். மதுமதி கண்களை திறந்தாள். அவள் கண்களையே நம்ப முடியவில்லை..
( தொடரும்)
ரதி மோகன்❤️

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.