புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் தொடர் கதை "பனிவிழும் மலர் வனம்"🌺🌺🌺🌺 அத்தியாயம் 43 -44🌺🌺🌺"பனிவிழும் மலர் வனம்"🌺🌺🌺🌺அத்தியாயம்-43🌺🌺🌺
மதுமதி மூடிய கண்களை திறந்தாள்.. அவளால் தன் கண்களையே நம்பவே முடியவில்லை. இதுநாள்வரை அவள் தேடிக்கொண்டிருக்கும் அவளது கவிதைகளடங்கிய ஏடு.. அவளின் கனவுகளின் பொக்கிஷம் அது. அதை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். விழிகளில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது" நன்றியடா சங்கர்.. எப்படி? நீயா இதை வந்திருந்தாய்.. உனக்கு கவிதை பிடிக்காதே..." என இழுத்தவாறு அவன் முகத்தை உற்றுப்பார்த்தாள். சங்கரின் முகத்தில் சற்று கோபத்தின் சாயல் தெரிந்தது"" என்ன நீ ?இவ்வளவு கவனமாக பத்திரப்படுத்தி இவ்வளவு நாளும் இதை வைத்திருந்த எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..." என்றபடி இடத்தைவிட்டு நகர்ந்தவனை தடுத்தவள் " சங்கர் நான் சும்மா ஜோக்.. இதற்குப்போய்.... முன்பு உனக்கு கவிதை பிடிப்பதில்லைதானே.. அதுதான்..," என இழுத்தாள். அவளின் அந்த பேச்சிலும் அப்பாவித்தனமான அந்த குழந்தைத்தனமான முகத்தையும் பார்த்து அவனது கோபம் மறைய " மகாராணி சொன்னா எப்பவும் சரிதான்" என்றபடி சோபாவில் அமர்ந்தான். தொலைக்காட்சியில் நாளைய காலநிலை அறிக்கை ஒலிபரப்பாகியது.
மெல்ல ஆதவன் தன் மென்கதிர்களால் டென்மார்க் தேசத்தை தொட.. இருண்டு இருந்த தேசம் சற்று வெளிச்சத்திற்குள்.. பறவைகளின் கீச்சு கீச்சு ஒலிகள் காலைப்பொழுதை உற்சாகப்படுத்திச்செல்லும் காலத்தின் ஆரம்பம்..., இனி மரங்களும் மெல்ல மெல்ல துளிர்விடும்... அங்கு மதுமதியின் மனதிலும் மெல்ல மெல்ல அனசன் மீதான காதலின் நினைவுகள் மீண்டும் துளிர்விடத்தொடங்கின. அங்கிருந்து அகன்று தன் அறையினுள் புகுந்து அறைக்கதவை தாளிட்டவளுக்கு அக க் கதவை தாளிட முடியவில்லை. அனசனை காதலித்த அந்த நாட்கள் அவள் வாழ்வின் வசந்தகாலம்.. அவள் எழுதிய அத்தனை காதல் கவிதைவரிகளுக்கும் அவன்தான் சொந்தக்காரன். எளிதில் அவனை தூக்கி எறிந்துவிட்டு போக அவளால் முடியவில்லை. அப்போது எதற்காக அவள் சங்கருடனான கல்யாணத்திற்கு சம்மதித்தாள்?அனசன் மேல் கொண்ட தீராத கோபத்தின் விளைவு மணமாலை தோள் மாறுவதற்கு காரணியாக அமைந்தது. கோபத்தை சாதிக்கின்ற மனம் கொண்ட பெண் அல்ல மதுமதி. அனசன் அவள் மீது கொண்ட அலட்சியத்தால் வந்த வினை இது. "" ஏன்? நான் இப்படி அவசரப்பட்டுப்போனேன்"" அவளின் வினா. இதற்கு அவளால் விடை காண முடியவில்லை.. அவள் தன் வாழ்வில் செய்த பெரிய முட்டாள்தனம்.இதை இப்போது அந்தக் கவிதைகளை வாசிக்க வாசிக்க கண்களில் இருந்து கங்கைபெருகபுரிந்துகொண்டாள்...தெளிந்தாள்.,. இதிலிருந்து மீள வழியின்றி தவித்தாள். ஆனால் இது காலம் கடந்த ஞானம்.. இனி அவளால் இந்தக்கல்யாணத்தை நிறுத்தவே முடியாது. அப்படி நிறுத்தினால் சங்கர், அவளின் குடும்பத்தினர், சங்கரின் குடும்பத்தினர் அவளை திட்டியே சாகடித்து விடுவார்கள்.அவளுக்கு இறந்து போவதை தவிர வேறுவழி ஒன் றும் தெரியவில்லை.. மதுமதி அண்மையில் பார்த்த சினிமாவிலும் காதல் தோல்வியினால் கதாநாயகி நித்திரை குளிகைகளை அருந்தி இறந்து போகும் காட்சி கண்முன்னே காட்சியாகி விரிந்தது..இதுதான் விதியின் வழியே வாழ்க்கை என்பதா?? ஆனால் அவளின் மனசாட்சியோ "" அடி பெண்ணே.. நீ புதுமை பெண்ணல்லவா?? சாதிக்க பிறந்தவள் நீ .. நீ கோழையா சொல்.?மேற்கத்தைய நாட்டில் வாழும் சுதந்திரப்பொண்ணு...காதல் கை கூடாததால் யுவதி தற்கொலை என்ற செய்தி அனைத்து செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் பரவ வேண்டுமா?? அடச்சீ இப்படி முடிவு ஒரு போதும் வேணாம்.. அப்போ நான் என்ன பண்ணுவது.. கடவுளே நீயே சொல்???""" அந்த பூவையின் மனதிற்குள் பூகம்பம் ஒன்று வெடித்துச் சிதறியது.
திருமணம் நெருங்கி வருவதால் சங்கர் வீட்டில் ஆயத்தங்கள் தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் திருமண அழைப்பிதழ் அச்சடிப்பதில் சங்கருக்கு எள்ளளவும் விருப்பமில்லை. அதை கொண்டு போய் கொடுப்பதற்கும் விருந்தினரை அழைப்பதற்கும் அவனுக்கும் ,குடும்பத்தினருக்கும் நேரம் இல்லை... இயந்திரமயமான ஒரு வாழ்வியலுக்குள் ஐரோப்பிய மண்ணில் பல குடும்பங்கள் வாழ்கின்றன. சங்கர் சிறுவனாக இருந்த காலங்களில் பல நாட்கள் தந்தையை பார்த்திருக்கவே மாட்டான். அவன் நித்திரைக்கு சென்றபின்தான் தந்தை வேலையால் வீடு வருவது வழக்கம். காலையில் அவன் பாடசாலை போகும்போது அவர் தூக்கத்தில் இருப்பார். இவ்வாறான ஒரு வாழ்வியல் சூழலில் வளர்க்கப்பட்ட சங்கருக்கு தந்தையின் அருகாமை கிடைத்தது என்னவோ 5ம் வகுப்புக்கு மேலேதான்... இந்த அழுத்தமான வாழ்வியலை புரிந்தவன் ஆதலால் என்னவோ நேரத்தின் பெறுமதியை அறிந்து உணர்ந்திருந்தான்..எல்லோருக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு விட்டிருந்தான். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொழில் சார் நண்பர்கள் , மதுமதியின் நண்பர் குழாம் மற்றும் அனசனின் குடும்பத்தினர் என சங்கரின் குறுகிய வட்ட உறவுகளுடன் ஒழுங்கு செய்யப்பட்டது திருமண பைபவம். திருமணம் முடிந்த பின்னர் பிறிதொரு நாளில் சட்டபூர்வமாக பட்டினசபையில் (kommune) இருவரும் பதிவுத்திருமணம் செய்வதாகவும் மோதிரம் மாற்றி பத்திரத்தில் கையொப்பம் இடுவதாகவும் என தீர்மானிக்கப்பட்டது... அதற்கு மதுமதியும் சம்மதம் தெரிவித்திருந்தாள்.
ஆனால் இந்தச்சமயத்தில் மதுமதி தன் கவிதைகளை கண்டவுடன் அழுதபடி போன காட்சி சங்கருக்கு கவலையை தந்திருந்தது. இந்தக்கல்யாணத்தில் இவளுக்கு பூரண சம்மதம் இல்லையோ? என மனதிற்குள் சிந்தித்தான். " ஆனாலும் அவள் மேல் கொண்ட காதல் உண்மையானது.." சீ இப்படி இருக்க வாய்ப்பில்லை.. அவள் என்னோடு அன்பாகத்தானே பேசுறாள்.. அதோடை கல்யாணம் என்றவுடனை ஆம் என்று சம்மதம் தந்திருக்க மாட்டாளே??? இருக்காது.. அவளிடமே கேட்டால் என்ன?? சீச்சீ வேணாமே.. கல்யாணத்திற்கு அப்புறம் அவள் அவனை (அனசனை)முற்றாக மறந்துடுவாள்... என்னவள் நீ நீயேதான்.. உனை காணும் போது காதல் பொங்குதடி.. நானும் கவிஞனாக மாறிட தோன்றுதடி....உனை மடி மேல் தாங்குவேன்.. மனம் நோகாது பார்த்திடுவேன்.... காதல் ஒரு இம்சையடி.., என் மருத்துவத்தில் கூட மருந்து இதற்கு இல்லையடி என் அத்தை பெற்ற மகளே"" அவனின் மனதின் எண்ண ஓட்டம் போல் ஒரு விமானம் பயங்கர ஓசையுடன் சற்று தாளப்பறந்து சென்றது அவன் நெஞ்சை ஒருகணம் உலுக்கியபடி....
சங்கரால் இதற்குமேல் சிந்திக்க முடியவில்லை. ஒரு காதலின் சாம்பல் மேட்டிலே தன் காதலை விதைத்துவிட அவன் ஒருபோதும் முயன்றதில்லை.. மதுமதிக்கும் அனசனுக்கும் இடையிலான காதலின் துண்டிப்புக்கு பின்னர்தானே அவன் மதுமதியை மணந்து கொள்ள விரும்பினான்.. ஆனால் இதற்கிடையில் மதுமதியின் மனதிற்குள்ளே ஒரு போராட்டம் நடந்துகொண்டிருப்பது சங்கருக்கு தெட்டதெளிவாக தெரிந்தது. அவளின் மையிட்ட விழிகளிலே ஓர் ஏக்கமும், தவிப்பும் ஒட்டியிருப்பதை உன்னிப்பாக அவதானித்தான். முன்பிருந்த கலகலப்பான பேச்சு அவளிடமில்லை. சங்கரின் மனதில் அவள் மீதான பலத்த சந்தேகம் ஒன்று வளரத்தொடங்கியது.அவளுக்கு உண்மையில் இந்தக்கல்யாணத்தில் நூற்றுக்கு நூறு வீதம் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை. உண்மைநிலை அறியாமல் மதுமதியின் கழுத்தில் தன்னால் எப்படி மாலை சூட முடியும்? இல்லையேல் தன் காதலை மனதிற்குள் புதைத்துவிட வேண்டியதுதான். விருப்பமில்லாத ஒரு பெண்ணை மனதால் கூட தொடுவது பாவம்.. என மனதோடு பேசிக்கொண்டான்.
யன்னலினூடு தன் பார்வையை செலுத்தி இதமான காலநிலையின் அழகை இரசித்தான்.நீண்டு வளர்ந்திருந்த அந்த மரத்தில் இலைகள் இல்லை.. காலதேவன் தன் கொடூரமான பார்வையால் சிதைத்து நிர்வாணப்படுத்தியிருந்தான்.. காலதேவனுக்கு சவாலாக தன்வாழ்வை நிலைநிறுத்த மெல்ல தன் ஆடைக்குள் புகுந்து தன்னை போர்த்திக்கொள்ள புத்தாடையொன்றிற்கு தயாராக்கிக்கொண்டிருந்தது பரிதாபத்திற்கு உரிய அந்தமரம்..அந்த மரக்கிளையொன்றில் அமர்ந்திருந்த இரு அழகான குருவிகள் ஒன்றிற்கு ஒன்று தலைகோதி காதலோடு "" கீச் கீச்" என தம்மொழியில் கொஞ்சிப்பேசிக்கொள்வதையும் காதல் செய்வதையும் பார்க்க பொறாமையாகத்தான் சங்கருக்கு இருந்தது..
இது இதமான இளவேனிற்காலம் ..எங்கும் மெல்ல அரும்பும்,துளிர்க்கும் காலம்... வசந்தகால திருவிழாவுக்கு இயற்கையெனும் அழகிய கன்னி மேடை அமைக்கும் காலம்... குளிர் கால மேகங்களுக்கு பிரியாவிடையளிக்கும் பொன்னான நேரத்தில்..நீலமேகமொன்று நீல சேலை கட்டி வந்த அழகான பெண்போலே வானவெளியில் ஊர்கோலம் போகும் நேரமிது.. இளஞ் சூரியனும் மேகத்தை கிழித்து தன் எழில் மஞ்சள் வதனம் காட்டி நிற்க...இணை தேடி கொஞ்சிகுலாவும் இந்த சின்ன உயிர்களின் காதல்.. பார்ப்போரின் நெஞ்சத்தை வசீகரித்துச்செல்லும்..இவைபோலே காலமெல்லாம் இந்த மனிதக்காதல் வாழுமா? ஆயிரமாயிரம் கேள்வி மனமெல்லாம் எழுந்து விவாத மேடைக்கு தயாராக...
அந்த சின்ன உயிர்களின் மேல் வீழ்ந்த பார்வையை விலத்த முடியாமல் சங்கர் ஒரு திண்டாட்டத்திற்குள் அகப்பட்டுபோனான்.. இவற்றையெல்லாம் தூரத்தே இருந்து அவதானித்துக்கொண்டிருந்த சங்கரின் தாயார்"" என்ன சங்கர் பலத்த யோசனை ?? ஏதாவது ஹாஸ்பிட்டலில் பிரச்சனையா??" என அருகே வந்து வாஞ்சையோடு தலையை தடவி கேட்க.. தாயின் அந்த அன்பினிலே கண்கள் பனித்தன. மனதிலுள்ள அத்தனை சந்தேகங்களையும் தாயின் முன் கொட்டி தன் மனக்கவலையை போக்க வேண்டும் என அந்தக்கணம் அவன் மனதில் மின்னலாக ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது. ஆனால் அத்தனையையும் மனதிற்குள் புதைத்து ஒற்றை சொல்லில்""ஒன்றும் இல்லையே"என்றபடி" அம்மா சூடாய் ஒரு காப்பி கிடைக்குமா" என்றான்.
வைத்தியசாலையில் பல உடல்களை வெட்டி கிழித்து சாதனைப் படைக்கும் சத்திரசிகிச்சை நிபுணனான அவனால் மதுமதியின் இதயத்தை கிழித்து அங்கு என்னதான் அவள் எண்ணம் என்பதை அறியத்தான் முடியவில்லை.. பெண்ணின் மனத்தின் ஆழத்தை அறிந்தவர் இங்கு எவருமில்லையே..இது இரகசிய சுரங்கம் என சில நாவல்களில் அவன் படித்த ஞாபகம் வந்தது.
தாயார் சரி என்றுவிட்டு காப்பி தயாரிக்க செல்ல ,அங்கிருந்து அகன்று மதுமதியின் அறைக்கதவைத்தட்டினான். கதவைத்திறந்தவள் "என்ன "என பார்வையாலே வினாவினாள்."" மது நாளை சாயந்தரம் காப்பி பாருக்கு (coffee bar)போகணும்.. வேறு எங்கும்போகும் பிளான் இருந்தால் அதை கான்சல் பண்ணிடு.." என்ற அதிகாரத்தொனிப்போடு அவளின் பதிலுக்கு காத்திராது அங்கிருந்து அகன்றான். " ம்ம் என்ன இவன்? திடும் என வந்து சொல்லிட்டு ஓகே பார்த்துக்கலாம்"" என்று மனதிற்குள் பேசியபடி எழுதி முடிக்க வேண்டிய கவிதையின் கடைசி வரிகளை பூர்த்தி செய்தாள்..
"அன்பிற்குள் விழும் விரிசல்கள்
இதயத்தில் விழும் ஆழமான கீறல்கள்"
வரிகளிற்குள் மதுமதியின் இப்போதைய நிலையும் தொக்கி நின்றது.
அவர்கள் அடிக்கடி சந்திக்கும் அந்த கபே பார்(bar). அங்கு மதுமதி சங்கரோடு வந்திருந்தாள். அங்கே வழமைக்கு மாறான சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு பக்கமாக வெறுமையாக இருந்த மேசையில் மதுமதி போய் அமர்ந்தாள். அவள் பின்னே வந்த சங்கரும் அ வளுக்கு எதிரே அமர்ந்தான். பரிமாறப்பட்ட காப்பியை அவள் அருந்தும் அழகை கள்ளத்தனமாக பார்த்தும் பார்க்காதது போல் இரசித்தான். அவள் உண்மையில் அழகிதான். பார்த்தோரை திரும்ப பார்க்க வைக்கும் அழகு. அழகாக கத்தரித்த விரித்து விடப்பட்டக்கூந்தல், வெள்ளைநிறத்தில் கருப்புப்பொட்டுக்கள் போட்ட முழங்காலோடு இறுக்கமான சட்டை, உடலின் வளைவு நெளிவுகளை அப்படியே காட்ட , கழுத்தில் மெல்லிய வெள்ளிச்சங்கிலி.. மேக்கப் இல்லாத இயற்கையழகு... தேவதை போல இருந்தாள். முகத்தில் அமைதியும் சாந்தமும் அப்பட்டமாய் தெரிந்தது. அங்கு அமைதியை கலைத்தது போல்" ஹாய் " என்றபடி அனசன் உட்பட அவனின் குடும்பம் அங்கு வருவதை கண்ட மதுமதிக்கு மனம் திக்கென்றது. "இது சங்கரின் ஏற்பாடோ? இல்லை எதேச்சையாகத்தான் வந்தார்களோ? என்ற சங்கடத்தோடு மதுமதி இருந்தாள். சங்கர் அவர்களை தன் மேசையருகே அழைத்தான் .. அனசனின் தாயார் மதுமதியை கட்டித்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டார். தங்கை அனெற்றா(Anette)சந்தோசத்தோடு மதுமதியை தழுவிக்கொண்டாள்.. அனசன் முதல் முறை சந்திப்பவன் போல் " ஹாய்" என்றபடி கை குலுக்கினான். அவளுக்குள் அவனது அருகாமையும், ஸ்பரிசமும் ஏதோ மின்சாரம் பாய்ந்து உணர்வை தந்தது... நீண்ட காலம் அவர்களின் தொடர்பு இல்லாது இருந்ததால் அவனின் உடல்நலம் பற்றி அவளுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.. ஆனால் இன்று அனசன் சுழல் நற்காலியை விட்டு எழுந்து காப்பி ஓடர் பண்ண போவதை வைத்த கண்வாங்காமல் மதுமதி பார்த்தாள். அப்போதுதான் அண்மையில் அனசனுக்கு செயற்கைக்கால் பொருத்தப்பட்ட விடயம் மதுமதிக்கு தெரிய வந்தது.. மனதிற்குள் இறைவனுக்கு நன்றி செலுத்தினாள்.. அனசன் மதுமதியுடன் ஒரு ஹாய் தவிர வேறு எதுவும் பேசாதது அவளுக்கு கவலையாக இருந்தது. ஆனால் சங்கரின் கண்கள் மட்டும் இருவரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து கொண்டுருப்பதை எவரும் கவனிக்கவில்லை...
(தொடரும்)
ரதிமோகன்
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.