புதியவை

ஜெர்மனிமீரா எழுதும் வர்ணங்களின் வர்ணஜாலம் தொடர் கதை அத்தியாயம் 19-20 -21-22


வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 19
„தெளிவற்ற வானில் அழகு வெண்ணிலவு சோபையை இழந்து மேகத்திரையின் மறைவில் தன்னை மறைத்துக் கொண்டது . சோகமான எண்ணங்களில் மூழ்கிப்போனாள் மயூரி. ஆனால் அவள் பெயரை இவ்வளவு கர்ண கடுரமாக கர்ஜித்த ரமேஷின் குரல் கேட்டு மெல்ல திரை விலக்கி கருவிழிகளை திறந்து மிரண்டு நோக்கினாள் .
„எமக்குள் இருக்கும் பிரச்சனைகளை மற்றவர்களுக்கு தெரிய காட்டிகொள்வது எனக்கு பிடிக்காது . என்ன தான் மனவேறுபாடு நமக்குள் இருந்தாலும் அதை மறைத்து வாழ்வது தான் சிறப்பு . உங்களிடம் இக்குணத்தை நான் எதிர்பார்க்கவேயில்லை மயூரி . மிக அமைதியான பெண் நீங்கள் என்று நினைத்திருந்தேன்“ ரமேஷ் கூற „என்ன கூறுகிறான்?“ என்று ஒன்றும் புரியாது அதிர்ச்சி அடைந்தாள் .
„நான் ஒன்றும் நம்மை பற்றி அம்மாவுக்கு கூறவில்லையே ரமேஷ் . என்ன சொல்றீங்க? . எனக்கு விளங்குதுயில்லை ?. ஏன் இப்படி அநியாயமாக கூருகிறீங்க?“ என்று கண்கலங்க நிற்கும் மயூரியை கொஞ்சம் கூட பொருட்படுத்தாது „அனோஜா தொலைபேசியில் அழைத்து விடயத்தை கூறி மிக கவலைபட்டா . நேற்று கண்ட ஒருவருக்கு உங்கள் சோகத்தை என்று கொட்டியிருக்கிறீர்களே மயூரி , வெட்கமாக இல்லையா ?“ தொடர்ந்தான் கணவன் .
மயூரி கொதித்தெழுந்தாள். „ரமேஷ் ஒரு நிமிடம் . வீணாக வார்த்தைகளை கொட்ட வேண்டாம் . முதலில் நான் யாரிடம் என்ன கூறிவிட்டேன் என்பதை விளக்கமாக கூறுங்கள் . எனக்கு உங்கள் குற்றச்சாட்டு ஒன்றும் புரியுதுயில்லை ரமேஷ் . அனோஜா எப்படி இப்படி உங்களிடம் கூற முடியும் . என்னைப்பற்றி தவறாக அனோஜா கூறுவதை கேட்டுவிட்டு என்னிடம் இப்படி ஆத்திரப்படுவது நியாமில்லை . அவளுக்கு ஏன் என்னிடம் இத்தனை விரோதம்?“ . மயூரி அநியாய சாடலில் மனம் பொறுக்காது நொந்தாள்.
„அனோஜாவுக்கு உங்களிடம் விரோதமில்லை மயூரி . எப்படி என்னிடம் கூறுவது என்று மிக மனசங்கடத்துடன் தவித்தாள் . எவ்வளவோ யோசனை செய்த பிறகே என்னிடம் கூற விளைந்தாள் . அர்ஜுன் அனோஜாவிடம் உங்களைப்பற்றி அப்படி விசாரித்தது அவளுக்கு பிடிக்கவில்லை . அதுதான் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சற்று முன் விஷயத்தை கூறினாள் . உங்களிடம் எதுவும் கேட்டு கவலைபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாள் „.
„அர்ஜுனுக்கும் எனக்கும் என்றுமே நட்பு இருந்ததில்லை . அவனிடம் போய் நீங்கள் இப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை“ . „அர்ஜுனா , யார் அவன்? , என்ன சொல்றீங்க ரமேஷ்?“ என்று இடைமறித்தாள் மயூரி . அவளுக்கு முற்றாக ஒன்றுமே விளங்கவில்லை . „அர்ஜுன் என்று ஒருவரையும் எனக்கு தெரியாதே ரமேஷ் „என்று மலங்க மலங்க விழித்தாள் அப்பாவியான மயூரி .
ஒரு மிக உயரமான , கண்களில் கனிவுடன் ஒரு தோற்றம் அவள் எண்ணத்தில் உயிர்பெற்றது . „ஒருவேளை அவன் தான் அர்ஜுன் எனப்படுபவனோ ? . அவனா, அனோஜாவிடம் என்னைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கூறியவனோ. ஆனால் நான் தனியாக நிற்பது கண்டு மிக இரக்கத்துடன் தானே பேசினான் . அப்படியாயின் அவ்வளவும் நடிப்பா?“ . மயூரியின் உள்ளம் கோபத்தில் மேலும் கொதிக்க தொடங்கியது .
கொஞ்சம் துணிவை வரவழைத்தவாறே „ரமேஷ் அனோஜாவின் பார்ட்டியில் நீங்கள் என்னை புறகணித்தமையை தாங்க முடியாமல் தான் நான் தனியாக வீடு வந்து சேர்ந்தேன் . அர்ஜுன் யார் என்று எனக்கு தெரியாது . நான் ஒருவரோடும் பேசவில்லை . என்னை நம்ப வேண்டியது உங்கள் கடமை“ என்று கொஞ்சம் இறுக்கத்துடன் கூற விளைந்தாலும் ரமேஷ் „போதும் மயூரி . நான் உங்களை புறக்கணித்தேன் என்று என் மீது பழி சுமத்த வேறு முயலுகிறீர்கள் . இதற்கு மேல் உங்களோட கதைப்பதில் பிரயோசனம் இல்லை „.
ரமேஷ் சினத்துடன் வெளியே கிளம்பினான் . „இப்படி அடிக்கடி கோபத்துடன் வெளியேறுவதை இவன் பழக்கமாகவே கொண்டுள்ளானே . கொஞ்சம் அமைதியாக நான் கூறுவதை செவிமடுக்கவே மறுக்கிறானே . என்ன இவன்!“ என்று மனதுள் வைது கொண்டவள் அவள் ஆத்திரம் முழுவதும் அர்ஜுன் என்ற அந்த நடிகனின் மேல் படர்ந்தது .
„அவனால் தான் ரமேஷ் என்னைப்பற்றி தவறாக நினைக்கவேண்டி வந்துள்ளது . நல்லவன் போல் வேஷமிட்டு அனோஜாவிடம் போய் என்ன கூறியிருக்கிறானோ அவள் என் ரமேஷ்க்கு தொலைபேசி எடுத்து கவலைபடுவதற்கு . அந்த ஆசாமி அர்ஜுனை நான் இனி என்றாவது நேரில் கண்டால் இரண்டு சுடுசொல்லாவது சொல்லிவிட்டு வரவேண்டும் என்று நினைத்து கொண்டு போனவள் ஒரு கணம் நின்றாள் „.
„அவனை இனி காணும் வரை ஏன் நான் காத்திருக்க வேண்டும் ?. நான் நேற்று டாக்ஸியில் ஏறு முன் என் கையில் தன் விசிடிங் கார்டை திணித்து வீடு போய் கவனமாக சேர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டானே . அவன் பிசினஸ் கார்டை அவள் ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை . இன்னமும் அக்கார்ட் இருக்கிறதா என்று கூட தெரியாது“, என்று அவள் கைப்பையை எடுத்துப்பாரத்தாள் . கைப்பையின் உள்ளே அர்ஜுன் சிரித்தான் .
தொடரும் மீரா , ஜெர்மனி

வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 20
அர்ஜுனின் தொலைபேசி நம்பரை பார்த்தவள் „பண்பானவன் என்று காட்டிக் கொண்ட பச்சோந்தி இவன் . பரிவை காட்டி பழி தீர்த்துக்கொண்டானோ?“ , ஆத்திரத்துடன் அவன் கைப்பேசி நம்பருக்கு தாமதிக்காமல் அழைப்பை ஏற்படுத்தினாள் மயூரி . பலமுறை சினுங்கிய அழைப்பு ஏற்கபடாமல் மேலும் எகிறிய சினத்துடன் துண்டிப்பை நிறுத்த நினைக்கையில் மறுமுனையிலிருந்து அவசரமான „ஹலோ“ என்ற கம்பீர குரல் கேட்டது .
அக்குரல் மயூரியின் உடலில் ஒரு செக் மின்சாரத்தை ஏற்றி பின் அடங்கியது . மறுவார்த்தை கூற முடியாது வாயடங்கி நின்றாள் . „ஹலோ யாரது அங்கே?“ என்று பொறுமையின்றி வெளிவந்த அடங்கா அவன் குரல் அவளை மீண்டும் நிஜத்திற்கு அழைக்க, „அது நான் மயூரி , ரமேஷின் மனைவி , நேற்று அனோஜாவின் பார்ட்டியில் உங்களை சந்தித்தேன்“ என்று ஒருவாறு திக்கி திணறினாள் ..
அர்ஜுன் அப்படியே சிலையானான் . அவன் மயூரியின் தொலைபேசி அழைப்பை எதிர்பார்க்கவேயில்லை. அவள் ஏதோ ஒருவிதத்தில் அவனிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாள் என்பதை அவன் அறிந்திருந்தான் . அவளுடனான முதல் சந்திப்பே அவனைப்பொறுத்தமட்டில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகிவிட்டது. அவனை அறியாமலேயே அன்று மயூரி விட்டுச் சென்ற கவிதையை மிக கவனமாக தன் பர்ஸில் மடித்து வைத்தபடி அடுத்த முறை அவளை சந்திக்கும் வேளை கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தான் . ஆனாலும் அவளின் சோகம் ததும்பும் முகத்தையே மீண்டும் மீண்டும் காண வேண்டி வந்தமையினால் அவனால் அவளிடம் இரக்கம் கொள்ள மட்டுமே முடிந்தது .
சுதாகரித்தவன் „மயூரி , நேற்று கவனமாக வீடு சென்றடைந்தீர்களா ?, உங்களைப்பற்றி அனோஜாவிடம் இன்று விசாரித்தேன் . இனிமேல் இப்படி இரவு நேரம் தனியாக எங்கும் செல்வதை தவிர்த்துவிடுங்கள்“ . மீண்டும் கருணை அவன் குரலில் தொனித்தது .
வெகுண்டு எழுந்தாள் மயூரி . „போதும் நிறுத்துங்கள் உங்கள் வேஷத்தை. நல்லவர் போன்று காட்டிக்கொண்டு என்னைப்பற்றி அனோஜாவிடம் என்ன கூறியிருக்கிறீர்கள்? . உங்கள் பெயரையே இன்று தான் அறிந்தேன் . ஒரு சில வார்த்தைகள் தவிர வேறு ஒன்றும் உங்களுடன் பரிமாறியிருக்க மாட்டேன் . அப்படியிருக்க என்னைப்பற்றி அவதூறு சொல்ல எப்படி உங்களுக்கு முடிந்தது ?. தோற்றத்தில் ஒரு ஜென்ட்டல்மென் போன்று நடந்து கொண்டு இப்படி கேவலமாக நடக்கிறீர்களே , உங்களுக்கு வெட்கமில்லை“ , மயூரி தன் கோபத்தையெல்லாம் கொட்டித்தீர்த்தாள் .
ரமேஷின் முன் வாயே திறக்க முடியாது அமைதியாக நின்று மனம் நோபவள் ஆனால் அர்ஜுனிடம் மிக தைரியமாக சினத்தை காட்டுவது அவளுக்கே ஆச்சரியத்தை தந்தது . „தானா இப்படி துணிவுடன் பிற ஆடவனிடம் குரலை உயர்த்தி பேசுகிறாள் . என் கணவன் என்னிடம் கொண்டுள்ள பிழையான அபிப்பிராயத்துக்கு காரணமான இவனிடம் கோபத்தை வெளிப்படுத்துவது நியாயமே“ என்று மனதுக்குள் சொல்லியபடியே இடையே குறுக்கிட்ட அர்ஜுனின் குரலை இடைநிறுத்தியப்படியே „இனிமேலும் உங்களை சந்திக்கும் சந்தர்ப்பம் வரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்“ என்று தன் அழைப்பை துண்டித்தாள் .
அவளுக்கு மூச்சு வாங்கியது . துஷ்டர்களை கண்டால் தூர விலகவேண்டும் என்று பெரியவர் சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை . திடம் கொண்டாள் .
ஆனால் அர்ஜுனின் நிலை வேறுவாக இருந்தது . முதல் முறை ஒரு பெண் உண்மை என்னவென்று அறியாது தன் மீது வீண் பழி சுமத்தியுள்ளாள் . அவன் சந்திக்கும் பெண்கள் பலர் அவன் தங்கள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயத்தை பெற பெரிதும் முயற்சிப்பதை அவன் நேரில் கவனித்துள்ளான் . அவன் அழகன் மட்டுமில்லை , ஒரு நிறுவனத்தை நிறுவகிக்கும் பொறுப்பில் இருப்பவன் . அத்துடன் மிக மரியாதையாக , இனிமையாகும் பழகும் பண்புள்ளவன். அவனிடம் மயூரி குற்றஞ்சாட்டும் அத்தகைய குணம் அறவேயில்லை. ஆனாலும் இவளோ தன் மேல் அநீதியாக இத்தனை கோபத்தை வெளிக்காட்டியது அவனால் ஏற்றக்கொள்ள முடியாது இருந்தது , பொதுவாக மிகுந்த ஆத்திரத்தை உண்டு பண்ணியிருக்கவேண்டும் . ஆச்சரியம்படும் விதமாக ஒரு துளி கோபமும் மயூரி மேல் வராது இனம்புரியாத பரிதாபமே கொள்ள முடிந்தது அவனுக்கு. ரமேஷ் மற்றும் அனோஜா இருவரின் தொடர்பை அவன் அறிந்திருந்தமையினால் போலும் . மனதை ஆறுதல் படுத்திக்கொண்டான் அர்ஜுன் .
தொலைப்பேசி அழைப்பை துண்டித்த பின்பும் மயூரிக்கு ஆத்திரம் அடங்கவில்லை . „என்னைபற்றி என்னவென்று நினைத்துகொண்டான் இந்த அர்ஜுன் . எத்தனை பெரிய நடிகன் இவன் . மீண்டும் அக்கறை கொண்டவன் போல் வீடு போய் சேர்ந்தீர்களா ? , இனிமேல் இரவு தனியே பயணிக்க வேண்டாம், என்று அறிவுரை வேறு . என் கணவனுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு எங்கே வந்தது ?“. கூடவே ரமேஷை எப்படி சமாதானம் செய்வது என்று வேறு யோசிக்க தொடங்கினாள் .
„இன்று எப்படியாவது ரமேஷிடம் மனம் விட்டு பேசி தான் அவ்வாறு குடும்ப விபரங்களை பகிரவில்லை என்பதை தெரியபடுத்த வேண்டும் . ரமேஷ் என்னிடம் ஈடுபாடு பெரிதாக காட்டவில்லையென்றாலும் நான் சமைக்கும் உணவை மிக விரும்பி சாப்பிடுகிறான் . அவனுக்கு பிடித்த உணவை அருமையாக சமைத்து அவன் ரசித்து சாப்பிட்ட பின் அமைதியாக இருந்து உரையாடவேண்டும் . நமது தாம்பத்தியம் வெற்றிப்பெற வேண்டுமாயின் மனம் விட்டுப்பேசி மனஸ்தாபங்களை களைவது நமது உறவுக்கு ஆரோக்கியமானது“ , மயூரி முடிவு செய்தாள்.
சமையல் செய்வதுக்கு தயாரானவள் , ரமேஷுக்கு பிடித்த பொரித்த கத்திரிக்காய் வதக்கல் செய்வதற்கு மெல்லிய துண்டுகளாக வெட்ட தொடங்கியவளின் எண்ணம் மீண்டும் அந்த வேஷைக்காரனிடம் வந்து நின்றது . „ஆனாலும் இந்த அர்ஜுன் எப்படி என்னைபற்றி தவறாக அனோஜாவிடம் போட்டுக் கொடுக்க முடியும்?“ . அவளுக்கு ஆத்திரம் பொங்கியது . கொதிக்கும் எண்ணெய்ச்சட்டியை அடுப்பிலிருந்து தூக்கியவள் „அம்மா“ என்று கதறியவாறே துடிதுடித்துப்போனாள் .

தொடரும் 
மீரா , ஜெர்மனி .வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 21

நெஞ்சின் அலைகள் நிலைதடுமாறுகையில்,
நினைவுகளின் சீற்றம் சீறிப் பாய்ந்து
நிஜம் மறந்த வேளை
கூர்மையின் தாக்கம் துண்டாடியது
அவள் துக்கத்தை மட்டுமின்றி
எண்ணெய்ச்சட்டியை அப்படியே வைத்தவள் துடித்துப்போனாள். மயூரியின் வெண்தாமரை விரல் வெட்டுண்டு இரத்தம் பீறிட்டது. வழிந்தோடி ஓரம் தேடியது . நடுங்கும் விரல்களை வீட்டு பைப் தண்ணீரில் நனைக்க எத்தனிக்க சுள்ளென்ற வலியை தாங்க முடியாது விடுக்கென்று கையை இழுத்துக்கொண்டாள் . அருகே காணப்பட்ட டிசுக்களை கொண்டு கட்டில்லாமல் வெளியேறும் இரத்தத்தை நிறுத்த முடியாது திணறினாள் .
அவளுக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது . விரலில் மிகப்பெரிய வெட்டு அதை வைத்தியசாலை சென்றால் மட்டுமே நிறுத்த முடியும். வீட்டிலிருக்கும் பிளாஸ்டருக்கு முடியாது என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். ஒரு துணியை எடுத்து விரலை நன்றாக சுற்றிக்கொண்டு மறுகையினால் ரமேஷ்க்கு அவசரமாக தொலைபேசியில் அழைத்தாள். பலமுறை அழைப்பு சென்றாலும் அவன் அழைப்பை ஏற்கவில்லை . „எங்கே என் ரமேஷ் ?. இப்பொழுது அவன் அருகில் வேண்டுமே“ . அவள் மனம் படபடத்தது .
சுற்றப்பட்ட அந்த துணி நிறம் மாறுவதை கண்டாள். விரல் துண்டாக்கப்பட்டு விட்டதே . வேண்டப்படாத ஒருவனிடம் கொண்ட கோபத்தின் விளைவே அவள் கவனச்சிதறலுக்கு காரணம் . „அர்ஜுன் என்பவனால் எனக்கு கெடுதலே நடக்கிறது“ . அவன் மேல் அவளுக்கு வெறுப்பு இன்னமும் பன்மடங்கு ஆனது . மீண்டும் ரமேஷ்க்கு அழைத்துப் பார்த்து அவன் தொலைபேசி அழைப்பை ஏற்காத காரணத்தால் என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்து விட்டு அனோஜாவுக்கு தாமதிக்காமல் அழைப்பை ஏற்படுத்தினாள்.
இருமுறை அழைப்பு போனவுடனே மறுமுனையிலிருந்து அனோஜா ஏற்றுக்கொண்டாள். மயூரி தனக்கு நடந்த விபத்தை கூறி „ரமேஷ் எங்கே என்று தெரியுமா அனோஜா , நான் பலமுறை தொலைபேசியில் அழைக்க முயன்றும் அவனை தொடர்புகொள்ள முடியவில்லை . கைவிரல் துண்டாக்கப்ட்டு விட்டது போலிருக்கு . வைத்தியசாலைக்கு அவசரமாக போக வேண்டும் . தயவு செய்து அவரிடம் தெரியபடுத்தி விடுகிறீர்களா?“ என்று கலக்கத்துடன் கேட்டாள். அனோஜாவும் மிக கரிசனையுடன் „பயப்பிடாதீர்கள் மயூரி , ரமேஷ் ஒரு முக்கிய மீட்டிங் கலந்துரையாடலில் இருக்கிறார் . உங்கள் விபத்தை தெரியபடுத்தி விடுகிறேன் . உடனே வருவார்“ என்று அழைப்பை துண்டித்தாள் .
சில நிமிடங்கள் கடந்தது . மயூரிக்கு இரத்தம் அதிகமாக கொட்டிக்கொண்டு இருந்தமையினால் மயக்க நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக போய் கொண்டிருந்தாள் . அந்த நேரம் கதவு அவசரமாக திறக்கப்பட்டு அவள் முன்னே அவன் ஓடோடி வந்தான் . தன் முன்னே அவன் உருவத்தைக்கண்டவுடன் அவள் நிம்மதி பெருமூச்சுடன் சுயநினைவை இழந்தாள்.
வந்தவன் அப்படியே அவளை வாரி மடி மீது சாய்த்துக்கொண்டான் . „மயூரி மயூரி கண்ணை திறவுங்கள் . உங்களுக்கு ஒன்றுமில்லை . இதோ உடனே வைத்தியசாலை கொண்டு செல்கிறேன்“ என்று தனது காரிலே அவளை ஒரு குழந்தையை கொண்டு செல்வது போல் மிக பாதுகாப்பாக கிடத்தி அவசரமாக ஓட்டிச்சென்றான் .
„டாக்டர் இவளை முதலில் கவனியுங்கள் . நிறைய இரத்தம் வெளிவந்துவிட்டது . எங்கே நர்ஸ் ஏன் தாமதிக்கிறீர்கள்?“ மிகுந்த கோபத்துடன் அதட்டிகொண்டிருந்தான் அவன் . கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு திரும்பிக் கொண்டிருந்த மயூரியின் காதில் இவனின் மிரட்டல் இலேசாக விழுந்தது .
„என் ரமேஷ்க்கு என்னிடம் இத்தனை கரிசனையா ?. இவ்வளவு அன்பை வைத்துக்கொண்டா என்னிடம் வெளிக்காட்டாமல் நடந்து கொள்கிறான் . இனிமேலாவது நம்மிருவரின் அன்பும் வெளிப்படட்டும்“ முடிவுடன் கண்களை மிகவும் கஷ்டப்பட்டு மெல்ல திறந்தாள் . அவள் முகத்தருகே ஆழந்த கரிசனையுடன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்த அவன் விழிகளில் இவள் விழிகள் கலந்தது .
அவன் விழிகள் ஆறுதலையும் அவள் விழிகள் சினத்தையும் உமிழ்ந்தது . „நீங்களா?“ என்ற கேள்வியுடன் மயூரி மீண்டும் தன் சுயநினைவை இழந்தாள்.

தொடரும் மீரா , ஜெர்மனி -
வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 22.

„மயூரி , மயூரி கண்களை திறந்து பாருங்கள் . உங்களுக்கு பயப்பிடும் வகையாக ஒன்றுமில்லை என்று டாக்டர் கூறி விட்டு செல்கிறார் . கொஞ்சம் அதிகமாக வந்த இரத்தத்தை பார்த்து பயந்துவிட்டீர்களாம். .அதனால் தான் நீங்கள் மயங்கியிருக்கிறீர்கள். உங்கள் விரலுக்கு தையல் போட்டிருக்கிறார்கள். தைரியமாக கண்களை திறவுங்கள்“ என்று ஒரு குரல் அவளை சுயநினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தது .
மயூரி மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டாள். விழிகளை திறந்து அவனை மீண்டும் பார்க்க அவளுக்கு விருப்பமிருக்கவில்லை . „ஏன் இவன்?, ஏன் அவனில்லை ?“. வினாக்கள் விடை தேடின . விருப்புகள் வெறுப்பின் மறைவில் விடை பெற்றன . விசும்பல் மெல்லிய திரையில் வெளிப்பட்டது .
அவளை யாரோ மீண்டும் தட்டி எழுப்ப முயற்சி செய்ய தனக்குள் அடக்கி வைத்திருந்த அத்தனை கோபங்களையும் சேர்த்து அனல் கக்க தயாராகி கண்களை திறந்தவள், தன் முன் ரமேஷின் உருவத்தை கண்டதும் அடக்கிக்கொண்டாள், அவளது கண்களில் இருந்த வீரியத்தை நொடிப் பொழுதில் கண்ட ரமேஷ் ஒரு கணம் அதிர்ச்சியுற்று, ஓரடி பின் வைத்து தயங்கி நின்றான் மயூரியின் தோற்றம் அவனுக்கு ஒரு பத்திரகாளி அம்மனை நினைவூட்டியது . „ஏன் இவளிடம் இத்தனை கோபம் ?“.
மயூரியின் கண்களும் ரமேஷையும் தாண்டி தன் வெறுப்பை உமிழ அவனை தேடியது . „ஒருவேளை நான் தான் பிரமையில் இருந்தேனோ? . அவன் என்று தவறுதலாக நினைத்துவிட்டேனோ ?. இருக்காதே . அவனது பார்வையை நான் சந்தித்தேனே! .
அவளுக்குள் ஒரே குழப்பமாக இருந்தது. அதற்குள் சுதாகரித்த ரமேஷ் „மயூரி ஏன் நீங்கள் வீணாக கோபம் கொள்கிறீங்கள்.? நான் ஒரு முக்கிய ஆபீஸ் மீட்டிங்கில் இருந்தமையினால் தான் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை . ஆனால் அனோஜா எவ்வளவு கரிசனையுடன் அர்ஜுனுக்கு விஷயத்தை தெரிவித்து அனுப்பிவிட்டா. நீங்கள் அனோஜாவுக்கு முதல் நன்றி சொல்லவேண்டும்@ .
„சரி , நானும் ஆபீஸிலிருந்து நேரே வந்துவிட்டேன் .இரவு உணவு கூட இன்னமும் ஆகவில்லை . உங்களுக்கு முடியுமென்றால் வீடு கிளம்புவோம். ஒரிரு தினங்களில் விரல் தையலை அவிழ்க்க டாக்டர் கூட்டி வரச்சொன்னார். என்ன மயூரி . உங்களால் முடியுமா?“ என்று கேட்ட ரமேஷிடம் அவள் சரி என்று தலையை ஆட்ட தான் முடிந்தது .
ஏதோ ஒரு ஏமாற்றம் அவள் மனதில் படர்ந்தது . „விரல் துண்டாகி ஆஸ்பத்திரியில் கிடக்கிறாள் . பக்கத்தில் தான் இல்லையே என்ற எந்த பதைபதைப்பும் இல்லாமல் மிக கூலாக எடுத்துகொள்கிறானே என் கணவன் . ஒரு விதத்தில் இது நல்ல குணம் தான். அவன் சிறுசிறு விஷயங்களுக்கும் டென்ஷன் ஆகாமல் நிதானமாக கையாளுகிறான்“ .
ஆனாலும் அவள் மனதை ஏதோ ஒன்று நெருடியது . „என்னிடம் ஆழமான அன்பு இருந்தால் ....., என் மேல் உள்ள அக்கறையில், அன்பே மயூரி என்னம்மா ஆயிற்று உங்களுக்கு ?. இப்படி வெட்டிக்கொண்டு மயங்கி வேறு விழுந்து விட்டீர்களே . நான் சரியாக பயந்து விட்டேன்டா . என் கண்ணம்மா இனி என்றும் உங்களுடன் என்றும் அருகேயே இருப்பேன்“ . அதேநேரம் கொஞ்சம் கடுமை காட்டியபடியே „எங்கே உங்கட சிந்தனைகளை விடுறீங்க மயூரி ?. கவனமாக வெட்ட கூடாதா ?. எவ்வளவு இரத்தம் சிந்தி விட்டீர்கள் . எதையோ வெட்டுவதற்கு உங்கள் விரலையா வெட்டுவது?“ என்று செல்ல கோபமும் கொண்டிருக்ககூடாதா? .
ஏக்கங்கள் நெஞ்சத்தை மீண்டும் ஆட்கொண்டது . „இவற்றை தானே என் ரமேஷிடம் எதிர்பார்க்கிறேன் . நான் அதிகம் எதிர்பார்க்கிறேனா ?. என்னிடம் தான் அதிகம் எதிர்பார்ப்போ ?. .ஆனால் வேண்டப்படாத யாரோ ஒருவன் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தானே . அப்படியென்றால் நான் கனவு காணவில்லை . அது பிரமையுமில்லை . அர்ஜுன் , அவன் தான் என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறான்“ . ஏமாற்றமும் கோபமும் அவள் மனதை வெறுமை கொள்ள வைத்தது .
வீடு வந்தவர்கள் அங்கே அவள் விட்டுச்சென்ற அலங்கோலத்தை கண்டு முகம் சுளித்தான் ரமேஷ் . மயூரியை திரும்பிப்பார்த்து „நீங்கள் சென்று கொஞ்சம் ஓய்வு எடுங்கள் . நான் சமையலறையை ஒதுக்கிவிடுகிறேன் . இன்று பாண் இருந்தால், அதையே உண்போம் . அதற்கு முன் அனோஜாவுக்கு தொலைபேசியில் அழைத்து உங்களை வீட்ட அழைத்து கொண்டு வந்து விட்டேன் என்பதை தெரிவிக்க வேண்டும்“ என்று தன் கைத்தொலைபேசியுடன் சென்றான் .
மயூரிக்கு அனோஜா என்ற பெயரை கேட்டவுடன் ஏதோ புரிபடுவது போலிருந்தது . „இது நிச்சயமாக அனோஜாவின் சூழ்ச்சியே . அவளை என் நண்பி என்று நினைத்து ரமேஷிடம் தெரியப்படுத்த சொன்னேன் . ஆனால் அவளோ அர்ஜுனை அனுப்பி இருக்கிறாள் . ஏன் இப்படி அனோஜா நடந்து கொள்ளவேண்டும் ?. ரமேஷ் அவளை முற்றும் முழுதாக நம்புகிறான் . இவர்களிருவருக்கும் இருக்கும் உறவு தான் என்ன ?. குழம்பினாள் ஏற்கனவே குழப்பங்களால் குழம்பி போயிருந்த மயூரி

தொடரும் மீரா , ஜெர்மனி


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.