புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 2017ல் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று " கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் அர.விவேகானந்தன்,தமிழ்நாடு, இந்தியாஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி மார்ச்
மாதம் 2017
போட்டி -87 வது மாதம்
போட்டிக்கவிதை எண் -05
தலைப்பு- முத்தமிழ் வித்தகர்விபுலானந்தர்!
(மரபு கவிதை - அறுசீர் விருத்தம்)
எத்துணை அறிஞர் கூட்டம்
...இத்தரை வாழ்ந்த வன்று
சித்திரை நிலவைப் போல
...செழுமையு முலகி லோங்க
வித்தகம் பலவும் செய்தே
...விலையிலா மொழியைக் காத்தார்!
முத்திரைப் பதிக்க வந்தார்
...முத்தமிழ் விபுலா னந்தர்!
பேரெழி லிலங்கை தன்னின்
...பெருமையைத் தலைமேல் ஏற்றார்!
சீரெழில் சிறக்க நாளும்
...சீர்கலைக் கல்வி யாக்கி
ஊரெழும் முன்னே தோன்றும்
...உறுபகை மாளச் செய்தார்!
பாரெலாம் வியக்கும் வண்ணம்
...பாடசா லையுஞ் செய்தார்!
பல்துறை அறிவைப் பெற்றே
...பல்கலை நூற்கள் கண்டார்!
நல்வினை நாட்டி லோங்க
...நலமெனும் ஞானம் பெற்றார்!
சொல்லிலே வண்மை சேர்க்கச்
...சுயநலம் மறந்தே வாழ்ந்தார்!
மெல்லின மனமுங் கொண்டார்
...மேன்மையாம் வழியைத் தந்தே!
பாரதி பாட்டை யெங்கும்
...பரப்பிடும் எண்ணங் கொண்டார்!
போரிடும் உலகந் தன்னில்
...புதுமையை இழைத்துச் சொன்னார்!
பாரினில் பழுத்த நூலை
...பணியென மொழிபெ யர்த்தார்
பாறைபோல் கிடந்த நெஞ்சுள்
...பலாவெனுஞ் சுவையைத் தந்தார்!
இயலிசைக் கூத்தே என்னும்
...இனிமையாம் நூற்கள் வேண்டி
இயற்றமிழ் வளர்த்தார்! நல்ல
...இசைத்தமிழ் யாழ்நூல் நெய்தார்!
இயல்பினில் எளிமை பூண்டார்
...இன்பமே விதைத்தார் நம்மில்!
முயன்றுமே இறையை யேற்று
...முழுமையாம் அன்பைத் தந்தார்!
ஏழையின் உணவாம் நீரை
...ஏய்த்துமே மறுத்த தெண்ணிக்
கோழையாய் முடங்கி டாது
...கொடுமையை எதிர்த்து நின்றார்!
வாழையாம் இளைஞர் கூட்டம்
...வாழவே உவர்நீர் உண்டார்!
தோழமை நெறியும் ஓங்கத்
...தோளினில் சுமந்தார் வெம்மை!
முத்தமிழ் நலத்தை நாடி
...மூழ்கினார் தமிழின் அன்பில்
சித்தமே குளிரும் வண்ணம்
...சீர்மிகு பணியைச் செய்தார்!
வித்தகம் பலவுங் கூட்டி
...வெற்றியை ஊன்றி வைத்தார்!
சொத்தென அவரைக் காப்போம்
...சூழ்ந்திடும் இன்னல் மாய்ப்போம்!
கண்ணென மொழியைக் கொண்டார்
...கலையெலாம் பெருகச் செய்தார்!
உண்மையை உரக்கச் சொல்லி
...ஊரதில் வளத்தைச் சேர்த்தார்!
பண்பதில் பசுமை நம்மின்
...பைந்தமிழ் விபுலா னந்தர்
பண்களில் மூழ்கி நாமும்
...பாரெலாம் பரப்பு வோமே!
அர.விவேகானந்தன்,

தடாகத்தின் பாராட்டுக்கள் (
அர.விவேகானந்தன்,தமிழ்நாடு, இந்தியாஅவர்களுக்கு 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.