புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 2017ல் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று "கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் முகம்மட் இஸ்மாயில் அச்சி முகம்மட்


உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி, மார்ச்சு 2017
போட்டி -87 வது மாதம்
போட்டிக்கவிதை எண் 09
தலைப்பு- முத்தமிழ் வித்தகர்விபுலானந்தர்

சாமித்தம்பி கண்ணம்மா சரீரத்தின் ஓவியமாய்ப்
பூமித்தாய் மடிமேலே பூத்த பெருங் காவியமாய்
நாமகளின் வரம்பெற்ற நனிபுலமாம் காரைதீவில்
கோமகனார் இரவியெனக் குணதிசையி லவதரித்தார்

முத்தமிழ்ச் சாகரத்தில் மூழ்கிய பேரரறிஞர்
வித்தகர் விபுலானந்தர் விரை நறும் பூந்தமிழில்
நித்திய ஆய்வு நல்கி நித்திலங் கீர்த்தி கொள்ள
சித்தமுங் கரணமுஞ் சேர் சீவிதப் பணிகள் செய்தார்

ஆருயிர் கலந்த செந்தேன் அமுதமே வார்த்த தமிழை
சீருறக் கற்று வையஞ் செழித்தட வேண்டுமென்று
வேருற மனதி லெங்கும் வேட்கையைக் குயிற்றி வைத்துக்
காரிருட் கிழித்து வந்த கதிரவன் போற் சுடர்ந்தார்

அகத்திமா முனியே வந்து அமைவுற மொழி நயந்து
இகத்தினிற் தமிழ் வளர்க்க இயலிசை நாடகத்தை
முகத்தலில் முக்கனியாய் முத்தமிழ்க் கலைச் சுரங்கம்
புகத்தகு நுண்ணமதியார் புலமைமையிற் சங்கமித்தார்

ஆங்கிலம் கற்ற மேதை அறிவியல் பெற்ற பாதை
பாங்கினில் நடைபயின்று பைந்தமிழ் உடையணிந்து
ஓங்கிட உழைத்த பண்பர் ஓங்கலாய்த் திளைத்த அன்பர்
தேங்கிடா நதியைப் போலே தேசமே ஓடலானார்

பேரெழில் கொஞ்சும் அந்தப் பேராதனை வளாகந் தன்னிற்
கூர்மதி விஞ்சும் சந்தக் கோபுரம் புனைந்த தமிழில்
நேரெழில் பொங்கும் நீர்மை நேயமே கொண்ட நெஞ்சர்
பாரெழில் கொள்ளும் வண்ணம் பன்மொழிப் புலமை பெற்றார்

மாண்புறு ஆய்வியலில் மதங்க சூளா மணியும் ஒன்று
காண்பவர் அதிசயிக்கக் கண்கவர் யாழ் நூல் உண்டு
கேண்மையில் வரைந்த காதை கங்கையில் விடுத்த ஓலை
ஊண்பவை போன்றதொக்கும் உயிரினைத் தழுவி நிற்கும்

பாரத மண்ணில் அண்ணா பல்கலைக்கழக மன்றில்
நீரதம் போலே பெய்து நிரப்பினார்த் தமிழைத் தொண்டில்
நாரத ரிசை எழுப்பும் நாவினைக் கொண்ட சொல்லர்
ஆரத முண்ட எங்க ளாருயிர்ச் செஞ்சொல் வல்லர்

எத்தனை ஆண்டு போயும் ஏற்புடன் நெஞ்சில் வாழும்
சத்தியந் தவறாத் துறவி சாதனைப் பலதை நிறுவி
சுத்தமாய் மொழி வளர்த்தச் சுவாமியை மயில்வாகனரை
முத்தமிழ்ப் பூத்த மண்ணின் முதிசமே என்றுரைப்பேன்

அறிவியல் நூற் படித்து அறிந்ததைச் சொல் வடித்து
நெறி முறை வகுத்தளித்து நேரிய கலை தொகுத்து
பொறி புலன் ஐந்தடக்கல் போர்த்து மெய்யாமை ஒத்துத்
தறியென ஆய்வமைத்துத் தண்டமிழ் வளர்க்கலுற்றார்

இனமத பேதம் என்ற இம்சையைத் தாண்டி நின்ற
கனமிகு வித்தகராம் கடலென விரிந்த நெஞ்சர்
சினமது அவருக்கில்லை சீதளம் வார்த்த முல்லை
தினமவர் தமிழுக்காக தியாகங்கள் செய்த பிள்ளை

பொதிகைத் தமிழ் தாயின் பொன் மடியின் அவதாரம்
மதி நுட்பம் வாய்த்த பெரு மயில்வாகனர் என்பேன்
நிதியம் பல பெற்றது போல் நித்தியம் ஆனதொரு
சுதி மீட்டும் யாழ் நூல் சுவாமி தந்த படையலன்றோ !

ஈசன் உவக்கின்ற இன்மலரை நமக்களித்தார்
வீசு புகழ்க் கொண்ட விபுலானந்த அடிகளார்
பேசுஞ் சொற் போலே பிரபஞ்ச வாழ்வியலில்
தேசுபோற் சுடர்ந்து தேசமெங்கும் பரவி நின்றார் !

நல் நகர் நாவலர் தம் நனி புகழ் மேவும் தீவில்
தொல் புகழ் கொண்ட காரை தீவினில் பிறந்த மேதை
பல்வகைத் தகைமை பெற்ற பண்டிதர் விபுலானந்தர்
சொற்செயல் வாழ்க்கைசூழச் சோபனங் கொண்டதன்றோ!

நிலையாமைக் கோட்பாடை நிறுவி யிங்கு காட்டியவர்
அலைமோதும் குச்சி ஒன்றில் படிப்பினைகள் ஊட்டியவர்
கலைநட்புப் பூண்டிருந்த கந்த சாமி நண்பருக்காய்
விலைமதிக்கா கவிவரைந்து விடுத்தாரே கங்கையிலே!

பாரதியின் பாக்களதை பாரதமே வெறுத்த காலை
சாரதியாய் அவர் மாறி சந்தத் தமிழ் வாகனத்தில்
ஓரமைப்பை உடன் நிறுவி ஓசையுடன் கானமிட்டுப்
பாரதிக்கு உயிரூட்டிப் பார் புகழ வைத்த மேதை !

ஏராளர் பூத்த மண்ணில் இயலிசையாய் மலர்ந்தார்
சோராமல் பூந்தமிழைச் சோனம்போற் பொழிந்தார்
பேராசிரியர்த் தர முயர்ந்து பேணித் தமிழ் வளர்த்தார்
தீராத வேட்கை கொண்டு தீந் தமிழிற் குளித்தார் !

செம்மொழி உலகமெங்கும் செயம் பெறவேண்டு மென்றார்
அம்மொழி இலங்குதற்கு அறிவொளி பாய்ச்சி நின்றார்
தம்முயிர் உடற் பொருளைத் தமிழுக்காய் அர்ப்பணித்தார்
நம்மவர் விபுலாநந்தர் நனி புகழ் வாழி! வாழி!

முகம்மட் இஸ்மாயில் அச்சி முகம்மட்

தடாகத்தின் பாராட்டுக்கள் (
முகம்மட் இஸ்மாயில் அச்சி முகம்மட்அவர்களுக்கு 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.