புதியவை

டென்மார்க் ரதி மோகன் எழுதும் பனிவிழும் மலர் வனம் "🌺🌺🌺🌺 அத்தியாயம்.45-46-47-48-49


"பனி விழும் மலர் வனம்"🌺அத்தியாயம்-45🌺🌺
மதுமதியால் அங்கு அமைதியாக இருக்கமுடியவில்லை.. நேற்றுவரை இவள் பின்னே நீதான் என் காதல் என சுற்றித்திரிந்தவன் இன்று எதுவும் பேசாது அமைதியாக இருந்தான். இங்கு என்ன நடக்கிறது என்று எதுவுமே புரியாதவளாக மதுமதி மருண்டோடும் மானாக விழிகள் படபடக்க தவித்தாள். கண்களில் இருந்து திரண்ட கண்ணீர்த்துளிகள் கன்னத்தை முத்தமிட்டுச் செல்வதை எவ்வளவுதான் முயன்றபோதும் அவளால் தடுக்க முடியவில்லை.. சடுதியாக இதைக்கவனித்த அனசனின் கண்களும் கலங்கின.
அங்கு பூரண அமைதி ஒன்று நிலவியது. எல்லோரும் காப்பியை சுவைத்தபடி திடீரென்று அங்கு வீரிட்டு அழும் ஒரு குழந்தை செய்யும் அந்த அட்டகாசத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். கீழே தன்னை இறக்கிவிடும்படி அந்தக்குழந்தை அழுது அடம் பிடிப்பதும், இல்லை என தாய் மறுத்து மடியில் போடுவதுமாய் தொடர்ந்த போராட்டத்தின் இறுதியில் குழந்தையின் அந்த முயற்சி வெற்றியளிக்க பிஞ்சுக்கால்களால் தத்தித் த த்திச்செல்லும் அழகைக்கண்டு எல்லோர் பார்வையும் அதன் மேல் விழ, அந்தக்குழந்தை எதையோ அவனுக்கு உணர்த்தியது போல் வேகமாக அனசன் தன் சுழலும் நாற்காலியைத்திருப்பி அவளருகே வந்தான். அங்கு சங்கர் உட்பட அனைவரும் அங்கு இருப்பதை கூட அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அனசன் கண்களில் ஒரு இறுமாப்பு தெரிந்தது. நேற்றுவரை அவள் அவனின் உயிரான காதலி .. இதில் எவருக்கும் உரிமை கிடையாது என சொல்வதுபோல அனசனின் பார்வை இருந்தது. " மது எனை மன்னிச்சிடு..உனக்கு நான் நிறைய தொல்லை கொடுத்திட்டன்..எல்லாம் நீ நல்லாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்...உனை மறந்துட்டேன் என நினைக்கிறியா?? இல்லவே இல்லை...இந்த இதயம் மண்ணை விட்டு போகும் வரை உனைதான் சுமக்கும்... நான் ஐரோப்பியன்தான்.உன் குடும்பத்தார் நினைக்கலாம்., வெள்ளைக்காரன் நாளுக்கு நாள் ஆளை மாற்றுவாங்களென.. இது நீங்கள் எம்மீது வைத்திருக்கும் அவநம்பிக்கை . தப்பான பார்வை அது.... Jeg elsker dig... jeg elsker dig...( நான் உனை காதலிக்கிறேன்) என அவளின் கைகளைப்பற்றி உரத்துக் கத்தினான்., எல்லோரும் ஒருகணம் அங்கு திரும்பி பார்த்தார்கள்.
மதுமதியின் உடல் லேசாக நடுங்கியது. இன்னும் சில தினங்களில் அவள் கழுத்தில் மாங்கல்யம் தரப்போகிறவன் சங்கர். கைத்தொலைபேசியுடன் பேசுவதுபோல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தது மதுமதிக்கு சுள் என்று இதயத்தில் வலித்தது. விடுக்கென்று அனசனின் கைகளை உதறிவிட்டு அவ்விடத்தில் இருந்து எழுந்தவளை அனசனின் தாயார் அமர்த்தி விட்டு"" இருவரும் இந்தளவு காதலை இதயத்திற்குள் புதைத்து வைத்துவிட்டு எதற்காக இந்த பிரிவு நாடகம் நடத்தினீர்கள்? எதற்கு மது நீ கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னாய்?? இதில் அகப்பட்டு நிற்பவன் அந்த நல்ல மனிதன் சங்கர்.. அந்த டாக்டரின் பல முயற்சியாலைதான் இவ்வளவு தூரம் உன்னால் எழும்பி நடக்க முடிகிறது அனசன்...என்ற அவரின் நன்றி மறவாத பெருந்தன்மையை வார்த்தைகளாக கொட்டினார்.
அனசன் தன்னைத்தானே கடிந்து கொண்டான். இந்தளவிற்கு உணர்ச்சியை அவன் வெளிக்காட்டி இருக்கக்கூடாது. இதனால் பாதிக்கப்படுவது மதுமதியின் வாழ்க்கை என்பதை அந்தக்கணங்களில் மறந்தே அவன் போயிருந்தான். அவனின் மனட்சாட்சி எழுந்து வந்து அவனை பல கேள்விகள் கேட்டது. இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த அவன் , தன்காதலி வாழ வேண்டும் என்பதற்காக தன் காதலை குழிதோண்டி புதைத்த அவன் மனட்சாட்சிக்கு பயந்து பதில் இன்றி தவித்தான். மதுமதி வாய் திறந்து எதுவும் பேசவில்லை. அப்போதுதான் அவள் தன்னைத்தானே நொந்துகொண்டாள். "பெண்ணாக பிறந்திருக்கவே கூடாது .. அதுவும் அழகாக பிறந்திருக்கக்கூடாது.. காதலித்தே இருக்கக்கூடாது..பாவியானேன்.., இந்த இதயங்களை சுக்கு நூறாக்கவா நான் பிறந்தேன்" மனம் ஓவென்று அழுதது.
எதுவுமே நடக்காதது போல சிறு முறுவலுடன் அங்கு வந்த சங்கர் எம்மோடு வந்து காப்பி அருந்தியதிற்கு நன்றி என அனசன் உட்பட அனைவரினதும் கைகளையும் குலுக்கியபடி , இன்னொரு நாள் சந்திப்போம்., நிறைய வேலை இருக்கு "என்றபடி கபே பார்(bar) ஐவிட்டு வெளியேறினான்.. அவர்களுக்கு கையசைத்தபடி மதுமதி சங்கரை தொடர்ந்தாள். அவனைத்தொடர்ந்து காரில் அவளும் ஏறி அமர்ந்தாள் . கார் ஆமை வேகத்தில் நகர்ந்தது. கடைக்கண்ணால் சங்கரின் முகத்தை கூர்ந்து அவதானித்தாள் மதுமதி. அவன் பக்கென்று சிரித்தது அவளுக்கு ஏதோ போலாகியது., "" ஏன் மது இந்த கள்ளப்பார்வை.. எனை நேரே பார்த்து கேள்வி கேட்கலாமே" என்றதும் அவளுக்கு கூச்சமாகிப்போனது"" இல்லையே அது வந்து வந்து.... மன்னிச்சிடு., அனசன் அப்படி பேசி இருக்கக்கூடாது?? "என மெல்லிய தொனியில் பேசினாள். " இதற்கா நீ யோசிக்கிறாய்?? அவன் சொன்னது சரி..அனசன் உன் மீது கொண்ட காதல் மாறவில்லை.., நீ என்ன செய்யப்போகிறாய்? இனி எல்லாம் உன் கையில்" என்றபடி காரை செலுத்தினான்.
சங்கர் எதிலும் நிதானம் தவறாமல் பேசுவதைப்பார்த்து அவன் மேல் இன்னும் பல மடங்கு மரியாதை உயர்ந்தது. " சங்கர் நீ ஜென்டில்மன் தான்டா.. " மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். அதேநேரம் அனசனின் மேல் கோபம் ஒருபுறம் பரிதாபம் மறுபுறம் ஒன்றோடு ஒன்று சண்டையிட அமைதியானாள்.
வீடு வந்து சேர்ந்தபோது வீட்டு வாசலில் சமையலின் வாசனை குப்பென்று பரவியது.
"என்ன அம்மா தூக்கலாக வாசனை கிளம்புது.. என்ன ஸ்பெஷல் " என்றபடி அடுப்பங்கரையை சங்கர் எட்டிப்பார்த்தான். அங்கே பக்கத்து வீட்டு மாமி பயற்றம் பலகாரம் சுட்டுக்கொண்டிருந்தார்.. " ஆமா தம்பி கல்யாணத்திற்கு பலகாரச்சூடு தடல்புடலாக நடக்குது.. எங்கை மதுவைக் காணலை., என்ன இரண்டு பேரும் வெளியிலை போட்டு வாறியளோ.. பொன்னுருக்கு செய்தால் இரண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கக்கூடாது...கண்டியளோ.. அப்புறம் கல்யாணத்திலைதான்., " என நையாண்டியாக சிரித்தார். அதற்கு சங்கர்" என்ன மாமி இங்குமா? இந்த முறைகள்? " என சிரித்தபடி..தண்ணீரை அருந்திவிட்டு சோபாவில் வந்தமர்ந்தான்.
ஆயிரம் கேள்விக்கணைகள் நெஞ்சத்தை துளைத்துத்தாக்கின. " யாருக்கு யாரோடு கல்யாணம்? மதுவுக்கான மணவாளன் யார்? விளையாட்டுக்கல்யாணமா இது? கண்களை மூடியபடி யோசனையில் அமர்ந்த வேளையில்தான் அந்த தொலைபேசி வந்தது. கொழும்பில் இருந்து சங்கரின் நண்பர் ராஜா தொடர்பு கொண்டிருந்தான்..கல்யாணத்திற்கு தேவையான பொருட்கள் துரித கதி பார்சல் சேவையூடு அனுப்பிவிட்டதாக கூறினான். மதுமதியின் கவிதைகளின் தொகுப்பு சம்பந்தமாக வேலை நடைபெறுவதாகவும் ,நூலாசிரியரின் உரையைத்தான் விரைவில் அனுப்பும் படியும் கூறியிருந்தான்.மதுமதிக்கு தெரியாமல் இந்த நூலை செய்து அவளை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற ஒரு ஆசை சங்கருக்கு. ஆனால் அந்த உரையை எப்படி அவளிடம் இருந்து பெறுவது?? என சிந்தித்தபடி"" மது மது மது ஒருக்கா இங்கே வாயேன்" படிகளில் இருந்து வேகமாக இறங்கி வந்தவள் மூச்சிரைத்தபடி"" என்ன இந்தளவு சத்தமாக?? கோட்டில் குற்றவாளியைக் கூப்பிடுவதுபோல" என றபடி அவனருகில் வந்தாள். முதலில் அவளை சோபாவில் இருக்கும்படி கூறியவன்." எனக்கு ஒரு உதவி.. ஒரு நூலுக்கு உரை எழுதுகிறது போல நீயே நூலாசிரியர் போல எழுதித்தாவேன்.. என் நண்பன் ஒருத்தனுக்கு கொடுக்க வேண்டும்., " அவள் தலையசைத்து விட்டு எதுவும் பேசாது எழுதி கொடுத்தாள். தன் கையொப்பத்தை பழக்கதோசத்தில் எழுதிவிட்டேன் என அழிக்க முயன்றவளை தடுத்து நிறுத்திய சங்கர் "நன்றி மது.. எனக்கொரு ரீ எடுத்து வா" என்றபடி தன் அலுவலில் மூழ்கினான்.
அங்கு வந்தவள் ஏதோ ஒரு தயக்கத்தோடு மாமி சங்கருக்கு ரீயாம் என சொல்லியபடி அடுப்பங்கரைக்குள் நுழைய "" என்ன பொண்ணு முகத்திலை கல்யாணக்களையை காணலை" என்றபடி பக்கத்து வீட்டு மாமி கண்களால் அவளை அளந்ததை சகிக்க முடியாதவளாய் மெல்லிய புன்னகையோடு மாமி தந்த தேநீரை வாங்கியபடி சங்கரிடம் வந்தாள்.
" எனக்கு தலை வலிக்கிறது.. நான் தூங்கப்போறன்.. மாமிக்கு சொல்லுங்கோ" என்றபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்., அவளுக்கு தலைவலியில்லை மனவலி என்பது சங்கருக்கு தெட்டத்தெளிவாக தெரிந்தது . போய் பாவம் ஓய்வெடுக்கட்டும் என்று தலையசைத்தான். படிகளில் விரைவாக வந்தவள் அறையினுள் நுழைந்த உடன் கட்டிலில் வீழ்ந்தாள். அவளின் கண்ணீர் தலையணையை நனைத்தது.
" காதலித்து என் குற்றமா
அவனை பார்த்தது விதியின்
விளையாட்டா?
ஏனவன் எனக்குள் நுழைந்தான்
ஏனென்னை பாடாய் படுத்துகிறான்
காதலே எனை என்ன செய்ய
போகிறாய்..,
மனதிலே எழுந்த இந்த வரிகளுக்கு விடையேது.. இந்த பேதையின் வாழ்வில் இனி நிம்மதி ஏது... என குரல் எழுப்பியது போல பக்கத்து நாயின் ஊளையிடும் ஓசை சுவரைத்தாண்டி நாசகாரமாக காதுகளில் ஒலித்தது.
ரதி மோகன்❤
" பனி விழும் மலர் வனம்"🌺🌺அத்தியாயம்- 46❤️🌷
இந்த உலகமே இருண்டு போனதான உணர்வு மதுமதிக்குள் பரவத்தொடங்கியது. தலை சுற்றத்தொடங்கியது. இதயத்தில் சுள் என்று ஏற்பட்ட வலி தாங்க முடியாது " அம்மா" என கத்தினாள். வேதனைகள், கவலைகள் வாட்டும் நேரத்தில் அன்னையின் மடியில் தலைசாய்த்து அழவேண்டும் போல் இருப்பது இயற்கைதானே. அவளுக்கும் அவ்வாறே இருந்தது .மதுமதி மெல்ல எழுந்து வந்து தண்ணீரைப் பருகினாள். இதமான குளிரில் கூட திடீரென்று மதுமதிக்கு குப்பென்று வியர்த்துக்கொட்டியது . " கடவுளே எதையும் தாங்கும் சக்தியை மட்டும் எனக்குக்கொடுத்துவிடு"
மனம் வேண்டிக்கொண்டாலும் உள்ளூர இனி அவளால் எதையும் தாங்கும் இதயம் இல்லை என்பதை மட்டும் உணர்ந்தாள். காதலிக்கும் போது அழகாக உணர்ந்த இந்தக்காதல் இப்பொழுது சுமையாக,அருவருப்பாகத்தெரிந்தது. அதுவும் அனசன் மேல் அளவு கடந்த கோபத்தை ஏற்படுத்தியது. அவளின் தற்போதைய இந்த நிலைமைக்கு அனசன்தான் காரணம். எல்லா ஆண்களும் ஒரே வகைதானா? காதலிக்கும் போது கண்ணே மணியே என கொஞ்சுவதும், விலகிப்போய் உன் நல் நல்வாழ்விற்காகத்தான் விலகினேன் என நடிப்பதும் இந்த ஆண்களுக்கு கை வந்த கலையோ? மனம் அவனை திட்டி தீர்த்தே வெறுத்தது. அன்று அவளை வெறுப்பதுபோல் எதற்காக நடித்தான் அனசன்? நேரடியாக அவளோடு மனம் விட்டு பேசியிருந்தால் மதுமதிக்கும் சங்கருக்கும் இந்தக்கல்யாண ஏற்பாடு நடந்திருக்கவே மாட்டாது. சங்கர் மதுமதிக்கு உறவுமுறைப்பையன்தான் அவளை நன்கு புரிந்து கொண்டவன்தான் ஆனாலும் எந்த ஆண்மகனுக்கும் தன் மனதுக்குப்பிடித்தவள் வேறு ஒருவருடனும் பழகுவது ஒருபோதும் பிடிப்பதில்லை. தன்காதலியை தனக்கானவள் என அதிக உரிமையும் அன்பும் எடுத்துக்கொள்வான்.சங்கர் ஐரோப்பாவில் வளர்ந்தபோதும் சங்கர் இதற்கு விதிவிலக்கா என்ன? சங்கர் அமைதியாக தன் உணர்ச்சிகளை வெளியே காட்டாத போதும் அன்று கபே பாரில்(bar) அவன் ஒவ்வொரு அசைவும் , பார்வையும் பளிச்சென அவனின் உள்ளத்தை படம் பிடித்துக்காட்டியது.
இவற்றை எல்லாம் அசைபோட்ட அவளின் மனதிற்கு இதற்கு ஒரு முடிவை சொல்லத்தெரியவில்லை. அந்த சமயம் அவளின் மனதில் பளிச்சென்று தங்கையின் ஞாபகம் வந்தது..வயதில் இவளை விட இளையவள்தான் ஆனால் எதிலும் நிதானத்துடன் செயற்படுபவள். சிலசமயம் அவளின் சிலசெய்கைகள் அதிரடியாகவும் இருக்கும்.. ஆனால் அவள் பேச்சில் துணிவு, புத்திசாலித்தனம் இருக்கும்.
தொலைபேசியை மதுவின் தங்கைதான் எடுத்தாள்" என்ன அக்கா உனக்கு என்னாச்சு? ஏன் அழுகிறாய்? " என்ற பாசமான குரலில் மதுவுக்கு ஒரு தெம்பு வந்ததுபோல் இருந்தது. அங்கு நடந்த முழுக்கதையையும் ஒன்றும் விடாமல் கூறினாள். " எனக்கு எந்த முடிவும் எடுக்கத்தெரியலையே.. நானென்ன பண்ணுவேன் நீயே சொல்லு" என்றதும் அதைக்கேட்ட தங்கை என்ன சொல்வதென்று ஒருகணம் நிலைதடுமாறினாள். ஆனாலும் தங்கையின் மனதில் ஒன்றே ஒன்று நிலையாக இருந்தது. காதல் வாழ வேண்டும் .. எந்த சோதனை வந்தாலும் அவற்றைத்தாண்டி அனசனும் தன் அக்காளும் ஒன்று சேர வேண்டும். இந்த கோர விபத்து , அதன்பின்னர் வைத்தியசாலையே வீடாக வாழ்ந்த அனசன் இன்னும் உயிரோடு வாழ்கிறான் என்றால் அதுவும் இந்தக்காதலால் தான். ஊடல் இல்லாத காதல் இங்கேது?? சிந்தித்தவள் " மது அக்கா பிளீஸ் இந்த கல்யாணத்திலை இஷ்டம் இல்லை என சொல்லு..உன் அவசரப்புத்தி செய்த வேலை இது.. இதற்கு நீயே பரிகாரம் தேட வேண்டும் .. பிரச்சனைகனை கண்டு ஓடாதே... நீ துணிவாக அதற்கு முகம் கொடு.. அம்மாவை நான் சமாளிச்சுக்கிறேன் ஓகேயா? .."" என்றபடி தொலைபேசியை வைத்தாள்.
மதுமதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சொல்வது சுலபம் அதை செய்து முடிப்பது தானே கடினம்.. கண்முன்னே சங்கரின் புன்னகை தவழும் சாந்தமான முகம் நிழலாடியது. அருகே குறும்புப்பேச்சும் , கல கல என சிரித்திருக்கும் கனிவான அனசன் முகம் கண்எதிரே ... இருந்தாள்.... எழும்பினாள்.. நடந்தாள்.. சுற்று முற்றும் பார்த்தாள்... மீண்டும் கட்டிலில் வீழ்ந்தாள்.. போர்வைக்குள் புகுந்தாள்.. மூடிய கண்களுக்குள் பலரின் உருவங்களும், காதுகளில் பலரின் சிரிப்பொலி ஓசையும் நாசகாரமாக கேட்டது..
பேய் பிடித்தவள் போல் மாடிப்படிகளை விட்டு இறங்கியவளை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சங்கர் அவதானித்தான். "" மது என்ன இந்த கோலம் .. எங்கே போகிறாய்? " மதுவிற்கு எதையும் கேட்கும் நிலையில் இல்லை .. இல்லை கேட்காதவள் போல போகிறாளா? .. மதுமதி கதவை பலமாக சாத்தும் ஓசை மட்டும் சங்கர் காதில் கேட்டது.
மதுமதி தான் வாழ்ந்த கிராமத்தை தாண்டி நடந்தாள். சிறிய நீரோடையும் அருகே அரும்பி மஞ்சள் வர்ணத்தில் பூத்திருந்த மலர்கள்(påske liljer)அவளைப்பார்த்துச் சிரித்தன. மரங்களில் இளவேனிற்காலத்தை வரவேற்று பாடிய பறவைகள் கூட்டம் கூட்டமாக அவளை கடந்து சென்றன.. அவற்றை இரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை.. விதைப்புக்குத் தயாராக பண்படுத்தப்பட்ட நிலங்கள் அழகாக காட்சியளித்தன.. பச்சைப்புல்வெளிகளும் அதன் மேல் படிந்துள்ள பனித்துளிகள் ஆதவன் கரம் பட்டு கரைவதை பார்க்கின்ற மனம் அவளிடம் இல்லை.. இன்னும் சற்று வேகமாக நடந்தாள். இதமான வெயில் பொன்னிறமேனியை தொட்டு செல்வதை உணர்ந்திலள்.. உணர்வற்ற ஜடமாக அவள் கால்கள் மட்டுமே நடந்தன. யாருமேயற்ற ஒரு வெளியில் தனித்துவிடப்பட்டவளாய், திக்குத்தெரியாத காட்டில் தன்னந்தனியே நிற்கும் புள்ளிமானாக நடந்து கொண்டே இருந்தாள்..
அங்கு அவளை கடந்து சென்ற அந்த காட்டு முயல் ( hare)மீது பார்வை குத்திட்டு நின்றது. என்ன வேகமான பாய்ச்சல்? தன்னுயிரை காப்பாற்றிக்கொள்ள முட்கள் செடிகள் பற்றைகளைத்தாண்டி அந்தச் சின்ன உயிர் ஓடியதைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. வேட்டைநாயொன்று நாக்கை தொங்கப்போட்டபடி வேகமாக அதை பின் தொடர்வதை பார்க்க முடியவில்லை.. பின்னே இரு வேட்டைக்கார்ர்கள் கையில் வேட்டைத்துப்பாக்கியோடு வந்து கொண்டிருந்தனர். வேட்டையாடுதலை தம் பொழுதுபோக்காக டெனிஸ்மக்களில் சிலர் கொண்டிருந்தனர். இவளைக்கண்ட அவர்கள் மென் முறுவலுடன் கடந்து சென்றனர். " ஆண்டவா அந்த குட்டி முயல் தப்பி விட வேண்டும்" பிரார்த்தித்தாள். அந்த இடத்தில் நின்றாள்.. துரத்தி சென்ற வேட்டைநாய் அவர்களிடம் திரும்பி வந்தது. ஆனால் அந்த நாயின் கண்களில் கொலைவெறி தண்டவமாடியது. "" ஆண்டவா நன்றி" கை கூப்பினாள்" ஒரு மரத்தின் கீழ் அவர்கள் அமர்ந்தார்கள்.
"தன்னுயிரை காப்பாற்றிக்கொள்ள அந்த காட்டுமுயல் ஓடுவது போல் ஏன் நான் ஓட வேண்டும்? எனை யார் துரத்துகிறார்கள்?? நான் தான் ஓடுகிறேன்.. இந்த வாழ்க்கையைப்பார்த்து ஓடுகிறேன்.. நில் எதிர்த்து நில்.. துணிந்து விடு.." சொன்னது அவள் மனது. நின்றாள்... திரும்பிப்பார்த்தாள். எங்கு அவள் நிற்கிறாள் என்பதே அவளுக்குத்தெரியவில்லை. ரெலிபோன் பற்றறி 30% இருப்பதாக காட்டியது. கண்ணுக்கு எட்டியதூரம் வரை எவரும் இல்லை அந்த வேட்டைநாயையும், வேட்டைக்கார்ரையும் தவிர. தெரியாதவர்களிடம் வழி கேட்பதும், எங்குதான் நிற்பதாக கேட்பதும் புத்திசாலித்தனமல்ல.. " அவளின் மனம் கட்டளையிட்டது. ஆனால் பயம் மனதை சற்று கவ்விக் கொண்டபோதும் ஏதோ அசாத்திய துணிச்சல் வருவதை உணர்ந்தாள் .. திரும்ப வந்த வழியே நடக்க ஆரம்பித்தாள்.. அந்த வேட்டைக்கார்ர்கள் குடிபோதையில் நிற்பது தெரிந்தது.. குடிப்பவர்களை கண்டாலே மதுமதிக்கு பிடிப்பதில்லை.. அதுவும் தன்னந்தனியே அங்கு அவர்களுடன் அவள் நிற்பதும் பிடிக்கவில்லை.. அவளை அவர்கள் அழைப்பது போல் இருந்தது.. இல்லை பிரமையோ?? சற்றுஉடல் நடுங்கத்தொடங்கியது...,
( தொடரும்)
ரதி மோகன்❤️"பனிவிழும் மலர் வனம்"அத்தியாயம்-47

அவர்கள் இவளைப் பார்த்து ஏதோ பேசுவது போலவும் இருந்தது. மதுமதி சற்று வேகமாக நடந்தாள். வேட்டைக்கார்ர்களின் சிரிப்பொலி மரங்களினூடு மோதி எங்கும் அதிர வைக்கும் அளவுக்கு சத்தமாக இருந்தது.. வேட்டைநாயும் சத்தமாக குரைத்தது.. அவர்களும் மதுமதியோடு சேர்ந்து நடந்தார்கள் . அவர்களில் ஒருவன் "ஹாய் எங்கே போறாய்?" என்றான் . மதுமதி மனதை திடப்படுத்தி பயத்தை வெளிக்காட்டாது புன்முறுவலுடன் " வெளிக்காற்றை சுவாசிப்பதற்கும் இயற்கையை ரசிப்பதற்குமான ஒரு நடை" என்றாள். " ஆம் நல்லதே" என பதிலளித்து விட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தவர்கள் அதில் வந்த குறுக்குப்பாதையில் நின்றனர். நாங்கள் இந்தவழி போகிறோம்" எம்மோடு வாறியா" என்றனர். " இல்லை. நான் என் அண்ணனுக்கு காத்திருக்கேன்" என ஒரு பொய்யை சொன்னாள். " ஓகே ஓகே" என்றபடி அவர்கள் அந்த குறுக்குவழியே அவளுக்கு கையசைத்துவிட்டு தொடர்ந்தார்கள். "அப்பாடா " என்ற ஒரு பெருமூச்சுடன் மதுமதி அந்த மரத்தின் கீழ் இருந்த பெரும் பாறாங்கல்லின் மேல் இளைப்பாறினாள். இந்த வேட்டைக்கார்ர்களை பார்த்தவுடன்அவர்களின் தோற்றத்தைக்கண்டு அவர்களை மோசமானவர்கள் என அவள் மனம் எடை போட்டதை நினைத்து சிரித்துக்கொண்டாள்.. தோற்றத்தை வைத்து எவரையும் எடை போடக்கூடாது என்ற ஒரு உண்மையையும் தெரிந்து கொண்டாள்.
சங்கர் பல தடவை அவள் தொலைபேசிக்கு "எங்கே மது நீ "என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அதற்கு அவளின் மனம் பதிலளிக்க ஒத்துக்கொள்ளவில்லை. " நான் எங்காவது போறன்..செத்தே தொலையுறன்..இந்த பிரச்சனைக்கு இது ஒன்றே தீர்வு" இதற்கு மேல் கண்ணீரைத்தவிர வேறு எதையும் அறியாதவளாய் நின்றாள் அந்தப்பேதை.
வானம் சற்றென இருண்டது. பக்கத்தில் விழுந்ததுபோல இருந்த பெரும்இடி அவளின் காதை செவிடாக்கியது.. மழை பொழிந்தது. வானத்தில் ஹெலிக்கொப்டர் ஒன்று தாழப்பறந்தது. இந்த ஹெலிக்கொப்டரை பார்த்தவுடன் நினைவுகள் அவளை தாயகத்திற்கு அழைத்துச்சென்றது. இப்படித்தான் ஒரு மழைநாள் விளையாடிந்திரிந்தபள்ளிப்பருவம். வாழ்க்கையின் கஸ்ரம் என்பதே அறியாத பருவம். மண்ணிலே கால் பட்டால் அழுக்காகி விடும் என அழகு பார்த்து செருப்போடும், கால் விரல்களுக்கு அழகாக நகப்பூச்சும் இட்டு ம் ஒரு ரம்பியமான உலகில் சஞ்சரித்த காலமது..அன்றொருநாள் வானத்தில் சஞ்சரித்த ஹெலிக்கொப்டர் சராமாரியாக நகரை நோக்கி சுட்டுக்கொண்டிருந்தது. எல்லோரும் அல்லோலகல்லோலப்பட்டு ஓடிக்கொண்டிருந்தனர். இது வழமையான ஒரு சம்பவமாகவே அங்கு நிகழ்ந்தது. ஹெலிக்கொப்டர் மறைய வானத்தில் கழுகுபோல பயங்கர இரைச்சலுடன் வந்த விமானம் உயரவும், தாழவும் பறந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. பயத்தினால் மக்கள் மரங்களின் கீழும், பதுங்குகுழிகளுக்குள்ளும் ஒளிந்துகொண்டனர். வீட்டிற்கு வீடு பாதுகாப்பிற்கு பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தன. மதுமதியின் தந்தை சௌகரியமான பதுங்குகுழி ஒன்றை பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் அமைத்திருந்தார். சிறிய வீடுபோன்றே உள்ளே சீமெந்து பூசி அழகாக செய்திருந்தார்.. போர்க்கால சூழலுக்கு ஏற்றாற்போல உழுந்துமாவு திரித்து சாப்பிட தயாராக பெரிய டப்பாவில் அடைத்து வைப்பது அம்மாவின் வழக்கமாகவும் இருந்தது. பிள்ளைகள் போர்ச்சூழலில் கூட பட்டினி என்பது அறியாமல் இருக்க வேண்டும் என்பது அம்மாவின் எண்ணமாகவும் இருந்தது. அந்த நாள் அவளின் வாழ்வில் மறக்க முடியாதநாள். போர்ச்சூழலோடு வாழ்க்கை பயத்தோடும் பீதியோடும் நகர்ந்த காலம்..
அப்போதுதான் குளியலறையில் இருந்து வெளியில் வந்திருந்தாள் மதுமதி. சவுக்காரத்தின் வாசனை தூக்கலாக,ஈரக்கூந்தலை துவட்டியபடி பிடித்தமான பாட்டை வாய் முணுமுணுக்க வந்தவளை நோக்கி, அம்மா கத்தினாள்"" மது ஓடி பங்கருக்குள்ளே வா... குண்டு போடப்போறாங்கள்.. பயம் இல்லாமல் நிற்கிறாய்... வா" என்ற கூச்சல் போட்டதை கூட பொருட்படுத்தாது நின்றவளை அங்கே ஓடி வந்த பக்கத்து வீட்டுத்தம்பி ஒரு ஒரு தள்ளு தள்ளி விட்டு தானும் குப்புறப்படுத்துக்கொண்டான். இவர்கள் நின்ற இடத்தில் இருந்து நாலாவது வீட்டில் விழுந்த குண்டின் துகளொன்று இவளை கடந்து சென்றது. அன்று அவள் நிலத்தில் தள்ளப்படாவிட்டால் அன்றே அவள் தலை துண்டாடப் பட்டிருக்கும். பதுங்குகுழியைவிட்டு வெளியே வந்த அம்மா திட்டிய வார்த்தைகள் இன்றும் இப்ப நடந்தது போல பல வருடங்கள் தாண்டிய போதும் அவள் காதில் ஒலித்த வண்ணம் இருக்கிறதென்றால் அந்த சந்தர்ப்பத்தின் தாக்கத்தின் பிரதிபலிப்பே அது. அந்த சந்தர்ப்பத்தில் கூட சேற்று நிலத்தில்படுத்தால் அசிங்கம் என்பதைத்தவிர தன் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் எண்ணம் துளியளவு கூட அவளுக்கு இல்லாது இருந்தது அவளின் முட்டாள்த்தனம். அதேபோல் இன்று காதலன் ஒரு வாரம் பேசாது இருந்தமைக்காக அவனிடம் காதலே இல்லை என முடிவு செய்து , அவனை மறக்க முயன்று இன்னொருவனுக்கு கழுத்தை நீட்ட முடிவெடுத்தது, அதைவிட பெரிய முட்டாள்த்தனம்.. "" ஏய் மது நீ என்ன முட்டாள்ப்பெண்ணா?? சிந்தித்து முடிவு எடுக்க மாட்டாயா? " மனட்சாட்சி கோபத்தோடு கேட்டது. கொட்டும் மழையில் உடல் தெப்பமாக நனைந்ததால் நடு நடுங்கியது. தொலைபேசி தன் செயல் இழந்து தூங்கியது. அந்த பாறாங்கல்லின் மேல் சித்திரப்பாவை ஒன்று இருப்பதுபோல் அமர்ந்திருந்தாள் மதுமதி.
அந்த நேரம் பலத்த பிரேக் சத்தத்துடன் நிற்பாட்டிய காரை நோக்கினாள். சங்கர் காரை விட்டு இறங்கி வந்து கொண்டிருந்தான். அவனைப்பார்த்ததும்அவளின் மனம் திக் என்றது. அவன் மௌனமாகவே வந்தான். தனது ஜாக்கட்டை கலட்டி அவளுக்கு கொடுத்தான். அவனைத்தொடர்ந்து மதுமதி காரில் ஏறினாள். "அவன் என்னை திட்டி இருந்தால் கூட பரவாயில்லையே .. மௌனத்தால் எனை கொல்கிறானே" என நினைத்தாள். கோபத்தை சிலர் வார்த்தைகளால் வெளிப்படுத்தாது மௌனமாக இருப்பது மரணவலிக்கு ஒப்பானதே. அதை மதுமதி அந்தக்கணங்களில் உணர்ந்தாள். தன் நிலைப்பாட்டை சங்கருக்கு சொல்ல வேண்டும். முதலில் தான் துணிய வேண்டும். தீர்மானித்துக்கொண்டாள். "விதி வழியல்ல வாழ்க்கை மதி வழி செல்லு" மனட்சாட்சியும் ஒத்துக்கொண்டது.
( தொடரும்)
ரதி மோகன்"பனிவிழும் மலர் வனம்"🌺🌺🌺அத்தியாயம்-48🌺🌺🌺
மதுமதியால் இதற்கு மேல் மௌனமாக இருக்க முடியவில்லை.. " சங்கர் பீளீஸ் சாலையோரம் காரை நிற்பாட்டிறியா? நான் உன்னோடு பேச வேணும்... " என்றதும், சங்கர் தீடீரென வேகத்தை குறைத்து சடுதியாக பிரேக்கை போட கார் ஒரு குலுக்கலோடு நின்றது. பெருங்குடலும் சிறுகுடலும் ஒன்றோடு ஒன்று பிணைந்து மேலெழுவதாக மதுமதி உணர்ந்தாள்.. வயிற்றை பிடித்தபடி சற்று சுவாசத்தை சீராக்கின பின்புதான் "" இப்படியா சடுதி பிரேக் பிடிப்பாங்க? " என செல்லமாக சங்கரை கடிந்து கொண்டாள். சங்கர் அதற்கு ஏதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தான். அவன் முகத்தில் கலவரம் தெரிந்தது. " என்ன சொல்லப்போகிறாய்" என கண்களாலேயே அவளை வினாவுவதுபோல் பார்த்தான். "" சங்கர் very sorry.டா... எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லைடா... என்னாலை அனசனை மறக்க முடியலைடா.. " என்றபடி அவனின் கரங்கள் இரண்டையும் பற்றி கெஞ்சினாள். சங்கர் இதை எதிர்பார்த்து இருந்தபோதும் கூட அவனால் அந்தக்கணம் இதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.. விடுக்கென அவள் கையை உதறியபடி"" நீ என்ன சொல்கிறாய்?. இதென்ன விளையாட்டா?? நீ சம்மதித்தபடியால்தானே கல்யாணநாளே குறித்தேன்.. இதனால் எத்தனைப்பேரின் நிம்மதி தொலையும் என்று உனக்குத்தெரியுமா? படித்தும் முட்டாள்ப்பெண்ணாக இருக்கிறியே. எப்படி இதை பெரியவங்களுக்கு நாம் சொல்ல முடியும் ?? "என்றபடி கார் கண்ணாடியில் ஓங்கி அறைந்தான். மதுமதி தாரைதாரையாக கண்ணீர் சிந்தினாள். அதை பார்க்க சங்கருக்கு பரிதாபத்திற்கு பதிலாக ஆத்திரம்தான் வந்தது.." கண்ணீரால் காரியத்தை பெண்கள் இலகுவில் சாதித்து விடுவார்கள்." மனதிற்குள் பேசிக்கொண்டான். " மது வா ஏறு காரில்.. வீட்டைபோய் ஒரு முடிவு எடுப்போம் " என நிதானத்துடன் சொல்லியபடி காரைச்செலுத்தினான்.
சங்கரின் மனம் அழுதுகொண்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தான். விருப்பமில்லாதவளுடன் வாழவும் அவளை வற்புறுத்தவும் விரும்பவில்லை. எத்தனை ஆசைகளுடன் அவன் கட்டிவைத்த அந்த அழகான மனக்கோட்டை அந்த கணத்திலேயே எரிந்து சாம்பலாகியது. வீடு வந்து சேரும்வரை இருவரும் ஒருவரோடு ஒருவர் எதுவுமே பேசவில்லை.
அங்கு சங்கரும் தாயும் தந்தையும் தொலைக்காட்சியில் மூழ்கிப்போயிருந்தனர். அமைதியாக சங்கரும் மதுவும்உள்ளே சென்று உடை மாற்றி கூடத்தில் வந்து அவர்களோடு சோபாவில் அமர்ந்தனர்.. மதுமதி பார்வையாலே சங்கரை கெஞ்சினாள்.. சங்கர் கல்யாணநிறுத்தத்தை எப்படி தம் பெற்றோருக்கு சொல்வதென திண்டாடியப்படி முழித்துக்கொண்டுஇருந்தான்.. அப்போதுதான் இருவரையும் பார்த்த சங்கரின் தாயார்"" எப்ப வந்தனியள்? எங்கு போனியள்?? காப்பி போட்டு தரட்டா? என "" வேணாம் அம்மா.. நான் வந்து வந்து... ஒன்றைப்பற்றி உங்களோடை ....இப்பவே பேசணும்... " என கூறினான்.
அதற்கு சங்கரின் தாயார் "" என்ன அப்படி அவசர பேச்சுவார்த்தை கண்ணா?? சொல்லு" என்றபடி தொலைக்காட்சியை நிறுத்தினார். சில நிமிடங்கள் அங்கு ஒரு மயான அமைதி நிலவியது. மெல்ல வந்து தன் தாயின் அருகே அமர்ந்தவன் "" அம்மா .. எனக்கு இந்த கல்யாணத்தில் எள்ளளவும் இஷ்டமில்லை..மதுவை எனக்கு இப்ப பிடிக்கவில்லை.. . நான் இன்னொருத்தியை பார்த்தேன் பேசினேன்..பழகினேன்..இவளைவிட அவள் அழகில் தேவதை... நான் அவளை உசிராக விரும்புகிறேன் அம்மா. " என்றான். அதைக்கேட்ட சங்கரின் தாய் பயங்கர கோபமடைந்தார்.." சங்கர்.. என்ன நியாயம் இது?? ஐயோ மது பாவமடா... கல்யாணம் வரை வந்து அவளை வேண்டாம் என சொல்லுறியே.. பொம்பிளைப்பாவம் பொல்லாதது .. உனை ஒருபோதும் வாழ விடாது.. நிற்பாட்டு உன் பேச்சை இப்ப... இறைவனை பாடித்துதிக்கும் வாயாலே உனை ஏச வைக்காதே.., அவள்தான் என்றும் என் வீட்டு மருமகள்.. சொல்லிற்றன்"" என தன் ஆத்திரம் தீரும் மட்டும் கத்தினார்.புலம்பினார். சங்கர் மதுமதியைப் பார்த்தான்.. விழிகளாலே பேசினான்" அடியே அழகான இராட்சசியே! உனக்காக எல்லாப்பழியையும் நானே சுமக்கிறேன்., பார்த்தியா? எவருமே உனை எந்த சந்தர்ப்பத்திலும் அவதூறாக நிந்திக்கக்கூடாது என்பதற்காகத்தான்... என் காதல் இசைக்காத புல்லாங்குழலாய் போனாலும் பரவாயில்லை ..என்னவளே... நீ வாழவேண்டும் எல்லையில்லாத மகிழ்ச்சியோடு.."" சங்கரை பார்த்த மதுமதியின் விழிகள் இமைக்க மறந்தன. . " சங்கர்!! எப்படியடா உன்னால் மட்டும் இப்படி முடிகிறது?? எனக்காக எல்லோர் முன்னும் குற்றவாளியாக நீ..நீ மனிதன் இல்லையடா.. எனை வாழவைக்க வந்த தெய்வமடா நீ .." வாய்வரை வந்த வார்த்தைகளை மென்று விழுங்கியபடி பார்வையாலே சங்கருக்கு நன்றி சொன்னாள்.
சங்கரின் தாயாரின் குரல் கூடமெல்லாம் ஓங்கி ஒலித்தது. பத்ரகாளிபோல கூடத்திலே நின்றார்.. சங்கரின் தந்தை எதுவும் பேசாது மௌனமாக இருப்பதைப்பார்த்து இன்னும் பல மடங்கு அவரின் கோபம் அதிகமாகியது " நீங்களும் இருக்கிறியள்... எனக்கென்று வந்து வாய்ச்சியள்... கோத்திரம் சாஸ்திரம் கொண்ட நம்ம குடும்பத்திலை இந்த பிள்ளையாண்டான் இப்படி வந்து பிறந்திட்டானே...கல்லுப்பிள்ளையார் மாதிரி நீங்க இருக்கிறியளே..நாலு வார்த்தை அவனைக்கேளுங்கோவன்.. எந்த ஆத்திலை இப்படி சமாச்சாரம் நடக்குது.. நாளைக்கு நாங்க வெளியிலை தலைகாட்ட முடியுமே? அபச்சாரம்.. கடவுளே!"" அழுதார்.
சங்கரின் தந்தைக்கு தன்மகனைப்பற்றி தெரியாதா என்ன? இதில் ஏதோ ஒன்று சூட்சுமம்இருக்கிறது என்பது மட்டும் அவருக்குப்புரிந்திருந்தது. " இப்ப என்ன குடியா முழிகிப்போச்சு... அவனுக்கு பிடிக்கலையென்றால் என்ன செய்யிறது?? பேசாமல் இரு.. நான் சங்கரோடு பேசுறேன்"என்று சங்கரின் தந்தை சொன்னதுதான் சங்கர் தந்தையை பார்க்க கூச்சத்தோடு அங்கிருந்து மாடிக்கு ஏறி தன் அறைக்குள் புகுந்துகொண்டான்.
சங்கரின் தாய் மதுமதியை தோளோடு சாய்த்து அரவணைத்து" மதும்மா கவலைப்படாதே.. நான் இருக்கேன்.. உனை விட மாட்டேன்.. நீதான் என்றும் என் வீட்டு மருமகள்... நான் பெற்றபிள்ளை நான் போட்ட கோட்டைத்தாண்ட மாட்டான்... நீ போய் கொஞ்சம் ஓய்வெடும்மா.. படத்திற்கு விளக்கு வைச்சிட்டு வாறன்."என்றபடி அங்கிருந்து நகர்ந்தார் எதுவுமே அறிந்திராத அந்தத்தாய்.
சுவாமி அறையினுள் விளக்கேற்றி தன் கவலைகளையெல்லாம் கந்தனின் காலடியில் கொட்டினார்.. உ ரத்தகுரளில் கந்தசஷ்டிகவசத்தை அழுகையினூடு பாடியது எல்லோர் காதுகளிலும் விழ பூசை அறையை நோக்கி எல்லோரும் படையெடுத்தனர்.கவலைகள் வரும் சமயங்களில் சங்கரின் தாயார் கவசம் படிப்பதை அவரின் குடும்பமே அறிந்து இருந்தது உண்மைதான். ஆனாலும் இந்தளவு வேதனையோடு அவரின் குரல் வெளிப்பட்டதை இதுவரை அவர்கள் பார்த்திருக்கவில்லை..""
(தொடரும்)
ரதிமோகன்❤️

பனிவிழும் மலர் வனம் "🌺🌺🌺🌺அத்தியாயம் -49🌷

மதுமதி குற்ற உணர்வினால் தண்ணீரில்லாத மீனாக துடித்தாள். பூவிழிகளிடை திரண்ட கண்ணீர் முத்துக்கள் கன்னங்களை நனைக்க ரோஜாவின் இதழ்கள் போன்ற உதடுகள் விம்மியதை மறைக்க முயன்று தோற்றுப்போனாள். தவழும் குழந்தையாக அவள் விம்மியழுத கோலத்தை பார்த்தால் கல் கூட கனிந்து கண்ணீர் விடும். சங்கரைப்பார்க்க பரிதாபமாக இருந்தது.. பூஜை அறையின் கதவோரம் கைகளைகட்டியபடி தன்தாயின் பிரார்த்தனையை பார்த்துக்கொண்டிருந்தான். யாருக்கு யார் இங்கு ஆறுதல் சொல்ல முடியும்? சங்கரின் தந்தை பிடித்து வைத்த பிள்ளையார் போல இருந்த இடத்தை விட்டு நகராமல் கூரையை பார்த்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில்தான் ஹாலிங்பெல் அழுத்தும் ஓசை கேட்டது. அவள் சங்கீதாதான். சங்கரின் தங்கை தன் கைக்குழந்தையோடும் கணவனோடும் வாசலில் நின்றிருந்தாள். விசயம் அறிந்துதான் அவள் அங்கு வந்தாளா? இல்லை.. கடைகளுக்கு வந்த இடத்தில் தன்தாயை பார்க்க வந்தாளா? கேள்வியோடு கண்களை தண்ணியால் அலசியபடி, சற்று பவுடரை முகத்திற்கு பூசியபடி முகத்தில் செயற்கை புன்னகையை தவழவிட்டபடி வாசற்கதவை மதுமதி திறக்கவும், சங்கர் விரைவாக பூஜை அறைக்கதவை தாளிட்டபடி வந்து தன் தங்கையை வரவேற்றான். வந்ததும் வராததுமாய் "" என்ன நீங்க இவ்வளவு நேரம் இந்தக்கதவு திறக்க.. நான் போன்(phone)பண்ணலை வாறதென.. இஞ்சை இவற்றை மச்சாள் வீட்டை ஒரு பார்ட்டி.. வந்த இடத்திலை அம்மாவை பார்க்க ஆசையாக இருந்தது... " என கூறியபடியே கைக்குழந்தையை மதுமதியிடம் கொடுத்தாள்.. குழந்தை ரொம்ப அழகாக இருந்தது. பட்டுக்கன்னங்கள், சின்ன சின்ன விழிகள், பிஞ்சுக்கால்கள், கைகள் பூப்போல மென்மையாக ,அதன் மென்புன்னகையில் மனதை பறிகொடுத்தபடி குழந்தையோடு விளையாடியபடியே மது சோபாவில் அமர்ந்தாள். சங்கீதா டென்மார்க் காலநிலையை குறை கூறியபடி தன் மேலங்கியை கழற்றினாள்" வசந்தகாலமென்று தெரியலையே.. என்ன குளிர் .. நடுங்குது.. சீ என்ன வெதர்..."என்றபடி வந்தமர்ந்தாள்..
மழையும் குளிரும் வசந்தகாலத்தை ஓரங்கட்டிவிட்டு டென்மார்க்கை ஆக்கிரமித்து இருந்தது. துளிர்விட்ட செடி கொடிகள், பூக்கத்தொடங்கிய மரங்களும் குளிரில் தலைசாய்த்து நிற்பதுபோலவும்,ஆதவனின் முகத்தை காண ஏங்குவதாகவும் தெரிந்த காட்சிகள் , மனித மனங்களின் ஏக்கங்களுடன் சேர்ந்து அழுவதுபோல் இருந்தது..
தன் ஆசை மகளின் குரல் கேட்டு வெளியே வந்த தாயார் பேரக்குழந்தையை அணைத்து கொஞ்சினார்.. தாயை கவனித்த சங்கீதா" என்ன அம்மா உனக்கு உடம்பு ஏலாதா? கண்ணெல்லாம் வீங்கி.."என..
அப்போதுதான் அந்தத்தாய் தன் வேதனையை கொட்டித்தீர்த்தாள். சங்கீதாவால் இதை நம்ப முடியவில்லை. தன் அண்ணனைப்பார்த்தாள். அவளுக்கு ஒன்றுமட்டும் புரிந்தது. இதற்குள் ஏதோ ஒரு விடயம் இருக்கிறது என. மெல்ல அவ்விடத்தை விட்டு நழுவி மதுமதியை கண்சாடையால் அழைத்துக்கொண்டு மதுமதியின் அறைக்குள் நுழைந்தாள்.
" மச்சி உண்மையை சொல்லுங்கோ.. என் அண்ணா இப்படி மனம் மாறக்கூடியவனல்ல.. நீங்க ஏதாவது? " " ம்ம்ம் சங்கீதா என்னாலை அனசனை மறக்க முடியலை.. சங்கருக்கு சொன்னன்.. அதுதான்
கல்யாணத்தை வேணாமென்று... " என இழுத்தபடி தலையை குனிந்தாள். " உங்களுக்கு மூளை அறவே இல்லை.. இப்படிப்பட்ட நல்ல அண்ணா .. உங்களுக்கு கணவனாக வர நீங்க கொடுத்து வைச்சிருக்கணும்.. யோசிச்சு பாருங்க அனசனோடு வாழும் வாழ்க்கை சந்தோசமாக இருக்குமோ என தெரியலை.. அவனை பராமரிப்பதிலேயே காலம் போயிடும்.. யோசித்து முடிவெடுங்க.. அண்ணா பாவம்..""" என்றபடி மதுவை ஆதரவாக தோளோடு சாய்த்தாள்.
" சங்கீதா உன் அண்ணாபோல நல்லவன் எங்கு தேடினாலும் கிடையாது.. அவனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. ஆனால் அனசனை உயிராக காதலித்துவிட்டு அவன் கால் இழந்தான் என்பதற்காக விட்டு ஓடுவது உண்மையான காதலா சொல்? நீயும் காதலித்தவனைதானே கட்டினாய்.. அனசன் பாவம்..அவனைவிட்டு விட்டு என்னாலை முடியலை புரிஞ்சுக்கோ சங்கீதா.. எனையும் அனசனையும் சேர்த்து வைக்க உதவி செய்.." கெஞ்சினாள்.
பெண்களை பொறுத்தவரை இந்தக்காதல் என்ற ஒன்று வந்துவிட்டால் அவளை ஏதோ செய்யக்கூடாத ஒன்றை செய்து விட்டதுபோல் பார்ப்பது நம் பாரம்பரியங்களில் ஒன்று போல் தலைமுறைக்கு தலைமுறை கடத்தப்பட்டுகொண்டிருக்கிறது. சொந்த வீட்டிற்குள்ளேயே கண்காணிப்பு படை அமைக்கப்படுவதும், அவசரம் அவசரமாக இன்னொருவன் தலையில் கட்டி அனுப்புவதிலும் தான் பெற்றோர்களும் சுற்றமும் இருப்பது ஏன்?எதற்காக?உதாரணமாக என்னை எடுத்துக்கொள்ளுங்கள்..அனசனை காதலித்த நாளில் இருந்து இற்றைவரை எத்தனை வேதனைகளை அனுபவிக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.. அங்கு அம்மா இங்கு மாமி வரை எவருமே அவனை ஒரு புழுவை பார்ப்பதுபோல் அருவருப்பாக பார்க்கிறார்கள்.. நான் சைவப்பொண்ணுதான் ஆனால் எனக்கும் ஆசாபாசம் இருப்பது தவறா?? மதம் என்ற பெயரால் அவனை என்னிடமிருந்து பிரிப்பது ஒன்றே குறிக்கோளாக கொண்டிருக்கிறீர்கள். காதல் படங்களை மட்டும் சினிமாவில் பார்த்து சிரித்து,அழுது காதலர்கள் ஒன்று சேர வேண்டுமென்று துடிக்கும் நீங்கள் நிஜகாதலர்களை இணைப்பதில் நிற மத பேதம் பார்ப்பது கொடுமை.பெண்ணின் ஆசையை அன்பை புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டார்கள்.. ஊருக்கு உலகத்திற்கு மட்டுமே அஞ்சும் நிலை அன்றிலிருந்து இற்றைவரை தொடர்வது காதலின் சாபமோ? இல்லை பெண்களின் அடிமைத்தனமோ என எண்ணத்தோன்றுகிறது? மதுமதி ஒரு மேடைப்பேச்சாளர் போல் பேசி முடித்தாள். அதைக்கேட்ட சங்கீதா"" மச்சி பொறுங்கோ.. இந்த ஏட்டுச்சுரக்காய் எல்லாம் கறிக்குதவாது.., இதெல்லாம் மேடைக்கான கைதட்டல் மட்டுமே..பெண் இத்தனையையும் மீறி அவனோடு ஓடினால் அவள் வாழ்நாள் பூராக ஓடுகாலி என்ற பெயரை சுமப்பாள்.. இதுதான் நிலை.. அனசனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் நீங்க உங்கள் மேல் பித்தாக இருக்கும் என் அண்ணாவை ஒருகணம் பாருங்கள்.. அந்த ஒருதலைக்காதலுக்கு சமாதி கட்டி விட்டுத்தானே அதை கடந்து உங்க காதலை வாழ வைக்கப்போறியள்.., ஏதோ ஒரு இடத்தில் ஒரு காதல் இங்கு மரித்துக்கொண்டுதானிருக்கிறது. பாரு மச்சி..""
பெண்மனம் இளகியது என்பது உண்மைதான்.அடுத்தகணம் மதுமதியின்
மனதில் இரக்கம் பிறந்தது..சங்கீதா சொல்வதிலும் நியாயம் இருப்பதை ஒத்துக்கொண்ட போதும் வருந்தமுடியுமே தவிர என்ன அவளால் செய்ய முடியும்?
"காதலே என் இதயத்தை
கசக்கி ஏன் பிழிகின்றாய்
காய்த்த கனிந்த காதல்கனி
கையிலே இருந்து நழுவிட
இன்னொரு கனியை நான்
எடுத்து சுவைப்பது தகுமா சொல்..
கண்ணீரால் அபிஷேகிக்கபட்ட
காதலுக்கு சாம்பிராணிபுகையும்
கண்ணோடு கண் நோக்கியகாதலுக்கு
கல்லறையில் பூ வைக்கும்
இந்த வஞ்சியின் வேதனையை
யார்தான் அறிவாரோ.."
கவிதை ஒன்று மனதிலே எழுந்து அழுத து . மதுமதி முடிவு எடுத்தேயாக வேண்டும். இது அவள் வாழ்க்கை . அவள் முடிவு.எடுக்கும் நேரம் இது . அவள் துணிந்தேயாகவேண்டிய கட்டாய நிலை.. அனசனா? சங்கரா? . அவளைப்பொறுத்தவரை இரண்டுமே இரு கண்கள் போல தெரிந்தது. ஒரு கண்ணை இழந்தே வாழ வேண்டும் என கடவுளால் அவளுக்கு விதித்த விதி..
சங்கீதாவின் கையை பிடித்தபடி அவளை இழுத்துக்கொண்டு பட அறைக்குள் நுழைந்தாள். மூன்று சீட்டுக்கள் எழுதினாள்.. ஒன்றில் அனசன், மற்றதில் சங்கர், ஒன்று வெற்றுச்சீட்டு. வெள்ளைப்பூக்கள் நிரம்பிய தட்டில் சீட்டுக்களை ஒளித்தாள்.. " சங்கீதா எனைப்பார் .. கற்பூர ஆரத்தி காட்டுகிறேன் அதன்பின்பு இதற்குள் இருக்கும் சீட்டில் ஒன்றை நீ தேடி எடு., எந்தச்சீட்டு வருகிறதோ.. அதற்கு நான் கட்டுப்படுவேன்.. நீ சாட்சி .. ஆண்டவன் சாட்சி சரியா? " என்றாள்..
சங்கீதா கையைவிட்டுத்துலாவி ஒரு சீட்டை எடுத்தாள்.. அதை வாங்கிய மதுமதியின் கைகள் நடுங்கின. சீட்டை பிரிக்க மனமின்றி கைகளில் பொத்தினாள்...
(தொடரும்)
ரதிமோகன்No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.